Tamil
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்த வாரம் மிக யதேச்சையாக மூன்று நல்ல படங்களை பார்க்க நேர்ந்தது. 7ம் அறிவு உட்பட மொத்தம் நான்கு படங்கள் பார்த்தபோதும் அதில் மூன்று முத்துகளாக அமைந்தது சந்தோஷம். கன்னட ராஜ்யோத்சவ தினத்தை முன்னிட்டு எங்கள் ஆஃபீஸில் கன்னட புத்தகங்கள், CD & DVD sales போட்டிருந்தார்கள். அதில் ‘இஜ்ஜோடு’ என்ற கன்னட படத்தின் DVD-ஐ வாங்கினேன் - மீரா ஜாஸ்மின் நடித்த படம் என்ற ஒரே காரணத்துக்காக. அனன்யா அக்கா ஞாபகப்படுத்தியதால் ’ப்ரணயம்’ என்ற மலையாளப் படத்தை பதிவிறக்கம் செய்துவைத்தேன். மற்றும் தமிழில் long due ஆன “வாகை சூட வா”. இது தவிர்த்து “7ம் அறிவு” பார்த்தோம். இதில் 7ம் அறிவு தவிர மீதி மூன்றும் நல்ல கவிதைகள். மூன்று படங்களும் மனதை தொட்ட படங்கள் என்றபோது emotionally drain செய்யாமல், நல்ல படங்களை பார்த்த திருப்தியை கொடுத்ததால் இந்த பதிவு.

இஜ்ஜோடு (Incompatible) - பாரா (கன்னடம்), கரம் ஹவா (ஹிந்தி) ஆகிய cult class-களை இயக்கிய M.S சத்யு 12 வருடங்களுக்கு பிறகு இயக்கிய படமாம் இது. தேவதாசிகளை போல கர்நாடகத்தில் ‘பசவி’ எனப்படும் ‘பொட்டு கட்டி’விடப்படும் பெண்கள் குறித்த எளிய கதை. கட்டடக்கலை புகைப்பட நிபுணரான ஆனந்த் (அநிருத் ஜெய்கர்) தனது ஜீப் ரிப்பேர் ஆகிவிட, அந்த கிராமத்தில் ஒரு நாள் கழிக்க நேர்கிறது. அப்போது சென்னி (மீரா ஜாஸ்மின்) என்னும் ஒரு பெண்ணை சந்திக்க நேர்கிறது. அந்த இரவில் சென்னி ஆனந்தின் அறைக்கு வந்து அவனுடைய படுக்கையில் விழ சம்மதிக்கும்போது தான் அவள் ‘பசவி’ என்று தெரிகிறது. எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சந்தோஷமாக சென்னி இந்த வேலையை செய்வதற்கு அவள் தான் மனதளவில் தெய்வத்துக்கு நேர்ந்து விடப்பட்டவள், மற்றும் விருந்தாளிகள் தெய்வம் அதனால் அவர்களுக்கு ‘சேவை’ செய்வது புனிதம் என்று மூளை சலவை செய்துவிடப்பட்டது தான் காரணம். ஆனந்த் அவளை மூடநம்பிக்கையிலிருந்து மீட்க முயலும்போது அந்த திருப்பம் நேர்கிறது.

MS Sathyu and Meera Jasmine

இது அந்த கிராமத்தில் ஒருவகையான பழமையின் சின்னத்தின் கதை என்றால், அதே கிராமத்தில் வசிக்கும் கெம்பி என்ற பெண்ணின் கதை சென்னியின் கதைக்கு முற்றிலும் எதிரானது. பலராமனை காதல் கல்யாணம் செய்துக்கொண்ட கெம்பிக்கு சந்தோஷம் ரொம்ப நாளைக்கு நிலைக்கவில்லை. அவள் கணவன் யுத்தத்துக்கு புறப்படு போய்விடுகிறான். அதில் காணாமல் போனதால் இறந்துவிட்டதாக நினைத்து தனக்கு வாழ்வளிக்க முன்வந்த வெங்கடேசாவை மணந்துக்கொண்டு சந்தோஷமாக கர்ப்பிணி ஆகும்போது இறந்ததாக நினைத்த பலராமன் வந்து நிற்கிறான். வெங்கடேசாவுடனான கெம்பியின் வாழ்க்கையை தொடரவிட்டு பலராமன் ஒதுங்கிக்கொள்கிறான்.

வசிப்பது ஒரே கிராமம் எனினும் இரு பெண்களின் எண்ண ஓட்டங்களில் இருக்கும் மாறுபட்ட தன்மையை (contrast) சொல்லி மூடப்பழக்கவழக்கங்களால் பாதிக்கப்பட்ட சென்னியை போன்ற பெண்களின் சோகக்கதையை முடிக்கிறார் MS சத்யு. எளிமையான வசனங்கள், கண்ணில் ஒற்றிக்கொள்ளும் கர்நாடக கிராமத்தின் பசுமை, perfect colour co-ordination என பார்க்கவும் அழகாக எடுத்துள்ளனர் இதன் தொழிற்நுட்பக்குழு. சாதாரண ரசிகர்களுக்கு இதில் ’ஈர்ப்பு’ அம்சங்கள் இல்லை. குறைவான வசனங்கள், குறைந்த ஓடும் நேரம் என தேவைக்கு மட்டுமே கொடுத்துள்ளார் இயக்குநர்.

மீரா ஜாஸ்மின் சென்னியின் அப்பாவித்தனத்தை அழகாக கொண்டுவந்திருக்கிறார். Climax-ல் தான் மூடநம்பிக்கைக்கு பலியாக்கபட்டிருப்பதை உணர்ந்து அதை தொடர்ந்து பேசும் போது அவருடைய முகபாவங்கள் ரொம்ப நேரம் பார்ப்பவர்களின் மனதில் நிற்கக்கூடியது. ஆனந்த்-ஆக வரும் அநிருத் ஜெய்கர் தன்னுடைய இயலாமையையும், கோபத்தையும் நிறைவாக செய்திருக்கிறார் (அநிருத் நிறைய என் நண்பர் விஜயகிருஷ்ணனை நினைவுபடுத்தினார் - அது typical kannadiga feature போல). பலராமனாக வரும் சத்யா தான் மீரா ஜாஸ்மினுக்கு அடுத்தபடியாக மனதில் நிற்கிறார். Sync sound என்பதால் எல்லோரும் சொந்த குரலில் பேசியுள்ளனர் - மீரா ஜாஸ்மின் உட்பட. படத்தில் சில குறைகள் இருந்தபோதிலும் கடைசியில் DVD Player-ஐ நிறுத்தியபோது ஏதோ ஒரு சிறிய மன பாரம்.<

Pranayamப்ரணயம் (காதல்) - மலையாளத்தில் பரதன், பத்மராஜன் போன்ற திறமை மிக்க இயக்குநர்கள் வரிசை ரொம்ப நாளாக காலியாக இருப்பதை போக்க அனுப்பப்பட்டவர் என கேரள மீடியாக்கள் ஏகபோகமாக கொண்டாடுவது இந்த ப்ளெஸ்ஸியை (Blessy) தான். 2004-ல் மம்மூட்டியை வைத்து இவர் முதலில் இயக்கிய ”காழ்ச்ச” (காட்சி) இன்று மலையாள திரைப்படங்களின் classic வரிசையில் இடம்பிடித்துள்ளது. அதையடுத்து அவர் இயக்கிய “தன்மாத்ரா” (மூலக்கூறு) படமும் அனைவராலும் சிலாகிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் இயக்கிய ”பலுங்கு”, ”கல்கத்தா நியூஸ்” மற்றும் ”பிராமரம்” ஆகிய படங்கள் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் ஏகமனதாக நிராகரிக்கப்பட, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது அவரது அடுத்த படமான “ப்ரணயம்”.

ஒற்றையாளாக இருந்து மகன் சுரேஷை (அனூப் மேனன்) வளர்த்த அச்சுதமேனன் (அனுபம் கெர்) மருமகள், பேத்தியென சந்தோஷமாக வசித்துவரும் சமயத்தில் லிஃப்ட்டில் 40 வருடங்களுக்கு முன்பு பிரிந்த தன் முன்னாள் மனைவி கிரேஸை (ஜெயப்ரதா) பார்த்து ஆச்சரியத்தில் மாரடைப்பு வந்து மயங்கி விழுந்துவிடுகிறார். அவரை ஹாஸ்பிட்டலில் சேர்த்து அவரை அடிக்கடி விசாரிக்கும் கிரேஸ், அதே அடுக்குமாடி கட்டடத்தில் பக்கவாதத்தில் விழுந்துள்ள தன் கணவர் மேத்யூஸ் (மோகன்லால்) மற்றும் மகன், மகள் ஆகியோருடன் சமீபத்தில் குடிவந்திருக்கிறார். அச்சுதமேனனுக்கும் கிரேஸுக்கும் நட்பு மலர்கிறது. கல்லூரியில் தத்துவப்பேராசிரியராக பணிபுரிந்த மேத்யூஸும் அச்சுதனுடன் நண்பராகிவிடுகிறார். இந்த உறவை இவர்கள் பிள்ளைகள் எதிர்க்க, மூவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு உணர்வுபூர்வமான climax அரங்கேறுகிறது.

ப்ரணயம் பொழுதுபோக்குக்காக படம் பார்க்கும் ரசிகர்களுக்கானது அல்ல. மேலும் மனித உறவுகளின் சிக்கல்களை (complexity)-ஐ புரிந்துக்கொள்ள ஒரு தனி முதிர்ச்சி வேண்டும். கதையோட்டமும் மிக மிக நிதானமாக தான் நகர்கிறது. இருவரிடமும் இடையில் ஒருவித delicate-ஆக உணரும் தயக்கத்தை அழகாக செய்திருக்கிறார் ஜெயப்ரதா. காலப்போக்கில் (பிரிந்த மனைவி மீதான) வெறுப்புகள் எல்லாம் நீங்கி மிக இயல்பான நண்பனாக மாறும் கதாபாத்திரத்தை அனுபம் கெர் லாவகமாக செய்திருக்கிறார். படம் முடிந்தபோது இம்மூவரில் அவர் தான் காலத்தால் அதிகம் வஞ்சிக்கப்பட்டவர் என்று தோன்றியதை மறுக்கமுடியவில்லை. கௌரவ தோற்றம் என்றாலும் கிட்டத்தட்ட படம் முழுவதும் தனது presense-ஐ உணரவைத்திருக்கிறார் மோகன்லால். கதாபாத்திரங்களின் மனநிலையை பிரதிபலிக்கும் மழையும், பின்னணியில் வரும் அலைகடலும் என இயற்கையும் இதில் ஒரு கதாபாத்திரமாகவே ஒன்றிவிடுகிறது. எம். ஜெயசந்திரனின் இசையும், சதீஷ் குருப்பின் கேமராவும் இதை உலக சினிமா தரத்துக்கு உயர்த்துகின்றன.

Vaagai Sooda Vaaவாகை சூட வா - சமீபத்தில் என்னை அதிகம் impress செய்த தமிழ் படத்தின் வரிசையில் இதை சொல்லலாம். இதில் அற்புதமான கதை இல்லை, பெரிய நடிகர்கள் இல்லை, இலக்கியத்தனமான வசனங்கள் இல்லை. எனினும் இந்த படம் என்னை கொள்ளையடித்ததற்கு ஒரே காரணம் - எளிமையே அழகு. ஒரு மெல்லிய ஒற்றைவரி கதையை வைத்துக்கொண்டு செல்லுலாயிட்டில் காவியம் படைத்திருக்கும் இயக்குநர் சற்குணத்துக்கு நான் இப்போது ஒரு தீவிர விசிறி. 60-களின் வாழ்க்கையை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் detailing என்ன, அதற்கு துணை நிற்கும் ஓம்பிரகாஷின் camera கைவண்னம் என்ன, புதுமுகம் என்று சொல்லமுடியாத அளவுக்கு கிப்ரானின் இசைக்கோர்வை என்ன... இப்படி ஏராளமான ‘என்ன’ போட்டாலும் தகும் இந்த ”வாகை சூட வா”வுக்கு.

படம் முழுவதையும் கிட்டத்தட்ட ஒரே location-ல் படம் பிடித்து இருந்தாலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுக்கென்ற உலகத்தை தெளிவாக சொல்லிவிட்டதால், ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட சலிப்பு இல்லை. ஓம்பிரகாசின் sepia tone ஒளிப்பதிவு நம்மை பழைய காலத்துக்கு கொண்டு சென்றுள்ளது. நிறைய detailing - பழங்காலத்து ரேடியோ, சைக்கிளில் பொருத்தப்படும் மண்ணெண்ணெய் விளக்கு, சவரம் செய்ய பயன்படுத்தப்பட்ட படிகாரக்கல் என சிறு சிறு விஷயங்களிலும் அவ்வளவு கவனம், நேர்த்தி. மேலும் இதில் பாடல்கள் ‘Broadway musical' போல படமாக்கப்பட்ட விதம் தமிழ் சினிமாவில் (அதிகம்?) முயற்சிக்கப்படாதது. ஒரு பொட்டல் காட்டில் கேமிரா மூலம் கவிதை எழுதமுடியும் என நிரூபித்திருக்கிறார் சற்குணம் - ஓம்பிரகாஷின் துணையுடன்.



படத்தின் பலம் இதன் நடிகர்கள் தேர்வு - இதில் வரும் துணை நடிகர்களாகட்டும், சிறுவர் சிறுமிகளாகட்டும் இல்லை கதாநாயகி இனியாவாகட்டும்... அத்தனை பேரும் காசுக்கு நடித்த நடிகர்கள் என்ற நினைப்பை ஒரு இடத்திலேயும் அவர்கள் தரவில்லை. ஒட்டாத ஒரே நடிகர் - இதன் கதாநாயகன் விமல் தான். மனுஷன் “களவானி”க்கும் இதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் காட்டவில்லை. ஆனால் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு அப்பட்டமாக score செய்வது - இதன் கதாநாயகி இனியா தான். என்ன ஒரு கிராமத்து பெண் உடல்மொழி? குறும்பு முகபாவங்களாகட்டும் இல்லை வெட்கத்தை விட்டு தன்னை கல்யாணம் செய்துக்கொள்ள கேட்டும் மறுக்கப்படும்போது காண்பிக்கும் ஏமாற்றமாகட்டும்.... தமிழ் சினிமாவுக்கு பிரியாமணி, அஞ்சலிக்கு அடுத்து கிடைத்த திறமையான நடிகை இவராகத்தான் இருப்பார். இனியாவுக்கு நல்வாழ்த்துக்கள்.