Money

Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
"அவனுங்களுக்கென்னா... IT யிலே இருந்துகிட்டு சொகுசா பொசுக்கு பொசுக்குன்னு வெளிநாட்டுக்கு போய் enjoy பண்ணுறாங்க.." என்று புலம்புபவர்களுக்கு IT கம்பெனிகளுக்குள்ளே ஆன்சைட் வாங்க நடக்கும் மோதல்களும், அரசியல்களும் தெரியாது. ஆன்சைட் வாங்க எல்லாரும் அலைவதற்கு காரணம் என்ன? எல்லாம் வைட்டமின் 'ப'தான். ஆன்சைட் என்றாலே இந்தியாவுக்கு வெளியே என்பது தான். ஆனால் உகாண்டாவுக்கும் இலங்கைக்கும் ஆன்சைட் போக எத்தனை பேர் தயாராக இருப்பார்கள்? எல்லாருக்கும் ஆன்சைட் என்றால் அமெரிக்காவும், ஐரோப்பாவும், சிங்கப்பூரும் தான். காரணம் - அந்த நாட்டு பணத்திற்கு தான் எக்ஸ்சேஞ்ச் ரேட் அதிகமாக இருக்கும். நிற்க.

தமிழ்நாட்டில் செல்வம் கொழிப்பதை எங்கு பார்க்கமுடியும்? கோவை, நெல்லை, சேலம்??? இல்லை.. காரைக்குடியில் தான் செல்வத்தில் செழிப்பை காணமுடியும். அந்த பொட்டல் காட்டில் பெரிய பெரிய மாளிகைகளும் அதனுள்ளே உள்ள விலையுயர்ந்த கலை பொருட்களும் எப்படி வந்தன? விவசாயத்தாலும், தொழில்பேட்டையும் இல்லாத அந்த செட்டிநாட்டில் எப்படி செல்வம் சேர்ந்தது? நாட்டுக்கோட்டை செட்டியார்கள் அந்த காலத்திலேயே கடல் கடந்து வாணிபம் செய்து கொண்டுவந்து சேர்த்த செல்வம் தான் அது.

இந்த IT ஆன்சைட்டும் கிட்டத்தட்ட அது போன்றது தான். வெளிநாட்டுக்கு போக முயலும் நடுத்தர வர்க்கத்தினரும், நடுத்தர வயதினரும் காண்பது ஒன்றே ஒன்று தான் - தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்வதை விட, தங்கள் எதிர்காலத்தை காப்பாற்றிக்கொள்ளும் பரபரப்பு தான். காரணம் தொழில்நுட்பத்துறையின் வேலை பாதுகாப்பின்மை. கொஞ்சம் வயசானவுடனேயே 'senior resource', 'expensive resource' என்று சொல்லி வெளியே அனுப்பிவிட்டு அந்த காசில் 4 freshers-களை வேலைக்கு எடுத்துவிடுவார்கள். அதனால் கிடைத்த சந்தர்ப்பத்தில் சம்பாதித்துக்கொள்ளவேண்டிய கட்டாயம்.

அடித்து பிடித்து கண்டவன் காலில் விழுந்து ஆன்சைட் வாங்கி, போன புதிதில் ஊர்சுற்றி பார்த்து அவர்கள் Facebook-ல் காட்டும் படங்களின் பின்னால் ஒளிந்திருக்கும் அவர்களின் இழப்புகள் பார்ப்பவர்களுக்கு தெரிவதில்லை. வெளிநாடு செல்லும் ஒவ்வொரு ஆணும் ஒரு ஐந்து வருஷம் கஷ்டப்பட்டு ஓட்டிவிட்டால் வாயை கட்டி வயிற்றை கட்டி கிடைக்கும் சேமிப்பை வைத்து மீதமுள்ள காலத்தை ஓட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் தான் பிளைட்டே ஏறுகிறார்கள். எதிர்காலத்தையே பார்த்துக்கொண்டிருப்பதால் நிகழ்காலத்தில் இழக்கும் சொந்த பந்தங்களின் அருகாமை, தினசரி சுகங்கள் எல்லாம் கண்ணுக்கே தெரியாது.

அங்கே போய் டாலரில் சம்பாதித்து, டாலரில் செலவு செய்து மீதமுள்ள கொஞ்ச டாலர்களை இந்திய காசுக்கு மாற்றும்போது வழக்கமான உள்ளூர் சேமிப்பை விட கொஞ்சம் அதிக மதிப்பில் இருக்கும். ஆனால் அந்த கூடுதல் ரூபாய்களை சம்பாதிக்க இழந்த சந்தோஷங்களின் மதிப்பு அந்த ரூபாய்களை விட மிக அதிகம். இதை உணரும்போது காலம் கடந்துபோயிருக்கலாம். இல்லை வெளிநாட்டில் வீடு வாங்கி அதற்கு மாத தவணை கட்டிக்கொண்டிருப்பதால் திரும்ப வரமுடியாமல் இருக்கலாம். இல்லை பிள்ளைகள் வெளிநாட்டு வாழ்க்கைக்கு பழக்கப்பட்டிருப்பதால் திரும்ப வர முடியாமல் போகலாம்.

ஆன்சைட் செல்பவர்கள் எல்லாரும் enjoy செய்ய மட்டுமே போவதில்லை. அதுபோல செல்பவர்கள் எல்லாரும் குடும்ப கஷ்டம் என்று புலம்புவதில்லை. எனினும் நூற்றுக்கு தொன்னூறு சதவிகித நடுத்தர வயதினர் எதிர்கால பாதுகாப்பை கருதியே திரைகடல் ஓடி திரவியம் தேடுகின்றனர். எனக்கு தெரிந்து முன்பை விட இப்போது அதிகம் பேர் ஆன்சைட் வேலைகளை முடித்துவிட்டு இந்தியா திரும்ப வந்து ஓரளவுக்கு சமர்த்தாக முதலீடு செய்துவிட்டு நிம்மதியாகவே உள்ளனர். 2 வருடம் சம்பாதித்து வீடு கட்ட, அடுத்த இரண்டு வருடம் சம்பாதித்து பிள்ளைகளின் படிப்புக்கு வங்கி முதலீடு, ஒரு வருடம் சம்பாத்தியம் வீட்டுக்கு தேவயான High end white goods, gadgets என நிரம்பிவிடுகிறது. வெளிநாட்டுக்கு போய் நல்ல பெயரோடு பணிபுரிந்துவிட்டு வந்தாலே அலுவலகத்தில் அடுத்த ஆன்சைட் கிடைப்பது கொஞ்சம் சுலபம் ஆகிவிடுகிறது. அதனால் சிலர் பிள்ளைகளின் படிப்பு பாழாகமல் அவ்வப்போது வெளிநாடு போய்விட்டு வருகிறார்கள்.

''உத்யோகம் புருஷ லட்சணம்'' - இது நம் நாட்டை பொருத்தவரை வேதம். மனையின் ஊதாரித்தனத்தையும் கூட நிறைவேற்றவேண்டியது ஆணின் கடமை என்பது சமுதாயத்தின் வாதம். சதவிகிதம் கூறப்படவில்லை என்றாலும் இன்று நிறைய பெண்களுக்கு அவர்களது சம்பளம் அவர்களுக்கு பாக்கெட் மணி, கூடுதல் சேமிப்பு. அவர்கள் சம்பாதித்தாலும் குடும்பம் நடத்த அத்தியாவசியத்துக்கு கணவனின் சம்பளத்திலிருந்து தான் வரவேண்டும். மேலும் பெண் எவ்வளவு படித்தவளாக இருந்தாலும் குடும்ப தலைவியாக வேலைக்கு போகாமல் இருப்பதை ஒத்துக்கொள்ளும் சமுதாயம், ஆண் ஏதேனும் நிர்பந்தம் காரணமாக வேலைக்கு போக முடியாமல் இருந்தால் கூட, அவனை கையாலாகதவனாக கேவலமாகவே சித்தரிக்கும். அதனால் ஆணுக்கு எப்படியேனும் சம்பாதித்தாகவேண்டிய நிர்பந்தம்.

நிர்பந்தம் கூட ஆண் குடும்பத்தை விட்டு தனியாக வெளிநாடு செல்லவேண்டிய நிலை வந்தால் அப்போது சமூக ''அப்படி என்ன சம்பாதிக்க வேண்டியது இருக்கு? எல்லாம் பணம் படுத்தும் பாடு'' என்று இகழும். இல்லை குடும்பத்தை விட்டு பிரியமாட்டேன் என்று வெளிநாடு போகாமல் இருந்தால் ''சந்தர்ப்பம் இருந்தும் சம்பாதிக்க துப்பு இல்லாதவன்'' என்று நக்கல் அடிக்கும். அதனால் தங்களுக்கு எது முக்கியம் என்று முடிவு செய்துக்கொண்டு அதன்படி வாழ்வதே நல்லது.

என்னை பொருத்தவரை வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அனைவரும் சில காலமாவது வெளிநாட்டில் வேலை செய்யவேண்டும், வசிக்க வேண்டும். அப்போது தான் நம் நாட்டின் அருமையும், சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் அருகில் வசிக்கும் உளவியல் ரீதியான பாதுகாப்பின் அருமையும் புரியும். அது புரியும் பட்சத்தில் நம் நாடு மற்றும் சொந்தங்களின் மீதான பார்வை நிச்சயம் நல்லபடியாக மாறும். திரும்பி வந்து மீண்டும் தொடரும் வாழ்க்கை இன்னும் கூடுதல் புரிதலோடு இருக்கும். ''You see.. India is hot, unhygenic, undisciplined and corrupt" என்று புலம்பும் / பிலிம் காட்டும் ஜந்துகளும் இருக்கும், அவற்றை ஒதுக்கி விடலாம். மொத்தத்தில் நாட்டுக்கோட்டை செட்டியார்களின் பார்முலா இப்போது IT -யில் நன்றாகவே வேலை செய்கிறது.