Debt

Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ராமாயணத்தில் ராம ராவண யுத்தம் ஆரம்பிக்கிறது. மகன் இந்திரஜித் இறந்துவிட, ராவணன் ராமனுடன் நேருக்குநேர் யுத்தத்திற்கு போக அன்று ராமன் ராவணனின் மகுடத்தை வீழ்த்தி, அவன் வில்லை உடைத்து, ரதத்தை உடைத்து தரையில் நிராயுதபாணியாக நிறுத்துகிறார். "நீ மிகவும் களைத்திருக்கிறாய். இன்று போய் நாளை வா" என்று ராமன் கூற, ராவணன் அவமானத்தால் கூணிக்குறுகி நிற்கிறான். அப்போது கம்பர் எழுதுகிறார் - "கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்". கடன் பட்டவர் படும் கலக்கம் என்பது உடமைகளை, உற்றார் உறவினர்களை எல்லாம் இழந்து நிற்கும் தனிமையை போன்றது. அது மூவுலகையும் ஆளும் மன்னாதி மன்னர்களும் படும் கலக்கம் போன்றதை சாமானியர்களும் அனுபவிக்கும் கொடுமையை விளக்க இந்த உவமையை விட ஆழமானது வேறு எதுவும் இல்லை.

இப்போ எல்லாம் கடன் வாங்குகிறவர்கள் தானே நிம்மதியா இருக்காங்க.. 9000 கோடி ரூபாய் புகழ் விஜய் மல்லையா, 2.5 லட்சம் கோடிகள் கடன் கொண்ட அம்பானி சகோதரர்கள், அதே அளவு கடன் வாங்கியுள்ள அடானி.. இவங்க யாராச்சும் கவலை படுறாங்களா? கடன் குடுத்த வங்கிகள் தான் கலங்கியுள்ளன என்று கேட்டீர்களானால் நான் அவர்களை போல "பெரிய மனிதன்" இல்லை, அதனால நான் அந்த வரையறையிலேயே சேரமாட்டேன். கடன், மான மரியாதை என்று கலங்கும் கோடானுகோடி நடுத்தர வர்க்கதின் பிரதிநிதி நான்.

கடன் வாங்குவது தவறு இல்லை.. ஆனால் நெடுநாள் கடன் வாங்குவது என்பது உண்மையிலேயே கொடுமை. குறிப்பாக வேலை நிரந்தரமில்லாத தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும்போது அந்த சம்பளத்தை நம்பி பெருங்கடன் வாங்குவது நித்ய கண்டம் பூரண ஆயுசு தான். மாதா மாதம் தவணை கட்டவேண்டி ஒரு பெரும்தொகையை ஒதுக்கி வைப்பதே பெரிய விஷயம். நான் இருக்கும் ஐ.டி துறையில் என்னை போன்ற நடுத்தரவயதினருக்கே உள்ள வேலை பாதுகாப்பின்மையும் சேர்ந்துக்கொள்ள ஒவ்வொரு மாதமும் தவணை கட்டும்போது அடுத்த மாதம் சம்பளத்தில் இருந்து பிரச்சனை இல்லாமல் கட்டவேண்டும் என்ற பிரார்த்தனையும் இருக்கும்.

குறைந்த காலத்தில் செலுத்திவிடக்கூடிய குறுகிய கடன்கள் நம் நம்பிக்கையை சோதிப்பதில்லை. ஆனால் நீண்ட கால கடன்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் உளவியல் ரீதியானவை. வேலையில் நமக்கு ஏதேனும் இழுக்குகள் நிகழ்ந்தால் அதற்கு உடனடியாக react செய்யமுடியாது. இந்த ஒரு கேவலமான project-ல வேலை செய்யுறதுக்கு பதிலா வேற கம்பெனிக்கு போகலாம்னு தோன்றும். இந்த நாய்ப்பையன் மேனேஜரை பளார்னு அறையனும் போல தோனும். ஆனால் வீட்டுக்கடன் மாதத்தவனையை மனதில் கொண்டு எல்லாவற்றையும் விழுங்கிக்கொண்டு நடைபிணமாக அதே மேனேஜரை தினமும் பார்த்து பேசவேண்டியிருக்கும். அப்போது எல்லாம் இப்படி நம்மை பலிகொடுத்து கடன் வாங்கி செலவு செய்யணுமான்னு தோன்றும்.

எனது இரண்டாவது வேலையின் போது வீட்டுக்கடன் எடுத்து வீடு வாங்கினேன். எனது சம்பளத்தில் 60% மாதத்தவணைக்கு போனது. கொஞ்ச காலத்தில் அந்த வங்கி வட்டி விகிதத்தை ஏற்றிவிட்டது. இப்போது என் கைக்கு வருவதில் 75% மாதத்தவணைக்கு போக ஆரம்பித்தது. கூடுதல் பணத்தேவைக்கு நான் விடியற்காலைகளில் online classes எடுக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் இந்த பண அழுத்தம், வேலையில் வந்த பிரச்சினைகள் எல்லாம் சேர்ந்து மன அழுத்தத்தை கொடுக்க எனது appraisal-ஐ விலையாக கொடுத்து அந்த project-ல் இருந்து வெளியே வந்தேன். அப்போது வேறு ஒரு மேனேஜர் என் நிலமையை advantage-ஆக எடுத்துக்கொண்டு எனக்கு onsite ஆசை காட்டி, என்னை வைத்து ஒரு POC (Proof of concept) செய்யவைத்தான். அந்த 2 மாதங்கள் பல சனி ஞாயிறுகளில் கூட வேலை செய்ய, அந்த POC வேலை முடித்து ஒப்படைத்த அடுத்த நாளே என்னிடம் கூட சொல்லாமல் client-க்கு mail அனுப்பி என்னை கழற்றிவிட்டான். அந்த கோபத்தில் அவனை நான் அசிங்கமாக திட்ட, விஷயம் HR வரை escalate செய்யப்பட்டு மன்னிப்பு கேட்காததால் நான் நிறுவனத்தில் இருந்து வெளியே அனுப்பப்பட்டேன். இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.

அந்த 2 வருடங்கள் தான் எனக்கு பணத்தின்  அதாவது financial security-ன் அருமையை புரிய வைத்தது. அது வரைக்கும் எனக்கு அங்கீகாரம் மற்றும் comfort level தான் வேலையில் முக்கியம் என்று இருந்தேன். அந்த நிகழ்ச்சி தான் எனக்கு தனியார் வேலையின் பாதுகாப்பின்மையை, கஷ்டம் வரும் நேரத்தில் எனக்கு நானே துணை என்ற உண்மையை உணர்த்தியது.

ஒரு வேலை எனக்கு கடன் பற்றிய அழுத்தம் இல்லாமலோ அல்லது சமாளித்துவிடும் அளவுக்கு குறைவாகவே இருந்திருந்தால் நான் அந்த வேலை சமயத்து பிரச்சனைகளை வேறு மாதிரி கையாண்டிருக்கலாம். இல்லையென்றால் போங்கடா நீங்களும் உங்கள் மயிறு project-உம் என்று உதறிவிட்டு weight காட்டியிருக்கலாம். ஆனால் எல்லா சங்கடங்களையும் அப்போது சகித்து புழுங்கியதற்கு ஒரே காரணம் என் தோளில் உட்கார்ந்திருந்த கடன் தான்.

நமது அரசாங்கம், அரசியல் தலைவர்கள், காவல்துறை, நீதித்துறை எல்லாரும் பணக்காரர்களுக்கானது. பணக்காரர்கள் கடன் வாங்கினால், அது வாரா கடனுக்கு write off செய்யப்படும். இல்லை வங்கிகள் அவர்கள் பின்னால் தொங்கும். சாமனியன் கடன் வாங்கி ஒரு தவணை கட்டவில்லை என்றால் அவன் உடமை ஜப்தி செய்யப்படும், இல்லை என்றால் மன உளைச்சல் ஏற்படுத்தப்பட்டு கடனாளியின் வாழ்க்கை தற்கொலையில் முடியும்.

கடவுள் அருளால் கடனின் பெரும்பகுதியை அடைத்த அன்று இரவு எனக்கு சந்தோஷத்தில் தூக்கமே வரவில்லை. இரவு முழுவதும் இங்கும் அங்கும் உலாத்திக்கொண்டே இருந்தேன். தானாக சிரித்துக்கொண்டேன். நிறைய jam எடுத்து சாப்பிட்டேன். மீண்டும் இது போன்ற தகுதிக்கு மீறிய சுமையை சுமக்கக்கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டேன். இந்த முறை கம்பராமாயணத்தின் "கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்" படித்தபோது ராவணன் மீது எனக்கு உண்மையிலேயே பரிதாபம் வந்தது.

கொஞ்சம் சுவையான துணுக்கோடு இந்த பதிவை முடிக்கலாமா? கம்பரின் காலக் கட்டத்தில் சோழ நாட்டில் ஒரு வழக்கம் இருந்தது. அதாவது வாங்கிய கடனை கட்ட முடியாதவர்களை சுற்றி கடனளித்தவர் பொதுவிடத்தில் ஒரு வட்டம் வரைந்து விட்டுச் சென்று விடுவார். கடனைத் தரும்வரை அவர் அக்கட்டத்தை விட்டு வெளிவர இயலாது. அரசனாயிருந்தாலும் அதே கதிதான். ஆனால் ஒன்று இது கடனைத் திருப்பிப் பெற எல்லா முயற்சிகளும் தோற்றபிறகே கடனளித்தவர் செய்யும் காரியம்.

அதற்கு ஆளாகும் கடன்காரர்கள் இறந்ததற்குச் சமம். அப்படிப்பட்ட கடன்பட்டவர் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்ப நாட்டார் ராவணனின் மன நிலையை அவ்வளவு சுருக்கமான ஆனால் சக்தி மிகுந்த வார்த்தைகளில் வர்ணிக்கிறார். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியே கவிதை பாடும்போது கம்பரே பாடமாட்டாரா என்ன.

இந்த வட்டத்திலிருந்து அரசன் கூட தப்ப முடியாது என்பது மார்க்கோ போலோ அவர்களது பிரயாணக் குறிப்பிலிருந்து தெரிய வருகிறது. நண்பர் இரா. முருகன் இதை அழகாக எழுதியுள்ளார். அதில் வரும் செந்தர் பந்தி என்னும் அரசன் பெயர் சுந்தர பாண்டியனைக் குறிக்கும். அவர் வார்த்தைகளில்:

"யாராவது கடன் வாங்கி விட்டுத் திருப்பிச் செலுத்தாவிட்டால், அந்த ஆள் தெருவில் போகும்போது, கடன் கொடுத்தவன் சரசரவென்று அவனைச் சுற்றி ஒரு வளையம் வளைந்து விடுகிறான். பணத்தைத் திரும்பத் தரும் வரை அவன் அந்த வளையத்துக்குள்ளேயே நிற்க வேண்டியதுதான். செந்தர் பந்தியே ஒரு சந்தர்ப்பத்தில் அந்நிய நாட்டு வணிகன் ஒருவனிடம் இப்படிக் கைமாற்று வாங்கி, இந்தோ தரேன் .. அந்தோ தரேன் என்று நழுவிக்கொண்டிருந்தான். அவன் ஒரு நாள் குதிரையில் போகும்போது கடன் கொடுத்தவ்ன் அவசர அவசரமாகத் தரையில் அவனைச் சுற்றிக் கோடு வரைய, அரசன் கட்டுப்பட்டு அப்படியே நின்றான். அரண்மனையிலிருந்து பணம் எடுத்து வந்து அடைத்து சுந்தரபாண்டியனன விடுவித்துப் போனார்கள்.

Related Articles