Tamilnadu Polls

Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒவ்வொரு தேர்தலிலும் கட்சி  தலைவர்களின் பிரச்சார தரம் குறைந்துக்கொண்டே வருவதை பார்க்கலாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம்  ஒட்டு கேட்பதை விட்டுவிட்டு எதிர் தரப்பை கேவலமாக பேசி "இவருக்கா உங்கள் ஒட்டு?" என்று கேட்பதிலிருந்தே இவர்களது பதவி ஆசை அப்பட்டமாக வெளிப்படுகிறது. இதில் நகைச்சுவை என்னவென்றால் இரண்டு தரப்பின் தாக்குதல் வீடியோக்கள் ஒன்றுபோலவே உள்ளன. இருவருமே ஊழல் பெருச்சாளிகள், தங்களை நேர்மையானவர்கள் என்று சொல்லிக்கொள்ள வாக்கு இல்லதவர்கள். அதனாலேயே ஒருவர் மற்றவரை திட்டிக்கொள்கிறார்கள்.

திமுக - அதிமுகவுக்கு மாற்றாக ஏதாவது நல்ல கட்சியோ, தலைவரோ இருந்தால் கொண்டாடும் மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். டில்லிக்கு ஒரு அரவிந்த் கேஜ்ரிவால் போல தமிழகத்துக்கு ஒரு தேவதூதன் வரமாட்டாரா என்று நடுநிலை வாக்காளர்கள் ஏங்குகிறார்கள். ஆனால் கண்ணுக்கெட்டியவரை பதவிக்காக மல்லுக்கட்டும் அரசியல் கட்சிகளே தெரிகின்றன. விஜயகாந்த் இப்போதே மனைவி - மைத்துனன் கைகளில் பொம்மலாட்ட பாவையாக இருக்கிறார். பின்கதவு வழியாகவே எம்.பி ஆகி பழக்கப்பட்டுவிட்ட அன்புமணியை எம்.எல்.ஏ ஆக கூட நினைத்து பார்க்க முடியவில்லை... இவர்களை எப்படி முதல்வர் ஆக்குவது? அதற்கு தெரிந்த பிசாசே போதும்.

திமுக - அதிமுக இரண்டில் எது குறைந்த தீமை கட்சி என்று பார்த்தால் எனது தேர்வி அதிமுக-வே. திமுக பதவிக்கு வந்தால் கருணாநிதியின் குடும்பமும், குறுநில மன்னர்களான அமைச்சர்களின் குடும்பங்களும் மட்டுமே பிழைக்கும். ஐ.டி நிறுவனங்களில் சுழற்சி முறையில் அனைத்து ப்ராஜெக்ட் உறுப்பினகளையும் அன்சைட்டுக்கு அனுப்புவதால் உத்வேகம் கிடைத்து நன்றாக வேலை செய்வது போல, அதிமுகவில் மட்டுமே யார் வேண்டுமானாலும் எம்.எல்.ஏ ஆகி மந்திரி ஆகலாம், சம்பாதிக்கலாம் என்ற நிலைமை இருப்பதாலேயே தொண்டர்களில் அதிமுகவினர் கூடுதல் உற்சாகமாக இருக்கிறார்கள் என்பது எனது அபிப்பிராயம். அதனால் அதிமுக வந்தால் சசிகலா குடும்பத்தோடு சேர்ந்து மற்றவர்களும் பிழைக்கட்டுமே..

இது என்னைப்போன்ற நடுநிலையாளர்கள் மீது திணிக்கப்பட்ட முடிவே தவிர நாங்கள் ஆசைப்பட்டு எடுக்கும் முடிவு அல்ல. அதுவரை மக்களுக்காக உழைக்கும் ஒரு நல்ல தலைவன் வரமாட்டானா என்று வழி மீது விழி வைத்து காத்திருக்கிறோம். அதற்காக ரஜினியையோ, விஜய்யையோ இல்லை வேறு யாராவது சினிமாக்காரனையோ முதல்வராக்கிவிடுவோம் என்று கனவு காணவேண்டாம்.