Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Dubai Nightபேரை கேட்டதும் ஏதோ கில்மா மேட்டர்னு நினைச்சுக்காதீங்க... ஏமாந்து போவீங்க. சந்தியா எழுதின பதிவை படிச்சதும் எனக்கும் என்னோட நைட் லைஃப் ஞாபகங்கள் வந்துச்சு. அதனால என்னோட சில நினைவுகளையும் பகிர்ந்துக்கனும்னு தோணுச்சு. என் பொண்டாட்டி என்னை சரியான தூங்கு மூஞ்சின்னு திட்டுவா. வீட்டில் அப்பாவோ என்னை வேற மாதிரி திட்டுவார். நேரத்தோட படுத்து நேரத்துல எழுந்து பொழப்ப பாரேண்டான்னு திட்டுவார். என்னை பொருத்தவரை எனக்கு மிகவும் பிடிச்ச சமயம்னா அது நள்ளிரவு தான். ஏன்னா அப்போ தான் உலகமே அடங்கிப்போய் அமைதியா இருக்கும். அந்த அமைதி ஏனோ மனசுக்கு பயங்கர சந்தோஷத்தை குடுக்கும் எனக்கு. எனக்கு மூளை கொஞ்சம் சுறுசுறுப்பா வேலை செய்யுறது எல்லாம் அந்த அமைதியான சூழ்நிலையில் தான். இதமான தென்றல் காற்று நம் முகத்தை வருட, நமக்கு பிடித்த வேலையை செய்யும் அந்த அமைதியான தருணங்கள் மிக அழகானவை. அது அனுபவிச்சவங்களுக்கு தான் புரியும். ஒருவகையிலே பெரிய கவனச்சிதறல்கள் இல்லாம நமக்கு பிடிச்ச வேலையை செய்ய இந்த நள்ளிரவு தான் உகந்த சமயம். அந்த சமயங்கள்ல நமக்கு ரொம்ப பிடிச்சவங்க நம்ம கூட இருந்துட்டாங்கன்னா... சொல்லவே வேண்டாம். உலக தொந்தரவுகள் இல்லாம சந்தோஷமா இருக்கலாம்.

எனக்கு இந்த நள்ளிரவு வாழ்க்கையை முதன் முதலில் சுவாரசியமாக்கியது என் கல்லூரித் தோழன் LMS தான். முதலாமாண்டு நான் யாரிடமும் பழகியதில்லை என்பதால் முதலாம் ஆண்டு பரிட்சைகள் எல்லாம் தனியாக தான் படித்து எழுதினேன். இரண்டாம் ஆண்டு இறுதியில் என் நண்பர்கள் அறைக்கு Group Study-க்கு போனேன். அந்த அறை LMS வீட்டு மாடியில் இருந்தது. அதனால் அவனும் அங்கே வந்து படிப்பான். அப்போது எங்களுக்குள்ளே செம அலைவரிசை பொருத்தம். மற்றவர்கள் எல்லாம் 11:30 - 12:00 மணிக்கு உறங்கிவிடுவார்கள். ஆனால் நானும் LMS-ம் மட்டும் விடியற்காலை 4:00 மணி வரை படிப்போம். ஒரு கட்டத்தில் எங்கள் இருவரையும் மற்றவர்கள் தண்ணி தெளித்து விட்டுவிட யாருடைய குறுக்கீடும் இல்லாமல் படிப்போம். இன்னும் சொல்லப்போனால் வேறு யாராவது எங்கள் இருவரோடு படிக்க வந்தால் ஏதோ குறுக்கீடு போல uncomfortable-ஆக feel செய்ய ஆரம்பித்தோம். அப்போது தான் முதன் முதலாக ராக்கோழியாக இருப்பதில் சந்தோஷம் பழகியது. LMS-க்கு பெரிய நண்பர் வட்டமாதலால் சிலர் நான் அவனை அவர்களிடம் இருந்து தனித்து வைக்கிறேன் என்பது போல பேச்சு வர, அதற்கு அடுத்த semester-ல் பகலில் படித்துவிட்டு அவனை 10:00 மணிக்கு ‘விடுதலை’ செய்த்விட்டேன். எனினும் அந்த நள்ளிரவில் படிக்கும் இனிமை போல வராததால் அதற்கு அடுத்த semester-ல் மீண்டும் ராக்கோழி ஆனோம்.

நடுராத்திரியில் படிக்கும்போது அவ்வப்போது relax செய்துக்கொள்ள செய்யும் செயல்கள் இன்னும் இனிமையானவை. விடியற்காலை 2 மணிக்கு தேநீர் குடிக்கவேண்டும் என்று தோன்றும். நாங்கள் இருந்ததோ சேலம் State Bank Colony-ல் ஆனால் பக்கத்தில் டீக்கடை இருக்காது. அதனால் அந்நேரத்துக்கு வண்டி எடுத்துக்கொண்டு போய் வருவோம். சில சமயத்தில் (LMS) அம்மா திட்டுவார்கள் என்று மெதுவாக வண்டியை தெருமுனை வரைக்கும் தள்ளிச்சென்றுவிட்டு பின்னர் start செய்துவிட்டு போவோம். ஒரு முறை எதிர்வீட்டில் தங்கி படித்துக்கொண்டிருந்த Dental College பெண்களிடம் (விளையாட்டுக்கு) சிக்னல் கொடுத்து, துடுக்குத்தனம் கூடிப்போய் ஏதோ பேசப்போக அங்கே தங்கியிருந்த பெண்ணின் அண்ணனான எனது சகமாணவன் என்னை அவர்களுடைய ரூமுக்கு வராதே என்று பிரச்சினை ஆனது வேறு கதை. இது போன்ற குறும்புகளாலும், ஒன்றாக நிறைய நேரம் செலவழித்ததாலும் எங்களிடையே மிக அன்னியோனியமான நட்பு உருவாகியிருந்தது. அதற்கு பின் Study Holidays-க்கு LMS வீட்டு வந்துவிடுவேன் என்பது சொல்லாத நியதியாகவே மாறியிருந்தது. ஆனால் அதுவே வேறுவிதமான பிரச்சினையில் முடிந்தது. அந்த நட்பு possessive ஆக மாறிப்போய் 7வது semester-ன் study holidays-ல் எங்கள் நட்பு முறிந்து போனது.

அதற்கு பிறகு கடைசி semester-ல் அரியானூர் என்ற இடத்தில் தங்கியபோது அங்கு mansion-ல் ஓரளவுக்கு ராக்கோழியாக படித்தேன். எனினும் LMS-ஓடு இரவில் படித்தபோது கிடைத்த concentration-ம், படிக்கும் சந்தோஷமும் கிடைக்கவில்லை. அதற்கப்புறம் MBA படித்தபோது இரவில் கண்விழித்து படிப்பது எல்லாம் இல்லாமல் போனது. கிட்டத்தட்ட எனது ராக்கோழி வாழ்க்கை முடிந்துவிட்டது என்றே சொல்லலாம். அதற்கப்புறம் சில ஆண்டுகளுக்கு பிறகு அபுதாபி போனபோது பாலாஜி, பிரகாஷ், திருமலை என நாங்கள் நால்வரும் ராத்திரி பொறுக்கிகளாக வியாழக்கிழமை இரவில் துபாய் தெருவில் அலைந்தது உண்மையிலேயே சந்தோஷமான நாட்கள். நான் ஆரம்பத்தில் எடுத்த துபாய் போட்டோக்கள் எல்லாமே இரவில் எடுக்கப்பட்டதாக தான் இருக்கும். பின்னர் பாலாஜிக்கும், திருமலைக்கும் பிரச்சினை வர, நடுவில் நான் மாட்டிக்கொண்டு விழிக்க மீண்டும் எங்கள் இரவு வாழ்க்கை தொலைந்துபோனது. பின்னர் கொஞ்ச நாளுக்கு வைத்தி புண்ணியத்தில் அபுதாபியில் இரவில் உலாத்தினோம்.

பின்னர் இந்தியா வந்ததும் தனியே web designing-கிளும், multimedia editing-கிளும் இரவுகள் கழிந்தன. வேலைக்கு போனபிறகு எப்போதாவது வெள்ளிக்கிழமை இரவுகளில் back to back movies பார்ப்பதில் செலவழிந்ததோடு சரி. ஏனோ Biological clock மாறிப்போய் சரியாக 10 மணிக்கு படுத்து, காலை 6:00 மணிக்கு எழுந்து தஞ்சாவூர் ஓவியம் வரைவது என எனது routine-ஏ மாறிப்போனது. பெங்களூரு வந்ததும் நிலமை இன்னும் மோசம். Painting brush-ஐ தொட்டே 1 வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. இப்படி போய்க்கொண்டிருந்த எனது வாழ்க்கையில் சந்தியாவின் பதிவை படித்ததும் பழைய நினைவுகளை மெல்ல அசைபோட்ட நாள் முதல் எழுதவேண்டும் என்று நினைத்த பதிவு இப்போது தான் முடிந்தது.