Sidebar

22
Fri, Jun
0 New Articles

 

கன்னிகள் ஏழு பேர்

இந்திராவிடம் எனக்கு எப்போதும் ஒரு பிரச்சினை... எப்போதெல்லாம் அவர் முகவுரையில் தன் நாவல் பற்றி ஆஹா ஓஹோ என்று சிலாகித்துவிடுகிறாரோ அப்போதே அந்த நாவல் மீது எனக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. இம்முறை தனது எழுத்தாளர் பயணத்தை பற்றி சொல்லிவிட்டு, ஆன்மீக த்ரில்லர் வகையில் தான் மட்டுமே எழுதுவதாக சந்தோஷப்பட்டுள்ளார். அந்த வகையில் இந்த “கன்னிகள் ஏழு பேர்” தனக்கு பெயர் சொல்லும் நாவலாக இருக்கும் என்று ஆசைப்பட்டுள்ளார். மற்றவர்களுக்காக எழுதுவதும், தனக்கு திருப்திக்காக எழுதுவதும் பல சமயங்களில் எதிர்கோட்டில் பயணிக்கும் சமாசாரம். அதனால் அவரது இந்த “பெயர் சொல்லும் நாவல் ஆசை” எனது எதிர்பார்ப்புக்கு எதிர்கோட்டில் பயணித்துவிட்டது போல. கடந்த முறை “சிவம்” நாவல் படித்தபோதும் இத்த்கைய அனுபவத்துக்கு உள்ளானேன். எனினும் இந்த நாவலை நல்ல / கெட்ட நாவல் என்று judgemental-ஆக கருத்து சொல்ல எனக்கு உரிமை இல்லை. மேலும் ஒரு படைப்பாளியின் வயதை / அப்போதைய மனோநிலையை அவரது படைப்பை கொண்டு அறியலாம். இந்த நாவலில் இந்திராவின் வயது முதிர்ச்சி தெளிவாக புலப்படுகிறது. சொல்லப்போனால் இதை படிக்கும்போது எழுத்தாளர் பாலகுமாரனின் கடைசிகட்ட எழுத்துகளான “ரகசிய கண்ணி” மற்றும் காஞ்சி பெரியவரின் புகழ் பாடும் (பெயர் மறந்துபோன) நாவல்களை திரும்ப படிப்பது போல இருந்தது.

Kadhal Sadhurangamஇந்திரா சௌந்தர்ராஜனிடம் 'ஆன்மீக த்ரில்லர்'களை மட்டுமே எதிர்பார்த்த என் போன்ற வாசகர்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சி இந்த 'காதல் சதுரங்கம்'. பொதுவாக சதுரங்கத்தை (chess) mind game என்று சொல்வார்கள். உடல் அசையாவிட்டாலும் மனதால் அசராமல் ஆடவேண்டிய விளையாட்டு இந்த சதுரங்கம். எதிரியின் ஒவ்வொரு அசைவையும் முன்கூட்டியே அனுமானித்து எல்லாவற்றையும் யோசித்து விளையாடுவதால் இது எல்லோராலும் ஆடக்கூடிய விளையாட்டு அல்ல. இந்த 'காதல் சதுரங்கமும்' அப்படிப்பட்ட ஒரு ஆட்டம் தான். காதலர்களை பிரிக்க அவர்கள் தந்தையர்கள் கட்டம் நகர்த்தும் சதுரங்கம். இது இந்திரா சௌந்தர்ராஜன் சன் டி.விக்காக எழுதிய தொடராம். இந்த நாவலை படிக்கும்போது ஆரம்பத்திலிருந்தே நமக்கு தெளிவாக தெரிகிறது - இது visual medium-க்காக எழுத்ப்பட்டது என்ற். அந்த அளவுக்கு காட்சிகளை ஷாட் வாரியாக பிரித்து எழுதியிருக்கிறார் இந்திரா. தடதடவென்று காட்சிகள் மாறுவதால் படிக்கும் நமக்கும் அந்த பரபரப்பு தொற்றிக்கொள்வதில் வியப்பு இல்லை.

Kaatru Kaatru Uyirஇந்த முறை முன்னுரையில் இந்திரா 'பலவீனமான இதயமுள்ளவர்கள் இந்த நாவலை படிக்க வேண்டாம்' என்று ஒரு வரி எழுதியிருக்கலாம். இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய 'காற்று காற்று... உயிர்' நாவலை படிக்கும் நீங்கள் ஆவியுலகில் நம்பிக்கையற்றவராக இருக்கலாம், ஆனால் இதை படிக்கும் அந்த தருணங்களில் ஒரு வித பரபரப்பும், மெல்லிய உடல் நடுக்கங்களும் வந்து ஒட்டிக்கொள்வதை தவிர்க்க இயலாது. எண்டெமூரியின் 'துளசிதளம்' நாவலுக்கு பிறகு நான் பயந்து நடுங்கி படித்த த்ரில்லர் இது. மீண்டும் சொல்கிறேன், இதை படிக்கும்போது நீங்கள் அதை உருவகப்படுத்தி கொள்வதிலேயே இதன் வெற்றி அடங்கி இருக்கிறது. அதற்கு நீங்கள் நல்ல கற்பனை வளம் பெற்றவராக இருக்க வேண்டும் என்பதில்லை. உங்கள் கற்பனைகளை இந்திராவின் எழுத்துக்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அது போதும். ஆன்மீக பின்புல நாவல்களை எழுதி பெயர் வாங்கிய இந்திரா இந்த ஆவி நாவலின் மூலம் புதிய எல்லைகளை தொட்டிருக்கிறார். இது தேவி வார இதழில் 40 வாரங்களாக வெளிவந்து தமிழ் நாட்டை கட்டிப்போட்ட தொடராம்.

சில புத்தகங்களுக்கு முன்னுரையை படிக்காமல் இருப்பதே நல்லது. இது நான் இந்திரா சௌந்த்தர்ராஜனின் 'சிவம்' என்ற நாவலை படித்து முடித்தவுடன் எனக்கு தோன்றியது. காரணம் அவர் தேவை இல்லாமல் ஒரு பலமான பீடிகையை போட்டுவிட்டு, ஒரு 'hype' உருவாக்கிவிட்டு அந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றமுடியாமல் தடுமாறியிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. ஒரு வேளை முன்னுரையை படிக்காமல் நேராக நாவலை படிக்க ஆரம்பித்து இருந்தால், சுவாரசியமாகவே இருந்திருக்கும். இந்திராவின் பலமே அவரது 'ஆன்மீக த்ரில்லர்கள்' என்று அழைக்கப்படும், கோவிலின் பின்புலத்தில் எழுதப்பட்டும் மர்மங்களும், முடிச்சுக்களும். அவரது வழக்கமான பிரியப்பட்ட 'மரகதலிங்கம்' இருந்தாலும், இம்முறை அவர் அதிலிருந்து சற்று விலகி இராம நாராயணன் பாணியில் முழு நீள பக்தி த்ரில்லரை தந்திருக்கிறார். போனஸாக அவர் லிங்கங்கள் பற்றிய ஆராய்ச்சி கட்டுரையை ஒவ்வொரு அத்தியாயத்திற்கு முன்பு அளித்திருக்கிறார்.

More Articles ...

Page 1 of 2