IT Company appraisal

Ramblings
Typography

கடந்த சில வருடங்களாகவே எனக்கு நான் இருக்கும் இந்த ஐ.டி  துறையின் மீது ஒரு அவநம்பிக்கையும், பாதுகாப்பின்மையும் தோன்ற துவங்கியது. மற்ற துறைகளில் அனுபவம் கூட கூட பொறுப்புகளும் மரியாதையும் கிடைக்கும். ஆனால் இந்த தொழில் நுட்பத்துறையில் அனுபவமும் சம்பளமும் கூட கூட பாதுகாப்பின்மையும், அரசியலும் தான் கூடும். பணத்தை மிச்சப்படுத்த இந்த தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள் சம்பளம் அதிகம் வாங்கும் பணியாளர்களை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக அடிமாட்டு சம்பளத்தில் அனுபவம் குறைந்த இளைய பணியாளர்களை நியமிக்கும். அதற்கு நிறுவனங்கள் கையில் எடுப்பது அப்ரைசல் எனப்படும் மதிப்பீட்டை தான். அதனாலேயே தங்களை காப்பாற்றிக்கொள்ள மேனேஜர்களை அண்டிப்பிழைக்கும் அரசியல் பண்ண ஊழியர்கள் பழக்கப்படுகிறார்கள். இங்கு உழைப்புக்கு மதிப்பில்லை. மாறாக  எவ்வளவு நக்குகிறீர்களோ அதற்கேற்ப தான் உங்கள் மதிப்பெண். இதற்கு இந்த மேனேஜர்கள் கொடுக்கும் பெயர் "கம்யூனிக்கேஷன் ஸ்கில்".

அல்லது உங்களுக்கு சுயமரியாதை முக்கியம் என்றால் ஐ.டி துறையை விட்டு வெளியேறி விவசாயம் செய்யலாம், சொந்த ஸ்டார்ட் அப் தொடங்கலாம். அவ்வளவு தைரியம் இல்லையென்றால் அவர்களே வெளியே போக சொல்லும்வரை எதைப்பற்றியும் கவலைப்படாமல், தங்கள் உழைப்புக்கு எந்த அங்கிகாரமும் எதிர்பார்க்காமல் மழுங்கடித்து காலத்தை ஓட்டலாம். மிகப் பெரும்பாலானோர் இப்படி நடைபிணம் ஆவதற்கு அவர்கள் வாங்கி வைத்த (வீட்டு) கடன் தான் முக்கிய காரணம். அதை சமாளித்துவிட்டால்,  கிடைத்த காசை சமர்த்தாக முதலீடு செய்திருந்தால் பெரிய பிரச்சனை இல்லாமல் காலத்தை ஓட்டிவிடலாம். ஆனால் அந்த திட்டமிடல் தானே பிரச்சினை?

ஐ.டி  துறை என்பது பொதுக்கழிப்பிடம் போல... வெளியே உள்ளவன் எப்போ உள்ளே போகலாம் என்று வரிசையில் இருப்பான். உள்ளே இருப்பவன் எப்போது இந்த நாற்றத்திலிருந்து வெளியேறுவோம் என்று தவித்துக்கொண்டிருப்பான்.

எனக்கு இன்னும் ஐந்து வருடங்களில் ஐ.டி துறையிலிருந்து வெளியேறி சமுதாயத்துக்கு பயனுள்ள அதே சமயம் கையை கடிக்காத உபயோகமுள்ள நிறுவனம் அரம்பிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்குள் வாங்கிய கடனை எல்லாம் அடைத்துவிட்டால் துணிந்த இறங்கலாம்.

எனது இதே எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் விகடன் - ல் வெளியான கட்டுரை இதோ கீழே..


கவிஞர் வைரமுத்து எப்போதோ சொல்லியதாக ஞாபகம்- “இங்கு நிற்கிற இடத்தில் நிற்பதற்கே கடுமையாக ஓட வேண்டி இருக்கிறது” என்று. இந்த வரிகள் உலகமயமாக்கலுக்கு பிறகு பிறந்த அனைவருக்கும் பொருந்தும் என்றாலும், இந்த வாக்கியத்தின் அடர்த்தியை, ஆழத்தை நன்கு உணர்ந்தவர்கள் மென்பொறியியல் துறையில் இருப்பவர்கள். உங்களை நீங்கள் தினமும் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டிய துறை அது. கொஞ்சம் அசந்தாலும் காணாமல் போய்விடுவதற்கான அனைத்து சாத்தியங்களும் அங்கு மிக அதிகம்.

இந்த தகவல் தொழில்நுட்ப துறையில், இந்தியாவில் நேரிடையாக ஏறக்குறைய 30 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். மறைமுகமாக 10 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும்,  குறைந்தது 5 லட்சம் பேர் இந்த துறையில் வேலை செய்கின்றனர். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 8% பங்களிப்பும், ஏற்றுமதியில் 30%  பங்களிப்பும் இந்தத் துறையின் மூலம் கிடைக்கிறது.இந்த ஏற்றுமதியில் தமிழ்நாடு (11%) மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால், உள்நாட்டு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் இவ்வளவு பங்களிப்பை செலுத்தும் ஒரு துறையின் பிரச்னை அதிக பேசப்படாமலேயே இருக்கிறது.

கற்றது தமிழ் தாமஸ்களுக்கு என்ன ஆச்சு...?

ஏதோ பணக்கார சமூகத்தின் பிரச்னையை எழுதுகிறேன் என்று தயவு செய்து alt + tab key யை தட்டி விடாதீர்கள். ஆம். ஒரு காலத்தில் அனைவரும் பொறாமைபட்டு, மிக ஏக்கத்துடன் பார்த்த நிலையில் இப்போது அவர்கள் இல்லை. மென்பொறியாளர்கள் மட்டுமல்ல, அவுட் சோர்சிங் துறையில் பணி செய்தவர்கள் நிலையும்  நாம் பரிதாபப்படும் அளவிற்கே இருக்கிறது.

“I am Thomas here... How can i help you sir...?" என்று நுனிநாக்கில் ஆங்கிலம் பேசிய ‘கற்றது தமிழ்’ கெளசிக்குக்களுக்கு ஒன்று வேலை போயிருக்கும் அல்லது எப்போது வேலை போகும் என்ற பதற்றத்தில் இருப்பார்கள்.  ஏன் சிலர், பார்த்த வேலையை நம்பி வாங்கிய வீட்டு கடன் தவணையை கட்டமுடியாமல், அவமானம் தாங்காமல் தற்கொலை கூட செய்திருப்பார்கள்.

ஆம், இது ஏதோ உங்கள் பரிதாபத்தை கோருவதற்காக எழுதப்பட்ட மிகை வார்த்தைகள் அல்ல. 2008 உலக சந்தை மந்த நிலையின் போது, இங்கிலாந்தில் இறந்த மென்பொறியாளர்களின் எண்ணிக்கை நூறுக்கு மேல் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. ஆனால், இந்தியாவில் விவாசாயிகளின் தற்கொலையையே காதல் தோல்வியால் இறந்தான், ஆண்மை இல்லாததால் இறந்தான் என்று பதியும் அரசு,  நிச்சயம் இவர்களின் மரணத்தையும் வயிற்று வலியால் செத்தான் என்று பதிந்து இருக்காது என்பது என்ன நிச்சயம்...?  சரி தரவுகள் இல்லாமல் பேச வேண்டாம். இருக்கும் தரவுகளை வைத்தே பேசுவோம்.

இது விக்னேஷின் கதை மட்டுமல்ல

'மென்பொறியியல் துறையில் லட்சங்களில் சம்பளம் வாங்குபவர்களே இல்லை, அங்கு அனைவரும் பணமுடையில் இருக்கிறார்கள்' என்று சொல்ல வரவில்லை. இன்றும் அடுக்கு மாடி குடியிருப்புகள் அவர்களை நம்பியே கட்டப்படுகிறது. சொகுசான கார்களில் பறப்பவர்கள் அவர்கள்தான். ஆனால், அவர்களின் சதவீதம் மிகக் குறைவு. நமக்கெல்லாம் தெரியாமல் அல்லது தெரிந்தும் கண்டுகொள்ளப்படாமல் மென்பொறியியல் துறையிலேயே இன்னொரு உலகம் இருக்கிறது. அவர்கள் மாதம் ரூ 8000 ஊதியத்திற்கு, ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உழைப்பவர்கள். இந்த வேலையும் எப்போது போய் விடுமோ என்று அச்சத்தில் இருப்பவர்கள். இந்த 8000 சம்பளத்திற்கே  வருடத்திற்கு மூன்று appraisalஐ எதிர்கொள்பவர்கள். இந்த வேலையை தக்கவைத்துக் கொள்ள புது புது கோர்ஸ்களில் சேருபவர்கள். ஆம் இந்த எட்டாயிர ரூபாய் சம்பளத்திற்காக, மென்பொறியியல் துறையில் இருக்கிறேன் என்ற கர்வத்திற்காக தன் உன்னதமான வாழ்வை நிறுவனங்களிடம் அடகு வைத்தவர்கள். என்றாவது ஒரு நாள் வாழ்வில் வெளிச்சம் வரும் என்று பகலிரவு பாராமல் உழைத்துக்கொண்டிருப்பவர்கள்.

அவன் பெயர் விக்னேஷ். புதுக்கோட்டை பக்கம் ஒரு சிறிய கிராமம். வீட்டிற்கு ஒரே பையன். அவன் குடும்பத்திற்கு சொந்தமாக மூன்று ஏக்கர் நிலம் இருந்தது. அந்த சிறிய கிராமத்தில் உள்ள வசதிகளை  கொண்டு படிக்கும் ஒருவன், பன்னிரெண்டாம் வகுப்பில் சராசரியாக எவ்வளவு மதிப்பெண் எடுப்பானோ அதற்கு அதிகமாகவே அவன் எடுத்து இருந்தான். சந்தை அவனை மென்பொறியியல் படிக்க தூண்டியது. நிலத்தை அடகு வைத்து படித்தான். தன் தலைமுறையில் முதல் பட்டதாரி என்ற சந்தோஷத்தில், அவன் தந்தையும் எந்த கேள்வியும் இல்லாமல் நிலத்தை அடகு வைத்தார். நான்கு வருட படிப்பு முடிந்து வெளியே வரும் போது, மென்பொறியியல் துறை மிகப்பெரிய சரிவை சந்தித்து இருந்தது. சிவில் இன்ஜினீயரிங் படித்து இருந்தால் நல்ல சம்பளத்தில் வேலைக்கு போய் இருக்கலாம் என்றனர் சமூகத்தின் இன்னொரு தரப்பினர். மூன்று ஆண்டுகளுக்கு முன் ஆறாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒரு சிறிய மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்த அவன் இப்போதுதான் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வந்து இருக்கிறான். இந்த சம்பளத்தில் நிலத்தின் மீது வாங்கிய கடனை கட்டமுடியவில்லை. நிலத்தை விற்றுவிட்டு, இப்போது அவன் தந்தை இன்னொருவர் நிலத்தில் கூலியாக வேலை பார்த்து கொண்டிருக்கிறார்.

இது ஒரு விக்னேஷின் கதை மட்டுமல்ல. உங்களுக்கு தெரிந்து எட்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஏதாவது ஒரு சிறிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சிவா, சாமுவேல், முகிலன், ராஜாவிற்கு பின்னாலும் இப்படி ஒரு கதை இருக்கும்.

தகவல் தொழிற்நுட்ப துறையினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள்

'இதை ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் வேலை பார்க்கும் ஊழியர்களின் பிரச்னையாக மட்டும் சுருக்கி பார்க்காதீர்கள்' என்கிறார் தகவல் தொழில்நுட்ப துறை  ஊழியர்கள் மன்றத்தின் தலைவர் பரிமளா.

"ஊழியர்களின் உழைப்பை, திறமையை சுரண்டுவதில் பெரிய நிறுவனம், சிறிய நிறுவனம் என்று வித்தியாசமும் இல்லை.  தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்று தெரியாமலேயே ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை" என்கிறார் அவர்.

“வேலைக்கு சேரும் போது ஊழியர்களிடம் நீங்கள் தனித்துவமான துறையில் வேலை செய்கிறீர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த தனித்துவமான துறையில் நீங்கள் மிளிர வேண்டுமென்றால், நேரம் காலம் பாராமல் உழைக்க வேண்டும் என்று உற்சாக வார்த்தைகளில் அறிவுறுத்தப்படுகிறது. இதை ஊழியர்களும் நம்புகிறார்கள். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் கூட உழைக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், உண்மையில் எந்த தனித்துவமும் இங்கு இல்லை. திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவரும் இதே 16 மணி நேரம்தான் உழைக்கிறார். களமும், உற்பத்திசெய்யப்படும் பொருளும் மட்டும்தான் வேறு. மற்றபடி எந்த தனித்துவமும் இல்லை” என்கிறார் அவர்.

தகவல் தொழில்நுட்ப துறை  ஊழியர்கள் மன்றம், அண்மையில் அனைத்து கட்சிகளையும் சந்தித்து,  அந்த துறையில் உள்ள பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வு குறித்த ஒரு மனுவை கொடுத்தது. அதில் வேலை பாதுகாப்பின்மை, கட்டாய பணி விலகல், வெளிப்படை தன்மை அற்ற performance appraisal உள்ளிட்ட ஒன்பது பிரச்னைகளை பட்டியலிட்டு உள்ளார்கள்.

இது குறித்து பரிமளா, “தொழிநுட்ப துறையில் வேலைப்பார்ப்பவர்களுக்கு எந்த பணி பாதுகாப்பும் கிடையாது. பணியிடங்களில் நிலவும் எந்த பாரபட்சத்திற்கு எதிராக நீங்கள் குரல் எழுப்பினாலும், உங்களது வேலை பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படும்.

நிறுவனம் கட்டாய ஆட்குறைப்பு செய்யும் போது, நீங்களாகவே வந்து வேலையை ராஜினாமா செய்துவிட வேண்டும். மறுக்கும் பட்சத்தில் உங்கள் பெயர் Black List செய்யப்பட்டு வெளியேற்றப்படுவீர்கள். ஒரு முறை உங்கள் பெயர் Black List செய்யப்பட்டுவிட்டால், இன்னொரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்வது என்பது இயலவே இயலாத காரியம்.

தொடர்ந்து 36 மணி நேர உழைப்பு என்பதெல்லாம் இங்கு சர்வ சாதாரணம். இதையெல்லாம் தாண்டி வெளிப்படை தன்மையற்ற performance appraisal காரணமாக ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர் ” என்று மேலும் கூறுகிறார்.

" இது போன்ற வெளிப்படையாக தெரியும் பிரச்னைகளை தாண்டி, இந்த நிறுவனங்கள் தங்களை தற்காத்து கொள்வதற்காகவும், வளர்ச்சிக்காகவும், அதிக உற்பத்திக்காகவும் ஊழியர்களுக்குள் ஒரு போட்டி மனப்பான்மையை வளர்த்து வைத்திருக்கிறது. அந்த உலகத்தில் சக மனிதர்கள் என்று யாரும் இல்லை. அனைவரும் போட்டியாளர்கள்தான். இதனால் நிறுவனங்கள் அளிக்கும் அனைத்து அழுத்தங்களையும் தனியே எதிர்கொள்வதால், அங்கு தற்கொலைகளும் பெருகி வருகின்றன.

கட்சிகள் என்ன செய்ய வேண்டும்...?

கட்சிகளின் மொழியில் சொல்லவேண்டுமென்றால், இது அவர்கள் வாக்காளர்கள் சந்திக்கும் பிரச்னை. வேலை நேர உரிமையை ஊழியர்களுக்கு பெற்று தர வேண்டும், பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இது மட்டுமல்லாமல், பெண்களுக்கு பிரசவ கால விடுமுறையை ஓராண்டாக ஆக்க வேண்டும். இதற்கு கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும்" என்கிறார் இளந்தமிழகம் இயக்கத்தின் பொது செயலாளர் செந்தில்.

அவரே மேலும், "ஒரு நிறுவனம்,  தம் ஊழியர்களை மதிப்பிடுவது அவசியம்தான். ஆனால், அந்த மதிப்பீடு சம்பள குறைப்பிலோ அல்லது வேலை நீக்கத்திலோ போய் நிற்க கூடாது. ஊழியர்களை திறனை மேம்படுத்துவது மட்டும்தான் அதன் நோக்கமாக இருக்க வேண்டும்" என்கிறார்.

'நான் ஏன் அவர்களுக்காக கவலைப்பட வேண்டும்... நான் ஏன் அவர்களுக்காக பேச வேண்டும்...?' என்று நாம் இதை கடந்து சென்று விட முடியாது. ஆம் இன்று அவர்கள் சந்திக்கும் பிரச்னையை நாளை நாம் சந்திக்க நேரிடலாம். ஒருவருக்கு ஒருவர் கரம் கொடுப்பதுதான் மகிழ்ச்சியான கூட்டு சமூகத்திற்கு வழிவகை செய்யும். இதை நாம் விவாதிக்காமல் கடந்து செல்வோமாயின், நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்கிறோம் என்றுதான் அர்த்தம்.

- மு. நியாஸ் அகமது

About myself
Maheshwaran
Author: MaheshwaranWebsite: https://www.maheshwaran.com
I am a SAP Consultant in my late 30s, residing in the happeing IT City - Bangalore. My interests vary from reading to travelling to handicrafts to photography. My latest interest is on Body building. May be this vivid interest keeps me going in my life without getting bored.