Tamil

Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வெளிமாநிலத்திலேயோ இல்லை வெளிநாட்டிலேயோ நாம புதுசா, தனியா இருக்கும்போது நம்மோட தாய்மொழியை கேட்பது தனி சுகம். நான் சிட்னியிலே இருந்தபோ என்னோட ரூம் ஒரு மெயின் ரோட்டை ஒட்டி இருந்தது. ஒரு நாள் சோம்பேறித்தனமாக படுத்துகிடந்தபோது வெளியே சிக்னலில் நிறைய கார்கள் நின்றுக்கொண்டிருந்தது. அப்போது ஏதோ ஒரு காரில் இருந்த வந்த பாடல் சத்தம் எனக்கு முன்னமே கேட்டதாக தோன்றியது. கொஞ்சம் நேரம் போக போக அந்த இசை பிடிபட தொடங்கியது. அது காதல் கோட்டை படத்தில் வந்த  "ஆணழகா.." பாடல். ஆர்வத்தோடு எழுந்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன். ஏதோ ஒரு காரிலிருந்து அந்த பாடல் பயங்கர சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்தது.


அந்த பாடல் எனக்கு பிடித்த பாடல் எல்லாம் இல்லை.. ஆனால் அப்படி வெளிநாட்டில் எதிர்பாராமல் கேட்கும்போது ஒரு பரவசம். சிட்னியில் இந்தியர்கள் அதிகம் என்பது தெரிந்த விஷயமே. அதனால் நான் போகும் முன்னமே லட்சக்கணக்கான இந்தியர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அப்படி அங்கு தமிழ் சத்தம் கேட்பது ஒரு சுகமே. அதே போல ஒரு பகுதியில் வாக்கிங் சென்றுக்கொண்டிருந்தேன். North Sydney - அது பக்கா வெள்ளைக்காரர்கள் ஏரியா. திடீரென்று ஒரு வீட்டிலிருந்து  "எங்கோ ஓர் சாலை வளைவில் உன் பிம்பம் தெரிந்ததடி " என்று சத்தமாக பாடியது. கேட்டபோது பயங்கர சந்தோஷம்.

இது ஏதோ பிதற்றல் போல இருக்கலாம்.. ஆனால் என்னை போல தமிழ் மொழியை நேசிப்பவர்களுக்கு என்னுடைய சந்தோஷம் புரியும். உலகின் ஏதோ ஒரு மூலையில் தமிழை கேட்கும்போது ஒரு குதூகலம். தமிழ் எவ்வளவு இனிமையான மொழி என்பது தமிழகம் அல்லாது வெளியே கேட்கும்போது புரியும்.

நான் நைஜீரியாவுக்கு சென்றபோது எனக்கு வெளியே போக அதிக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஒரு முறை எனது அலுவலக நண்பர்களோடு அங்கே இருந்த ஒரு Mall-ல் படம் பார்க்க போயிருந்தோம். அப்போது வெளியே தூரத்தில் ஒரு தமிழ் குடும்பம் சத்தம் போட்டு பேசிக்கொண்டு இருந்தது. ஹா.. என்ன ஒரு இனிமை. பொதுவாக ஆஃப்ரிக்கா நாடுகளில் தமிழர்கள் குறைவே. அப்படியும் அங்கே தமிழ் ஓசை கேட்கும்போது அப்பாடா இருந்தது. விசாரித்தபோது லாகோஸ் நகரத்தில் கிட்டத்தட்ட 50,000 தமிழர்கள் வசிப்பதாகவும், பாதுகாப்பின்மை காரணமாக அதிகம் வெளியே வருவதில்லை என்று கேள்விப்பட்டேன். அங்கே தமிழ் சங்கம் மூலமாக பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், பொங்கல் திருவிழா, நவராத்திரி கொலு என கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன என்றும் அறிந்தேன்.

எங்கே போனாலும் சில காலங்களுக்கு பிறகு தமிழ் மக்களையும், தமிழ் சத்தங்களும் கேட்டு பழகிவிடும். ஆனால் வெளிமாநிலத்திலேயோ அல்லது வெளிநாட்டில் முதன் முதலாக தமிழோசை கேட்பது எப்போது ஒரு மறக்காத அனுபவம். இது போன்ற அனுபவங்கள் துபாயிலும், லண்டனிலும் கிடைத்துள்ளன.

இதை நான் முதன் முதலில் அனுபவித்தது.. சிரிக்காதீர்கள், திருப்பதியில். நான் வாழ்க்கையில் முதன் முதலாக அடுத்த மாநிலத்துக்கு போனது 11ம் வகுப்பு படிக்கும்போது அதுவும் திருப்பதிக்கு. அப்போது ஒரு நாவல் பழ வியாபாரியிடம்  "தமிழ்ல பேசுறீங்கலே.. நீங்க எந்த ஊரு? எவ்வளவு நாளா இங்கே இருக்கீங்க?" என்று கேட்டுக்கொண்டிருந்தேன். அவருக்கு அவரோட தொழில் நேரத்தில் வந்து தொந்தரவு செய்கிறேன் என்ற எரிச்சல். இப்போது நினைக்கையில் எனக்கே சிரிப்பாக வருகிறது.

வெளிநாடுகளில் நம்மவர்கள் கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள். ஆனால் பஞ்சாபிகள் கொஞ்சம் கூட சங்கோசப்படவே மாட்டார்கள். ஓப்பன் ஜீப்பில் முழு சத்தத்தில் பஞ்சாபி பாடல்களை பாடவிட்டுக்கொண்டு நகரவீதிகளில் அலப்பரை செய்வார்கள். அதே போல எந்த ஒரு விழாவாக இருந்தாலும் அந்த முழு ஏரியாவுக்கும் அவர்கள் கொண்டாடுவது தெரிந்துவிடும். அவ்வளவு சத்தமாக கொண்டாடுவார்கள். ஆரம்பத்தில் அது எரிச்சலாக இருந்தாலும் அவர்களது மொழியை, அடையாளத்தை அவர்கள் வெளிப்படுத்துவதில் தமிழர்கள் போல தயக்கம் கொள்ளாதது அவர்கள் மீது மரியாதை ஏற்படுத்தியது.