"மௌனராகம்" ரேவதி

Girls
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

திவ்யாவை பார்த்த அனைவருக்கும் அவள் மீது கட்டாயம் காதல் வந்திருக்கும். இப்போது கூட அவளை பார்க்கும் பலருக்கும் திவ்யா மாதிரி பொண்டாட்டி கிடைக்கமாட்டாளா என்ற ஏக்கம் வரும். நமக்கும் இது மாதிரி துறுதுறுவென ஒரு பெண் பிறக்காதா என்று பெருமூச்சு வரும். இப்படி பார்த்தவர்களை எல்லாம் தன்னை காதலிக்க வைக்கும் திவ்யாவுக்கு சமீபத்தில் 30 வயது முடிந்தது. ஆகஸ்டு 15 1986-ல் மௌனராகம் மூலமாக "பிறந்து" நம் மனதை கொள்ளையடித்த திவ்யாவுக்கு 30 வயது ஆனாலும் இன்றும் அதே அழகோடும், துறுதுறுப்போடும் இளமையோடும் வளையவருகிறாள்.

மௌனராகம் இன்றும் நம் மனதில் ஒரு classic-காக இருப்பதற்கு இரண்டே காரணங்கள் தான் - ஒன்று திவ்யா, மற்றொன்று இசைஞானி. மனோகர், சந்திரகுமார் மற்றும் பி.சி ஸ்ரீராம் எல்லாம் துணை காரணிகள். மௌனராகம் முதலில்  கன்னடத்தில் குறும்படம் "திவ்யா "வாக தயாரிக்கப்பட தான் பிறந்ததாம். அப்போது வெறும் திவ்யாவும் சந்திரகுமாரும் மட்டுமே இருந்தனராம். விருப்பமில்லாத கல்யாணத்தில் மாட்டிக்கொள்ளும் பெண் எப்படி அதில் தன்னை பொருத்திக்கொள்கிறாள் என்பது தான் கருவாம். அப்போது மணிரத்னம் நடிகை சுஹாசினியை சந்தித்து இதில் நடிக்க கேட்டாராம். சில காலம் கழித்து திவ்யாவுக்கு ஏன் இந்த கல்யாணத்தில் ஈடுபாடு இல்லாமல் போனாள் என்பதை விளக்க அவளுக்கு கடந்த காலம் ஒன்று இருப்பதாக கிளைக்கதையை எழுதி மனோகரை கொண்டுவந்தாராம். பின்னர் இதனை தமிழில் தயாரிக்க முடிவு செய்தாரம்.

திவ்யா  ஒன்றும் முற்றிலும் சரி அல்லது தவறு என்று வரையறுக்கப்பட்ட Black and white ஆக எழுதப்பட்ட கதாபாத்திரம் அல்ல. சில சமயத்தில் அவளது நடவடிக்கைகள் நம்மை குதூகலப்படுத்துகின்றன. சில நேரங்களில் இவளுக்கென்ன கிறுக்கா பிடித்திருக்கிறது என்று கன்னம் கன்னமாக அறையவேண்டும் போல இருக்கும். இன்னும் சில தருணங்களில் பாவிப்பெண் கிடைத்த நல்ல விஷயத்தை பாதுக்காத்துக்கொள்ள தெரியாமல் இருக்கிறாளே என்று பரிதாபப்பட வைக்கும்.

சந்திரகுமார் தன்னை நெருங்கும்போது (உடல்ரீதியாக அல்ல)விலகும் திவ்யா பின்பு அவன் மீடு ஈடுபாடு ஏற்பட்டு நெருங்க முயற்சிக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் இயல்பானவை. குறிப்பாக சந்திரகுமாருக்கு காஃபி ஊற்றிக்கொடுத்துவிட்டு  "சக்கரை போடலை " என்று வழியும் காட்சி நம் முகத்தில் சிரிப்பை கொண்டுவரும் என்றால் சந்திரமோகன் உயிருக்கு போராடும்போது பதற்றத்துடன் மருத்துவமனையில் தன் தாலியை எடுத்து காண்பிக்கும் காட்சி கவிதை. திவ்யா பயங்கர impulsive என்பதை பல காட்சிகள் மூலம் படம் முழுவதும் consistent- ஆக வருகிறது.  "எனக்கு செங்கல்லும் சிமெண்ட்டும் போதும் " என்று சந்திரகுமாருக்கு மூக்குடைக்கும் போதும், "நீங்க தொடுறது எனக்கு கம்பளி பூச்சி ஊருற மாதிரி இருக்கு " என்று எரிந்து விழும்போதும், இத்தனை நாள் காயப்படுத்தப்பட்ட கணவன் என்றும் பாராமல் கொலுசை மாட்டிக்கொண்டு  விளையாடும்போதும் சரி, கடைசியில்  "வெட்கத்தை விட்டு சொல்றேன். எனக்கு உங்களை பிடிச்சிருக்கு " என்று குமுறும் போதும் சரி, திவ்யா ஒரு சராசரி பெண் என்ற காரணத்தாலேயே நம்மால் அவளை புரிந்துக்கொண்டு காதலிக்க முடிகிறது. கடைசியில் திவ்யா வாயை திறந்து தன் தவற்றை ஒத்துக்கொள்ளாமல் இருந்திருந்தால் காலத்துக்கும் இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் ஏங்கி தவித்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.

divya02

படத்தின் ஆரம்பத்தில் வந்த கலாட்டா பெண் திவ்யாவுக்கு கடந்த காலத்தில் ஒரு துயரம் இருந்திருக்கிறது என்பது பின்னர் தெரியும் போது ஆரம்ப காட்சிகள் அன்னியமாக இருக்கிறது. மனதில் அப்படி ஒரு பாரம் சுமக்கும் பெண்ணால் எப்படி அதன் சுவடே தெரியாமல் தங்கைகளுடன் சேர்ந்து வீட்டில் அண்ணனை கலாய்க்க முடிகிறது? தோழிகளோடு சேர்ந்து மழையில்  "ஓகோ மேகம் வந்ததோ?" என்று குதூகலமாக ஆடமுடிகிறது? அதுவும் தன் வாழ்க்கையின் துயரமாக கல்யாணத்தை சார்ந்த நிகழ்ச்சியோடு? இருந்தாலும் திவ்யா நம் மனதில் பொருந்திப்போனதற்கு காரணமே அவளது முரண்பாடுகள் தானோ?

திவ்யாவுக்கு அடுத்து என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் என்பது சந்திரகுமார் தான். பொறுமையின் சிகரம் என்று பொதுவாக ரசிகர்களால் கருதப்படும் சந்திரகுமாரும் கோபம், ஏக்கம் என்று வாழும் ஒரு சராசரி மனிதன் தான். எந்த ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணிடம் ஏற்படும் முதல் ஈர்ப்பு - அலைவரிசை ஒத்துப்போவது தான். அதை தான் பெண் பார்க்கும் காட்சியில் காட்டியிருப்பார் மணிரத்னம். தான் சொல்ல வந்ததை எல்லாம் தான் பார்க்க வந்த பெண் சொல்லும்போது சந்திரகுமார் க்ளீன் போல்டு. அதனால் தான் அந்த பெண்ணை சமாதானம் செய்துக்கொள்ளலாம் என்ற எண்னத்தில் கல்யாணமும் செய்துகொள்கிறார். திவ்யா  "எனக்கு செங்கல்லும் சிமெண்ட்டும் போதும் " என்று வெடுக்கென சொல்லும்போது உள்ளுக்குள் நொறுங்குவதாகட்டும், திவ்யா தன்னை நெருங்க முயற்சிக்கும்போது விலகுவதாகட்டும், சந்திரகுமார் இடத்தில் எந்த ஆண் இருந்தாலும் அப்படி தான் நடந்துக்கொண்டிருப்பார்.

திவ்யா கதாபாத்திரத்தை விட மிக consistent-ஆக படைக்கப்பட்டிருப்பது சந்திரகுமார் தான். ஒரு காட்சியில் திவ்யா என்னவோ சொல்ல வரும்போது சந்திரகுமார் அறையில் அமைதியாக புத்தகம் படித்துக்கொண்டிருப்பார். அப்புறம் திவ்யா முதன் முதலில் தன் வீட்டுக்கு வந்தபோது  "இங்கே சமையல்காரன், தோட்டக்காரன் எல்லாம் நான் தான்... இங்கே தான் நான் கையை சுட்டுக்கொண்டு காலை சுட்டுக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சமைக்க கத்துக்கிட்டேன்" என்று சொல்லும்போதே சந்திரகுமார் தான் ஒரு self made individual, ஓரளவுக்கு emotionally independent மனிதர் என்பதை மிக subtle-ஆக சொல்லியிருக்கிறார்கள். அவருக்கு திவ்யா தன்னை விட்டு போகிறாளே என்ற வருத்தம் இருந்தாலும்  "இதுக்கு முன்னாடியும் நான் தனியா தானே இருந்தேன்" என்ற ego / emotional coldness தன் வருத்தத்தை வெளியே சொல்வதை தடுக்கும்.

divya03

சந்திரகுமார் போன்ற மனிதர்களுக்கு தங்கள் உளவியல் ரீதியான தனிமையை, vulnerability-ஐ மறைத்துக்கொள்ள போட்டுக்கொள்ளும் முகத்திரை தான் ego. அதனால் தான் மற்றவர்களது நடவடிக்கை காயப்படுத்துபோது அது தங்களை பாதித்ததை மறைக்க எடுக்கும் ஆயுதங்கள் தான் குறைவாக பேசுவதும், நீண்ட மௌனங்களும் மெல்லிய புன்னகையும். சந்திரகுமார் இவற்றை மிகச்சரியாக கையாள்வதை இந்த படத்தில் காணலாம். சந்திரகுமார் போன்ற மனிதர்கள் உறவுகளில் passive-ஆக இருப்பது போல இருந்தாலும் வேலையில் dynamic-ஆக இருப்பார்கள். வேலை சார்ந்து எடுக்கும் முடிவுகளின் பின்விளைவுகளை பற்றி பயப்படமாட்டார்கள். அதை தான் ஒரு அடாவடி driver-ஐ வேலையிலிருந்து dismiss செய்யும் காட்சியில் பார்க்கலாம்.  மொத்தத்தில் திவ்யாவுக்கு சரியான foil-ஆக படைக்கப்பட்டு balance செய்யப்பட்டது தான் சந்திரகுமார். இந்த பதிவை எழுதும் வரை எனக்கு திவ்யாவை தான் நன்றாக புரிந்தது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் எழுத ஆரம்பித்தபோது பின்னால் தான் என்னை சந்திரகுமார் மனதளவில் ஆழமாக பாதித்திருப்பதை உணரமுடிந்தது.

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த cameo-க்களில் ஒன்று என்று புகழப்படும் மனோகர் கதாபாத்திரம் அமைதியான பெண்களுக்கு அடாவடியான ஆண்கள் மீது தான் ஈர்ப்பு ஏற்படும் என்ற காலம் காலமான உண்மையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஒருவேளை மனோகருக்கும் திவ்யாவுக்கும் கல்யாணம் ஆகியிருந்தால் அது எவ்வளவுக்கு நீடித்திருக்கும் என்பது சந்தேகமே. மணிரத்னத்தின்  "ஆயுத எழுத்து "-வில் வரும் மாதவன் - மீரா ஜாஸ்மின் கதை இந்த எண்ணத்தின் உருவாக்கமாக இருந்திருக்குமோ? நித்தமும் சண்டையும் காதலுமாக அவர்கள் வாழ்க்கை ஓடியிருக்குமோ?

காகிதத்தில் எழுத்துகளாக, வார்த்தைகளாக இருக்கும் ஒரு கதை செல்லுலாய்ட்டில் ஏற்றப்படும்போது அதை அதன் தாக்கம் குறையாமல் படம்பிடிப்பதில் பல இயக்குநர்கள் கோட்டை விடுவதுண்டு. இதிலும் நான் மேலே சொன்ன திவ்யாவின் கதாபாத்திரத்தின் முரண்பாடுகள் உண்டு. மிகப்பெரிய லாஜிக் ஓட்டை என்றால் - ரிஜிஸ்டர் கல்யாணத்தன்று திவ்யாவின் காதலன் போலீசால் கொல்லப்பட்டதால் அது சம்பந்தப்பட்ட போலீஸ் விசாரணை காரணமாக கூடவா அவள் குடும்பத்தினருக்கு அவளது காதல் தெரிந்திருக்காது? அப்படி தெரிந்திருந்தால் அவர்கள் திவ்யாவை பெண்பார்க்க வரும்போது அது குறித்து அவளிடம் பேசியிருப்பார்களே? மேலும் படத்தின் வசனங்களில் பல இடங்கள் பயங்கர மேடை நாடகத்தனமான வசனங்கள்.

இது போன்ற குறைகள் இருந்தாலும்  "மௌனராகம்" திரைப்பட classic-ஆக திகழ்வதற்கு காரணம் - ரேவதியும், இளையராஜாவும், பி.சி ஸ்ரீராமும் தான். திவ்யாவாக நடிப்பதற்காகவே பிறந்தவரோ என்று கருதும் அளவுக்கு பொருந்திப்போன ரேவதி.. உணர்ச்சிவசப்பட்டு உச்சஸ்தாயியில் பேசும்போது கீச்சு குரலடிப்பது கூட அழகு தான் என்று தோன்றவைக்கிறார். கிட்டத்தட்ட அரை மணிநேரத்துக்கும் மேலான சிம்ஃபனி இசைக்கோர்வையாக பின்னணி இசை இன்றும் கூட பல்லாயிரக் கணக்கான செல்ஃபோன்களின் ரிங்டோனாக திகழ்வதே சாட்சி, உயிரை தொடும் பாடல் இசை என இசைஞானி இளையராஜாவும் தன் பங்குக்கு உயிரை கொடுக்க, பி.சி தன் பங்குக்கு வெளிச்சத்தையும் நிழலையும் குழைத்து செல்லுலாயிட்டில் வரைந்த ஓவியம் போன்ற காட்சியமைப்புக்கள் என அவரும் உயிர் கொடுத்து மணிரத்னம் பெற்றெடுத்த திவ்யா 30 வருடங்கள் ஆனபின்பும் இளமையாக இருப்பது ஆச்சரியம் இல்லை. காரணம் அவள் உருவான கருவின் வித்துக்களின் (ரேவதி, இளையராஜா, பி.சி ஸ்ரீராம்) வீரியம் அப்படி.

நான் முதன் முதலில் திவ்யாவை பார்த்தது என்னுடைய 14-வது வயதில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியான மாநில மொழி பட வரிசையில் மௌனராகம் ஒளிபரப்பான போது. அப்போதே எனக்கு திவ்யாவை சட்டென்று பிடித்துப்போனது. அன்றிலிருந்து எனக்கு  "திவ்யா " என்ற பெயர் மீது அப்படி ஒரு கிறக்கம். பின்னர் ஒவ்வொரு முறை அந்த படத்தை பார்க்கும் போதும் எனக்கு திவ்யாவை தவிர மற்றவர்கள் யாரும் கண்ணுக்கு தெரிய மாட்டார்கள். வருடங்கள் ஓட ஓட எனக்கு பெண் குழந்தை பிறந்தால் அதற்கு திவ்யா என்று பெயரிடவேண்டும் என்று பயங்கர ஆசை. இது தான் மௌனராகம் திவ்யா என்னில் ஏற்படுத்திய பாதிப்பு. அப்படிப்பட்ட திவ்யாவுக்கு 30 வயது ஆகிவிட்டது என்பதை இன்னும் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை... காரணம் திவ்யா என்றும் இளமையானவள் மட்டுமல்ல இனிமையானவளும் கூட.