Miscellaneous
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

47 நாட்கள்சிவசங்கரி எழுதிய இந்த நாவல் ஒரு நல்ல ’Tearjerker' வகையில் சேர்த்தலாம். கிராமத்தில் பிறந்து வளர்ந்த விசாலிக்கு அதிர்ஷ்டம் பிய்த்துக்கொண்டு வெளிநாட்டு மாப்பிள்ளையான குமாருடன் திருமணம் நடக்கிறது. தனக்கு நடப்பதெல்லாம் கனவா இல்லை நிஜமா என்று உணரும் முன்பு விசாலியின் வாழ்க்கையில் சூறாவளி அடித்து அவளை தூரதேசத்தில் நிராதரவாக விடுகிறது. அந்த நரகத்திலிருந்து படிப்பறிவே இல்லாத விசாலி எப்படி தப்பிக்கிறாள் என்பதே இதன் சாரம். ஆயிரம் காலத்து பயிரான கல்யாணம் விசாலிக்கு 47-ஏ நாட்களில் முடிந்துவிடுவதை படிப்பவர்களின் மனதில் நெகிழ்ச்சியூட்டும் விதமாக எழுதியிருந்தார் சிவசங்கரி. நாவலின் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இது விசாலியின் பார்வையிலே எழுதப்பட்டிருந்தாலும், நிகழ்வுகளை நிகழ்வுகளாகவே சொல்லியிருப்பதன் மூலம் melodrama-வை குறைத்து விறுவிறுப்பாக கொண்டுபோயிருப்பது தான். சமயத்தில் பெண் எழுத்தாளரின் வாடை அடித்தாலும், இந்த நாவலை கிட்டத்தட்ட ஒரு page turner வகையில் சேர்க்கலாம்.

முதலில் நான் 8வது படிக்கும் போது இந்த நாவலை படித்திருந்தேன். என் குடும்ப நண்பர் நிக்கோலா அக்காவின் உதவிக்கு வந்திருந்த உறவுக்காரப்பெண் வானரசிக்கு படிக்கும் பழக்கம் இருந்தது. அந்தப்பெண் இந்த புத்தகத்தை (வார இதழில் வந்த தொடரை பைண்டு செய்து) பக்கத்திலிருந்த Lending library-இல் எடுத்து படித்துக்கொண்டிருந்தார். நானும் அப்போது கூட சேர்ந்து படித்திருக்கிறேன். பள்ளியில் அந்த நாவலை பற்றி சொன்னபோது எனது நண்பர்கள் அது சினிமாவாக வந்திருந்ததாக சொல்லியிருந்தார்கள். கதை பாரீஸில் நடப்பதாக மாற்றப்பட்டிருந்ததாகவும், ஒரே அம்மணகுண்டி சிலைகளாக இருக்கும் என்று வெட்கத்துடன் சொன்னார்கள்.

சில வருடங்களுக்கு பின்பு இயக்குநர் கே. பாலசந்தர் எழுதிய தொடரில் இந்த நாவலால் கவரப்பட்டு இதை தமிழ் / தெலுங்கு இரு மொழிகளிலும் எடுக்க விரும்பி இரு மாநில ரசிகர்களுக்கும் பொதுவான நடிகர்களாக ‘சிரஞ்சீவி, ஜெயப்ரதா, சரத்பாபு, சரிதா’ (எல்லாருமே கொல்ட்டுங்களாச்சே!!!!) ஆகியோரை வைத்து இயக்கியதாக எழுதியிருந்தார். அதற்கும் சில வருடங்களுக்கு பிறகு யதேச்சையாக விஜய் டி.வியில் கே. பாலசந்தர் இயக்கிய “47 நாட்கள்” படத்தின் முடிவை மட்டும் பார்க்க நேர்ந்தபோது புதிய பாத்திரங்களை சேர்த்து இருப்பது தெரிந்தது. எனினும் ‘47 நாட்கள்’ திரைப்படத்தை பார்க்க மனமில்லை. ஏனோ நாவலில் வந்த விசாலியை திரையில் மாற்றப்பட்ட விதத்தில் பார்க்க தோன்றவில்லை. இந்த படம் Youtube-ல் துண்டு துண்டாக காணக்கிடைக்கிறது.

புத்தக விவரம்:
பதிப்பாளர்கள்: கங்கை புத்தக நிலையம், 23 தீனதயாளு தெரு, சென்னை
பக்கங்கள்: 256
விலை: ரூ. 65/-