Questions
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Old Generation

அந்த காட்சி இப்படி போகிறது..  ஒரு இன்ஸ்பெக்டர் ஒரு நடன இயக்குநரை மிரட்டுகிறான் - “உன் க்ளாஸ்ல அடிபட்ட பெண்ணுக்கும் எனக்கும் கனெக்‌ஷன் இருக்கு... இப்போ அவளுக்கு அடிபட்டிருக்குற போது எனக்கு துணைக்கு ஒரு பெண்ணை ஏற்பாடு பண்ணிக்குடு” என்கிறான். அந்த நடன் இயக்குநர் “நான் டேன்ஸ் மாஸ்டர்... நீங்க நினைக்கிற மாதிரி நான் இல்லை” என்று கோபமாக சொல்கிறான். அப்போது நடன இயக்குநரின் மனைவியை பார்த்து இன்ஸ்பெக்டர் ஒரு மாதிரியாக கமெண்ட் அடித்துவிட்டு ”யாரா இருந்தாலும் பரவாயில்லை... சீக்கிரமா ஒரு பொண்ணை ஏற்பாடு பண்ணு” என்று சொல்லிவிட்டு போகிறான் இன்ஸ்பெக்டர். இது வயதுவந்தவர்கள் பார்க்கக்கூடிய “ஏ” படம் இல்லை, பெரியவர்களின் துணையுடன் சிறுவர்கள் பார்க்கக்கூடிய “யூஏ” படமும் இல்லை.... தமிழர் சமுதாயத்தை சீர்திருத்த அவதரித்த முத்தமிழ் தலைவர் நடத்தும் கலைஞர் டிவியில் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய, வீட்டில் பெரியவர்கள் இல்லாத சமயத்தில் வளரும் பிஞ்சு மனங்கள் பார்த்து ”பண்படும்” தொலைகாட்சி தொடரில் வந்த காட்சி.

 

புதுதில்லியில் ஓடும் பஸ்ஸில் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு இறந்த ஜ்யோதி சிங் பாண்டே தன் சாவின் மூலம் இந்தியாவின் சட்டத்தில் கற்பழிப்புக்கு கொடுக்கப்படும் தண்டனையை மறுபரிசீலனை செய்யவைத்த சமயத்தில், நாடெங்கும் பாலியல் பலாத்காரம் செய்யும் ஆண்கள் எல்லாம் வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல அவர்களை தண்டிக்க தனியாக சட்டம் இயற்றவேண்டும் என்று எல்லாரும் குதித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் அவர்கள் நம்மிடையே வாழும் மனிதர்கள் என்றும்,ஏன் அவர்கள் அப்படி நடந்துக்கொள்கிறார்கள் என்றும் யாராவது யோசித்தது போலவே இல்லை.

விதைத்தது தானே விளையும்? புல் போட்டால் நெல் விளையுமா என்ன? முந்தைய தலைமுறையே.. நீ விதைத்தது தானே இப்போது விளையும்? மேற்கத்திய கலாசாரமே “cool stuff"... casual sex-ம், பல partner-களும் தங்கள் sexuality-க்கு கிடைத்த அங்கீகாரம் என்று 70-களின் இறுதிகளில் ஆரம்பித்தது நீங்கள் தானே?

வீட்டில் பாட்டிமார்கள் புராண கதைகள் சொல்லி வளர்த்தபோது “நாட்டுப்புறம்” என்று சொல்லிவிட்டு வெளிநாட்டு cartoon-கள் பார்ப்பதே நவீனம் என்று கடந்த 2 தலைமுறைகளை மேற்கத்தியமாக மாற்றியதே நீங்கள் தானே?

ஒரு பண்டிகை, நல்ல நாள் என்றால் உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என கூடி கொண்டாடிய காலமெல்லாம் கிட்டத்தட்ட 20 வருடங்களாக (குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சன் டி.வி ஆரம்பித்த நாள் முதல்) தொலைகாட்சியின் முன்பு உட்கார்ந்து சினிமாக்கார(ரி)களின் உளறல்களை பேட்டி என்று ரசித்து, தனியாக தின்று என்ன பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற தெரியாமல் ‘cool' என்று ஓட்டிவிட்ட முந்திய தலைமுறையே, நீ இப்போது “இந்த தலைமுறையில் மனிததன்மையே மறந்துவிட்டது... human/personal touch இல்லை” என்று நாகூசாமல் குறை சொல்கிறாயே... உனக்கு வெட்கமாக இல்லை?

தொலைகாட்சி என்று ஒரு ஊடகம் கையில் கிடைத்துவிட்டதும், பார்க்க வீட்டில் இருக்கும் பெண்மணிகள் என்று target audience கிடைத்ததும் நல்ல கருத்துக்கள் சொல்வோம் என்று தோன்றாமல் கள்ள உறவுகளை நடைமுறை ஆக்கியதும், உறவுகளை ஒருவருக்கொருவர் எதிராக எப்படி எல்லாம் சூழ்ச்சி செய்து கவிழ்க்கலாம், பழிவாங்கலாம் என்று இயல்பாக சொல்லிக்கொடுத்ததும் நீ தானே?

நமது பழமையான இந்திய கலாச்சாரம் புகழ் பெற்றதற்கு காரணம் நாம் நாமாக இருந்தது தான். ஆனால் அதை தொலைத்துவிட்டு மேற்கத்திய கலாசாரத்தை காப்பி அடிக்க ஆரம்பித்துவைத்து நம்முடைய அடையாளத்தை தொலைத்தது நீ தானே? பிள்ளைகளுக்கு அவர்கள் பிடித்த வாழ்க்கையை வாழவிடாமல் ”அடுத்தவனை விட ஒரு மார்க்காவது கூட வாங்கலைன்னா சோறு கிடையாது” என சக மனிதர்கள் மேல் வெறுப்பு வளர்த்துவிட்டு, “மனிதம் கெட்டுவிட்டது”, “போட்டி பொறாமை வளர்ந்துவிட்டது” என்று சவடால் அடிக்கும் முந்திய தலைமுறையே... உனக்கு moral policing செய்ய உரிமை இல்லை.

இவ்வளவு விஷம் விதைத்துவிட்டு இந்த தலைமுறை கெட்டுவிட்டது என்று கொஞ்சமும் நாணமில்லாமல் நாக்கின் மேல் பல்லைப்போட்டு பேச உனக்கு யார் அங்கீகாரம் கொடுத்தது? நீ ஏற்படுத்தும் சட்டங்கள் நிச்சயம் எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும். இப்போது இளைய தலைமுறைக்கு அன்பையும், சக மனிதர்களை நேசிக்க கற்றுக்கொடுத்தால் அடுத்த 15-20 வருடத்தில் உனது சட்டம் ஏற்படுத்த நினைக்கும் மாற்றம் இயல்பாகவே மாறும்.

அன்பாக நடப்பவன்(ள்), சக மனிதர்களுக்கு மரியாதை தருபவன்(ள்) ஆகியோரை அப்பாவி, பிழைக்கத்தெரியாதவன்(ள்), கேணை, கிள்ளுக்கீரை என்று நச்சு விதைக்காமல் அவர்களை ஊக்குவி போதும்.

தங்கச்சி கல்யானத்துக்கு பத்திரிகை வைக்க வருபவனை வரவேற்று உபசரிக்க சொல்லிக்கொடு. மாறாமல் டி.வி தொடர் போய்விடப்போகிறதே என்று கவலைப்பட்டு “pause" பண்ணு, “record" பண்ணு என்று இந்த தொல்லைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் தர சொல்லிக்கொடுக்காதே. மொத்தத்தில் எந்த மாற்றத்தை இந்த சமுதாயத்தில் நீ காண விரும்புகிறாயோ அதுவாக நீ முதலில் மாறு...