Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Homosexualsவலைமனையில் எழுதுவதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் - நமது கருத்தை ஒத்துப்போகும் / வெட்டிப்போகும் நபர்களின் நட்பு கிடைக்கும். சில வருடங்களுக்கு முன்பு ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்த பதிவை படித்துவிட்டு ஒரு நண்பர் பதில் அனுப்பினார். கல்லூரி முடித்திருப்பதாக சொன்னார் "நீங்கள் Brokeback Mountain பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டிருந்தார். அதில் இரு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இடையேயான உறவை சொல்லியிருப்பார்கள் என்றும் "ஓரினச்சேர்க்கை பாவம் அல்ல" என்றும் எழுதியிருந்தார். "ஒருவருடைய sexuality என்பது தனி மனிதர்களின் விருப்பம்... அதை சரி என்றும் தவறு என்றும் சொல்லும் உரிமை எனக்கு இல்லை... அந்த விவாத நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டதாக நம்பிய இளைஞரை குறித்து எனக்கு தோன்றியதை எழுதினேன்" என்றும் சொன்னேன். மேலும் ஓரினச்சேர்க்கையை வெறுக்கவோ / ஆதரிக்கவோ செய்யும் அளவுக்கு எனக்கு அது பற்றிய ஆழமான அபிப்பிராயம் எல்லாம் கிடையாது. ஆனால் ஓரினச்சேர்க்கை உறவால் வாழ்க்கையின் பிற்பகுதியில் எந்த ஒரு பயனும் இல்லை என்பது எனது கருத்து. பிறகு வழக்கமாக எனது பதிவுகளை படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக்கொள்வார்.

இன்று தனக்கு சமீபத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை எழுதியிருந்தார். ஒரு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான் வலைமனையில் கிடைத்த தொடர்பை காண சென்றபோது அவருக்கு அந்த கசப்பான அனுபவம் ஏற்பட்டதாம். ஆரம்பத்திலேயே chat செய்யும்போதே தான் குள்ளமாக, கறுப்பாக இருப்பதை குறிப்பிட்டு இருந்தாராம். அதற்கப்புறமும் அந்த தொடர்போடு நட்பில் இருந்தாராம். ஒரு ஞாயிற்றுக்கிழமை அவனை பார்ப்பதற்காக பெரம்பூருக்கு சென்றாராம். அந்த தொடர்பு சொன்ன இடத்தை ஒன்றரை கி.மீ நடந்து அலைந்து சேர்ந்தாராம். குறிப்பிட்ட இடத்தை அடைந்த பிறகு அந்த தொடர்பை தொடர்பு கொள்ள முயற்சித்த போது பதில் கிடைக்கவில்லையாம். ஒரு மணிநேரம் காத்திருக்க வைக்கப்பட்டு, பின்பு சில நேரத்துக்கு பிறகு இவருடைய மொபைலுக்கு ஒரு SMS வந்ததாம் “இந்த உருவத்தை வைத்துக்கொண்டு நீ செக்ஸுக்கு ஆசைப்படலாமா? இதுக்கு நீ செத்துப்போ” அன்று அந்த தொடர்பு அனுப்பி இருந்தானாம். மிகவும் மனது ஒடிந்துவிட்டதாக சொன்னார் அந்த நண்பர்.

அந்த நண்பர் கிட்டத்தட்ட இதே போல ஒரு பழைய நிகழ்ச்சி ஒன்றும் சொல்லியிருக்கிறார். அவரது நண்பன் ஒருவன் மீது அவருக்கு மிகவும் அன்பாம். அந்த நண்பன் காதலித்தபோது தனது காதலியிடம் பேசவேண்டும் என்பதற்காக் இவரிடம் மொபைல் வாங்கித்தருமாறு கேட்டானாம். இவரும் கடன் வாங்கி மொபைல் வாங்கி கொடுத்தாராம். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் இவரை நெருக்க, அந்த நண்பனிடம் சென்று பணம் கேட்டபோது அந்த நண்பன் தரமாட்டேன் என்றானாம். இந்த நிகழ்ச்சியை அந்த நண்பர் சொல்லி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. நடுவில் நாங்கள் தொடர்பில் இல்லை. மீண்டும் அந்த ”ஞாயிற்றுக்கிழமை” சம்பவத்தோடு வந்தார். இடையில் அந்த நண்பன் ரிஜிஸ்தார் கல்யாணம் செய்து வீட்டினர் சமாதானம் ஆகும் வரை இவர்கள் வீட்டில் மூன்று மாதங்கள் இருந்ததாகவும், பெரியவர்களோடு சமாதானமாகி வீட்டுக்கு சென்றவன் இவரை மதிக்கவே இல்லை என்றும் சமீபத்தில் அவன் வீட்டுக்கு சென்றபோது அவமானப்படுத்திவிட்டான் என்றும் சொன்னார். இதில் கொடுமை என்னவென்றால் இவ்வளவு நடந்த பிறகும் அந்த நண்பனை unconditional-ஆக நேசிப்பதாக சொன்னார்.

அந்த நண்பருக்கு இப்போது ஆறுதலை விட சுயமரியாதை குறித்த விழிப்புணர்வே அவசியம் என்று எனக்கு பட்டது. அதனால் அவரிடம் “இப்போதைக்கு உங்கள் வாழ்க்கையின் priority என்ன என்பதை நிலைநிறுத்துங்கள். அதற்கும் மீறி உங்களுக்கு சமயம் கிடைத்தால் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது யோசித்துக்கொள்ளலாம். உங்கள் பழைய வரலாற்றை பார்க்கும்போது நீங்கள் எப்போதும் நிராகரிக்கப்படுவதையே விரும்புகிறீர்கள், ரசிக்கிறீர்கள். சொல்லப்போனால் உங்கள் மீது யாராவது அன்பாக இருந்தாலும் நீங்கள் அதில் சந்தோஷம் அடையமாட்டீர்கள். மாறாக அவர்கள் உங்களை அவமானப்படுத்தினால் நீங்கள் தேவதாசாக கற்பனை செய்துக்கொண்டு சந்தோஷம் அடைவீர்கள். அதனால் முதலில் உங்களை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். நீங்களே உங்களை நேசிக்காதபோது மற்றவர்கள் உங்களை எப்படி நேசிப்பார்கள். உங்களுக்கே உங்கள் மீது ஒரு நல்ல மரியாதை இல்லாதபோது மற்றவர்கள் எப்படி உங்களை மதிப்பார்கள்.” என்று சொன்னேன். அதற்கு அவர் “அப்படி என்றால் அன்பு பாசம் எல்லாம் பொய்யா? சுயநலம் தான் பெரியதா?” என்று கேட்டார்.

“இது சுயநலம் இல்லை... சுயமரியாதை. நீங்கள் உங்களை பற்றிய நல்ல மதிப்பு வைத்திருந்தால் அது ஏற்படுத்தும் positive wavelength சரியான மனிதர்களை உங்கள் பக்கம் ஈர்க்கும். இல்லை என்றால் நீங்கள் எப்போதும் உங்களுக்கு தகுதி இல்லாத மனிதர்கள் பால் ஈர்க்கப்பட்டு காலத்துக்கும் அழுதுக்கொண்டே இருப்பீர்கள். உங்கள் மேலும் தவறு இருக்கிறது. நீங்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக தேடிப்பிடித்து நட்பு கொள்கிறீர்கள். உங்கள் தேடலின் அடிப்படையே செக்ஸ் தான் என்றபோது அந்த தேடல் மூலம் வந்த உறவில் ”நட்பு” இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லையே. அதனால் கிடைக்கும் நண்பர்கள் உங்கள் உடலை மட்டும் நாடுவதில் ஆச்சரியம் இல்லையே. அதனால் ஓரினச்சேர்க்கை நண்பர்களை தேடுவதையும், அப்படியே நண்பர்களை தேடினாலும் அவர்களிடம் ஆழமான நட்பை எதிர்பார்ப்பதையும் நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று சொன்னேன். ஏதோ புரிந்தது என்று சொன்னார். என்ன செய்யப்போகிறார் அவர் என்பது அவருக்கே வெளிச்சம்.

இதில் ஓரினச்சேர்க்கை element இல்லை என்றாலும், நம்மில் பலர் தகுதி இல்லாத ந(ண்)பர்களிடம் மாட்டிக்கொண்டு “unconditional love" என்று பினாத்திக்கொண்டு கஷ்டப்படுவதை பார்க்கலாம். இதில் “படித்த” மற்றும் “படிக்காத” நண்பர்கள் என பலரும் அடக்கம். தங்களிடம் இல்லாத ஆனால் இருக்க விரும்பும் குணாதிசயங்களை கொண்ட நபர்களிடம் எளிதாக வீழ்கிறார்கள். பல நேரங்களில் அந்த வலியே உறவில் அதிகம் ஒட்டுதலை ஏற்படுத்தி இன்னும் அதிகமாக வலியிலிருந்து வெளியே வரமுடியாமல் செய்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் சுயமரியாதை வேலை செய்யும்போது தான் பலருக்கு விடுதலை கிடைக்கிறது. பலர் புதிதாக வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள், சிலர் cynical-ஆக மாறி வாழ்க்கையின் மீதே நம்பிக்கையை தொலைத்து நடைபிணம் ஆகிறார்கள். நம் வாழ்க்கையின் போக்கை தீர்மானிப்பது நாம் தான் என்று பெரியவர்கள் சொன்னது எவ்வளவு சரி. நான் கூட ஒரு காலத்தில் மிகச்சரியாக தவறான நண்பர்களை குறி பார்த்து தேர்ந்தெடுத்து கஷ்டப்பட்டு இருக்கிறேன். ஒரு கட்டத்தில் எனக்கு என்ன குறைச்சல் என்று வீறுகொண்டு எழுந்தபிறகே இப்போது நான் நானாக இருக்கமுடிகிறது. அதனால் தான் நல்ல நண்பர்களை ஈர்க்க முடிகிறது.

இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் தேவதாஸ் வேஷம் போடும் சில நபர்களை கண்டாலே அறைய வேண்டும்போல இருக்கிறது. சொந்தக்கார பெண்ணையே / மாமனையே காதலித்தாலும் பெரியவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் திடமான முடிவு எடுக்கத் தெரியவேண்டும். ஒன்று எனது வாழ்க்கையின் priority எனது பெற்றவர்கள் என்று முடிவு செய்துவிட்டு புன்னகையோடு ஒதுங்கிக்கொள்ள வேண்டும். மற்றவர்களை மணம் புரிந்தபிறகு அவர்களை நேசித்து வாழ்க்கையை வாழவேண்டும். அல்லது பெரியவர்களை பின்பு சமாதானப்படுத்திக்கொள்ளலாம் என்று தடாலடியாக முடிவு செய்து காதலித்தவரையே கல்யாணம் செய்து வாழ்க்கையை ஆரம்பிக்கவேண்டும். இவை இரண்டும் அல்லாது “பெரியவர்கள் சொன்னார்கள் என்று மற்றொருவரை கல்யாணம் செய்துக்கொண்டேன்” என்று போலியாக ஒரு காரணம் சொல்லிக்கொண்டு “என் மனசெல்லாம் காதலியிடம் / காதலனிடம் தான் இருக்கு. அவருக்கு / அவளுக்கு நான் 90 மதிப்பெண் கொடுப்பேன், ஆனால் என் கணவனுக்கு / மனைவிக்கு 40 மதிப்பெண் கொடுப்பேன்” என்று வெளிவேஷம் போடுவது எல்லாம் கேவலம். தேவதாஸை எழுதிய சரத்சந்திராவே “இவனை யாரும் பின்பற்றாதீர்கள்” என்று தான் தனது நாவலில் எழுதியுள்ளார். ஆனால convenient-ஆக தங்கள் கோழைத்தனத்தை மறைக்க தேவதாஸ் வேஷம் போடுவதை கண்டாலே எரிச்சலாக வருகிறது.