Sidebar

26
Sat, May
0 New Articles
Monday, 05 December 2016 04:39

ஆ...! - 23 Featured

Written by மகேஷ்வரன்
Rate this item
(0 votes)

ஆ...!

நான் தான் சர்மா.. அவன் தான் தினேஷ். நான் அவனாகவும்... அவன் நானாகவும் மாறிட்டோம். என்ன.. கொஞ்ச நாளைக்கு. இந்த ஜயலட்சுமியை பழிவாங்குற வரைக்கும் தான்னு எத்தனை முறை படிச்சு படிச்சு சொன்னாலும் அழறான்.

"சர்மா... வேண்டாம். தூக்குல போட்டுறுவா"

"யாரை"

"என்னை நீ விட்டுட்டுப் போற என்னை."

'தூக்குல போடப் போறன்னா கோர்ட்டுல சொல்லு, கொன்னது  நானில்லை. இந்த சர்மா அச்சுபிச்சுன்னு சொல்லு நான் எத்தனைநாளா  மத்யலோகத்தில, ரெண்டுங்கெட்டான் நிலைல தொங்கிண்டுந்தேன். அதைச் சொல்லு."

"யாரும் நம்பமாட்டா சர்மா. இந்தக் கொலை நடக்கவே இல்லை... எல்லாம் நீ.... நீ.... கற்பனை பண்ணிண்டது."

"விஷம் வெச்சு பாயசம் கொடுத்திருக்கா.... என்ன நீ?"

"சர்மா எதுக்காக நாலு பேரும் செத்துப் போகணும்? உன்னைக்  கொன்னுட்டு அவாளும் செத்துப் போறதில அர்த்தமே இல்லையே சர்மா."

"அந்தப் பையன்தான் கலந்து கொடுத்துட்டான். அதைப் பத்தி நான்  நிறைய யோசிச்சாச்சு"

"இல்லை.... அந்தப் பையன் நான் தானே! நான் அப்படிச் செய்யலை"

"அந்தப் பையன் என்ன பண்ணான்? மிச்சமிருக்கிற துகையலைச் சாத்தில கலந்துட்டான்'

"உனக்கு எப்படித் தெரியும்.... நீ தான்.... செத்துப்போய்ட்யே"

"செத்துப் போனாலும் நான் அங்கயே மிதந்துண்டு பார்த்துண்டு இருந்தேனே.... தெரியாதா?”

"அதெல்லாம் உன்னுடைய கற்பனை சர்மா"

"சும்மா கூவாதே கொஞ்ச நேரம் நீ மூலைல இருந்து தான் ஆகணும். நான் ஜயலட்சுமியைக் கொல்லாம என் ஜென்மம் சாபல்யம் பெறாது. முதல்ல ஜயலட்சுமி"

"அது தேவகி.... தேவகி"

"ஜயலட்சுமிதான் தேவகின்னு எத்தனை தடவை உனக்குச் சொல்றது"

"ஐயோ! இது எங்க கொண்டுபோய் முடியுமோ!'

"கவலைப்படாதே! நான் நாசூக்கா ஒருத்தர் மேலயும் பழி வராதபடி பண்றேன். வேணும்னா இதுக்கு உத்தரவாதம் கொடுக்கறேன்."

'சர்மா.... சர்மா.... ப்ளீஸ்."

குரல் தொந்தரவு தாங்க முடியாம ஒரு மாத்திரையை எடுத்து வாயில போட்டுண்டேன். என் குரலைத் துரத்தறதுக்கு அவன் முழுங்கின அதே மாத்திரை!

தேவகி எங்கிட்ட வந்து என் தலையைத் தடவிக் கொடுத்து, "இப்ப எப்படியிருக்கு ஓங்களுக்கு....?"

"இப்ப எல்லாம் நிம்மதியா போய்டுத்து. ஜய.... தேவகி... தேவகி.... தேவகி"

"ஏன் இப்படி திருப்பித் திருப்பி பேர் சொல்றேள்?"

"உன் பேரைத் திருப்பி மந்திர உச்சாடனம் போல் சொல்லிக்கணும் போல இருக்கு."

அவள் மெளனமாக இருக்க, "வல்லவன் ஆடிய பம்பரம் போல சாதுரியமும் மாதுரியமும் செவிக்குக் குளிர்ச்சியுமாய் இருக்கிறது உன் பேர்!" என்றேன்.

'அம்மா, மறுபடி ஆரம்பிச்சுட்டார்."

அம்மா என்கிற மாது வந்து,"தீனு, உனக்கு சரியாப் போச்சுப்பா. இந்த மாதிரி எல்லாம் பேசாதே டாக்டர் சொன்னார், சரியாப் போச்சுன்னு. படுத்துக்கோப்பா. தேவகி, அவனைப் போட்டுப் பிடுங்காதே. தனியா விட்டுரு."

"தேவகி இருக்கட்டும்' என்றேன்.

தேவகி அந்த அம்மா முகத்தைப் பார்க்க.

வெள்ளைக்காரனும் இன்னொருத்தனும் வந்து "டினேஷ், யூ ஃபீல் பெட்டர்?" என்று கேட்டார்கள்

என்ன பெட்டராவது பட்டராவது? நான் மையமா சிரிச்சேன். எனக்கு இங்கிலீஷ் பாஷை தெரிஞ்சிருந்தாலும், அவன் உச்சரிப்புப் புரியலை, கெடிஸ்தலம்துரை மாதிரி கொழ கொழன்னு பேசறான்.

டாக்டர் பேரு மேகநாத்துன்னு அர்த்தமாச்சு. அவர் வந்து "ஸ்கான் ரிசல்ட் வந்துடுத்து"ன்னு என்னவோ பேசறார். கட்டம் கட்டமா போட்ட பேப்பர்ல படம் ஒட்டியிருக்கு. அதைப் பார்த்துண்டு அவாள்லாம் இங்கிலீஷ்ல பேசிக்கிறா "டாக்டர், இஸ் ஹி ஸேஃப்?"னு ஒருத்தன் கேட்டது புரிஞ்சது. காதைத் தீட்டிண்டு கேட்டேன்.

"இன்னும் ஒரு வாரம் வச்சிருக்கணும்'னான் கடன்காரன்

"டாக்டர், நீங்க எங்க என்னைக் கொண்டு போனாலும் கூடவே என் மனைவி இருந்தாத்தான் தெம்பு இல்லைன்னா பயமா இருக்கு"

'டாக்டர்..... வே.... வேண்டாம். அது மட்டும் பண்ணாதீங்க'ன்னான் தினேஷ்.

"சும்மார்றா! நீ பேசறது அவாளுக்கு கேக்காது"ன்னு ம்னசுக்குள்ள அதட்டினேன்.

"டாக்டர், ப்ளீஸ்"

"என்ன ஒரு மாதிரி பாக்கறேள். மறுபடி குரல் கேக்கறதா....?" தேவகி கேட்டாள்.

'இல்லை. அதான் சரி பண்ணிட்டாங்களே."

"நீங்க ஒரு வாரம் தனி ரூம்ல இருந்தாகணும். தினம் ரெண்டு தடவை உங்க மனைவி உங்களை வந்து பார்ப்பாங்க. அதுவும் தனியா இல்லை. கூட யாராவது டாக்டர் ஒருத்தர் கட்டாயம் இருந்தாகணும். எல்லாம் உங்க நன்மைக்குத்தான் சொல்றேன். ஏன்னா, நீங்க சில வேளைகள்ல உங்களை அறியாமலேயே சில காரியங்கள் செய்யறீங்க. திடுதிப்புன்னு திருச்சி புறப்பட்டுப் போய்ட்டீங்க"

"அதெல்லாம் இனிமே செய்யமாட்டேன் டாக்டர்."

"ஒரு வாரம் பொறுத்துக்குங்க. அதுக்கப்புறம் சொல்றோம்."

தேவகி, "உங்க நல்லதுக்குத்தானே சொல்றா" என்றாள்.

"சரி தான்'னேன்.

ஏமாற்றம் தான்! ஒரு வாரத்துக்குள்ள பண்றதுன்னா அதில் அபாயம் அதிகமா இருக்கும். காத்திருக்கணும்.... ஒரு வாரம் இவன் குரலை வேற சமாளிக்கணும்.

"இன்னும் சில டெஸ்ட்டுங்கள்லாம் இருக்கு ஆஸ்பத்திரி ஸ்பெஷல் ரூம்ல இருக்கவேண்டிவரும். ஒரு வாரத்தில வீட்டுக்கு அனுப்பிச்சர்றோம் என்ன?"

சரின்னு சொல்றதைவிட வேற வழி? அந்த ரூம்ல உஷ்ணம் தெரியாம குளு குளுன்னு இருந்தது. வேளா வேளைக்கு டாண் டாண்ணு நர்ஸ் வந்து, வாயில் தர்மா மீட்டர் வெச்சுப் பார்க்கறா. அப்புறம் படுக்கை கால் மாட்டில காகிதத்ல எழுதிண்டு இருக்கா. ஜன்னலைத் திறந்து பார்த்தா ஆறாவது மாடி. இங்கிருந்து குதிக்க முடியாது. தள்ளமுடியும். ஆனா, ராத்திரி வேளையில எழுந்து பார்த்தா மேஜைல எப்பவும் முழிச்சுண்டு ஒருநர்ஸ் இருக்கா கண்ணாடிக்கதவெல்லாம் சாத்தியிருக்க, திறந்தாலும் குழப்பமா இருக்க, வழி தெரியாது காத்துண்டிருந்தேன்.

தேவகி தினம் காலைல சாயங்காலத்துல வருவா. வரப்போ எப்போதும் கூட ஒரு குட்டி டாக்டர் வருவான். எப்ப எந்த சமயத்தில்தான்னு தீர்மானிக்கணும்!

"இதுக்குமேல ஜாக்கிரதையா இருக்க முடியாதுப்பா கோபாலா."

'சர்மா, நீ என்ன பண்ணாலும் மாட்டிப்பே'

'மாட்டிக்கப் போறது நீதானே. நான் இந்தக் காரியம் முடிஞ்சதும் இந்தச் சரீரத்தைக் கழட்டிப் போட்டுட்டுப் போயிண்டே இருக்கப் போறேனே'

'சர்மா, சொல்றதைக் கேளு. நீ ஒரு முட்டாள் தூக்கில் போட்டுருவா."

'போடமாட்டா. உனக்கு உடம்பு சரியில்லைன்னு தானே சொல்லிண்டிருக்கா அத்தனை பேரும். என்னென்னவோ டெஸ்ட் எடுத்தான் இன்னிக்கு. முண்டாசு மாதிரி பூரா தலைல நரம்பு நரம்பா ஒயரை ஒட்ட வெச்சு காகிதத்தில கீத்தறதே, அது என்ன மெஷின்?"

"இ.ஈ.ஜி.'

'அப்றம், இன்னம் என்னென்னவோ டெஸ்ட் எடுக்கப் போறாளாம் எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துண்டே இருக்கேன்."

தேவகி தனியா வந்தா, அப்ப எனக்கு உற்சாகம் தாங்கலை.

"டாக்டர் எங்கே?"

'முதல்ல போ, பின்னால வரேன்னார். ஏதோ போன்கால் வந்ததாம்."

"ஐயோ தேவகி, போ.... போ..... வீட்டுக்குப் போ.... தனியா இருக்காதே இவனோட"

"தேவகி, இவன் கிடக்கான். நீ உக்காரு'

"யாரைச் சொல்றேள்?"

'உக்காருன்னா. உன் கழுத்தைப் பார்த்தா எத்தனை வெளுப்பா சங்கு மாதிரி இருக்கு பாரு, உக்காரும்மா. நானும் நீயும் ஒண்ணா படுத்துண்டு எத்தனை வருஷமாச்சு!"

"ஐயோ, வேண்டாம். வேண்டாம். தேவகி அவன் கூட சேராதே."

'இது ஆஸ்பத்திரி'

'இருந்தா என்ன. எனக்குச் செல்லமா ஒரு முத்தம் கொடுப்பியே. காவிரிக்கரையில எத்தனை கொடுத்திருக்கே'

'காவிரிக் கரையா?"

'தேவகி, எத்தனை நாளாச்சு தொட்டு'

வேண்டாம் தேவகி, நான் சொல்றதைக் கேளு'

"தொட்டுக்கங்களேன். இதுக்கென்ன பணமா, காசா. நான் உங்க மனைவி தானே!"

'இல்லை தேவகி"

'ஏய், இப்ப சும்மாருக்க போறியா இல்லையா..? தேவகி அந்த மாத்திரை பாட்டில எடு'

தேவகி என் பக்கத்துல உக்கார்ந்துண்டு மாத்திரைகொடுத்தப்போ, எப்படி இந்த ஆthமாவை அணைக்கறதுன்னு முடிவு பண்ணேன். அவள் என்கிட்ட வநது என் கன்னத்தைத் தடவி என்மேல படிஞ்சுண்டு.

"தடவிக் கொடுத்து ரொம்ப நாளாச்சுன்னா."

"கதவைச் சாத்திடு"

"வா, அந்த ரூமுக்குப் போய்டலாம்."

"அது பாத்ரூம்"

"பரவால்லை. நிறைய இடம் இருக்கு, வா!"

"இல்லை, அதெல்லாம் செளகரியப்படாது!"

"இல்லை. இடம்பெரிசா இருக்கு தரைகூட வழவழன்னு சலவைக் கல்லுல இருக்கு வா தேவகி! எத்தனை நாள்.... எத்தனையுகம்... வாடீ."

"சும்மா வெறும்ன ஒரு தடவை கட்டிக்கலாம், அவ்வளவுதான்."

"அவ்வளவுதான்.... போறும்"

"வேற விஷமம் எதும் பண்ணக்கூடாது...  புடவையெல்லாம் கலைக்கக் கூடாது."

"கலைக்கலை தேவகி..."

'சர்மா..... ஆ..... தேவகி...... ஈ' ன்னு சின்னதா ஒரு குரல் கொஞ்சுண்டு கேட்டுட்டு மாத்திரை காட்டத்தில கரைஞ்சு போச்சு. தேவகியோடு பாத்ரூமுக்குள்ள போனேன். அங்க வெந்நீர் குழாய் இருந்தது. மேலிருந்து அருவி கொட்டறாப்பல வெச்சிருந்தான். அப்புறம் சிகப்பு கலர்ல பக்கெட் இருந்தது.

"தண்ணி ரொப்பு தேவகி எனக்குக் குளிக்கணும்போல இருக்கு."

"குளிப்பாட்டி விடவா?"

"நன்னா. அதுக்கென்ன."

தண்ணிக் குழாயைத் திறந்துண்டு இடுப்புப் புடவையை இருக்கமா முடிஞ்சுண்டு பாவாடை நுனி தெரியறாமாதிரி தூக்கிக் கட்டிண்டு வளையல்களைக் கையில இறுக்கமா பண்ணிண்டு,"இங்க உக்காருங்கோ"ன்னு பக்தத்தில இருக்கற துண்டை எடுத்தா....

'இடுப்பு மட்டும் துடைச்சுண்டா போறும்" என் அங்கமெல்லாம் துடைச்சு விட்டப்ப, அவளைக் கிட்ட சேர்த்துண்ட போதெல்லாம் நாசூக்கா தடுத்தா..

அந்தத் துண்டு ஈரகனமா இருந்தது. அதை மாலை மாதிரி அவ கழுத்தில போட்டு அவளைக் கிட்டத்தில் கொண்டு வந்தேன்.... சிரிச்சா....

துண்டை இறுக்கினேன்.... தலையை அப்படியே பக்கெட்ல சரிய வெச்சுத் தண்ணில அழுத்தினேன். அவகிட்டருந்து எல்லா எழுத்துக்களாகவும அமானுஷ்ய சப்தம் வந்தது.

"க்ளக் கிளிக். பிலு பிலு.... ஊ..... ம்..... ஆ....!"

Read 215 times Last modified on Monday, 05 December 2016 04:40
More in this category: « ஆ...! - 22

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.