Sidebar

26
Sat, May
0 New Articles
Monday, 05 December 2016 04:37

ஆ...! - 22 Featured

Written by மகேஷ்வரன்
Rate this item
(0 votes)

ஆ...!

நிலா வெளிச்சத்தில் அங்க மூணு பேரும் வந்திருக்கிறது அப்பதான் தெரிஞ்சது.

"பண்டரி, நீ எங்க வந்தே?"ன்னு அவனைக் கேக்கறேன்.

'சர்மா, நீ பண்ணின பாவத்துக்கு தண்டனை வாங்கறதை நாங்கள்லாம் பார்க்க வேண்டாமா?"

'அந்தக் குழந்தை என்ன துடிதுடிச்சிருக்கும் சர்மா."

பக்கத்தில் கோபாலனைப் பார்த்தேன். சிலைபோல நிக்கறான்.

'கோபாலா, நீயுமா?'ன்னேன்.

பேசாம இருந்தான். எனக்கோ வயத்தைப் பிரட்டறது. நாக்கெல்லாம் வறண்டு ஒலர்ந்துபோய்க் கசக்கறது.வயத்துல எரிச்சல் தாங்க முடியலை. 'தண்ணி தண்ணி'ங்கறேன்.

"தண்ணிதானே வேணும் என் கணவா. தரேன்... தரேன்"னு கூஜாவிலிருந்து தண்ணிய வேணும்னுட்டே மண்ணுல கொட்டறா. தலையை இடி இடிக்கிற மாதிரி வலிக்கிறது. என்னத்தைக் கலந்து கொடுத்தாளோ கால மணி கூட ஆகலை. அதுக்குள்ள உடம்பெல்லாம் தணல் மாதிரி கொதிக்கிறது. கண மங்கறது பிம்பங்கள் சரியா தெரியாம குழப்பமா இருக்கு "ஜெய்யூ.... ஜெய்யூ இப்படி மோசம் பண்ணலாமா?"

'இப்படி என் பிள்ளையைக் கொல்லலாமா?"

"வேணும்னுட்டே செஞ்சனா? கைதவறி விழுந்துடுத்து ஜெய்யூ.... எனக்கு தண்ணி தாயேன். யாராவது டாக்டர் கிட்ட என்னை அழைச்சுண்டு போங்களேன்."

கோபாலன் தான் என்னைப் பார்த்து துடிச்சுப் போய், 'பாவம். பாவம்'ங்கறான்.

"கம்மாயிரு கோபாலா. இந்தக் கிழம் செய்தது உனக்குத் தெரியாது. பச்சைக்குழந்தையை மண்ணுல புதைச்சேனே, எனக்கு மட்டும் அப்ப வயிறு எரியாதா?"

எனக்கு எரிச்சலா எரியறது. நூத்து பத்து டிகிரி இருக்கும் போல இருக்கு ஜூரம்.
சக்கிரமே போய்ட்டா நல்லது. ரொம்ப இழுத்தடிக்குமோ பண்டரி?'ங்கறா.

'இல்லை. அரை மணிக்குள்ள போய்டும்'னான் பண்டரி.

"அது என்ன அரளி விதையா?"

'இல்லை. சிவசேகரம்னுட்டு கருநீலத்தில பூவை வெச்சுண்டு இமாலயத்துலதான் கிடைக்குமாம். முந்நூறு ரூபாய் கொடுத்தேன். பழம் முள் முள்ளாயிருந்தது."

'ரொம்ப வலிக்குமோ?"

"வலிக்கணும் சர்மா வலிக்கிறதா?"

'கோபாலா, கோபாலா. என்னைக் காப்பாத்துறா"கதர்றேன். பையன் முகத்துல பயமும் பீதியும் பச்சாதாபமும் தெரியறது.

"டீச்சர் டீச்சர்.... என்னது இது டீச்சர்.... இது தப்பில்லையா டீச்சர்? பண்டரி.... பண்டரி சார் என்ன இப்படி?"

"கோபாலா உனக்குத் தெரியாது. இவர் செய்த அக்ரமத்துக்கு இது போதாது. கரூர்ல வந்து என்ன வெல்லாம் ட்ரபிள் கொடுத்தார் தெரியுமா வீட்டை விட்டு துரத்த வெச்சார் வேலையை விட்டு நீக்க வெச்சார், கோபாலா, இவரை உனக்குத் தெரியாது."

'மாமா எழுந்திருங்கோ, உங்களுக்கு என்ன பண்றது?"

'கண்ணு மங்கறது கோபாலா. தண்ணி கொடேன் கோபாலா." எனக்கு அந்த விஷம் வேலை செய்ய ஆரம்பிச்சுடுத்து. பத்து நிமிஷத்தில பத்தாயிரம் வருஷத்துக்குண்டான கஷ்டங்கள் பட்டேன். எழுந்திருக்கலாம் போல இருக்கு.. எழுந்திருக்க முடியலை. விரல் நுனியில எல்லாம் நஞ்சு ஒட்டிண்டிருக்கிற மாதிரி தோணி அதை பிச்சுப் பிச்சுப் போடப் பிரயத்தனம் பண்றேன். பழுப்பும் கறுப்புமா கண்ணுக்குள்ள கச்சலும் கக்கலும் கரைசலும் தெரியறது. டவுனே மலம் கழிஞ்சா மாதிரி நதி கண்ணுக்குள்ள ஒடறது. ஸ்லேட்டில ஆணி கிழிக்கிற மாதிரி காதில் சப்தம் கேக்கறது. அப்புறம் அவா பேசிக்கிறதெல்லாம் தவளைக் குரல்ல கேக்கறது.

உடனே செத்திருந்தா தேவலாம் ஸ்வாமி. துடிச்சி துடிச்சுத் தான் செத்துப் போனேன்.

இந்தப் படுபாவிகளைப் பழி வாங்கணுங்கற தீர்மானம் தான் என்னை அத்தனை வலியையும் தாங்க வெச்சுது. அரை மயக்கத்திலயும் துரோகம் ஏற்படுத்திய மூர்க்கம், கோபம் அப்படியே எங்கிட்ட மிஞ்சிப்போய் உயிர் உடலை விட்டு பிரியறப்போ அது கூட மிதந்தது. சர்மா. நீ இவாள பழிவாங்காம மேல போகக் கூடாது!

ரெண்டு பேரும் என்னை நாடி பிடிச்சுப் பார்க்கறா.

"பயப்படாதே, இதில நாம் இறங்கியாச்சு.... கொன்னாச்சு.... இனி பயம் இல்லை."

"யாராவது வரப்போறா பண்டரி.'
 
"வரட்டும்.... நிலாவில் தூங்கறார்னு சொல்லலாம். கோபாலா. பயமா இருந்ததா கோபாலா? நீ வாழ்க்கையில் எதையும் பார்க்கலை சந்தேகத்தைப் பார்க்கலை. துரோகத்தைப் பார்க்கலை"

'அவன் பார்த்தது டீச்சர் புடவை மட்டும்தான். இல்லையா?"ன்னு அவனைத் தன் மேல் வெச்சு அணைச்சுக்கறா.

அவன் கண்கள்ல நீர் மின்னறது நிலா வெளிச்சத்துல தெரியறது.

"டீச்சர், நீங்க இப்படிப் பண்ணுவீங்கன்னு."

"இங்கேயே விட்டுட்டுப் போய்டலாமா. வா."

'இல்லை மண்ணுல புதைச்சாகணும். கோபாலா, கொஞ்சம் ஒத்தாசை பண்றியா?"

'எனக்குப் பசிக்கிறது"ன்னான் கோபாலன்

'எனக்கும்தான் பசி, சரி ஜெய்யூ.... நிலா சாப்பாடு சாப்பிடலாமா?"

பக்கத்தில் நான் அசையாம கிடக்கறேன். மூணு பேரும் நிலா சாப்பாடு சாப்பிடறா.

வலியெல்லாம் போய்டுத்து. காற்றோடு கலந்தாப்பல ரொம்ப லேசா இருக்கு இங்கேருந்து எல்லாம் பார்க்க முடியறது.

இவாளை எப்படிக் கொல்ல? பேசிப் பார்க்கறேன். குரல் எழும்பலை.

மூணுபேரும் மெளனமா சாப்பிட, ஜெய்யூ இருமறா. பண்டரி தலைல தட்டறான்.

"சாம்பார் கெட்டுப் போய்டுத்துன்னு நினைக்கறேன். கசக்கறது. பாகக்கா போட்டிருக்யா?"

'இல்லையே."

"தண்ணி தாகமா இருக்கு கோபாலா, தண்ணி கொண்டு வாயேன் இந்த கூஜாவில."

'கோபாலா.... என்ன ஒரு மாதிரி பார்க்கிற?"

'டீச்சர்... பண்டரி சார்! நாம செய்ததுரொம்ப தப்பு ..."

"வெய்ட் எ மினிட் கோபாலா, நீ என்ன பண்ணே? ஏதாவது." பதறினான் பண்டரி. -

"அந்தத் துகையல் மிச்சத்த சாம்பார் சாதத்தில கலந்துட்டேன்."

"மிஸ்டர் தினேஷ்! ரெடியா?"

"டாக்டர், நான் அப்பலேர்ந்தே தயார்"

"இந்த ஸ்கான் பண்ணிட்டா எங்க ஒரு சந்தேகம் தீர்ந்து போய்டும். அதுக்கப்புறம் சர்ஜரி பண்ணணுமா இல்லை மெடிஸன் மூலமாவே ட்ரீட் பண்ணணுமான்னு தீர்மானிப்போம்."

'எனக்கு இப்ப? சரியாப்போச்சு. ஜயலட்சுமி சொல்லலையா'

"ஜயலட்சுமியா?"

“தேவகி. தேவகி?"

"பாருங்க, இந்த மாதிரி பெயர் குழப்பம் இன்னும் இருக்கு."

'இது நீங்க கொடுக்கற மருந்தினாலே."

"கொஞ்ச கொஞ்சமாதானே மருந்து டோஸைக் குறைக்க முடியும் கவலைப்படாதீங்க, எல்லாம் சரியாப்போய்டும்'

"கவலையே இல்லை சார். நான் சேரவேண்டிய இடத்தில சேர்ந்துட்டேன். செய்யவேண்டிய கார்யத்தைச் செய்துட்டேன்னா எல்லாம் சரியாப் போய்டும். எம்பாட்டுக்குப் போய்ண்டே இருப்பேன்."

"இந்த மாதிரி புதிரா பேசறீங்க பாருங்க, அதான் கொஞ்சம் டிஸ்டர்பிங்கா இருக்கு. இப்ப அந்த ஆடிட்டரி ஹலுஸ்னேஷன் வருதா?"

"அப்படின்னா?"

"குரல்கள் கேக்குதா மண்டைக்குள்ள?"

'இல்லை, சாந்தமா இருக்கு."

டாக்டர் பக்கத்து டாக்டரிடம் பெருமையுடன் 'சொன்னேன் பார்த்தியா" என்றார்.

"ஸ்கான் பண்ணிட்டா எல்லாம் பளிங்கு மாதிரி தெரிஞ்சு போய்டும்.'

நான் சிரித்துக் கொண்டேன். இவர்கள் என்ன செய்தாலும் கட்டின பசுபோல் அடிபணிய வேண்டும்னு தீர்மானிச்சுட்டேன். அப்பதான் எனக்கு நிம்மதி, அவகாசம் கிடைக்கும். உடனே கொல்றதில அர்த்தமில்லை நான் எத்தனை துடிச்சேனோ அந்தளவுக்கு அவளும் துடிக்கலைன்னு சொல்ல முடியாது. ஆனா, அந்தப் பழி.....? நான் வாங்கலையே! நான்னா ஒவ்வொரு யுகமா இவளைத் தேடிப்பிடிச்சு வந்து கொல்லணும் அதுக்காகத் தான் யுகம் தாண்டி வந்திருக்கேன்!

பெரூசா ஒரு கட்டடத்துக்கு என்னை மோட்டார்ல அழைச்சுண்டு போனா. வாசல்ல எல்லா கதவும் கண்ணாடில இருந்தது. ஜயலட்சுமியும் அம்மாவும் கூடவே வந்தா. டாக்டருங்கறவர் காத்திருந்தார் மாடிப்படி ஏர்றதுக்குப் பதிலா சின்னதா ரூம் மாதிரி வெச்சிருந்தா, அது தானா திறக்கறது. தானா மூடறது. வெள்ளைவெளேர்னு பொம்மனாட்டி வந்து என்னைத் தொட்டுப் பேசினா. கறுப்பா படம் மாதிரி இருக்கு அதையெல்லாம் கழட்டச் சொல்ல, நீலமா ஆஸ்பத்திரி சட்டை போட்டு விட்டு சக்கரவண்டில தள்ளிண்டு உள்ள கொண்டு போனா அங்க என்னென்னவோ விநோதமான ஐந்துக்கள் போலவும், கண்ணாடி போலவும், குகை போலவும் இருந்தன. ஜன்னலுக்கு வெளில இருட்டில இருந்தவர் உள்ளுக்குள்ள வந்து படுக்க வெச்சார்.

'இன்ஜெக்ஷன் போடப் போறேன். வலிக்கவே வலிக்காது."

என்ன வேணா நடக்கட்டும்னு நான்படுத்துண்டு இருக்கறப்போ கொஞ்சம் தொந்தரவா தினேஷ் குரல் கேட்டது.

'சர்மா.... சர்மா.... வேணாம் சர்மா. விட்டுரு சர்மா. நான், என்னால இந்த இடத்தில தாங்க முடியலை சர்மா."

 "என்ன, இன்னும் ஒரு நாளோ ரெண்டு நாளோ. இந்த டாக்டர் சமாசாரம் எல்லாம் முடிஞ்சப்புறம், எல்லாம் சரியாப்போச்சுன்னு அவா எழுதிக்கொடுத்துருவா. வீட்டுக்கு வந்துடுவேன். பக்கத்தில படுத்துண்டு இந்த ஜயலட்சுமி எனக்கு சிசுருஷை பண்ணுவா.. , அப்ப தான்."

நான்தான் சர்மா, அவன்தான் தினேஷ், அவன் நானாவும், நான் அவனாவும் மாறிட்டேன். என்ன கொஞ்சநாளைக்கு. இந்த ஜயலட்சுமியைப் - பழிவாங்கற வரைக்கும் தான்னு எத்தனையோ முறை படிச்சுப் படிச்சு சொன்னாலும் அழறான்.
'சர்மா, வேண்டாம். தூக்குல போட்டுருவா."

 "ஐயோ வேண்டாம் ப்ளீஸ் அவ தேவகி ஜயலட்சுமி இல்லை"

"ஜயலட்சுமிதான் தேவகியா பிறந்திருக்கா. அவ பிறந்த தேதியைப் பாரு"

"சில பேருக்கு அந்த மாதிரி ஒரே சாயல் இருக்கக் கூடும்."

'இல்லை நான் விசாரிச்சாச்சு கோபாலன் தினேஷாகவும் ஜயலட்சுமி தேவகியாகவும் பொறந்திருக்கா, பண்டரிதான் எங்க போனான்னு கண்டுபிடிக்க முடியலை. இங்க தான் எங்கயாவது சுத்திண்டு இருப்பான்னு தோண்றது."

கொஞ்சம் பொறுமையா இரு தினேஷா. உனக்கும் டீச்சரைக் கொல்லணும்னு ஆசை உள்ளூர இருக்குதானே? என்ன தண்ணி காட்டினா? உன் கண் முன்னாலயே சரசம் ஆடினாளா இல்லையா? கண் முன்னாலேயே உன்னை பேக்கு மாதிரி.... காதல் கடுதாசியெல்லாம் கொண்டு கொடுத்தியா இல்லையா?

"சொல்லாதீங்க."

"என்னோடசேர்ந்து பழிவாங்கணுமா வேண்டாமா? ஆ....!"

Read 274 times Last modified on Monday, 05 December 2016 04:39
More in this category: « ஆ...! - 21 ஆ...! - 23 »

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.