Indhira Sounderrajan
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

கன்னிகள் ஏழு பேர்

இந்திராவிடம் எனக்கு எப்போதும் ஒரு பிரச்சினை... எப்போதெல்லாம் அவர் முகவுரையில் தன் நாவல் பற்றி ஆஹா ஓஹோ என்று சிலாகித்துவிடுகிறாரோ அப்போதே அந்த நாவல் மீது எனக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. இம்முறை தனது எழுத்தாளர் பயணத்தை பற்றி சொல்லிவிட்டு, ஆன்மீக த்ரில்லர் வகையில் தான் மட்டுமே எழுதுவதாக சந்தோஷப்பட்டுள்ளார். அந்த வகையில் இந்த “கன்னிகள் ஏழு பேர்” தனக்கு பெயர் சொல்லும் நாவலாக இருக்கும் என்று ஆசைப்பட்டுள்ளார். மற்றவர்களுக்காக எழுதுவதும், தனக்கு திருப்திக்காக எழுதுவதும் பல சமயங்களில் எதிர்கோட்டில் பயணிக்கும் சமாசாரம். அதனால் அவரது இந்த “பெயர் சொல்லும் நாவல் ஆசை” எனது எதிர்பார்ப்புக்கு எதிர்கோட்டில் பயணித்துவிட்டது போல. கடந்த முறை “சிவம்” நாவல் படித்தபோதும் இத்த்கைய அனுபவத்துக்கு உள்ளானேன். எனினும் இந்த நாவலை நல்ல / கெட்ட நாவல் என்று judgemental-ஆக கருத்து சொல்ல எனக்கு உரிமை இல்லை. மேலும் ஒரு படைப்பாளியின் வயதை / அப்போதைய மனோநிலையை அவரது படைப்பை கொண்டு அறியலாம். இந்த நாவலில் இந்திராவின் வயது முதிர்ச்சி தெளிவாக புலப்படுகிறது. சொல்லப்போனால் இதை படிக்கும்போது எழுத்தாளர் பாலகுமாரனின் கடைசிகட்ட எழுத்துகளான “ரகசிய கண்ணி” மற்றும் காஞ்சி பெரியவரின் புகழ் பாடும் (பெயர் மறந்துபோன) நாவல்களை திரும்ப படிப்பது போல இருந்தது.

நாம் ஒவ்வொரு கோவிலுக்கும் போகும்போது மூலவரை பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருப்போம். பிரகாரத்தை சுற்றி வரும்போது காணும் தக்‌ஷினாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கை ஆகிய கடவுள்களை பற்றி ஓரளவுக்கு அறிந்திருப்போம். ஆனால் கிட்டத்தட்ட எல்லா கோவில்களிலும் காணும் ”சப்த மாதா”க்களை பற்றி பெரிதாக அறிந்திருக்கமாட்டோம். இந்நாவலில் இந்திரா நாம் காணும் அந்த சப்தமாதாக்களை பற்றி ஆழமாக, தெளிவாக எழுதியிருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்தின் முன்பும் அந்த ஏழு கன்னிகைகளை பற்ரியும், இந்து மதம் பற்றியும், ஆத்திகம்/நாத்திகம் பற்றியும் பல சுவாரசியமான தகவல்களை தந்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் இந்த ‘டொச்சு’ நாவலை விட இந்த அத்தியாய முன்னுரைகள் தான் அற்புதமாக இருக்கின்றன. ஒரு கட்டத்துக்கு பிறகு நான் இந்த கதையை தனியாகவும், முன்னுரைகளை தனியாகவும் படிக்க ஆரம்பித்துவிட்டேன்.

ஒரு அத்தியாயத்தின் முன்னுரையில் இந்த சப்த கன்னியர்கள் எப்படி தோன்றினார்கள் என்பதை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார். ரக்தபீஜன் என்ற அரக்கனை வீழ்த்த அன்னை பராசக்தியின் ஸ்தூல தேகத்தில் இருந்து ஒவ்வொரு பாகத்திலும் இருந்து இந்த கன்னியர்கள் தோன்றியிருக்கிறார்கள். எண்ணங்களுக்கு வடிவமாக பிராஹ்மி, காத்தல் தொழிலுக்கு பொறுப்பாக வைஷ்ணவி, (தீயவைகளை) அழித்து காக்கும் மாஹேஸ்வரி, முருக சக்தியை கொண்ட கௌமாரி, லோகமாதாவின் பிருஷ்டத்தில் இருந்து தோன்றி தேவபலமும் மிருகபலமும் கொண்ட வாராஹி, மகாலட்சுமியின் குணத்தை கொண்ட இந்திராணி, பராசக்தியின் அம்சத்தை கொண்ட சாமுண்டி என இவர்கள் ஆண் பெண் சங்கமத்திலிருந்து தோன்றாமல் தானாக தோன்றிய கதையையும், இவர்கள் ஏன் கன்னிகள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்பதை ஒரு அத்தியாயத்தில் சொல்லியிருக்கிறார்.

பின்னர் பல்வேறு அத்தியாயங்களில் இந்து மதம் குறித்த பல்வேறு தகவல்களை கூறியிருந்தாலும், அவற்றில் என் கவனத்தை ஈர்த்த சில முன்னுரைகள் பற்றி சொல்கிறேன். ஒரு அத்தியாயத்தில் கடவுள் உள்ளாரா? அவர் பல்வேறு வடிவங்களில் இருக்கிறாரா அல்லது பல்வேறு கடவுள்கள் இருக்கிறார்களா? போன்ற எளிய நாத்திகம் சார்ந்த ஆத்திக கேள்விகளை கொண்டு இந்த ஆத்திக - நாத்திக மோதல்கள் புராணங்களிலேயே (இரண்யாகசிபு மூலமாக) குறிப்பிடப்பட்டுள்ளன என்று ஆரம்பித்து இருக்கிறார். ஆஸ்தி (ஞானம்) + அகம் (உள்ளே) = ஆஸ்திகம், ந(எதிர்) + ஆஸ்திகம் = நாஸ்திகம்... நமக்குள்ளே நம்மை கடைத்தேற்றும் அறிவு இருந்தால் ஆத்திகவாதி என்றும், எதையும் கேள்விகளே வாழ்க்கையாக கொள்பவர்களை நாத்திகர் என்று பிரிக்கிறார் இந்திரா. எனினும் ஆஸ்திகமும், நாஸ்திகமும் வாழ்க்கையில் செயல்பட்டு, அவற்றிலிருந்து எழும் சிக்கல்களில் இருந்து மீள உதவுகிறது என்று சொல்கிறார். சுருக்கமாக சொன்னால் கண்ணால் காண்பதற்கு விளக்கம் கேட்பது நாத்திகம், ஆனால் அதற்கும் அப்பாற்பட்ட ஞானத்தை தேட முயற்சிப்பது ஆஸ்திகம் என்று முடிக்கிறார்.

மற்றொரு சுவாரசியமான முன்னுரை என்னவென்றால் நம் வாழ்க்கையில் எண்களின் பங்களிப்பு பற்றி கூறுவது. எண்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்கமுடியுமா? படிக்காதவர்கள் கூட எண்களை பற்றி தெரிந்திருப்பதை சுட்டிக்காட்டி, அந்த எண்களின் பிரதானத்துவத்தை சொல்கிறார். ஒரே கடவுள், இரண்டு சக்தி (சிவம், சக்தி), மொழிகள் மூன்று, வேதங்கள் நான்கு, பூதங்கள் ஐந்து, சுவைகள் ஆறு, ஸ்வரங்கள் ஏழு, திக்குகள் எட்டு, கிரகங்கள் ஒன்பதாகி நமது வாழ்க்கையில் influence செய்வதை சொல்லிவிட்டு, இதிலிருந்து எப்படி “பிரணவம்” பொருள் பின்னர் உருவானது என்று சொல்கிறார். அழகான மற்றும் smooth flow of information. பிரணவம் = பெரிய+நவம் i.e big 9, எப்படி இந்த 9ம் எண் தான் எதோடு சேர்ந்தாலும் அதை இயல்பு கெடாமல் தனதாக மாற்றி தனித்துவமாக நிற்கிறதோ, அதுவே ‘ஓம்” என்ற பிரணவமாக உருமாறி பின்னர் விநாயகரால் அடக்கப்பட்டதை சொன்ன விதம் எனக்கு பிரமிப்பாக இருந்தது.

வாழ்வில் இந்துமதம் போதிக்கும் வழிகள் என்று பல பிராமணீய முறைகளுக்கு விளக்கமளிக்கும் பக்கங்களில் என் கவனத்தை ஈர்த்தது இந்த “நல்ல காரியங்களுக்கு முன்னால் குளித்துவிட்டு வரும்” சம்பிரதாயத்துக்கு சொல்லப்பட்ட விளக்கம். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காற்றிலிருந்து ஒரு சொல கணங்களேனும் நம்மை துண்டித்துக்கொள்வது என்றால் அது நம் மீது தண்ணீர் விழும் தருணங்கள் மட்டுமே. காற்றில் வியாபித்திருக்கும் பல நல்ல / தீய அலைவரிசைகள் அவற்றின் அளவை பொறுத்து நம் எண்ணங்களை influence செய்யக்கூடியவை. அவற்றிலிருந்து நம்மை துண்டித்து ஒரு near pure நிலையை மிகச்சில கணங்களுக்கேனும் அடைய உதவுவது இந்த குளியல். அதனால் தான் நல்ல காரியங்கள் செய்யும் முன்பு குளித்து ஒரு (சிறிய) பவித்திர நிலையை அடைந்து வரவேண்டும் என்று சொல்வதாக அளிக்கப்பட்ட விளக்கம் வித்தியாசமாக இருந்தது. சாவு வீட்டுக்கு சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழைவது “சுகாதார” குளியல் என்பதையும் தாண்டி அங்கே நம் மீது பதிந்த negative wavelength-களில் இருந்து நம்மை கழுவிக்கொள்வதே பிரதான காரணம் என்பது... makes more sense.

ஒரு அத்தியாயத்தில் “சப்த(7) மாதா”க்களிலிருந்து “சப்த” (ஒலி) நிலையை எடுத்து அதிலிருந்து மௌனத்தை நோக்கி நகர்வதை குறித்து சொல்லியிருக்கிறார். கோபம், சந்தோஷம், சிரிப்பு என எல்லா உணர்வுகளும் சத்தத்தில் தான் வெளிப்படுகின்றன. மௌனத்தின் அருமையை உணர முதலில் சத்தங்களை உணரவேண்டும். பின்னர் இந்த சத்தங்களை அடக்கி ஒரு மௌன நிலைக்கு கொண்டுவரவேண்டும். இந்த சப்தமாதாக்கள் இந்த உணர்வுகளின் வடிவமாதலால் தியானத்தின் மூலம் மனதை ஒருநிலைப்படுத்தி மோன நிலைக்கு வரவேண்டும் என்றால், இந்த சப்த கன்னியர்களை நம் மனதுக்கும் அடக்கிட மௌனமான பேரருள் கிடைக்கும். அதுவே பெரும் சக்தியாக உருவெடுக்கும் என்று தியானத்துக்கு / மௌனத்துக்கு ஒரு வலிமையான விளக்கத்தை கொடுத்திருக்கிறார் இந்திரா. இந்த உணர்சிகள் எல்லா மனிதர்களுக்குள்ளும் இருப்பவை ஆனால் அதன் விகிதாசாரங்கள் தான் மாறும். அதனால் இந்த உணர்ச்சிகளை சீராக வைக்கவேண்டும் என்றால் இந்த சப்தகன்னியர்களுக்கான மந்திரங்களை தினமும் சொல்லவேண்டும் என்று முடித்திருக்கிறார்.

நான் முன்பே சொன்னது போல இந்த நாவலில் கதையை விட இதில் சொல்லப்பட்ட முன்னுரைகள் தான் அழகு. அவற்றை மட்டுமே கூட படித்துவிட்டு கதையை விட்டுவிடலாம். கதை.. கதைன்னு சொல்கிறீர்களே, இந்த நாவலில் அது என்ன? என்று யாரும் கேட்கும் முன்பு ஓரிரு வரிகளில் சொல்லிவிடுகிறேன். 60-70 ஆண்டுகளுக்கு முன்பு கன்னிப்பட்டி என்ற கிராமத்தில் சப்தமாதாக்களின் கோவில் இடிக்கப்பட்டு அந்த சிலைகள் பல்வேறு நீர்நிலைகளில் வீசப்படுகிறது. அவற்றை இப்போது சேகரித்து மீண்டும் கோவில் கட்ட கல்யாணத்துக்கு காத்திருக்கும் சாமிநாத குருக்களின் ஏழு மகள்களும் (சப்த மாதாக்களின் அம்சம்) அந்த கிராமத்துக்கு வருவார்கள். அவர்களுக்கான மணமகன்களும் அங்கே வருவார்கள் என்று நாடிஜோசியம் சொல்கிறது. அந்த பெண்களும் சாமிநாத குருக்களும் வரும் போது ஒரு மாந்த்ரீகன் அந்த ஏழு கன்னியர்களின் சிலைகளை திருடி, அந்த சப்த மாதாக்களை தன் வசத்துக்கு கொண்டு வரமுயற்சிக்கிறான். எப்படி கன்னிப்பட்டி கிராமத்தில் மீண்டும் இந்த சப்தமாதாக்கள் கோவில் உருவானது என்பது தான் கதை.

நாவலை விட நான் எழுதியுள்ள இந்த சாராம்சம் தான் சுவாரசியமாக உள்ளது. பச்சையாக சொன்னால் ஒரு மூன்றாம் தர தொலைகாட்சி தொடர் போல தான் உள்ளது. ”கன்னிகள் ஏழு பேர்” - நிச்சயம் ஆன்மீக நாவல் தான் ஆனால் ஆன்மீக த்ரில்லர் இல்லை.

புத்தக விவரங்கள்:
பதிப்பாளர்கள்: திருமகள் நிலையம், தி. நகர், சென்னை - 17
பக்கங்கள்: 480
விலை: ரூ. 180/-