Sidebar

26
Sat, May
0 New Articles
Monday, 05 December 2016 04:36

ஆ...! - 21 Featured

Written by மகேஷ்வரன்
Rate this item
(0 votes)

ஆ...!

என் விரல்கள் அவள் கழுத்தை வருடி மெள்ள மெள்ள இறுக்கத் துவங்கின.

"என்ன பண்றீங்க... ஆ.... அம்மா எழுந்திருங்களேன்"

"பயப்படாதே தேவகி வலிக்கவே வலிக்காது. நீ என்கிட்டே வந்து அழுத்தமா முத்தம் கொடு எழுப்பாதே, அம்மாவை எழுப்பாதே."

அவள் என் கையை விலக்கிப் பார்த்தாள். அதனால், அவள் மார்மேல் பட்டகையை எடுக்காமல் தொட்டுப் பார்த்தேன். மறுபடி கழுத்துக்குக் கொண்டு போனேன். வெளியே ஆளரவம் கேட்டது. இரண்டு மூன்று ஜோடிக் கால்கள் ஓடிவரும் சப்தம் கேட்டது.

"எங்கே அவரு?.... எங்கே அவரு? ஏம்மா விட்டுட்டியே.... சீஃப் கேட்டா வேலை போயிரும்'

நான் என் இறுக்கத்தை தளர்த்திக் கொண்டு ஜெய்யூவின் மேல் சாய்ந்தேன்.

'பாரு, இங்க இருக்காரு. எப்படி இங்க வந்தாரு? கதவு தாப்பா போட்டுத்தானே இருந்தது?"

"அதானே.... எனக்கும் தெரியலை."

ஜெய்யூவிடமிருந்து அவர்கள் இருவரும் என்னை விலக்கினார்கள்.

'பாரும்மா, இந்தாளைக் கிட்ட சேர்க்கக் கூடாது. ஆபத்தானவர்ணு டாக்டர் சொல்லியிருக்காருல்லே?"

"இவர் என் கணவர்ப்பா'

"இருந்தாலும் எங்களுக்கு உத்தரவு எப்ப எது செய்வார்னு தெரியாது. எதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிருச்சுன்னா? போல், வாய்யா பேசாம'

'இல்லைப்பா. அவர் சாதாரணமாத்தான் பேசிண்டிருந்தார். அவருக்கு எல்லாம் சரியா போச்சு!"

"சரியாப் போச்சு இல்லைங்கறதைத் தீர்மானிக்க வேண்டியது டாக்டர் தான். நாளைக்கு அப்போலோ கூட்டிட்டு போறாங்க என்.எம்.ஆர்.ணு இன்னும் ஒஸ்தியா ஸ்கான் எடுப்பாங்க!"

"தேவகி.... என்னைக் காப்பாத்து தேவகி. எனக்கு ஏதும் வேண்டாம். உங்கிட்ட இருந்தாப் போறும் தேவகி. தேவகி"

ஜெய்யூ கண்களில் நீருடன் "அவரை விட்டுருங்க. அவர் ஏதும் செய்ய மாட்டார்' என்றாள்.

"சொல்லு தேவகி"

அவர்கள் சம்மதிக்கவில்லை

"நான் நாளைக்கு டாக்டர்கிட்டபேசறேன். டெஸ்ட் ஏதும் வேண்டாம். நீங்க போய்ப் படுத்து தூங்குங்கோ' என்றாள், ஜெய்பூ.

'அம்மா, தொடாதீங்க! திடீர்னு பிறாண்டிடுவாரு' என்றான், ஆஸ்பத்திரி ஆள்.

"சும்மாயிருப்பா.. என் பிள்ளை, நான் வளர்த்த பிள்ளை, பெத்த தாயை என்ன செஞ்சுருவான்?"

"சொல்லுங்கம்மா' என்றேன், ஏறக்குறைய அழுகையுடன்.

'இருந்துட்டு போகட்டும்பா."

"அதென்னவோ எனக்கு அதிகாரம் இல்லை டாக்டர் மேகநாத்துக்கு போன்
பண்ணிக் கேட்டுக்கங்க.... அவர் சொன்னா அனுமதிக்கிறோம். அதுவரை இவர் தனியாத்தான் இருக்கணும்.... படிச்சுப் படிச்சுச் சொல்லிட்டுப் போயிருக்காரு."

"அம்மா..... தேவகி"

"சரியாப் போய்டும் தீனு.'

என்னை அவர்கள் லேசான கட்டாயத்துடன் இழுத்துக் கொண்டு அடுத்த அறைக்குப் போனார்கள். ஜன்னலை ஆராய்ந்து 'இந்த வழியாத்தான் தப்பிச்சிருக்காரு டாக்டருக்கு போன் பண்ணி சொல்லிருப்பா' ஆஸ்பத்திரி நடையில் பேசிக்கொண்டு வந்தார்கள்.

'ஏம்பா! சொந்த பொண்டாட்டி, அம்மா, இவங்ககிட்ட போய் பேச அனுமதிக்கறதில என்னப்பா தயக்கம்?"

"ஒனக்குத் தெரியாது பாலு. இந்த ஆளு ரெண்டு ஆளுங்கறாங்க."

பாலு என்பவன் என்னை ஏற இறங்க பார்த்து 'ரெண்டு ஆளா.... அப்படின்னா? பாத்தா ஒத்தை நாடியாத்தானே இருக்காரு."

"மனசுக்குள்ள இன்னோர் உசிரு உலாத்துதாம். யோவ், உம் பேர் என்ன?"

"தினேஷ் சர்மா' என்றேன்.

அந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டதில் எனக்கு ஆதங்கம் தான். தயக்கமே கழுத்தை நெரித்திருக்க வேண்டும். ஆனால், ஜெய்யூவை அவ்வளவு கிட்டத்தில் பார்த்தபோது எனக்குப் பழைய ஆசைகள் அலைமோதி விட்டன. எத்தனை நாளாச்சு ஒரு மென்மையான பெண்ணுடலைத் தொட்டு. தாகக் காட்டில் அலைந்தவனுக்குத் தேன்சுனைபோல என் மனைவி மட்டும் தொடக்கிடைத்தபோது உடனே கொல்லத் தோன்றவில்லை. அடுத்த முறை தயங்கக்கூடாது. ராட்சசியைக் கொன்றே ஆகவேண்டும். அதற்குத் தானே இத்தனை அல்லாட்டம். இத்தனை நாள் திரிந்தது! இங்கேயும் இல்லாமல் அங்கேயும் போகாமல் பழி வாங்கும் இச்சை நிறைவேறாமல் நான் சாந்தி பெறமாட்டேன். எத்தனை எத்தனை துரோகம் என் பிரபஞ்சத்தை முழுவதும் வியாபித்த வெறுப்பு!

அவள் மட்டும் தான் வந்தாள். எனக்கு என் கண்களை நம்ப முடியவில்லை. வாசலில் நாற்காலி போட்டு வெளிச்சத்தில் 'பகவத்கீதை' எட்டாவது அத்தியாயம் படித்துக் கொண்டிருக்கிறேன். அவள் வந்தாள்.

"யாரு? பாத்தா ஜெய்யூ மாதிரி ரூபம் தெரியறதே? யாரு?"

"எங்க வந்தே? கரூர்ல எல்லாரும் சௌக்யமா? அப்பா, அம்மா, புது புருஷன்?"

என் கால்ல விழுந்து "என்னை மன்னிச்சுருங்கோ' என்றாள்.

"மன்னிப்பா,எதுககு?"

"உங்களை இத்தனை நாள் பிரிஞ்சிருந்ததுக்கு."

'அவ்வளவுதானா?"

'எனக்கு குழந்தை போனதும் புத்தி பேதலிச்சுப்போய்டுத்து. ஸ்வாதீனமில்லை. அம்மா, அப்பா ரெண்டு பேரும்படிச்சுப் படிச்சுச் சொன்னா. 'அவரை விட்டுட்டு வராதே. அவர் மகான் அப்படின்னு."

"அப்படியா சொன்னா?"

"என்னை மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்லிடுங்கோ."

அவன் முன்னால் தரையில் உட்கார்ந்திருந்த இடத்திலேயே காலால் அவளை எட்டி உதைச்சிருக்கணும். முடியலை. பாழாப் போன மோகம். கழுத்திலே நகை ஏதும் இல்லை. ஊக்கு குத்திண்டிருக்கா ரவிக்கையில, மேகம் சந்திரனை மறைக்கிற மாதிரிகேசம் மறைக்கிறது முகத்தை அதைக் கோதிண்டு நிஜமா அழறா.

"என்ன வேணும் உனக்கு?"

"துளியூண்டு இடம். ஒரு வாய் சோறு."

பண்டரியைப் பத்தி நான் ஏதும் கேக்கலை, அவளும் சொல்லலை கட்டின புடவையோடு போனா. கட்டின புடவையோட வந்தா ஒரு அட்சரம் அதைப் பத்தி பேசலை. கௌதமர் மாதிரி ஆயிரம் வருஷம்கூட சபிச்சிருப்பேன், சபிக்க முடியலை. அத்தனை லாவண்யம் பாழாப்போற ஜயலட்சுமி!

எனக்கு சம்ஸ்க்ருதத்தில் மனசு ஒடலை. உள்ள அவ பாத்திரங்களை எடுத்து வைக்குறது, பூ தொடுக்கறது தான் கவனமா இருக்கு. ஒரு மாசம் பேசாம இருக்கலாம்னு தோணுத்து. ஒரு மணி நேரம் கூட வைராக்கியம் தாங்கலை!

"எதுக்கு திரும்பி வந்தே? சொல்லு ஜெய்யூ"

"செஞ்சது தப்புன்னு புரிஞ்சு உடனே வந்துட்டேன். நீங்க எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்கோ"

"உன்னை அப்படியே கடிச்சு சுப்பிடணும். அதான்தண்டனை"

"சாப்டுங்கோ"

"உன் நாவப்பழக் கண்ணைத் தோண்டி எடுக்கணும்."

"எடுங்கோ."

"முடியலையே கோபத்தை விட மோகம் அதிகமா இருக்கே"

"கோபம் மோகம் எதுக்குமே சம்மதம் எனக்கு இங்கதான், இங்கதான் புகல்... இங்கதான் வாழ்க்கை.... இங்க தான் என் வீடு! நீங்க தான் புருஷன்"

"ஜெய்யூ.... என்னை மன்னிச்சுரும்மா!"

"எதுக்கு?"

"குழந்தையைக் கீழ போட்டதுக்கு!"

"போனாப்போறது. இன்னொன்னை பெத்துக்கலாம்"

"அந்தக் குழந்தை என்னுது தானே ஜெய்பூ?"

அவள் நிமிர்ந்து பார்த்து "அதைப் பத்தி இப்ப என்ன பேச்சு. அதான் போய்டுத்தே!' என்றாள்.

"ஜெய்யூ என்னை மன்னிச்சுரு. அந்த ஜீவன் என்ன துடிதுடிச்சிருக்கும்?"

"துடிக்கவும் இல்லை.... கிடிக்கவும் இல்லை.... கீழ போட்ட மாத்திரத்துல பிராணனை விட்டுடுத்து அல்ப்பாயுசு.... என்னவோ பேர் வெச்சமே!"

"ஜெய்யூ, நீ என்னைப் பழிவாங்க வந்திருக்கியா?

'இல்லைன்னா' என் பழிவாங்கத்தான் வந்திருக்காள்னு அப்புறம் ஒரு சமயம் தெரிஞ்சப்ப ஏதும் செய்ய முடியலை. வாயெல்லாம் நீலம் பாரிச்சுடுத்து. ஆனா... ஆனா.... அந்தப் பெளர்ணமில நடந்தது, யுகம் யுகமா தாண்டி வந்தாலும் மறக்க முடியாது.

"தினேஷ் எப்படி இருக்கீங்க? ராத்திரி ரூமை விட்டு தப்பிச்சுக்கிட்டு வந்துட்டீங்களாமே?"

மேகநாத் என்று சொல்லப்பட்ட அதே டாக்டர்தான்.

'எனக்குச் சரியா போச்சு டாக்டர்'

"அப்படியே! இந்தக் குரல் இப்ப கேக்றதில்லையா? சர்மாங்கற அடையாளம் டாமினேட் பண்றதில்லையா?"

'இல்லை' . .

 "நீங்க யாரு?"

"நான் தினேஷ்'

"என்ன வேலை சொல்லுங்க?"

"வேலை வந்து. வேலை வந்து. என்ன அதுக்குப் பேரு.? கொஞ்சம் குழப்பமா இருக்கு' என்று மண்டையைத் தடவிக் கொண்டேன்.

 "இன்னும் பழைய நிலை முழுக்க வரலை உங்களுக்கு. இன்னிக்கு மற்றொரு ஸ்கான் எடுக்க ஏற்பாடு பண்ணிருக்கு."

"வலிக்குமா?"

"வலிக்காது'

"பயமா இருக்கு"

'பயப்படாதீங்க. முன்ன ஒரு ஸ்கான் எடுத்தமில்லே. அதைப்போலத்தான். அது ஸிடிஸ்கான். இது மேக்னட்டிக் ரெஸனன்ஸ் இமேஜிங்ணு."

'டாக்டர் நான் தேவகிகூட கொஞ்ச நேரம் தனியாப் பேசணும்'

'பேசலாம், பேசலாம்.ஸ்கான் முடியட்டும்'

'ஆதுக்கு முன்னாலே."

டாக்டர் யோசித்தார். 'பேசலாம். ஆனா, தனியா இல்லை. நாங்க ரெண்டு பேர் கூட இருப்போம். மிஸ்டர் தினேஷ், இன்னும் வி ஆர் நாட் ஷ்யுர், எந்தமட்டில உங்க உடல்ல சர்மா எலிமண்ட் பாக்கியிருக்குன்னு'

"ஏன் அப்படிச் சொல்றிங்க?"

“உங்களுக்குத் தெரியாது. நேத்திக்கு சம்ஸ்க்ருதத்தில எல்லாம் எதோ சொல்லிட்டு இருந்திங்க. சம்ஸ்க்ருதம் தெரியுமா?"

அப்போ ஜெய்யூ வந்தாள்.

"தேவகி, நாம் தனியா இருக்கக் கூடாதுங்கறார் டாக்டர்"

"ஏன் டாக்டர்?"

"பேசுங்க.. பேசுங்க... பேசட்டும்!"

"தேவகி பக்கத்தில உக்காரு...." என்றேன்.

பௌர்ணமி நிலவில் மணல் மேட்டில் ஜெய்யூ என்பக்கத்தில்...

"உட்காருங்கோ.. எதுக்கு இப்படி வெக்கப்படறீங்க?"

உட்கார்ந்தேன்.

"எங்கே, வாயைத் திறங்கோ பார்க்கலாம். இந்தப் பாயசம் சாப்பட்டே ஆகனும் நீங்க"

'ஆ...!"


Read 220 times Last modified on Monday, 05 December 2016 04:37
More in this category: « ஆ...! - 20 ஆ...! - 22 »

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.