Healthy food habits

Health and Fitness
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நேற்று ஆஃபீஸில் சக ஊழியர்களோடு ஒரு மிக சுவாரசியமான உரையாடல் நடைபெற்றது - உணவு முறைகள். உடற்பயிற்சிகள் மீதான எனது சமீபத்திய ஈடுபாடு எனது டீமிலிருக்கும் இன்னும் இரண்டு பேருக்கும் தொற்றிக்கொண்டது. அதனால் அவர்களும் என்னைப்போல மதியம் 3 கி.மீ நடக்கிறார்கள். என்னை போலவே உணவை பிரித்து 6 வேளையாக உண்கிறார்கள். எங்களது இந்த புதுப்பழக்கம் எங்கள் டீமில் பேச்சாக உள்ளது. அதனால் நேற்று காலை காபி நேரத்தில் இந்த விஷயம் விவாதமாக வந்தது.

நாம் இன்று உடற்பயிற்சிக்கென்று அதிகம் மெனக்கெட காரணம் மாறி வந்துள்ள நமது உணவு பழக்கவழக்கங்களே காரணம் என்பது எனது ஆணித்தரமான எண்ணம். இன்று போல Gym-களும், Nutrition supplements-களும் இல்லாத காலத்திலேயே நமது முன்னோர்கள் ஆரோக்கியமாக தான் வாழ்ந்து ஒவ்வொருவரும் 3-4 பொண்டாட்டிகள், எண்ணிலடங்கா வப்பாட்டிகள் என்று சாகும் வரை சந்தோஷமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இன்று கூட கிராமங்களில் 70 வயது தாத்தாக்கள் அசால்ட்டாக வயலிலும், குவாரிகளிலும் வேலை செய்வதை பார்க்கலாம். ஆனால் நாம் இன்று 40 வயதுக்குள்ளேயே தளர்ந்து போவதற்கு இந்த மாறிவிட்ட உணவு பழக்கமே காரணம் என்பது மறுக்கமுடியாது.

நாம் சாப்பாடும் சாப்பாட்டை செறிக்க வைப்பதில் மிக முக்கிய காரணி நம் வீட்டு அஞ்சறை பெட்டியிலேயே உள்ளது. ஆனால் எத்தனை பேர் அதை உபயோகித்திருக்கிறோம் என்று கேட்டால் பதில் குறைவு தான். - Cinnamon எனப்படும் இலவங்கபட்டை. அதை நாம் கறி பிரியாணி செய்யும்போது மட்டுமே உபயோகிக்கிறோம். ஆனால் அதை பொடி செய்து தினமும் காலையிலும், இரவிலும் ஒரு சிட்டிகை சேர்த்துக்கொண்டால் நமது metabolism-ஐ அதிகப்படுத்தி செரிமாணத்தை வேகமாக்குகிறது. இது உபயோகிக்க ஆரம்பித்த புதிதில் எனக்கு இதன் வாசனை கொஞ்சம் allergic-ஆக இருந்தது. மேலும் இது நீரிலும், பாலிலும் கரைவதற்கு கொஞ்சம் கஷ்டம்.. சரியாக கலக்கவில்லை என்றால் மேலே மிதக்கும். அப்புறம் இது மெல்லிய இனிப்பு சுவை கொண்டதால் பழகுவதற்கு கொஞ்சம் காலம் பிடித்தது. ஆனால் உடம்புக்கு நல்லது என்றால் பழகித்தானே ஆகவேண்டும் என்று மனதை பக்குவப்படுத்திக்கொண்டால் நமக்கு நல்லது. 

இதை விட்டுவிட்டு பலர் மேலைநாட்டு பாணி என்று சொல்லிக்கொண்டு மிக அதிக விலை கொடுத்து Apple cider vinegar-ஐ வாங்கி குடிக்கின்றனர். அதுவும் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும் என்று சொல்வார்கள். குடிக்கும்போது குமட்டிக்கொண்டு வரும், ஓரிரு முறை வாந்தி எடுத்திருக்கிறேன். மேலும் இது நம் பல்லை அரித்துவிடும் என்றும் சொல்வார்கள். அதனால் மேற்கத்திய முறையான Apple cider vinegar-ஐ விட நம் உள்ளூர் முறையான இலவங்கபட்டை தூள் குடிப்பது நல்லது.

இப்போது stylish breakfast என்னவென்றால் Oats Meal.. அதுவும் ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவு என்ற பட்டத்தோடு. நம் ஊரில் கிடைக்கும் கேழ்வரகில் அதை விட அதிகமாக உணவுச்சத்து (10% extra Carbs, Vitamin A and B12) உள்ளது. Oats + Yoghurt கஞ்சி போல காலையில் ஒரு கப் கேழ்வரகு கூழை தயிரில் கரைத்து குடித்துவிட்டு சென்றால் அந்த பொழுது முழுவதற்கும் அசதி வராது. தேவையில்லாத Saturated fats, Sodium இல்லை. பயங்கர clean breakfast. ஆனால் நாம் கூழை கண்டுக்கொள்வதில்லை.. காரணம் அது இந்திய கிராமத்து உணவு என்பதால்.

தஞ்சை விவசாயிகள் கோவிச்சுக்க கூடாது. என்னை பொறுத்தவரை நமது உணவில் மிக தவறான உணவு என்னவென்றால் அது அதிகமாக உபயோகப்படுத்தப்படும் அரிசி தான். ஏற்கனவே உமி நீக்கிவிட்டு, பாலிஷ் செய்கிறேன் என்று மீதமுள்ள இத்துணூன்டு Fibre-ஐயும் களைந்துவிட்டு, ஏற்கனவே வேகவைத்து காயவைத்து "புழுங்கல் அரிசி"யாக்கி, நாம் அதை உண்ணும்போது நமக்கு மிஞ்சுவது அதிகப்படியான Carbohydrates-உம், Sodium-உம் தான். அதனால் தான் நம்மால் தொப்பை போடுவதை கட்டுப்படுத்தமுடிவதில்லை. அதனால் நான் அரிசியை தவிர்க்கிறேன். இரண்டு முறை Team lunch-ன் போது சாப்பிட்டது கணக்கில் கொள்ளாவிட்டால் நான் அரிசிய முற்றிலுமாக தவிர்த்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.

காலையில் நான் Oats / கேழ்வரகு கஞ்சி குடித்துவிடுவதால் எனக்கு அன்றைய பொழுதுக்கான carbohydrates அதிலேயே கிடைத்து விடுகிறது. அதனால் நான் மதிய உணவில் நிரைய Fibres மற்றும் proteins இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன். காலிஃப்ளவர், பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ் ஆகியவற்றில் நார்ச்சத்து (Fibre) அதிகம் இருப்பதால் அவற்றை அரைவேக்காட்டில் / பச்சையாக நிறைய சாப்பிடுகிறேன். புரதச்சத்துக்கு (Protein) சிக்கன், பனீர், பச்சை பட்டாணி ஆகியவற்றை எடுத்துக்கொள்கிறேன். சிக்கன் /பட்டாணி மட்டும் வேக சமயம் பிடிக்கும். மற்றவை எல்லாம் எளிதில் வெந்துவிடும் என்பதால் அவற்றை மதிய சாப்பாட்டுக்கு சமைப்பது மிக எளிது. காய்கறிகள் எல்லாவற்றையும் 2 நிமிடம் வதக்கி, மிளகு தூள், பூண்டு தூள் தூவி, சில சமயம் தயிர் சேர்த்து, சாட் மசாலா சேர்த்தால் முடிந்தது. எண்ணெய் மிக மிக கம்மியாக உபயோகப்படுத்துவதால்  புதிதாக அதிகம் கொழுப்பு சேர்வதில்லை. ஏற்கனவே இருப்பதை கரைக்க பச்சையாக சாப்பிடும் 1 கப் கேரட், முட்டைக்கோஸ் மற்றும் வெள்ளரிக்காய் (எல்லாம் சேர்த்து 1 cup) உபயோகமாக இருக்கிறது. ஆரம்பத்தில் நமக்கு நாக்கு நமநமவென்று இருக்கும்.. நல்லா வக்கனையா உப்பும், காரமும் எண்ணெயுமாக கேட்கும்.. ஆனால் நாட்கள் செல்ல செல்ல நமக்கு பழகிவிடும்.

நமது சாப்பாடில் உள்ள அடுத்த பெரிய வெடிகுண்டுகள் - சர்க்கரை, உப்பு. நாம் சாப்பிடும் சர்க்கரை மிக அதிகமாக process செய்யப்பட்ட பிறகே பேக் செய்து விற்பனைக்கு வருவதால் அதில் கேடுகள் தான் அதிகம். என்னால் இன்றும் கூட தீமையானது என்று தெரிந்தும் கட்டுப்படுத்த முடியாத உனவு சர்க்கரை. எனக்கு இனிப்பு வேண்டும் ஆனால் சர்க்கரை வேண்டாம். ஆதனால் நான் நாடுவது இயற்கை இனிப்பு - தேன். பிஸ்கட், சாக்லேட் ஆகியவற்றில் அளவுக்கு அதிகமான சக்கரை இருப்பதால் எனக்கு தேவையான Dark choclate-ஐ நானே செய்துகொள்கிறேன். கோகோ தூள், தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் ஆகியவற்றை மெல்லிய சூட்டில் கலந்து ஆறவைத்து கட்டிகளாக்கி வைத்துக்கொள்கிறேன். அல்லது 85% Cocoa கொண்ட Dark Choclate வாங்கிக்கொள்கிறேன். எப்போதெல்லாம் இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதோ அந்த சமயத்தில் ஒரு துண்டு dark choclate கடித்துக்கொள்கிறேன். அப்படியும் ஒரு நாள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆர்வம் தாங்காமல் ஒரு பெரிய கேக் துண்டை உண்டுவிட்டு குற்ற உணர்ச்சி பொங்கியதை தவிர்த்திருக்கலாம்.

அப்புறம் இரவு சாப்பாட்டுக்கு சப்பாத்தியும் முட்டையும்... சப்பாத்தியில் Carbohydrates மற்றும் fibres இருப்பதால் அதை balance செய்ய protein சேர்க்கவேண்டும். அதனால் தான் முட்டை / சிக்கன் / பன்னீர். சப்பாத்திக்கு சிறந்தது எந்த மாவு தெரியுமா? ஆஷிர்வாதோ அல்லது பில்ஸ்பர்ரியோ அல்ல... நாம் ரேஷனில் வாங்கி தூசி தும்புகள் களைந்து, மிஷினில் அறைத்து சலிக்காமல் இருக்கும் மாவில் செய்த சப்பாத்தி. ஆஷிர்வாத், அன்னபூர்ணா போன்ற ஆட்டாக்கள் நிறம் மற்றும் மிருதுத்தன்மைக்காக அதிகம் process செய்யப்படும்போது அதில் உள்ள சத்துக்கள் போய் வெறும் குப்பை தான் மிச்சம்.

நம் பெரியவர்கள் இரவில் தூங்கும் முன்பு பால் குடித்துவிட்டு படுக்க சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பாலில் Caesin என்ற slow digesting protein இருப்பதால் இரவில் வயிற்றில் உள்ள உணவை செரிமானம் செய்ய வைப்பதில் நம் உடம்பு அதிகம் வேலை செய்கிறது. அதனால் நம் muscles பாதுகாக்கப்பட்டு, கலோரிகளும் எரிக்கப்படுகின்றன. இந்த இரவு பாலில் இலவங்கப்பட்டை தூளை சேர்த்துக்கொண்டால் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் பார்த்துக்கொள்ளும்.

நமக்கு தேவையானதை நாமே சமைத்துக்கொள்ள வேண்டும், முடிந்த அளவுக்கு வெளிச் சாப்பாடு தவிர்க்கப்படவேண்டும் என்பது நான் உணர்ந்துக்கொண்டது. குறிப்பாக prepacked foods. அவற்றில் உள்ள அதிகப்படியான Sodium நமது தொப்பையை அதிகரிப்பதிலேயே உதவும். மேலும் வெளியே சமைப்பவர்கள் உபயோகப்படுத்தும் உணவுபொருட்கள் அவ்வளவு தரமாக இருக்கது. அதனால் ஆஃபீஸ் சக ஊழியர்களோடு வெளியே போனாலும் வெட்கப்படாமல் எனது tiffin box-ஐ எடுத்துக்கொண்டு போகிறேன். யார் என்ன நினைத்தால் என்ன? என் உடம்பை நான் தானே பார்த்துக்கொள்ள வேண்டும். முப்பதுகளின் இறுதியில் இருப்பதால் இப்போதிலிருந்தே வாயை கட்ட ஆரம்பித்தால் தான் கடைசி காலத்தில் நிம்மதியாக சாகமுடியும் என்பது எனது நம்பிக்கை. எனக்கு தீரா இளமை எல்லாம் வேண்டாம். ஆனால் அடிப்படை வேலைகளை கூட செய்ய அடுத்தவர்களின் தயவை எதிர்பார்க்கக்கூடாது என்ற அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.

எல்லவற்றையும் விட முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அது தண்ணீர் குடிப்பது. நான் ஒட்டகம் போல நாள்கணக்கில் கூட தண்ணீர் குடிக்காமல் இருக்கமுடியும். அந்த கெட்ட குணம் தன் வேலையை காண்பித்தது. ஒட்டகம் பாலைவனத்தில் இருக்கும்போது அடுத்த முறை தண்ணீர் எப்போது கிடைக்கும் என்று தெரியாததால் கிடைக்கும் குடிநீரை தன் முதுகில் சேர்த்துவைக்கும் என்று சொல்வார்கள். அதுபோல நாம் சரியாக தண்ணீர் குடிக்காவிட்டால் நம் உடம்பில் குறிப்பாக தொப்பை பகுதியில் Sodium கொண்டு தண்ணீரை செல்கள் மற்றும் திசுக்களில் சேர்த்துவைக்குமாம். அதனாலும் நாம் குண்டாக ஆவோமாம். இதை body fluid retention என்கிறார்கள்.

குண்டாவது ஒல்லியாவதை விடுங்கள்.. நிரைய தண்ணீர் குடிப்பது நம் வயிற்றை சுத்தப்படுத்த உதவும். அதனால் சமீபத்தில் Hydrocoach, Water Drink Reminder போன்ற Android app கொண்டு ஒவ்வொரு மணிநேரமும் 250மி.லி என இரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க ஆரம்பித்திருக்கிறேன். 1 வாரத்தில் ஓரளவுக்கு  பலன் தெரிந்தது. இப்படி சாப்பாட்டை சரி செய்தும், தினசரி 1 மணிநேரம் briskwalk செய்தும் ஓரளவுக்கு உடம்பை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறேன். மீண்டும் Gym-ல் சேர்வதற்கு முன்பு உணவுப்பழக்கத்தை சீராக்கிவிடவேண்டும் என்று முயற்சிக்கிறேன். காரணம் உடற்பயிற்சி 20% தான்.. மீதி 80% சரியான உணவுப்பழக்கத்தில் தான் இருக்கிறது.