Miscellaneous
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மாயநதிகள்

எந்த ஒரு கலைப்படைப்புமே ஒவ்வொரு வயதிலும் படிக்கும்போது / பார்க்கும்போது புது அனுபவத்தை அல்லது பரிமாணத்தை கொடுக்கும். உதாரணத்துக்கு சொல்லவேண்டுமானால் நீங்கள் மணிரத்தின் “மௌன ராக”த்தை படிக்கும்போது பார்த்தற்கும், கல்யாணம் / காதலிக்கும் போது பார்ப்பதற்கும் வித்தியாசம் தோன்றும். அதே போல “ஸ்டெல்லா புரூஸ்”ஸின் “மாய நதிகள்”புத்தகத்தை 5 வருடங்களுக்கு முன்பு படித்ததற்கும் இப்போது படித்ததற்கும் நிறைய வித்தியாசம். “மாயநதிகள்” மறைந்த எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ்ஸின் பத்தாவது நாவல். எனினும் பெரிதாக பேசப்பட்ட அவரது படைப்புகளில் இதுவும் ஒன்று. மனித உறவின் / மனதின் சிதைவை இவ்வளவு நெருக்கமாக, தத்ரூபமாக வேறு எந்த நாவலாவது சொன்னதா என்று பட்டிமன்றம் போட்டே யோசிக்கலாம். அவ்வளவு நேர்த்தி. இதை நான் வைத்தியின் அறிமுகத்தால் முன்பு 2005-ல் படித்திருந்தேன். பின்பு இப்போது 6 வருடங்கள் கழித்து படித்தபோது இன்னும் அதிகமாக identify செய்துக்கொள்ள முடிந்தது.

செந்துறையின் பணக்கார பண்ணையார்களில் ஒருவரான உலகநாதன் மனைவியை இழந்தவர். எனினும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவர் பரமேஸ்வரி என்னும் 30 வயது இளைய பெண்ணை மணக்கிறார். இந்த வயது வித்தியாசத்தை உலகம் ஏற்க மறுக்க, மனதளவில் சிதைந்து போகிறார் உலகநாதன். இந்நிலையில் சென்னையிலிருந்து வைணவம் குறித்து ஆராய்ச்சி செய்ய அச்சுதன் என்னும் இளைஞன் வர, உலகநாதனின் தாழ்வு மனப்பான்மை மேலும் அதிகமாகி கடைசியில் மனநிலை பாதிக்கப்பட்டவராக கதை முடிகிறது. பொருந்தா திருமணம் ஏற்படுத்தும் பின்விளைவுகளை இதை விட அழகாக சொல்லமுடியாது.

முன்பே சொன்னது போல ஒரு மனிதனின் மனச்சிதைவை இதனைவிட தத்ரூபமாக வேறு எந்த நாவலிலும் நான் படித்ததில்லை. எந்த ஒரு திருமணமும் உறவும் இன்னும் கொஞ்ச நாட்களில் ஒருவரை ஒருவர் வெறுத்துக்கொள்ளப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் ஆரம்பிப்பதில்லை. ஆனால் சில காலங்களில் கணவன் மனைவியை எதிரியாகவும், மனைவி கணவனை கண்டாலே எரிச்சல் வரும் மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த மாற்றங்கள் ஒரே தினத்தில் நிகழ்வதில்லை. எங்கோ என்றோ விழுந்த ஒரு விரிசல் பெரிதாகி பெரிதாகி கடைசியில் இருவரையும் உள்வாங்கி விழுங்கிவிடுகிறது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களின் மனப்போராட்டங்களை, அழுத்தங்களை “மாய நதிக”ளை விட அழகாக வேறு எந்த நாவலும் சொன்னதாக எனக்கு தோன்றவில்லை. சொல்லப்போனால் கதையின் தலைப்பின் காரணமும் இது தான். எங்கோ சிறு ஊற்றாக கிளம்பிய நதி காலப்போக்கில் வளர்ந்து, ஒரு சமயத்தில் உலகநாதன், பரமேஸ்வரியின் தாம்பத்ய் வாழ்க்கையை தீவுத்திடலாக துண்டிக்கப்போகிறது என்று 16வது அத்தியாயத்தின் இறுதியில் பெயர்க்காரணத்தை அழகாக விளக்கியிருக்கிறார் ஸ்டெல்லா புரூஸ். கதையின் முடிவு உண்மையிலேயே நெகிழ்ச்சியானது மற்றும் இயல்பானது.

நாவலின் ஆரம்பத்தில் உலகநாதனின் பாத்திரப்படைப்பை மிக விஸ்தாரமாக சொல்லியிருப்பார் ஸ்டெல்லா புரூஸ். ஏன் இவ்வளவு வளவளவென்று எழுதியிருக்கிறார் என்று ஒரு இடத்தில் கூட தோன்றாத அளவுக்கு நம் மனதில் உலகநாதனை குறித்து ஒரு முழுமையான ‘உருவ’த்தை உருவாக்கிவிடுகிறார். முன் பகுதியில் அவரது “சிறப்பான” உணவருந்தும் பழக்கத்தை சொல்லிவிட்டு பின்னர் அதே பழக்கத்தை வைத்து உலகநாதனின் மனச்சிதைவை சொல்லியிருப்பார் - ”அவர் குழம்பு, ரசம் இல்லாமல் நேரடியாக மோருக்கு சென்றதை பார்த்து பரமேஸ்வரி திடுக்கிட்டாள்”. கிட்டத்தட்ட பாதி நாவலுக்கு வெறும் உலகநாதன் தான். கதை முழுவதுமே உலகநாதனின் பார்வையிலேயே தான் செல்கிறது. எனினும் ஒரு இடத்தில் கூட ”என்னடா இழுக்குதே”ன்னு தொய்வு தோன்றாததே ஸ்டெல்லாவின் எழுத்து நடையின் ஆளுமைக்கு சான்று. மணியம் செல்வன் வரைந்த அட்டைப்படம் உலகநாதனின் உருவத்தை முழுமை செய்கிறது. பொதுவாக படிக்கும்போது அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற முகத்தை யாராவது நடிகர்களின் முகத்தில் தேடவேண்டியிருக்கும். ஆனால் இம்முறை மணியம் செல்வம் வரைந்த ஓவியம் வேறு முகம் தேடவேண்டிய அவசியம் இல்லாமல் செய்துவிட்டது.

அடுத்து கதை நடக்கும் களமான செந்துறை குறித்த விவரிப்பு. ஏதோ படிக்கும் நாமே அந்த கிராமத்தை அங்குலம் அங்குலமாக உணர்ந்து அங்கே வசித்துவருவது போன்ற உணர்வு. வெறுமனே ஊராக இல்லாமல் செந்துறையும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக மாறியிருப்பது இந்த நாவலின் சிறப்பு. பொன்னியின் செல்வனுக்கு அடுத்து இவ்வளவு அழகாக ஊரை ஒரு கதாபாத்திரமாக, தத்ரூபமாக விவரித்து படித்தது இதில் தான்.

மொத்தமாக எல்லா கதாபாத்திரங்களும் மிக இயல்பானவை.... அச்சுதனை தவிர்த்து. தன் வாழ்க்கைக்கு தேவை பணக்காரன் என்று வயதான உலகநாதனை மணம் புரிந்து பின்னர் அந்த வாழ்க்கையே சிறையாகி விடுதலை பெற ஏங்கும் பரமேஸ்வரியாகட்டும், விதவை வாழ்க்கையில் உலகநாதனின் கள்ளப்பார்வையில் இன்பம் கண்டு வாழ்ந்து பின்னர் அதே உலகநாதனிடம் வெறுப்பு பாராட்டி உலகநாதனின் முடிவுக்கு காரணமாகும் சிவமதியாகட்டும், மற்ற கிராமத்து மாந்தர்களாகட்டும்... அனைவரும் மிகவும் இயல்பானவர்கள். இதில் அச்சுதன் மட்டும் தான் அதீத நல்லவனாக கொஞ்சம் special make போல இருக்கிறான்.

ஸ்டெல்லா புரூஸ் எழுதிய இந்த நாவலை யாராவது தொலைக்காட்சி படமாகவேனும் எடுத்திருக்கிறார்களா தெரியவில்லை. அப்படி முயற்சி செய்திருக்கப்படாத பட்சத்தில் இது விடுபட்டது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தான். ஏதேனும் negative points இருக்குமா என்று தேடினால் என் சாதாரண புத்திக்கு எதுவும் எட்டவில்லை. ஸ்டெல்லாவின் எழுத்து லாவகத்துக்காகவும், அற்புதமான மனோநல த்ரில்லர் ஆன காரணத்துக்காகவும் இதை படிக்கும்படி படிக்கும் பழக்கமுள்ள எனது நண்பர்கள் அனைவருக்கும் தைரியமாக பரிந்துரைப்பேன்.

புத்தக விவரம்:-
பதிப்பாளர்கள்: கலைஞன் பதிப்பகம், 10 கண்ணதாசன் சாலை, தி. நகர், சென்னை.
பக்கங்கள்: 324
விலை: ரூ. 75/-