Aparna Balamurali

Girls
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒரு நடிகை சட்டென்று நம் கவனத்தை கவர வேண்டுமென்றால் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம்? உயரமாக, வெளிர்நிறமாக, கண்ணுக்கு லட்சனமாக, வானத்திலிருந்து இறங்கி வந்திருக்கவேண்டும்... இப்படிப்பட்ட இலக்கணங்களை எல்லாம் உடைத்து தூள் தூளாக்கி படம் பார்த்தவர்களின் மனதை எல்லாம் கொள்ளையடித்த இந்த கேரளத்து பெண்குட்டி தான் என்னுடைய இதயத்தை திருடிய தற்போதைய கள்ளி. அவர் தான் அபர்ணா பாலமுரளி.

மகேஷிண்டே பிரதிகாரம் (மகேஷின் பழிவாங்கல்) என்ற கடந்த வருடத்து சூப்பர்ஹிட் படத்தை பார்க்க அவ்வளவாக விருப்பமில்லாமல் தான் டிவியில் போட்டேன். ஆனால் படத்தின் ஆரம்பத்தில் வந்த டைட்டில் பாட்டிலேயே நிமிர்ந்து உட்கார்ந்துவிட்டேன். படத்தில் அனுஸ்ரீ தான் கதாநாயகி என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் பாதியில் அவர் போனதும் அபர்ணா வருவார். இந்த பெண் இரு குணசித்ர நடிகை என்று நினைத்தேன். ஆனால் படம் போக போக அந்த பெண் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தார். அவர் "சேட்டன் சூப்பரானு" என்று சொல்லும் ஒரு வசனம் கேரளத்தில் சூப்பர் ஹிட்.

முகத்தில் பருவுடன் இருப்பது தான் அழகு என்று சாய் பல்லவிக்கு அப்புறம் அபர்ணா பாலமுரளி கேரளத்தில் புது style statement படைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் முற்றிலும் மேக்கப் இல்லாமல் வந்துள்ளது அவரது தன்னம்பிக்கையை காட்டுகிறது. படம் முடியும்போது எனக்கு ஃபஹாத் ஃபாஸிலோ இல்லை மற்றவர்களோ நினைவில் இல்லை... வெறும் அபர்ணா பாலமுரளி மட்டும் தான். படம் முடிந்தும் முடியாமலும் கூகுளில் தேட, நான் மட்டுமல்ல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கூட இந்த பெண்ணின் நடிப்பில் அசந்துபோய் தன் படப்பிடிப்பு தளத்துக்கு விருந்தினராக அழைத்து உபசரித்தாராம்.

திரைப்பட கலைஞர் பாலமுரளியின் மகளான அபர்ணா பாலக்காடு குளோபல் இன்ஸ்டிட்யூட்டில் கட்டட கலையில் பட்டம் படித்துவருகிறாராம். இவரது ஆசிரியை உன்னி மாயா என்பவர் மகேஷிண்டே பிரதிகாரம் எழுதிய ஷ்யாம் புஷ்கரின் மனைவியாம். அவர் பரிந்துரைத்து மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் ஆடிஷனுக்கு போனாராம் அபர்ணா. இயக்குநர் திலீஷ் போத்தன் இவரை ஜிம்ஸி என்ற கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்தார். படத்தின் ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித் இவரை மேக்கப் இல்லாமல் நடிக்க சொன்னாராம். "மௌனங்கள்" பாடலில் அபர்ணாவை மிக இயல்பாக, அழகாக காட்டியிருந்தார் ஷைஜு. மேலும் இந்த "மௌனங்கள்" பாடலை பின்னணி பாடியதும் அபர்ணாவே தான்.

aparna02

கூகுள் படங்களில் தேடினால் வரும் பெரும்பாலான படங்களில் இவர் படுசுமாராக தான் இருப்பார். ஆனால் படத்தில் ஜிம்ஸி ஒரு தேவதை போல இருந்தார். அந்த ஜிம்ஸி கதாபாத்திரத்துக்கு அபர்ணாவை போல வேறு யாரும் உயிர் கொடுத்திருக்க முடியுமா தெரியவில்லை. இந்த பெண் தமிழுக்கு வருவது, இங்கே தாக்குபிடிப்பது எல்லாம் கஷ்டம். அதனால் மேலும் நிறைய நல்ல மலையாள படங்கள் நடித்து புகழ் பெறட்டும்.

இந்த பதிவின் ஆரம்பத்தில் நான் சொன்ன அந்த டைட்டில் பாடல் இதோ. படம் கேரளத்து இடுக்கியில் நடக்கிறது. அதனால் இடுக்கி குறித்து பாடப்பெற்ற இந்த பாடல் பிஜிபால் என்ற இளம் இசையமைப்பாளரின் சிறந்த பாடல்களில் ஒன்று.