Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்னைக்கு “ஜெயா மேக்ஸ்” சேனல்ல “கண்ணுக்குள் நிலவு” பாட்டு பார்த்தேன். அந்த பாட்டுல ஊட்டியில வழக்கமா ஷூட்டிங் எடுக்குற ஷூட்டிங் மேட்டுல எடுத்த போர்ஷன் பார்த்தப்போ என் கவனம் அந்த ஒத்த மரத்துல போய் நின்னுச்சு. அவ்ளோ பரந்த புல்வெளியிலே இந்த ஒத்த மரம் மட்டும் பயங்கர வசீகரமா ஸ்டைலா நிக்கும். முதல் முதலா ரோஜா படத்தில் வந்த “புது வெள்ளை மழை” பாட்டுல தான் அந்த மரத்தை கவனிச்சேன். என்னடா இது காஷ்மீர் மாதிரியும் இல்லை ஆனா மணிரத்னம் ஏமாத்த மாட்டாரேன்னு நினைச்சேன். அப்புறமா இந்த மரத்தை மஞ்சு வாரியர் நடிச்ச மலையாள படமான “Summer in Bethlehem” படத்துல வந்த “சூல மடிச்சு..”ன்னு தொடங்குற பாட்டை கவனிச்சப்போ இது ஊட்டி தான்னு தெரிஞ்சுது. ஆனா 2003-ல் ஊட்டி போனப்போ தான் இந்த மரம் வழக்கமான ஷூட்டிங் மேட்டுல இருக்குன்னு தெரிஞ்சுது. அந்த மரத்தை பார்த்ததும் எனக்கு செம பரவசம் - ஏதோ நான் வணங்குற தெய்வத்தையே நேர்ல பார்த்த மாதிரி ஒரு நெகிழ்ச்சி. அந்த மரத்தை புடிச்சுகிட்டு புதுசா வெட்கப்படுற ஹீரொயின் மாதிரி கன்னத்தை இழைச்சுகிட்டு சுத்தி சுத்தி வந்தேன். அந்த மேட்டுல, கிட்டத்தட்ட 2-3 சதுர கிலோமீட்டர் பரப்புல இது ஒரு மரம் மட்டும் தான் இருக்கும். Sunset-ல இந்த மரம் தனியா நிக்கறதை பாக்கும்போது ஏதோ ஒருவித சோகம் நம்மை வந்து தொத்திக்கும். அதுக்கப்புறம் ஊட்டியிலே எடுத்த எந்த பாட்டா இருந்தாலும் என் கண் அந்த ஒத்த மரத்தை மட்டுமே தேடும்.

2009-ல எங்க தேனிலவுக்கு ஊட்டிக்கு போகனும்னு முடிவு பண்ணினதும் எனக்கு அந்த மரத்தடியிலே நானும் அகிலாவும் டூயட் பாடுற மாதிரி செம கனவு. அதனாலேயே நாங்க Reverse Trip போட்டோம். அதாவது பொதுவா மக்கள் ஊட்டியிலே இருந்து 7 மைல்ஸ், ஷூட்டிங் மேடு, பைக்காரான்னு போவாங்க... ஆனா நாங்க கூட்டத்தை தவிர்க்க முதல்ல பைக்காரா போயிட்டு அங்கே இருந்து ஊட்டிக்கு வந்தோம். நாங்க ஷூட்டிங் மேட்டுக்கு வந்தப்போ கூட்டம் இல்லை. ஆசையோட ஒத்த மரத்தை பாக்க போனா எனக்கு நெஞ்சே வெடிச்சுடும் போல இருந்துச்சு. அந்த ஒத்த மரம் பட்டுப்போய் உடைஞ்சு கிடந்தது. பதியம் போட்டு / புதுசா வேற மரத்தை அதே இடத்துல நட்டு வச்சிருப்பாங்களோன்னு நப்பாசையிலே பக்கத்துல போய் சுத்தி சுத்தி பார்த்தேன். ஆனா அந்த மரம் அவ்வளவு தான்னு உளுத்துகிடந்த மரப்பட்டைகள் சொல்லுச்சு. அகிலாகிட்டே ரொம்ப ஃபீல் பண்ணி சொல்லிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் எனக்கு ஊட்டியில் எடுத்த எந்த பாட்டை பார்த்தாலும் முதல்ல அந்த ஒத்த மரத்தை தேடுறதே வழக்கமாயிடுச்சு. இன்னைக்கு இந்த பாட்டுகளை (”கண்ணுக்குள் நிலவு” ரோஜா பூந்தோட்டம் & “பெரியண்ணா” நிலவே நிலவே) தொடர்ந்து பார்க்கவும் எனக்கு இந்த ஒத்த மரத்தோட ஞாபகம் வந்துடுச்சு.

எனக்கு பழைய பாடல்களை (அதுக்காக கறுப்பு வெள்ளை இல்லைங்க.... 70-80கள்ல வந்தது) பாக்கும்போது அப்போ சுற்றுலா தலங்கள் ஓரளவுக்கு “மேக்கப்” போடப்படாம இயற்கையா இருக்குற அழகை தான் கவனிக்க தோணும். அதுக்காக எந்த கன்றாவி ஹீரோ ஹீரோயின் நடிச்சாலும் பார்ப்பேன்னு வச்சுக்கோங்களேன். சுற்றுலாவுக்கு வர்ற பயணிகளுக்காக சில பொழுதுபோக்கு அம்சங்களை சேர்க்குறது நல்ல விஷயம் தான். ஆனா அது அந்த இடத்தோட ஜீவனை கெடுக்காம செய்யனும்ங்குற Aesthetics நம்மவர்களுக்கு இல்லைங்குறது என்னோட அபிப்பிராயம். உதாரணத்துக்கு சொல்லனும்னா - தீர்ப்பரப்பு நீர்வீழ்ச்சி. நாகர்கோவில்-ல இருக்குற இந்த இடத்தை ”புன்னகை மன்னன்” படத்துல வர்ற “கவிதை கேளுங்கள்” மற்றும் உல்லாச பறவைகள் படத்துல வர்ற “தெய்வீக ராகம்” பாட்டுல பாக்குறதுக்கும் இப்போ நேர்ல பாக்குறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இப்போ அருவியை ஒட்டினாப்படியே செயற்கை நீச்சல் குளம், சிமெண்டுல செய்த மரம்னு சினிமா செட்டு போல அந்த இடத்தோட இயற்கை அழகையே சிதைச்சுட்டாங்க. அதே போல கோவை சிறுவாணியும் இன்னொரு உதாரணம். இது மாதிரி அழகான இடங்களோட Documentation-க்காகவே நான் பழைய பாடல்களை விரும்பி பாக்குறது வழக்கமாயிடுச்சு.

Update: இரு தினங்களுக்கு முன்பு பாண்டிக்கு போயிருந்தோம். அப்போது பீச்சை ஒட்டியுள்ள பூங்காவை சீரமைத்து ஒரே வட்டப்பூங்காவாக மாற்றியிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. இதற்கு முன்பு அது நான்கு சிறு quarter shaped பூங்காக்களாக இருக்கும். அதன் முழங்கால் அளவே உள்ள வேலியும், அதிலுள்ள swirling gate-ம் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்போது 10 அடி உயரத்துக்கு Grill Compound போட்டுள்ளார்கள். இதுவும் அழகாக தான் இருக்கிறது. பழைய பூங்காவை மலையாளத்தில் வந்த “ஃப்ரெண்ட்ஸ்” படத்தில் “புலரிக்கிண்ணம்..” என்ற பாடலில் பார்க்கலாம். கிட்டத்தட்ட முழு பாடலையுமே அதே பூங்காவில் தான் எடுத்திருப்பார்கள்.

இப்போதைக்கு என்னோட ஒரே ஆறுதல் - இன்னும் திருமூர்த்தி அணையிலே பெருசா கை வைக்கலை. ஆனா அதுவும் எவ்ளோ நாளுக்கு தாங்குமோ தெரியலை.