Sujatha
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Sujathaகொஞ்ச நாளாக புதிதாக எதுவும் படிக்கவில்லை. புத்தகம் எதுவும் கொண்டுவரவில்லை, ஏனோ எனது Amazon Kindle-ஐயும் கொண்டுவரவில்லை. என்றோ சுஜாதாவின் சிறுகதைகளை 4Shared வலைதளத்தில் பார்த்தது நினைவுக்கு வந்ததும் அவற்றை பதிவிறக்கம் செய்து வைத்தேன். இருப்பினும் படிக்க நேரமே கிடைக்கவில்லை. ஊருக்கு கிளம்பும் excitement-ல் காலை 4:30 மணிக்கே எழுந்துவிட்டபோதும், விமானத்தில் தூக்கம் வராமல் ஒரே அசதி. திரையில் ஒன்றும் உருப்படியான படங்கள் இல்லாததால் என்ன செய்வது என்று யோசித்தபோது சுஜாதாவின் சில கதைகளை பதிவிறக்கம் செய்திருந்தது ஞாபகத்துக்கு வந்தது. படித்துவிட்டு சுடச்சுட எழுதிய குறுவிமர்சனங்கள். இப்போது வானத்தில் பறக்கும்போது பதிவு எழுதுவது ஒரு வித்தியாசமான அனுபவம். இது இரண்டாவது முறை.


1. எங்கே என் விஜய்?
நடுத்தர வர்கத்தினரை தன் கதைகளில் இயல்பாக எழுதுவதில் சுஜாதாவை மிஞ்சிக்கொள்ள வேறு யாருமில்லை. 'எங்கே என் விஜய்'-ல் தன்னுடைய பொருளை பறிகொடுத்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கும் வீட்டுக்கும் அலையும் நடுத்தர வர்க்கத்தின் தவிப்பை அப்படியே கண்ணுக்கு முன்னாள் கொண்டுவந்து நிறுத்துகிறார் சுஜாதா. அந்த புகாருக்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா என்று படிப்பவர்களை ஆச்சரியப்படுத்துகிறது இந்த கதை. யார் அந்த "விஜய்" என்பது படித்து முடிக்கும்போது தான் புரியும்.

2. அரிசி
நம் நாட்டில் விபத்து ஏற்படும்போது பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் பெரும்பாலும் காப்பாற்றிவிடலாம். ஆனால் விபத்து கேஸ்களை போலீஸுக்கு தெரிவித்து, அவர்கள் வந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் 90% சதவிகித விபத்துக்குள்ளானவர்கள் இறந்துபோய்விடுகிறார்கள். அதை விட கொடுமை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முற்படுபவர்கள் காவல் நிலையம், வழக்கு என இழுத்தடிக்கப்படுவதால் உதவ மனமிருந்தும் உதவி செய்யாமல் மனதை கல்லாக்கிக்கொள்பவர்களை பற்றிய சிறுகதை இது. கதையின் முடிவில் அரிசி பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை சொல்லும் motif-ஆக உபயோகப்படுத்தியிருக்கிறார் சுஜாதா.

3. எல்டொரேடோ
வயதான காலத்தில் மரணப்படுக்கையில் இருக்கும் ஒரு அப்பாவுக்கும், அவரது prodical மகன் - பரத்துக்குமிடையே இருக்கும் அன்னியோனியமான உறவை அழகாக அசைப்போடும் கதை இது. அவர்களுக்கிடையே இருந்த ரகசியங்கள் குடும்பத்தினருக்கு தெரியாததால் பரத்தை குடும்பத்தினர் தவறாக புரிந்துக்கொள்கின்றனர். நண்பர்கள் போல பழகும் ஒரு அப்பாவுக்கும், மகனுக்குமிடையே அந்த சம்பவத்தால் ஒரு பிளவு உண்டாகி அதன் தொடர்ச்சியாக ஏற்படும் சம்பவங்களை கோர்த்து கொடுத்திருக்கிறார் சுஜாதா. இல்லாத தங்கத்தை தேடிக்கொண்டு போகும் எல்டொரேடோ என்று ஒரு வரி வருகிறது. 'எல்டொரேடோ'வின் கதை தெரிந்தால் இந்த தலைப்பின் முக்கியத்துவத்தை அறிந்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

4. எப்படியும் வாழலாம்
பொதுவாக விபச்சார தொழிலுக்கு வரும் பெண்கள் எல்லாம் வறுமையின் காரணமாக தான் இந்த தொழிலை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது 99.99% பேரின் அபிப்பிராயம். ஆனால் எல்லா பெண்களும் அப்படி வருவதில்லை என்று ஒரு விபச்சாரியுடன் நடந்த தன் உரையாடல் மூலம் சொல்கிறார் சுஜாதா. வறுமை மட்டுமல்ல, வாழ்க்கையில் அறியாமையும், தன் அழகை பற்றிய திமிர் கூட பல பெண்களை இந்த புராதன தொழிலுக்கு கொண்டுவருவதையும், ஆனால் அவர்கள் அதற்காக வ்ருத்தப்படுவதில்லை i.e unapologetic - ஆக இருப்பதாக சொல்கிறார். அவர்கள் மீது பரிதாபப்படுபவர்கள் அவர்களை மறுவாழ்வுக்கு கொண்டுவர முயற்சித்தாலும் அது ஏன் வெற்றியடைவதில்லை, ஏன் அந்த பெண்கள் மீண்டும் மீண்டும் தொழிலுக்கு வந்துவிடுகிறார்கள் என்பதை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார். உண்மையாக மறுவாழ்வு கொடுக்கவேண்டுமென்றால் அவர்களை திருமணம் செய்துக்கொள்ளும் தைரியம் எந்த ஆணுக்கு இருக்கிறது என்ற கேள்வியுடன் இந்த பேட்டி / கதையை முடித்துவைக்கிறார் சுஜாதா.

5. ஃபிலிமோத்ஸவ்
திரைப்பட விழாக்களுக்கு வரும் அத்தனை பேரும் திரைப்பட விற்பன்னர்கள் அல்ல... ஒவ்வொருவருக்கும் ஒரு தேடல் இருப்பதையும், அதை இந்த திரைப்பட விழாக்களில் எப்படி தேடுகிறார்கள் என்பதை மெலிதாக சிரிப்பு வருமளவுக்கு சுஜாதா எழுதியிருந்தாலும் எனக்கென்னவோ அவர் ஒவ்வொருவருக்கும் உள்ளே இருக்கும் வேறுப்பட்ட மனவாழ்க்கையை கோடிட்டு காண்பிப்பதே இதன் மூலக்கருவாக வைத்து எழுதியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. ஆனால் அவர்கள் தங்கள் நிஜவாழ்க்கையும் கற்பனை மனவாழ்க்கையையும் தனித்தனியாகவே வைத்திருக்க விரும்புவதையும், அசந்தர்ப்பவசமாக மனவாழ்க்கை நிஜமாகும்போது எப்படி react செய்கிறார்கள் என்பதை நிஜமாக கொண்டுவந்திருக்கிறார்.

6. நகரம்
நகரம் என்று பெயர் வைத்திருந்தாலும் கதை நடப்பது மாநகரத்தில் உள்ள ஒரு பொது மருத்துவமனையில். பொதுமருத்துவமனைகள் பொருளாதார ரீதியாக வசதியில்லாத ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும் வைத்தியம் பார்க்க தான் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது பொதுமக்களுக்கு சென்று சேராத அளவுக்கு மருத்துவமனை ஊழியர்களின் indifference-ம், பொதுமக்களுக்கு சரியான வழிகாட்டுதலும் இல்லாமல் எப்படி அவதிக்கு ஆளாக்குகிறது என்பதை சாட்டையடி போல சொல்கிறார் சுஜாதா. கடைசியில் பாப்பாத்திக்கு நிகழப்போகும் அவலத்தை சொல்லாமல் படிப்பவர்களின் புரிதலுக்கே விட்டிருப்பது அதன் வேதனையின் தாக்கத்தை compound செய்திருக்கிறது.