Yandamoori Virendranath
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Panimalai

 

ரொம்ப நாளுக்கு அப்புறம் படித்த புத்தகம் இது. எனக்கு எண்டமூரியின் மீது ஏதோ ஒரு நம்பிக்கை. முதல் சில பக்கங்களிலேயே இது “பெண்மை” பற்றி பேசும் புத்தகம் என்று தெரிந்தாலும், அவருடைய “பந்தம் பவித்ரம்” போல இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் படித்தேன். அந்த கல்லூரியின் கடைசி நாளில் வைஜெயந்தி, அனுராதா, விசாலி மற்றும் பார்கவி ஆகியோர் சில வருடங்களுக்கு பிறகு குறிப்பிட்ட இந்த நாளில் இதே மரத்தடியில் மீண்டும் சந்தித்து தங்கள் வாழ்க்கை எப்படி போகிறது, என்னென்ன அனுபவங்கள் ஏற்பட்டன என்று பரிமாறிக்கொள்ளவேண்டும் என்று முடிவு செய்வதோடு கதை ஆரம்பிக்கிறது. அப்போதே நமக்கு தெரிந்துவிடுகிறது இது பெண்கள் எப்படி “ஆணாதிக்க” சமுதாயத்தில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வரப்போகிறார்கள் என்ற கதையாக இருக்கும் என்று. நான் ஏற்கனவே episode format பிரியன் என்பதால் ஆர்வமாக படிக்க ஆரம்பித்தேன்.

முதலில் வருவது வைஜெயந்தியின் கதை. என்ன தான் பெரிய படிப்பு, பதவி என்று இருந்தாலும் பெண்களை எப்படி ஆண்களின் ஈகோ பாதிக்கிறது என்று சொல்கிறது இந்த பகுதி. பெண்ணின் வெற்றியை எந்த ஒரு ஆணாலும் - அது கணவனானாலும் சரி, சக ஊழியர்களானாலும் சரி, ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கோணத்தில் பயணிக்கிறது இந்த கதை. வைஜெயந்தி ஐ.பி.எஸ் என்று சொல்லிவிட்டதால் ஒரு “என்கவுண்டர்” கதை வேறு.

விசாலி - படிப்பு, உத்தியோகம் என பெரிதாக ஆர்வமில்லாத பெண்கள் எப்படி கணவனை தன் கைக்குள் போட்டுவைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள், அதனால் வரும் பின்விளைவுகள், அது கணவன், குடும்பம் மீது ஏற்படுத்தும் பாதிப்புகள் என ஓரளவுக்கு இயல்பாக செல்கிறது. இதில் பார்வையாளராக சுனிதா என்ர கதாபாத்திரம் நுழைக்கப்பட்டு சுனிதாவின் பார்வையில் விசாலியின் செயல்கள் அவள் கணவன் விஸ்வம் மீது எத்தகைய மழுங்கல்கலை ஏற்படுத்துகிறது என்று விளக்கியிருக்கிறார்கள். கணவனை தன் முந்தானையில் முடிந்துவைத்திருக்கும் முயற்சியில் விசாலி manipulative-ஆக மாறிவிடுவதால் இவர் நல்லவரா இல்லை கெட்டவரா என்று புரிந்துகொள்ளாமல் போய்விடுகிறது.

அனுராதா - விசாலியின் கதையோடு ஓரளவுக்கு தொடர்பு இருப்பதால் அடுத்த கதையாக வருகிறது அனுராதாவின் கதை. கல்லூரி முடிந்தவுடன் வீட்டை எதிர்த்துக்கொண்டு மெக்கானிக் மோகனை கல்யாணம் செய்துக்கொள்ளும் அனுராதாவுக்கு கல்யாணத்துக்கு பிறகு புருஷன், மாமியார் என அடுக்கடுக்காக பிரச்சினைகள். ஒரு கட்டத்தில் தனியாக வீடுகட்டிக்கொண்டு தனிக்குடித்தனம் போய்விடுகிறாள். மேம்போக்காக பார்க்கும்போது தன் வாழ்க்கையை தீர்மானித்துக்கொள்ளும் புதுமைப்பெண் என்று தோன்றினாலும் அதன் காரணமாக கணவனை தாண்டி இரு ஆண்களுடன் உறவு ஏற்படுத்திக்கொள்வது அத்தனை ரசகரமானதாக இல்லை.

பார்கவி -  இந்த நான்கு கதைகளில் கடைசி கதை மட்டுமல்ல, அதிகம் டிராமா இல்லாததும் இதே கதை தான். தன் தந்தை-தாயாருக்கு இடையே உள்ள தாம்பத்தியத்தை பார்த்து, தனக்கு வரப்போகும் கணவன், குடும்ப வாழ்க்கை இப்படி தான் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு அது நடக்காமல் போகும்போது, தன் வாழ்க்கையை தன் கையில் எடுத்துக்கொண்டு ஓரளவுக்கு வெற்றியும் பெறுகிறாள் பார்கவி.

கடைசியில் நால்வரும் அந்த குறிப்பிட்ட தினத்தில் சந்திக்கும்போது என்ன நடக்கிறது என்று முடிகிறது இந்த “பனிமலை”.

கதையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் எந்த சூழலில் வளர்ந்தார்கள், ஏன் அப்படி நடந்துக்கொண்டார்கள் என்று ஒவ்வொரு அத்தியாயத்திலும் சில பக்கங்கள் எடுத்துக்கொண்டு அவர்களின் பின்புலத்தை விளக்குகிறார் இதன் ஆசிரியர்.  கதாபாத்திரங்களை புரிந்துக்கொள்ளவும், அவர்களை ஆதரிக்கவும், அனுதாப்படவும் இது உபயோகமாக இருக்கிறது. எனினும் முற்றிலும் மாறுபட்ட இந்த நான்கு பெண்களும் எப்படி நெருங்கிய தோழிகள் ஆனார்கள் என்று ஆச்சரியமாக தான் இருக்கிறது.

பொதுவாகவே feminist நாவல்கள் என்றாலே அடக்கும் ஆண்கள், கொடுமைப்படுத்தும் மாமியார், நாத்தனார், இகழும் சமுதாயம் என்ற ஒரே template-ல் தான் இருக்கும். “பனிமலை”யும் அதற்கு விதிவிலக்கு இல்லை. பெண்கள் கண்ணோட்டத்தில் பயணிப்பதால் அவர்கள் மீது அனுதாபங்கள் வரவேண்டும் என்பதற்காக அவர்கள் கணவன்மார்களுக்கு எல்லாம் மற்ற ஸ்த்ரீகளோடு உடலுறவு இருப்பதாகவும், இதை தெரிந்தும் இந்த பெண்கள் உள்ளே புதைத்துவிட்டு பத்தினிமார்களாக வாழ்வதாகவும், கிட்டத்தட்ட அனைத்து ஆண்களுமே பெண்கள் மீது அக்கரையும் அன்பும் இல்லாதவர்களாகவே இருப்பவர்கள் என caricature-களாக மாற்றியிருப்பது அலுப்பை தருகிறது.

கதையில் ஒவ்வொரு பெண்களுக்கும் கல்யாணத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருந்து அது அவர்களுக்கு எப்படி பொய்த்துப்போய் ஏமாற்றங்களை அளிக்கிறது என்று சொல்லி மனதை தொட விரும்பியிருக்கிறார் ஆசிரியர். ஆனால் இதிலேயே அவர்களது கணவர்களுக்கும் ஒரு எதிர்பார்ப்புகள் இருந்ததை இந்த பெண்கள் புரிந்துகொள்ளாததை இலை மறை காயாக மழுப்பியிருக்கிறார். விஸ்வத்தின் காதல் ஜெயா... ஆனால் தற்கொலை நாடகம் ஆடி விசாலி அவனை கல்யாணம் செய்து அவனை மழுங்கடிக்கிறாள். பெண் பார்க்க வந்த அன்றே தான் வரதட்சினை வாங்கவேண்டிய அவசியத்தில் இருப்பதாகவும், ஆபீஸ் வேலையே தன் முதல் காதல் என்றும் சொல்லிவிடுகிறான் பார்கவியின் கணவன் ஸ்ரீராம். ஆனால் அதை “வெகுளித்தனம்” என்று தவறாக எண்ணிக்கொண்டு கல்யாணத்துக்கு பின் தான் “ஏமாற்றப்பட்டதாக” கொதிக்கிறாள் பார்கவி. அனுராதாவுக்கு காதலன் மோகனுடன் கல்யாணத்துக்கு முன்னாடியே உடலுறவுகள் இருக்கிறது. எனினும் கல்யாணத்துக்கு பின்னர் தான் அவன் தொட்ட “முதல் பெண்” இல்லை என்ற ஏமாற்றம் வருகிறதாம். இந்த பெண்களின் “தவறான புரிதலுக்கும் அதை தொடர்ந்த ஏமாற்றங்களுக்கும்” ஆண் சமுதாயமே காரணம் என்று சாடுவது சிறந்த நகைச்சுவை.

இது போன்ற நாவல்களுக்கும் நீலப்படங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. பொதுவாக நான் எண்டமூரியின் எழுத்துக்களை ரசிப்பவன். அவரது feminist novel-ஆன “பந்தம் பவித்ர”த்தை கூட ரசித்து தான் படித்தேன். ஆனால் இந்த “பனிமலை”யை கஷ்டப்பட்டு தான் முடிக்கவேண்டியதாயிற்று.

புத்தக விவரம்:-
பதிப்பகத்தார்: அல்லையன்ஸ் பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை
பக்கங்கள்: 360
விலை: ரூ. 110/-