Bangalore Passenger

Ramblings
Typography

நமக்கு எங்கேயும் எப்போதும் ஞானம் /பதில்கள் கிடைக்கலாம் ஆகையால் நமது சூழ்நிலையில் இருப்பது அவசியம். பல முறை நாம் உடலளவில் ஒரு இடத்தில் இருப்போம் ஆனால் நம் மனதளவில் வேறு எங்கோ சுற்றிக்கொண்டிருப்போம். நாம் எங்கே பறந்துக்கொண்டிருந்தாலும் நம்மை பிடித்து தரைக்கு இழுத்து grounded-ஆக வைக்க ஒரு mechanism அவசியம்.  எனக்கு ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் பயங்கர விரக்தி அடைந்த நிலையில் இருந்தபோது நடந்த ஒரு பயணம் என்னை மீண்டும் புதுப்பிக்க வைத்தது.

எனக்கு பொதுவாகவே வாழ்க்கையில் நான் deserve செய்யும் உயரங்களுக்கு எட்டமுடியவில்லை என்ற விரக்தி இருக்கும். என்னை விட அறிவு கம்மியானவர்கள் அலுவலகத்தில் அரசியல் செய்தோ, இல்லை அதிர்ஷ்டவசமாகவோ  long term onsite போனாலோ, இல்லை  மிகப்பெரிய சம்பளத்தில் வேறு வேலைக்கோ மாறினாலோ எனக்கு மட்டும் ஏன் இந்த வாய்ப்புகள் வாய்க்கமாட்டேங்கிறது என்ற ஆதங்கம் தோன்றும். இந்த வகை எதிர்மறை எண்ணங்கள் நிச்சயம் என் தினசரி வாழ்க்கையை பாதித்ததுண்டு. 2010 முதல் 2012 வரையிலான காலகட்டம் எனக்கு சோதனையாக இருந்தது.

இந்த மாதிரியான ஒரு காலகட்டத்தில் நான் இந்த ரயிலில் பயணிக்க நேர்ந்தது. பெங்களூருவிலிருந்து சேலம் செல்லும் பாஸஞ்சர் ரயிலில் ஒரு வார நாள் மாலையில் பயணம் செய்யும்போது ஒசூர் ரயில்நிலையத்தில் ஒரு கூட்டம் ஏறும். அது ஒசூர் சுற்றுப்புறங்களில் கூலி வேலை செய்துவிட்டு மாலையில் தருமபுரி வரையில் தங்கள் வீடுகளுக்கு திரும்பும் தொழிலாளர்கள் கூட்டம். அவர்களிடம் ஒரு உற்சாகமும், வாழ்க்கையை இயல்பாக எடுத்துக்கொள்ளும் positive vibes எனக்கு பயங்கர therauptic-ஆக இருந்தது. அவர்களுக்கும் கவலைகள், பணக்கஷ்டங்கள், மேஸ்திரியை / முதலாளியை சமாளிக்கவேண்டிய சங்கடங்கள் எல்லாம் இருக்கும். ஆனாலும் மாலையில் வீடு திரும்பும்போது அவர்களுக்கு இருக்கும் ஒரு உற்சாகம்... இதற்கெல்லாம் வரம் வாங்கியிருக்கவேண்டும் என்று தோன்றும்.

அவர்களுக்கு ஒரு புது மொபைலோ அல்லது இரு சக்கர வாகனமோ இல்லை சிறிய நகையோ இல்லை ஒரு செண்டு நிலம் வாங்குவதோ புது உயரங்களாக இருக்கலாம். தங்கள் உடல் உழைப்பின் மீது இருக்கும் நம்பிக்கை அவர்களை உயிர் உள்ளவரை சுணக்காமல் வேலைக்கு வரவைக்கிறது. இருபது வயது இளைஞர்கள் முதல் அறுபது / எழுபது வயதுள்ளவர்கள் வரை அந்த கூலித்தொழிலாளர் கூட்டத்தில் காணலாம். அவரவர் உடலுக்கேற்ற உழைப்பை அவர்கள் செய்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் படித்ததாக சொல்லிக்கொள்ளும் எனக்குள்ளே அவ்வளவு ஆதங்கங்கள், insecurity மற்றும் விரக்திகள். அந்த பெண்கள் பலரிடம் கழுத்தில் பித்தளை செயின் கூட கிடையாது. ஒன்று மஞ்சள் கயிறு அல்லது மூளி கழுத்து.. கையில் வயர் கூடையில் ஒரு டிஃபன் பாக்ஸ், துண்டு, சட்டை. ஆனால் அவர்கள் தங்களிடம் இல்லாததை - நகைகள் மற்றும் பகட்டான ஆடைகளை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை போல. அவர்களது உரையாடல்கள், குறிப்பாக முன்பின் அறியாத பயணிகளிடம் உரிமையாக பழகுவது - பயணிகளின் குழந்தைகளை உரிமையோடு வாங்கி மடியில் அமர்த்திக்கொள்வது, அவைகளோடு விளையாடுவது என எனக்கு எல்லாமே பிரமிப்பு தான்.

நாம் படித்த பரோபகாரிகளாக இருந்தால் கொஞ்சம் இடம் கொடுப்போம், குழந்தையை வாங்கி மடியில் வைத்துக்கொள்வோம். ஆனால் நமது closed space-ஐ விட்டு அதிகம் வெளியே வரமாட்டோம். ஒருவித இறுக்கம் இருக்கும். ஆனால் அந்த மனிதர்களிடம் உள்ள வெள்ளந்தி உள்ளம் தனக்கென்று எல்லைகள் எதுவும் போட்டுக்கொள்வது இல்லை.

ஒரு முறை நான் இவர்களை கவனித்துக்கொண்டே காதில் headset-ஐ வைத்துக்கொண்டு யாரிடமும் பேசாமல் வந்துக்கொண்டிருந்தேன். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த வயதானவர் (50+ இருக்கலாம்) அதே கம்பார்ட்மென்ட்டில் கூட வந்துக்கொண்டிருந்த மற்றவர்களை கலாய்த்துக்கொண்டு வந்தார். அப்போது ஒரு தந்தை தன் குழந்தையோடு வந்துக்கொண்டிருந்தார். அந்த குழந்தை தனக்கு பொரி வேண்டும் என்று கேட்டபோது அந்த தந்தை மறுத்து மிரட்டிக்கொண்டிருந்தார். அப்போது இந்த வயதானவர் பொரிக்காரரிடம் தனக்கென்று ஒரு பொட்டலம் வாங்கி பெயருக்கு ஒரு வாய் எடுத்துக்கொண்டு மீதி பொட்டலத்தை அந்த குழந்தையிடம் நீட்டினார். அந்த குழந்தை ஆர்வத்துடன் வாங்கியதை அந்த தந்தையால் மறுக்கமுடியவில்லை. இந்த வயதானவரிடம் காசு கொடுக்க முன்வந்தபோது "குழந்தைங்க கேட்கும்போது குடுக்க முடியாதது நாம சாப்பிட்டா என்ன, இல்லைன்னா என்ன? காசு வேணாம்" என்று மறுத்துவிட்டார். அந்த தந்தைக்கும் குற்ற உணர்வு இருந்தது போல. அடுத்து வந்தவரிடம் அந்த குழந்தைக்கு வேறு பல தின்பண்டங்களை வாங்கி கொடுத்தார்.

அதே ரயிலில் இரு வேறு சீட்டில் ஒரு இளம்பெண்ணும், இளைஞனும் அமர்ந்து வந்தனர். அப்போது அந்த பெண்ணிடம் அந்த இளைஞன் ஏதோ சொல்லப்போக அந்த பெண் முறைக்க, இந்த இளைஞன் பயந்து பின்வாங்கினான். அந்த இளைஞன் அந்த பெண்ணை சீண்டுவது போல தோன்றியது. எனக்கு அந்த பெண்ணிடம் சீட் மாறி உட்கார்ந்துக்கொள்கிறாயா என்று கேட்க தோன்றினாலும் ஏதோ தயக்கம் காரணமாக நான் கேட்கவில்லை. வழியில் ரயிலில் காய்கறிகள் விற்றுக்கொண்டு வரும்போது அந்த இளைஞன் தக்காளி வாங்கி இந்த பெண்ணிடம் நீட்ட, அந்த பெண் அவன் மீது எரிந்து விழுந்தாள். இப்போது எனக்கு இந்த இருவரும் பரிச்சயமானவர்களாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. எனது காதில் headset-ல் பாட்டு ஓடிக்கொண்டிருந்ததால் அந்த இளைஞன் அந்த வயதானவரிடம் பேசிக்கொண்டிருந்ததை கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் நான் பாட்டை நிறுத்திவிட்டு இவர்கள் பேசுவதை கேட்டபோது அந்த இளைஞனும், யுவதியும் கணவன் மனைவி என்று தெரிந்தது.

அப்போது ஒரு அம்மா காய்கறி விற்றுக்கொண்டு வந்தார். அவரிடம் ஒரே ஒரு கட்டு முருங்கைக்காய் இருந்தது. இந்த இளைஞன் அதை வாங்கிய பிறகு இன்னொரு பெண் அந்த முருங்கைக்காயை தனக்கு தரமுடியுமா என்று கேட்டார். அதற்கு இந்த வயதானவர் "ஏன் கண்ணு.. இவங்களுக்கு தான் இப்போ முருங்கைக்கா அவசியம். இனிமே முருங்கைக்கா சாப்பிட்டுறூனக்கும் எனக்கும் என்ன பிரயோஜனம்?" என்று கேட்க அனைவரும் கொல்லென்று சிரித்தோம். அந்த கோவக்கார யுவதி வாய்விட்டு சிரித்துவிட, இது தான் சமயம் என்று அந்த வயதானவர் அந்த பெண்ணிடம் "எனக்கு வெத்தலை போடனும்.. இந்த ஜன்னல் சீட்டை கொஞ்சம் கொடேன்" என்று சொல்லி அவளை எழுப்பி தான் உட்கார்ந்துக்கொண்டு அந்த பெண்ணை தனது இருக்கையில் - அந்த இளைஞனின் சீட்டுக்கு எதிர் சீட்டில், கால்கள் உரசும் நெருக்கத்தில் அமரவைத்தார். கொஞ்ச நேரத்தில் அந்த பெண் கோபமெல்லாம் போய் அந்த இளைஞனை காதலுடன் பார்த்துக்கொண்டே வந்தார். சமைக்காமலேயே முருங்கைக்காய் வேலையை துவங்கியிருந்த்து.

முருங்கைக்காய் கிடைக்காத கோபத்தில் அந்த மற்றொரு பெண் இந்த வயதானவரிடம் "இந்தா பாரு.. என்னை கண்ணு கிண்ணுன்னு கூப்பிடுற வேலை வச்சுக்காதே" என்று முறைக்க, அதற்கு அந்த வயதானவர் "சரி கிழவி" என்று பதில் சொல்ல அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். தருமபுரி வந்தபோது அந்த இளைஞனும், இளைஞியும் கையை கோர்த்துக்கெண்டு இறங்க, இந்த வயதானவர் கொஞ்ச நேரம் கழித்து இறங்கி தண்டவாளத்தை தாண்டி பிளாட்ஃபாரத்தில் ஏறியபோது "இந்த மனிதரோடு ஒரு ஃபோட்டோ எடுத்திருக்கலாமோ? விட்டுவிட்டோமே.." என்று நொந்துக்கொண்டேன்.

இன்றும் எனக்கு அந்த மாலை ரயிலில் ஒரு வார நாளில் பயணம் செய்யும்போது எல்லாம் ஏதோ இனம்புரியாத அமைதி கிடைக்கும். அந்த ரயில் ஒரு தாய் போல என்னை தன் மடியில் போட்டு தாலாட்டுவது போல இருக்கும். பின்னர் நாட்கள் செல்ல செல்ல என்னிடம் இருப்பதை வைத்துக்கொண்டு, இருக்கும் வேலையை நிறைவாக செய்துக்கொண்டு மற்றவர்களுக்கு கிடைப்பது எனக்கு கிடைக்க மாட்டேங்குதே என்று ஆற்றாமை கொள்ளாமல் அமைதியாக இருக்க கற்றுகொண்டேன். அதற்கு இந்த வெள்ளந்தி மனிதர்களை சந்தித்ததே காரணம். அதற்காக இருப்பதோடு நிறுத்திக்கொண்டு வாழ்க்கையில் புதிய உயரங்களை எட்ட முயற்சிக்க கூடாது என்று அர்த்தம் இல்லை. எனது முயற்சிகளை தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் நிறைவேறவில்லை என்ற அங்கலாய்ப்பு இல்லை. நடக்கவேண்டியவை நடக்கவேண்டிய நேரத்தில் கட்டாயம் நடக்கும். அதுவரை பொறுமையோடு இருப்பது அவசியம் என்று கற்றுக்கொண்டேன்.

நமக்கும் கீழே பொருளாதார ரீதியாக, உணர்வுரீதியாக நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு உள்ள அளவுக்கு நமக்கு பற்றாக்குறையை, பிரச்சனைகளை கடவுள் கொடுக்கவில்லை என்ற நன்றி வேண்டும் என்று படித்துக்கொண்டேன். விரைவில் இந்த ஐ.டி துறையில் இருந்து ஒதுங்கும்போது இவர்கள் போன்ற மனிதர்களுக்கு உதவுவது போல ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். ஒரு NGO அல்லது இடைத்தரகர்கள் இல்லாமல் அவர்கள் நேரடியாக வேலை / பலன் பெறுவது போன்ற அமைப்பு ஏதாவது ஆரம்பிக்கவேண்டும்.

About myself
Maheshwaran
Author: MaheshwaranWebsite: https://www.maheshwaran.com
I am a SAP Consultant in my late 30s, residing in the happeing IT City - Bangalore. My interests vary from reading to travelling to handicrafts to photography. My latest interest is on Body building. May be this vivid interest keeps me going in my life without getting bored.