Manju Warrier in Rani Padmini

Malayalam
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பொதுவாக படங்கள் எல்லாம் ஒன்று அழுத்தமான திரைக்கதையோடு இருக்கவேண்டும் அல்லது படம் முழுக்க துணுக்குத்தோரணமாக இருக்கவேண்டும் என்ற நிர்பந்தம் ஒரு பார்வையாளராக உங்களுக்கு இல்லையென்றால்.. ஒரு மெல்லிய  wafer this storyline-ஐ எளிய காட்சிகளோடு, compelling visuals உடன் சொல்லப்பட்டால் அதை ரசிப்பவராக இருந்தால் இந்த படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். அதிலும் மஞ்சு வாரியர், ரீமா கல்லிங்கல் என்ற நடிப்பு ராட்சஸிகள் படத்தை தங்கள் தோள்களில் சுமப்பதாக இருந்தால்.. பார்ப்பவர்களுக்கு நிச்சயம் பரவசம் தான்.

கதாநாயகன் இல்லாததால், இரு பிரமாதமான நடிகைகள் பிரதான கதாபாத்திரங்களாக இருப்பதால் இது பெண்ணியம் பேசும் படமல்ல. மாறாக படமெங்கும் வண்ணத்தூவலோடு, நெஞ்சை அள்ளும் இயற்கை காட்சிகளோடு அதே சமயம் சொல்ல வந்த செய்தியை மிக மிக subtle-ஆக, படம் பார்த்தவர்கள் நினைத்து அசைபோடும்போது இன்னும் அழுத்தமாக, அழகான நினைவுகளாக மாற்றுவது இதன் இயக்குநர் ஆஷிக் அபுவின் திறமை. இந்த subtle message புரியாதவர்களுக்கு படம்  வெறும் அழகான காட்சிகள் கொண்ட குப்பைப்படம்.

பெயர் போடும்போதே படம் இரு வேறு பெண்குழந்தைகளின் வளர்ச்சியை அழகாக பின் தொடர்ந்து அவர்களின் மாறுபட்ட குணாதிசயங்களை அழுத்தமாக புரிய வைக்கிறது. கேரளா ஒட்டப்பாலத்தில் வைத்தியர் மகளான பத்மினி (மஞ்சு வாரியர்) அமைதியான இயற்கை சூழலில் அடக்க ஒடுக்கமான பெண்ணாக வளர்கிறாள். அதே சமயம் தில்லியில் செட்டிலான மலையாளி குடும்பத்தில் பிறந்த ராணி (ரீமா கல்லிங்கல்) ஒரு ஆண்பிள்ளை போல வளர்கிறாள். குழந்தை நடிகர்களின் முகச்சாயல் அப்பட்டமாக மஞ்சு வாரியருக்கும், ரீமா கல்லிங்கலுக்கும் பொருந்துவது மிக அருமையான நடிகர் தேர்வுக்கு உதாரணம்.

சண்டிகரில் வசிக்கும் கார் ரேஸ் வீரரான கிரியை (ஜினு ஜோசப்) கல்யாணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக வாழும் பத்மினிக்கு அவர் மாமியார் ரூபத்தில் பிரச்சனை வருகிறது. தன் கணவன் இமாலயன் ரேலி கார் ரேஸுக்கு போகும் முன்பு கையெழுத்து போட்டு மாமியாரிடம் கொடுத்த விவாகரத்து பத்திரத்தை பார்த்து அதிர்ச்சி அடையும் பத்மினி (மஞ்சு வாரியர்) அவரை நேரில் பார்த்து காரணம் கேட்க யாருக்கும் தெரியாமல் தனியாக மணாலிக்கு கிளம்புகிறார்.

rani padmini movie stills 1

ஜப்திக்கு வந்த தன் வீட்டை மீட்க சன்மானத்துக்கு ஆசைப்பட்டு ஒரு தாதா பற்றிய தகவலை போலீஸுக்கு தெரிவிக்கும் ராணிக்கு அந்த தாதா மூலமாகவே பிரச்சினை வருகிறது. அதனால் தப்பிக்க ஓடும் ராணி (ரீமா கல்லிங்கல்) வழியில் பத்மினியை சந்திக்கிறார். பின்னர் சூழ்நிலை காரணமாக இருவரும் ஒன்றாக பயணிக்க நேர்கிறது. அப்போது இருவரும் மற்றவர்களிடமிருந்து வாழ்க்கை குறித்த வேறு பார்வைகள் (perspective), வித்தியாசமான புரிதல்களும் கிடைக்க படம் சுபமாக முடிகிறது.

தனது இரண்டாவது வரவில் இந்த படத்தில் தான் மஞ்சு வாரியரின் நடிப்பு பரிமாணங்கள் கூடுதல் பொலிவுடன் இருக்கிறது. அவரது வழக்கமான துறுதுறுப்பையும், அழகிய சிரிப்பையும் மற்ற படங்களான  "How old are you?" மற்றும் "என்னும் எப்போழும்"-இல் இவை காணவில்லை. "ஒரு மகரநிலாவாய்" பாடலில் தன் மாமியாரின் கட்டளையையும் மீறி கணவருடன் உடலுறவு கொள்ளும் அந்த துறுதுறுப்பும், அதற்கு அடுத்த நாள் கோவிலுக்கு போகும்போது rear view mirror-ல் கணவரை பார்த்து சிரித்துக்கொண்டே செல்லும் மஞ்சு தனது மாமியார் தன்னை கவனிப்பது தெரிந்ததும் நொடிப்பொழுதில் முகபாவங்களை மாற்றுவாரே.. return of classic Manju. அந்த பாடல் முழுவதிலும் அவர் கணவருடன் இழைவது கொள்ளை அழகு. மஞ்சுவுக்கும் ஜினு ஜோசப்புக்குமிடையே உள்ள கெமிஸ்ட்ரி குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒன்று.

மஞ்சுவுக்கு ஈடுகொடுப்பது என்ற சவாலான காரியத்தை தில்லாக ஏற்று ஈடு கொடுப்பது மட்டுமல்லாமல் ஒரு சில சமயத்தில் மஞ்சு வாரியரையே தூக்கி சாப்பிட்டு ஏப்பமிடுகிறார் ரீமா கல்லிங்கல். இந்த படத்தின் இயக்குநர் ஆஷிக் அபுவின் மனைவியான ரீமா, இந்த படத்தை பல உருவாக்க கட்டங்களில் ஈடுபட்டு முழுமையாக உள்வாங்கியிருக்கிறார் என்பதற்கு படம் முழுக்க இவரது நடிப்பே சாட்சி.

Rima Kallingal in Rani Padmini

படம் முழுக்க நிறைய துணை கதாபாத்திரங்கள். கொஞ்ச நேரமே வந்தாலும் அவர்கள் தங்கள் காட்சிகளில் மிளிர்கிறார்கள். மஞ்சு வாரியரின் கணவராக வரும் ஜினு ஜோசப்புக்கு நல்ல screen presence.இத்தனை நாளாக இவரை எப்படி மிஸ் செய்தேன் தெரியவில்லை. அவர் தாயாராக வரும் சஜிதா மாடத்தில் தனக்கு கிடைத்த குறைவான சமயத்திலும் படம் முடிந்த பிறகும் பார்வையாளர்கள் மீண்டும் நினைக்கும் படியாக நடித்திருக்கிறார். நியூஸ் ரிபோர்ட்டராக வரும் திலீஸ் போத்தன், அவர் உதவியாளர் ஷாஹீர் இருவரும் நகைச்சுவைக்கு உத்திரவாதம் அளிக்கின்றனர்.

மெல்லிய ஒற்றை வரி கதையை பதியவைக்க காட்சிகளை மட்டுமல்லாமல் வேறு பல gimmicks-களை உபயோகப்படுத்தியிருக்கிறார் ஆஷிக் அபு. உதாரணத்துக்கு - புது புது பூவாய் பூக்கிறேன் என்ற பாடலில் மஞ்சு வாரியருக்கும் ஜினு ஜோசப்புக்கும் நடக்கும் கல்யாணத்தை VHS format கல்யாண வீடியோ முறையில் படமாக்கிய விதத்தை சொல்லலாம்.

அடுத்து இதன் நகைச்சுவை. Slapstick, dark humour, subtle humour என பலவகை நகைச்சுவைகளும் இதில் உண்டு. குறிப்பிட்டு சொல்லவேண்டிய காட்சிகள் என்று பார்த்தால் - மஞ்சு வாரியர் வீட்டை விட்டு திருட்டுத்தனமாக கிளம்பும்போது உறக்கத்திலிருந்து விழிக்கும் வயசான தாத்தாவை சமாளிப்பதும், மஞ்சு 501 பிராண்ட் துணி சோப்பை நுகர்ந்து அது நினைவுபடுத்திய சிறிய வயது நினைவுகளை சிலாகித்து சொல்வதும், அந்த சோப்பை பிடுங்கி சகபயணி தன் உள்ளாடையை துவைக்க, அப்போது மஞ்சுவின் முகபாவங்கள் மாறுவதும் அழகு.

படம் முழுவதும் நம் மனதை அள்ளுவதில் இதன் ஒளிப்பதிவும்,இசையமைப்பும் முதலிடத்துக்கு போட்டிப்போடுகின்றன. மது நீலகண்டனின் ஒளிப்பதிவும், பிஜிபாலின் இசைக்கோர்வையும் படத்துக்கு மிகப்பெரும் பலம். இந்த படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நிச்சயம் செய்யவேண்டிய பட்டியலில் சாகும் முன்பு ஒரு முறையேனும் இமாலய பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்பதை சேர்த்துக்கொள்வார்கள். இரண்டு மணி நேரங்கள் இமாலயத்தின் மடியில் வாழ்வது போல உணர்வு.

Aashiq Abu, Manju Warrier and Rima Kallingal

ஒவ்வொருவருக்கும் தங்களுக்குள்ளே உள்ள fighter-ஐ வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதையும், தங்களை பற்றிய சுயபுரிதல்களும், சுய பரிசோதனைகளும் அவசியம் என்பதை லெக்சரடிக்காமல் மிக மிக subtle-ஆக postcard perfect frames-களில் மெல்லிய நகைச்சுவையை குழைத்து சொன்ன ஆஷிக் அபுவை பாராட்டுவதோடு நின்றுவிடாமல், சில குறைகள் (45 நிமிடங்க்களிலேயே இடைவேளை விடுவது, கதாநாயகிகளின் spoof கதைகள்) இருப்பதை பெரிது படுத்தாமல் விட்டுவிடலாம். மஞ்சு வாரியர், ரீமா கல்லிங்கல், மது நீலகண்டன் (ஒளிப்பதிவு), பிஜிபால் (இசை), ஜினுஜோசப், சஜிதா மாடத்தில் என compelling factors பல உண்டு இதை திரையில் பார்ப்பதோடு விட்டுவிடாமல் Home DVD-லும் சேர்த்து வைக்க.