Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Crazy Mohanஇந்த தீபாவளி அன்று சேனல் மாற்றிக்கொண்டிருந்த போது டி.டி-யில் கிரேஸி மோகனின் பேட்டி ஓடிக்கொண்டிருந்தது. கமல்ஹாசனுடனான தனது திரையுலக பயணத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தார். தமிழ் நாடகவுலகத்துக்கு கிடைத்த ஒரு அற்புதமான பொக்கிஷம் இவர். பொதுவாக கத்தி கத்தியும், உடல் அபிநயத்தாலுமே பலர் நகைச்சுவையை முயற்சித்துக்கொண்டிருக்க, இவர் அசால்ட்டாக வார்த்தைகளாலேயே அடித்து நொறுக்கிக்கொண்டிருந்தார். அதுவும் மீட்டருக்கு மேலாக. நிமிஷத்தில் நூறு நகைச்சுவையை அடைத்துக்கொடுப்பார் இவர். அத்தனை ஜோக்குகளும் நமக்கு புரியவேண்டும் என்றால் பத்து தடவை கேட்டிருக்கவேண்டும். அவருடைய திரையுலக பிரவேசம் மற்றும் பயணம் கமல்ஹாசனோடு மட்டுமே இருந்திருக்கிறது. அவர் கமல்ஹாசன் அல்லாமல் ஒன்றிரண்டு படங்களில் பணிபுரிந்து இருந்தாலும் அவை வெற்றி அடையாததால் அவர் கமல்ஹாசன் “exclusive" என்பது போல ஒரு தோற்றம் உருவாகிவிட்டது. இரவென்று ஒன்று இருந்தால் பகல் என்று இருக்கவேண்டும் அல்லவா? மாஸுக்கு ரஜினி என்றால் க்ளாஸுக்கு கமல் இருக்கவேண்டுமே... சுஜாதாவுக்கு ஒரு பாலகுமாரன். அது போல தமிழ் நாடக உலகத்தில் கிரேஸிக்கு இணையாக பேசப்பட்டது எஸ். வி சேகர் தான்.

கிரேஸியின் நகைச்சுவை சாதாரண IQ ஆளுங்களுக்கு இல்லை. தமிழ் மொழி மீது கொஞ்சம் command இருப்பவர்களுக்கு தான் இவருடைய நகைச்சுவையின் ஆழத்தை ரசிக்க முடியும். உதாரணம் - மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ஊர்வசி கமலிடம் கேட்பார் - நீங்க பாலக்காடா? அதற்கு கமல் “இல்லை.. ப்க்கத்துல ஒரு குக்கிராமம்” என்பார். அதற்கு ஊர்வசி “நீங்களும் ’குக்’ உங்க கிராமமும் குக்கா?” என்று கேட்பார். அதே படத்தில் பின்னர் வரும் கமல்ஹாசனும் ஊர்வசியும் பேசும் “திருப்பு” ஜோக் ஒரு நல்ல உதாரணம். அந்த காட்சி பத்தாவது Draft-ல் தான் ஏற்றுக்கொள்ளப்பட்டதாம். கடைசியில் படித்து முடித்தபோது முதல் draft-ம் பத்தாவது draft-ம் வேறு வேறு காட்சிகளாக இருந்ததாம்...."சதிலிலாவதி"யில் கமல் கோவை சரளாவிடம் சொல்வார் "நம்ம பையன் போன பிறவியிலே பாம்பா பொறந்திருப்பானோ? இப்படி படமெடுக்குறான்".... அது போல தான் ‘பஞ்சதந்திரத்’தில் வரும் “(காதலனை) எண்ணி எண்ணி... தூக்க மாத்திரையை எண்ணி எண்ணி” சாப்பிடும் தேவயானியின் வசனமும். ஒரு வகையில் கமல்ஹாசன் போல ஒருவர் கிரேஸியிடம் வேலை வாங்க முடியாதது தான் கிரேஸியின் மற்ற படங்கள் அவ்வளவாக எடுபடவில்லை போலும். கமல் ஈடுபடாமல் ஓரளவுக்கு கிரேஸி தெரிந்த படம் என்றால் - சிங்கீதம் சீனிவாசராவின் “சின்ன வாத்தியார்”. அதில் தனது “மாது +2” நாடகத்தை கவுண்டமணி - செந்தில் - கோவை சரளா வரும் நகைச்சுவை track-ஆக மாற்றியிருப்பார். அதனால் கூட இருக்கலாம்.

ஆனால் எஸ்.வி-யின் ஜோக்குகள் தனி league-ல் இருக்கும். அவை ஓரளவுக்கு explicit-ஆக இருக்கும். சமயத்தில் கொஞ்சம் Loud என்று கூட சொல்லலாம். அதனால் தான் அவர் மாஸ்ஸாக ஜெயிக்க முடிந்திருக்கிறது. சமயத்தில் அடாவடியாக இருக்கும். கொஞ்சம் அரசியல் சாயமும் இருக்கும். எஸ்.வி சேகர் அந்த சமயத்தில் எந்த அரசியல் கட்சியுடன் சார்பாக இருக்கிறார் என்பதை அவர் நாடக வசனங்களை வைத்து தெரிந்துகொள்ளலாம். அவருடைய நாடகங்களிலேயே ‘நாடகத்தனமான’ வசனங்கள் என்று பார்த்தால் அது “மகாபாரதத்தில் மங்காத்தா” தான். தனது நாடகங்களுக்கு வெவ்வேறு வசனகர்த்தாக்களை உபயோகப்படுத்தியது கூட இவரது நாடகங்கள் வித்தியாசப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம். எஸ்.வி சேகரின் “Crazy Thieves in Palavakkam" நாடகத்துக்கு கிரேஸி மோகன் தான் வசனம் எழுதியிருந்தார்.

கிரேஸி மாது, சீனு, ஜானகி என ஒரு வட்டம் போட்டுக்கொண்டு தன்னை அதில் குறுக்கிக்கொண்டுவிட்டாரோ என்று தோன்றுகிறது. கிரேஸியின் நகைச்சுவைகள் அந்த எளிய பிராமண குடும்ப setup-ஐ விட்டு வெளியே வரவே இல்லை. தினசரி வாழ்க்கையின் நகைச்சுவையே போதும் என்று நினைத்துவிட்டார் போல. ஆனால் இந்த விஷயத்தில் எஸ்.வி சேகர் செம versatile. அரசியலுக்கு “தத்துப்பிள்ளை”, கிராமத்து நகைச்சுவைக்கு “பெரிய தம்பி”, Political Satire-க்கு “பெரியப்பா” என பல உதாரணங்களை சொல்லலாம். அதனாலேயே அவருடைய எல்லைகள் விரிவடைந்துள்ளன. மேலும் எஸ்.வி சேகரின் “நாடகப்ரியா” உருவாக்கிய நாடகங்களின் எண்ணிக்கையும் அதிகம் என்று நினைக்கிறேன்.அது கூட ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் எஸ்.வி சேகர் மேடை நாடகங்கள் தவிர டி.டி மெட்ரோவில் “நம் குடும்பம்” மற்றும் “டேக்ஸி” ஆகிய தொடர்கள் மூலம் சிறு சிறு நாடகங்கள் என புது முயற்சி செய்திருந்தார். ஆனால் ஜெயா டி.வியில் “கிரேசியின் திரை”க்கென அவர் புதிதாக எதுவும் மெனக்கெடாமல் மேடை நாடகங்களை (இழுத்து) ரீஷூட் செய்து கொடுத்திருந்தார். அதனால் தானோ என்னவோ அது வெற்றி பெறவில்லை. இந்த விஷயத்தில் எஸ்.வி சேகர் கிரேஸியை விட பல மைல்கள் முன்னணியில் இருக்கிறார்.

இளையராஜாவா ஏ.ஆர் ரஹ்மானா? கமல்ஹாசனா ரஜினிகாந்த்தா? வரிசையில் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி - கிரேஸி மோகனா எஸ்.வி சேகரா? பதிலும் எல்லா கேள்விகளுக்கும் ஒன்றே. இருவருடைய பாணியும் வேறு வேறு. அதனால் இவர்களை ஒப்பிடுவதே தவறு.

நான் கிரேஸிக்கும், எஸ்.வி சேகருக்கும் நிறைய நன்றி சொல்லவேண்டும். ஆரம்பத்தில் அவர்களது நாடகங்களின் Links-ஐ போட்டதால் தான் என் வலைமனைக்கு நிறைய பேர் வந்தார்கள். கடந்த வருடம் இவர்களது நாடகங்களை வாங்கிய கலாகேந்திரா என்ற நிறுவனம் அந்த Link-களை நீக்குமாறு மின்னஞ்சல் அனுப்பியதை தொடர்ந்து அவற்றை நீக்கவேண்டியதாயிற்று.