Sujatha
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Madhyamarமறைந்த எழுத்துலக ‘சூப்பர் ஸ்டார்’ சுஜாதா அவர்கள் தமிழ் நடுத்தர வர்கத்தினரை அடிப்படையாக கொண்டு எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பு இந்த ’மத்யமர்’. இது 1990-ல் கல்கியில் தொடராக எழுதப்பட்டாலும், கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கப்புறமும் பெரிய மாற்றமில்லாமல் நடுத்தர வர்க்கத்துக்கு பொருத்தமாகவே உள்ளது. மேலேயும் பணக்காரர்கள் வாழ்க்கைக்கும் போக முடியாமல், கீழே ஏழைகளின் வாழ்க்கைக்கும் இறங்கமுடியாமல் இரண்டாங்கெட்டானாக தவிக்கும் இந்த ‘மத்திய’ வர்க்கத்தை பின்புலமாக சோகம், துரோகம், தைரியம் என பலதரப்பட்ட ‘ரச’ங்களை கொண்டு எழுதப்பட்ட இந்த கதைகளை மேலும் சுவாரசியப்படுத்துகிறது ஒவ்வொரு கதைக்கப்புறம் பிரசுரிக்கப்பட்ட வாசகர்களின் கருத்து கடிதங்கள். ரொம்ப நாட்களுக்கு முன்னாடி புத்தக கண்காட்சியில் வாங்கப்பட்ட இந்த புத்தகத்தை எடுக்கவே இவ்வளவு நாட்கள் பிடித்துள்ளது எனக்கு. 12 கதைகளையும், அதன் feedback-ஐயும் படிக்கும்போது கதைக்கு பல புதிய பரிமாணங்கள் கிடைத்தது போன்ற உணர்வு.

1. ஒரு கல்யாண ஏற்பாடு:-
அமெரிக்காவில் ஒரு கறுப்பின பெண்ணை மணம் செய்துக்கொண்டு விவாகரத்து செய்துவிட்ட பையனின் வீடும், அதே போல கடந்தகாலம் உள்ள ஒரு பெண்ணின் வீடும் பரஸ்பரம் மறைத்து நடத்தும் பெண் பார்க்கும் படலம் தான் இது. தன்னை பணக்காரனாக கருதவும் முடியாமல், பெண் வீட்டு பொருளாதார அளவுக்கு இறங்கவும் முடியாமல் நடுவில் உலாத்தும் பையனின் தந்தை ‘எனக்கு டெலிபோன் ஆபீஸ்ல செல்வாக்கு உண்டு’ என்று தன் பலத்தை காண்பிக்க முயற்சிப்பது சுவாரசியம். ’ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை செய்’ என்பதை அப்படியே எடுத்துக்கொண்டு இப்படி வாழ்க்கையிலே விளையாடுவது அங்கும் இங்குமாக நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.

2. புது மோதிரம்:-
நடுத்தர வர்க்கத்தினருக்கு சினிமா மேலுள்ள மோகம் இளம்பெண், வயதான பெண்கள் என வயது வித்தியாசமில்லாமல் ஏறிக்கிடப்பதை சுஜாதா மிகவும் பட்டும் படாமலும் கொஞ்சம் பகீர் எனவே சொல்லியிருக்கிறார். தனது கனவுகள் நிறைவேறும்போது (எந்த வயதாயினும்) பெண்கள் எப்படி தங்கள் கனவுகளுக்கு உருவம் கொடுக்க எந்த எல்லைக்கும் போக தயாராகிறார்கள் என்று இயல்பாக சொல்லியிருக்கிறார். இந்த கதையை (அப்பட்டமாக) இன்னும் ஒரு சூழலில் (கொஞ்சம் பணக்கார வீட்டில் அமைந்ததாக இந்தியா டுடேவில் நான் படித்திருக்கிறேன்). இந்தியா டுடேவில் யார் எழுதியது என்று ஞாபகமில்லை.

3. "30 X 40":-
நடுத்தர வர்கத்தின் கனவுகளில் ஒன்று குருவிக்கூடு போலாயினும் தனக்கென்று ஒரு வீடு. அந்த கனவை அடைய அவர்கள் சிறுகசிறுக பணம் சேர்ப்பதும், அந்த வீட்டுக்கான மனையை அடைய முயற்சிக்கும்போது ஏமாற்றப்படும்போது அவர்கள் எப்படி react செய்கிறார்கள் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் சுஜாதா. நஞ்சுண்டா ராவ் தான் ஏமாற்றப்பட்டதை உணரவே ஒரு வாரம் பிடிக்கிறார். அப்படி உணர்ந்த பிறகு தன்னை ஏமாற்றிய வெங்கடேசனை கொல்ல கடப்பாரை எடுத்துக்கொண்டு கிளம்புவதும், அதை தொடர்ந்த முடிவும் யதார்த்தமோ யதார்த்தம்.

4. அறிவுரை:-
இந்த கதை கொஞ்சம் பழையதாக தோன்றுகிறது. காரணம் முன்பு நடுத்தர வர்க்கத்துக்கு லஞ்சம் வாங்குவதற்கு இருந்த “ஆசை” மற்றும் “நீதி / கொள்கை”க்கு இடையே நடந்துக்கொண்டிருந்த யுத்தத்தில் இப்போது “ஆசை” வென்று பல வருடங்கள் ஆகிவிட்டன. லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் வாழ்க்கையின் இயல்பான விஷயங்கள் என்று ஆகிவிட்ட நிலையில் அந்த யுத்தத்தின் கடைசி கட்டத்தில் இருந்த ஒரு யோக்கிய அதிகாரியின் குழப்பத்தை நறுக்கென்று சொல்லியிருக்கிறார் சுஜாதா. “லஞ்சம் வாங்குவது தவறல்ல” என்று சுஜாதா சொன்னது அப்போது ஒரு வகையில் அதிர்ச்சியாக இருந்தாலும், இப்போது அது நடைமுறையாகவே மாறிவிட்டது.

5. ஜாதி இரண்டொழிய:-
இந்த சிறுகதை தொகுப்பின் சுமாரான / cliched கதை இது தான். ஒரு அரசாங்க வேலைக்கு பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள ஒரு பிராமண இளைஞன், பணக்காரியான ஒரு SC/ST பெண் என இருவரும் வருகையில் ”rules book"படி அந்த பெண்ணுக்கு சலுகை காட்டப்படுவதை கொஞ்சம் sarcastic-ஆக சொல்ல முயற்சித்திருக்கிறார் சுஜாதா.

6. சாட்சி:-
அநியாயத்தை எதிர்க்கவேண்டும், நியாயமாக நடந்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்படும் நடுத்தர மக்கள், அதற்கான சூழல் வரும்போது அதற்கு மாறாக நடந்துக்கொள்வதையும் ஆனால் மிகப்பெரிய “உலகஞானம்” இல்லாதவர்கள் நியாயத்துக்காக எழுந்து நிற்பதையும் இந்த கதையில் சொல்லியிருக்கிறார் சுஜாதா. நல்ல பரபரப்பான ஆனால் அதே சமயம் படிக்கும்போது நம் மனதில் படமாக விரியவைக்கும் illustrative நடை. சரளாவின் கதாபாத்திரம் புதிய பரிமாணம் எடுப்பது அவ்வளவு களேபரத்துக்குமிடையேயும் படிப்பவர்களுக்கு உணரும்படி செய்திருப்பது தான் சுஜாதாவின் touch.

7. நீலப்புடவை, ரோஜாப்பூ:-
”அக்கரை பச்சை” என்ற மனித மனத்தின் இயல்பையும், இரும்புத்திரை கொண்டு தங்களை அடுத்த மனிதர்களிடம் இருந்து தங்களை தனித்துக்கொள்வதையும் ஆனால் அதே சமயத்தில் தூரத்து மனிதர்களிடம் இனிமையாக பழகும் hypocrisy-ஐயும் சொல்லியிருக்கிறார். கதையின் முடிவு கொஞ்சம் யூகிக்கும்படியாக இருந்தபோதும் தன் துணையிடம் தான் விரும்பும் குணங்கள் இருந்தபோதும் அதை அறிந்துகொள்ளாத பரிதாபத்தை படிப்பவர்கள் miss செய்யாமல் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியிருப்பது அழகு. முடிவுரையில் பல வாசகர்களும் இந்த கதையில் கவனித்திருக்காத அம்சத்தை சுஜாதாவே சொல்லிவிடுகிறார் - ஆங்கில வார்த்தையே கலக்காமல் இந்த கதையை எழுதியிருக்கிறார்.

8. மற்றொருத்தி தேவை:-
இளமையில் ரத்தம் சூடாக இருக்கும்வரை ஆட்டம் போடும் நடுத்தர வர்க்கத்து ஆண்களை அவர்களின் மனைவி எப்படி ஒருவித இயலாமையுடன் பொறுத்துக்கொள்கிறார்கள் என்பதை சொல்வது தான் இந்த மற்றொருத்தி தேவை. ஒருபக்கம் உணர்ச்சிகரமாக இருந்தபோதும் மறுபக்கம் இது மத்திய வர்க்கத்தின் இரட்டைவேடத்தை சொல்லும் வழக்கமான cliched கதையாக அமைந்துவிட்டது இதன் சுவாரசியத்தை குறைத்துவிடுகிறது.

9. பரிசு:-
தங்கள் உலகம், தங்கள் தினசரி வாழ்க்கை (நான் தாம்பரத்தையே தாண்டினது இல்லை) என ஒரு குறுகிய வட்டத்தில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு சுற்றுலா எல்லாம் எட்டாக்கனவு. அப்படி ஒரு வாய்ப்பு இலவசமாக வந்து அவர்களால் அதை அனுபவிக்க முடியாததை. அதற்கு காரணமான priorities-ஐயும் இந்த கதையில் சொல்லியிருக்கிறார்.

10. தாய் - I:
”பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்” என்பதன் அடிப்படையில் தந்தையில்லாமல் தனியாளாக வளர்த்துவரும் தாய்க்கு அவருடைய மகள் மூலமாக கிடைக்கும் அதிர்ச்சி - படிக்கும்போது ஏற்பட்ட முறையற்ற கர்ப்பம். அந்த கர்ப்பத்தை மறைத்து அந்த பெண்ணுக்கும் ஒரு கல்யாணம் காட்சி என்று செய்யவேண்டும் என்ற தவிப்பும், ஆனால் அதை துளியும் லட்சியம் செய்யாத பெண் என ஒரு தாயின் படபடப்பை படம் பிடித்து காட்டியிருக்கிறார் சுஜாதா.

11. தாய் - II:
”தாய்” என்று பெயரிட்டிருந்த போதும், ஒரு இடத்தில் கூட தாயை காட்டாமல் ஆனால் அவரை சுற்றி நடக்கும் கதை இது. முற்றிலும் cliched-ஆன ஆனால் அதே சமயம் இப்போதும் relevant-ஆன கதைக்களம் இது. வயதான காலத்தில் தங்கள் தாயை வைத்துக்கொள்வதில் சுணக்கம் காட்டும் இரு மகன்கள், இவர்களிடையே வயதின் காரணமாக அலையமுடியாமல் ஒரு இடத்தில் settle ஆக துடிக்கும் தாய்... சொத்து வந்ததும் இந்த சுணக்கம் எப்படி அன்பு மழையாக மாறிச்சொரிகிறது என்பது தான் இந்த தாய் - II.

12. தியாகம்:-
பொருளாதாரம் காரணமாக கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லவேண்டிய சூழலில் குழந்தைக்காக வீட்டில் ஒருவர் இருக்கவேண்டிய சூழலில் பயணிக்கிறது கதை. கடைசி மூன்று வரிகள் தான் இதன் நச்சென்ற climax. நடுத்தர வர்க்கத்தில் ஒரு பகுதியினர் பொறுப்புகளை தட்டிக்கழித்துவிட்டு சோம்பேறியாக மாறுவதை கொஞ்சம் திடுக்கென சொல்கிறது இந்த கதை.

மொத்தம் 12 கதைகள் என்றபோதும் சில கதைகளை விட அது குறித்த வாசகர்கள் கடிதம் தான் சுவாரசியமாக உள்ளது. பல கதைகளின் முடிவை படிக்கும்போதே யூகித்துவிட முடியும் என்றபோதும் படிக்கையில் சுவாரசியமாகவும், முடிவுகளுக்கான காரணங்களை நம்மை யோசிக்கவைப்பதிலும் சுஜாதா வெற்றிபெற்றுவிடுகிறார்.