Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தீபாவளி நரகாசுரன் செத்ததுக்காக கொண்டாடப்பட்டதா இல்லை ராமர் அயோத்திக்கு திரும்ப வந்ததுக்காக கொண்டாடப்பட்டதாங்குற காரணம் எதுக்குங்க? ஒவ்வொரு தீபாவளியும் நமக்கு சந்தோஷமா போச்சா? அவ்ளோ தான். எனக்கென்னவோ முன்னாடி மாதிரி இப்போ தீபாவளி அவ்வளவு சந்தோஷமா கொண்டாடப்படுறது இல்லைன்னு ஒரு அபிப்பிராயம். என்னடா இவன்... “எங்க காலத்துல”ன்னு பெருசுங்க போல ஆரம்பிக்குறானேன்னு பயப்படாதீங்க, நான் ”யூத்” இல்லைன்னாலும் அவ்ளோ ”பெருசு” இல்லை. தீபாவளின்னாலே விடிய காலையிலே எழுந்து சீயக்காய் வச்சு, எண்ணெய் தேய்ச்சு குளிச்சு, அம்மா கையால மஞ்சள் வச்ச புதுத்துணி வாங்கி போட்டுகிட்டு தீபாவளி வந்துடுச்சுன்னு கட்டியம் கூறுர மாதிரி ஒரு சரவெடி போட்டு, வெளிச்சம் வந்தா மத்தாப்பு நல்லா தெரியாதுன்னு அவசரம் அவசரமா 2 டப்பா மத்தாப்பு காலி பண்ணி, வெளிச்சத்துல நம்ம டிரெஸ் எப்படி இருக்குன்னு பார்த்துகிட்டு, பக்கத்து வீட்டு பிள்ளைங்க கிட்டே “இது தான் உன் தீபாவளி டிரெஸ்ஸா?”ன்னு பார்த்து (சில சமயம் மனசுக்குள்ளே சின்ன பொறாமையோடு) ஒப்பிட்டுக்கொண்டு, அம்மா செய்த தீபாவளி பலகாரங்களை சம்புடங்களில் போட்டு தர பக்கத்து வீடுகளுக்கு கொண்டுப்போய் கொடுத்துவிட்டு வந்து, தேங்காய் அரிசி மாவு அடை - கறிக்குழம்பு என்ற தீபாவளி ஸ்பெஷலை முடித்துவிட்டு, விடிய்ற்காலையில் நேரமே எழுந்தது கண்ணை அழுத்த, கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு மாலையில் (தீபத்துக்கு என்று கொஞ்சம் ஒதுக்கப்பட்ட பிறகு மீதி) பட்டாசு எல்லாத்தையும் காலி செய்து தீபாவளி முடிஞ்சுது என்பதை அறிவிக்கும் விதமாக பட்டாசு குப்பைகள், வெடிக்காத பட்டாசுகள் என எல்லாவற்றையும் கொளுத்து முடிக்கும்போது “இனி அடுத்த வருஷம் தான்” என்ற ஏக்கம் தான் மிஞ்சும். இப்போ டி.வியிலே சினிமாக்காரன் / சினிமாகாரிகளின் இளிப்பு, சினிமா இவற்றுக்கு இடையே கிடைத்த கொஞ்ச நேரத்தில் பிள்ளைகள் பட்டாசு வெடித்துவிட்டு கடமையாக டி.வியில் ஐக்கியம் ஆகிவிடுகிறார்கள். விடுங்க... இது தமிழனின் சாபம் (கலாநிதி மாறன் குடும்ப உபயம்)... இதை நினைக்கிறதை விட உங்களுடன் சில தீபாவளிகளின் நினைவை பகிர்ந்துக்கலாம்.

கறிக்குழம்புன்னு சொன்னதும் எனக்கு ஏழாவது படிக்கும்போது கொண்டாடிய தீபாவளி ஞாபகத்துக்கு வருது. அப்போ கூத்தப்பாக்கம் உருவான நேரம். நாங்கல்லாம் அதோட சீனியர் சிட்டிசன்ஸ். முதல் வீடு எங்களுடையது, அடுத்து கட்டப்பட்ட வீடு ”டி.விக்காரர்” ஜானகிராமன் வீடு, அப்புறம் ”உஷா / செந்தில்” வீடு, பக்கத்துல நாடார் வீடு என இங்கொன்றும் அங்கொன்றுமாக வீடுகள் உருவாகிக்கொண்டிருந்த சமயம் அது. கறிக்குழம்பு இல்லாத தீபாவளி ஏது? ஏனோ சில காரணங்களுக்காக அந்த வருடம் எல்லோருமாக சேர்ந்து ஒரு ஆட்டுக்குட்டி வாங்கி பிரித்துக்கொள்வது என்று முடிவானது. கிராமத்து மனுஷராதலால் அப்பாவுக்கு இதில் எல்லாம் ரொம்ப ஆர்வம். எங்கள் வீட்டில் ஆட்டுகுட்டி வாங்கி தீபாவளி அன்று காலை பலி போடுவது என்று முடிவு செய்து தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்னாடி ஆட்டுகுட்டியும் வீட்டுக்கு வந்தாயிற்று. அப்போது ”உறவுக்காரர் ஒருவர் சீரியஸ்” என தந்தி வர அம்மா, அப்பா கிளம்பினர். தீபாவளி அன்று திரும்ப வந்துவிடுவதாக கிளம்பினார்கள். கூடவே தங்கையும் கிளம்ப, நான் வரமாட்டேன் என்று அடம் பிடிக்க என்னை தனியாக வீட்டில் (குடித்தனக்கார மாமியின் மேற்பார்வையில் தான்) விட்டுவிட்டு கிளம்பினார்கள். அந்த வருட தீபாவளிக்கு முன்பு பயங்கர மழை... அதனால் ஆட்டுகுட்டியை வீட்டு ஹாலில் மூலையில் கட்டிவைக்க, அது கத்தும்போதெல்லாம் கொஞ்சம் இலை தழை போட... அந்த இரண்டு நாட்களில் எனக்கும் ஆட்டுக்குட்டிக்கும் ஒரு Bonding develop ஆகிவிட்டது. ஊருக்கு போனவர்கள் தீபாவளி முடிந்து 4 நாட்கள் கழித்து வர, நானும் ஆட்டுக்குட்டியும் 1 வாரம் ஒன்றாக கழித்திருந்தோம். பின்னர் அதை ”போட்டு”விட முடிவு செய்து தேதி குறிக்கப்பட, நான் பாசத்தின் காரணமாக அதை காப்பாற்ற முயற்சிக்க... கடைசியில் ஒரு நாள் அந்த ஆடு எங்கள் வீட்டு குழம்பில் கொதித்துக்கொண்டிருந்தது. ஒரே அழுகையுடன் அந்த கறிக்குழம்பை சாப்பிட மறுக்க.... நான் இன்று மட்டன் சாப்பிடாததற்கு அந்த ஆடு நிச்சயம் காரணமில்லை.

தீபாவளியின் முக்கிய அம்சமே பட்டாசு தான். ஸ்கூலில் “எங்க வீட்டில் அம்பது ரூபாய்க்கு பட்டாசு வாங்கியிருக்காங்க” என்று ஒருவன் சொன்னால் மற்றவர்கள் காதில் புகை வரும்.. பொறாமையிலேங்க. (இப்போ அம்பது ரூபாய்க்கு ஒரு மத்தாப்பு டப்பா வாங்கலாம்.. அவ்ளோ தான்) உடனே அடுத்த கேள்வி - ”அதில் எவ்ளோ லட்சுமி வெடி?”. “லட்சுமி வெடி” வெடிப்பது என்பது ஆண்மையின் அடையாளம். ஒரு பையன் வயசுக்கு வர தகுதி ஆயிட்டானா இல்லையா என்பதை அவன் லட்சுமி வெடி வெடிக்கும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டதா என்பதை பொருத்தது தான். அதுக்காக லட்சுமி வெடி வெடிக்கிற பொண்ணுங்களுக்கு இது apply ஆகுமான்னு கேட்காதீங்க. லட்சுமி வெடி வெடிக்கிற பொண்ணு ஒரு Tom boy :-). நான் லட்சுமி வெடியை பற்றவைத்து கையிலே தூக்கிப்போடுவேன் என்று சொல்பவன் எங்களுக்கு ஒரு ஐடியல் ஆண்மகன். லட்சுமி வெடியை சும்மா வெடிச்சா அதில் என்ன த்ரில்? அதனால லட்சுமி வெடியை ஏதாவது உடைத்த பூந்தொட்டி, பழைய பிய்ந்த செருப்பு என எதற்குள்ளாவது சொருகி, திரியை பற்றவைத்துவிட்டு கொஞ்ச தூரம் வந்து நின்றுக்கொண்டு அந்த பாவப்பட்ட பூந்திட்டியோ, ஷூவோ சிதறுவதை பார்ப்பது ஒரு தனி த்ரில். அப்படி ஒரு முறை (ஒன்பதாவது படிக்கும்போது வந்த தீபாவளி) பழைய ஷூவில் வைத்து வெடித்தபோது அது தேமேவென்று வேப்ப மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருந்த கனகராஜ் அண்ணாவின் வலது கண்ணுக்கு கீழே சதையை கிழித்துக்கொண்டு போக எனக்கு டங்குவார் அறுந்தது அம்மாவால். நியாயப்படி கனகராஜ் அண்ணா தான் என் மேல் கோபப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அம்மாவிடம் அவரால் (!) திட்டுவாங்கினேன் என்று சொல்லி நான் கனகராஜ் அண்ணாவிடம் 2-3 மாதம் பேசாமல் இருந்தேன். என்ன ஒரு வில்லத்தனம்? பத்தாவது படிக்கும்போது வந்த தீபாவளி "படி படி" என்றும், பதினொன்றாவது / பனிரெண்டாம் வகுப்பில் நான் ஒழுங்காக படிக்காததால் தினம் தினம் தீபாவளியாக கழிந்தது.

தீபாவளி (மட்டுமல்ல பொங்கல், புது வருஷம்) என அப்போதைய பண்டிகைகளில் எனக்கு ரொம்ப புடிச்ச விஷயம் என்றால் அது வாழ்த்து அட்டைகள் அனுப்புவது. ரொம்ப புடிச்ச நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கவருக்குள்ளே வைத்து அனுப்பக்கூடிய ரூ. 2.50/- வாழ்த்து, மற்ற நண்பர்களுக்கு ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பக்கூடிய 50 பைசா அட்டை.. புடிக்காத பசங்களுக்கு பலான வாழ்த்து அட்டைகள் வாங்கி பேர் போடாமல் அனுப்பினால் அவன் வீட்டில் அடி வாங்குவான் என்ற நம்பிக்கையில் சில அட்டைகள்.... நண்பர்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் என தேடி (பெரிய சாய்ஸ் எல்லாம் இல்ல - ரஜினி, கமல்... கடைசி சமயத்தில் சரத்குமார்) வாங்கி அனுப்புவதில் ஒரு சந்தோஷம். யாரையாவது ரொம்ப ஸ்பெஷலா பீல் பண்ண வைக்கணும்னா கையால வறைஞ்சு அனுப்புறது என செம பெர்சனல் டச் இருக்கும். இப்போதைய ஐ-கார்டுகளிலும், எஸ்.எம்.எஸ்-களில் இது மிஸ்ஸிங். அப்புறம்... தீபாவளிக்கு ரிலீஸாகுற புதுப்படம். எனக்கு அப்போ அவ்வளவா படம் பாக்குற ஆர்வம் இல்லைன்னாலும், பசங்க தீபாவளி அன்னைக்கு முதல் நாள் முதல் ஷோ பாத்துட்டு கதை சொல்றதை கேட்கும்போது கொஞ்சம் பிரமிப்பா இருக்கும். அப்புறம் டி.டி-யிலே தீபாவளிக்கு சிறப்பு ஒளியும் ஒளியும் போட்டா அது இன்னும் விசேஷம். அப்போ எல்லாம் தீபாவளிக்கு 10 - 12 படம் வெளியாகும். இப்போ 3-4 வந்தாலே பெரிய விஷயமா இருக்கு.

இப்படியாக பல நினைவுகூரத்தக்க தீபாவளி என்னவென்றால் கடந்த வருடம் கொண்டாடிய தீபாவளி தான். புட்டுவின் முதல் மொட்டை, பிறந்தநாள், தீபாவளி என மூன்று தினங்கள் கொண்டாடினோம். அதனால் என் அண்ணன்கள், அண்ணிமார்கள், குழந்தைகள் என வீடே ரொம்ப நாளுக்கு அப்புறம் நிரம்பியிருந்தது. இப்போ தீபாவளி ரொம்ப இயந்திரத்தனமா ஆகிட்டு வருதுங்குறது எனது அபிப்பிராயம். முன்னாடி எல்லாம் தீபாவளிக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே பட்டாசு வெடிக்கிற சத்தம் கேட்கலாம். இப்போ தீபாவளி வருதுன்னா அது டி.வி-யிலே போடுற சிறப்பு நிகழ்ச்சிகள் அறிவிப்பு வச்சு தான் தெரியுது, அதே போல இப்பத்திய பிள்ளைங்க கிட்டே தீபாவளின்னா என்னன்னு கேட்டா "புது படம் போடுவாங்க அன்னைக்கு"ன்னு சொல்லுதுங்க... தீபாவளிக்கு யாரும் பலகாரம் செய்யுறது இல்லை. முதல் நாள் கடையில் வாங்கிக்கொண்டு வந்துவிடுகிறார்கள். நாம் கொடுப்பதும், நமக்கு வருவதும் ஒரே கடையிலிருந்து வருகிறது. கிருஷ்ணா ஸ்வீட்ஸிலோ / அடையார் ஆனந்த பவனில் கொடுத்த "கீதாசாரம்" கார்டு இதை தான் வலியுறுத்துகிறது - "எது கொடுக்கப்பட்டதோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது". எல்லோரும் இங்கேயே வாங்கி மற்றவர்களிடம் கொடுக்கிறார்கள் என்பதை சிம்பாலிக்காக சொல்கிறார்களோ என்னவோ.