Kalki
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பொன்னியின் செல்வன்பொன்னியின் செல்வனின் நான்காவது பாகம் முடித்து இரண்டு வாரங்கள் ஆனபோதும் இதை பற்றி எழுத சமயம் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஒரு சிறிய இடைவெளி விட்டு நேற்று ஐந்தாவது பாகத்தை ஆரம்பித்துவிட்டேன். நான்காவது பாகத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம் என்னவென்றால் இதில் முக்கிய கதாபாத்திரங்களான அருள்மொழி வர்மன், வந்தியத்தேவன், குந்தவை ஆகியோருக்கு கிட்டத்தட்ட வேலையே இல்லாதது தான். மாறாக மற்ற துணைப் பாத்திரங்களான ஆதித்த கரிகாலன், அநிருத்த பிரம்மராயர், ஊமை ராணி ஆகியோரின் பங்கே அதிகம். மேலும் ஒரு புதிய பெண் கதாபாத்திரம் - மணிமேகலை இதில் அறிமுகப்படுத்தப்படுகிறது. பொன்னியின் செல்வனின் மூன்றாவது பாகத்தில் சம்பவங்கள் அதிகமென்றால், நான்காவது பாகத்தில் சதிவேலைகளும், சூழ்ச்சிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆகையால் சிற்சில தொய்வுகள் இருந்தபோதும் நான்காவது பாகம் நன்றாகவே நகர்கிறது.

இந்தப் பாகத்தில் என்ன நடக்கிறது? மூன்றாவது பாகத்தின் இறுதியில் புத்த விஹாரத்தில் இருக்கும் இளவரசர் அனைமங்கலத்திலுள்ள சோழ மாளிகையில் தன் தமக்கையான குந்தவையையும், வானதியையும் சந்திக்கிறார். குந்தவையின் செய்தியை எடுத்துக்கொண்டு வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலரை பார்த்து கடம்பூருக்கு செல்வதை தவிர்க்கும் முயற்சியில் இறங்குகிறான். அதே நேரத்தில் ஆதித்த கரிகாலன் தன் தோழர்களான பார்த்திபேந்திரன் மற்றும் கந்தமாறனுடன் கடம்பூருக்கு பிரயாணமாகிறான். அந்த இரவில் வந்தியத்தேவன் ஒரு ஐயனார் கோவிலில் ரவிதாசனை தொடர்ந்து சுரங்கப்பாதை கடம்பூர் அரண்மனைக்கு செல்வதை கண்டுபிடித்து அதன் வழியாக கடம்பூர் அரண்மனையின் அந்தப்புரத்தில் சென்று இறங்குகிறான். அப்போது மணிமேகலையை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

அன்றைய தினத்தில் பூங்குழலியுடன் சேந்தன் அமுதன் வழியில் ஊமை ராணியை சந்திக்கிறான். ஆனால் திடீரென்று அவர்கள் அனைவரும் தாக்கப்பட்டு ஊமை ராணி கடத்தப்படுகிறார். ஒரு வழியாக தங்கள் கட்டுகளை விடுவித்துக்கொண்டு பூங்குழலியும், சேந்தன் அமுதனும் ராஜபாட்டை வழியாக தேடிக்கொண்டு வருகின்றனர். இடி மின்னலுடன் கூடிய அதே நள்ளிரவில் பல்லக்கில் இருந்து சிறைபிடிக்கப்பட்ட ஊமை ராணியும், பூங்குழலியும் இடம் மாறிவிடுகின்றனர். பின்னர் ஊமை ராணியை சிறைபிடித்து படுத்த படுக்கையாய் கிடக்கும் சுந்தரச்சோழரிடம் சேர்க்க அநிருத்தரின் முயற்சியை அறியாமல் கெடுத்துவிட்டதற்காக பூங்குழலி வருத்தப்படுகிறாள். ஆனால் ஊமை ராணி சுந்தரச்சோழரின் அறையில் பிடிபட்டு, குந்தவையும், வானதியும் அவரிடம் ஆசி பெறுகின்றனர். அத்தனை களேபரங்களுக்கும் நடுவில் ஊமை ராணி மந்தாகினி சுந்தரச்சோழரின் உயிருக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை உணர்ந்து அதை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறார்.

கடம்பூர் அந்தப்புரத்திலிருந்து தப்பித்து வெளியேறி வரும் வந்தியத்தேவனையும், ஆழ்வார்க்கடியானையும் மீண்டும் குறி வைக்கின்றனர் பழுவேட்டையரின் ஆட்கள். அதற்குள் நந்தினியும், பழுவேட்டையரும் கடம்பூர் அரண்மனையில் பிரவேசித்துவிடுகின்றனர். வந்தியத்தேவன் இளவரசர் கரிகாலனிடம் வந்துவிடுகின்றான். ஆதித்த கரிகாலனின் கிறுக்குத்தனமான பேச்சு சிற்றரசர்களை எரிச்சலூட்டுகிறது. எனினும் மரியாதை கருதி அனைவரும் அமைதி காக்கின்றனர். பின்னர் வேட்டைக்கு போகுமிடத்தில் கரிகாலனின் உயிரை வெறிப்பிடித்த காட்டுப்பன்றியிடம் இருந்து காப்பாற்றுகிறான் வந்தியத்தேவன். பரிவாரங்களிடமிருந்து பிரிந்த அவர்கள் ஜலக்கிரீடை செய்யும் நந்தினியையும், மணிமேகலையையும் சந்திக்க நேர்கிறது. அப்போது கிடைத்த தனிமையில் கரிகாலன் நந்தினியிடம் "அவள் தன் தங்கை" என்றும் இந்துவரை அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டு அவளிடம் ஏதேனும் சூழ்ச்சி இருப்பின் அதை கைவிடுமாறு வேண்டுகிறான். அப்போது நந்தினி கரிகாலனிடம் வந்தியத்தேவனை பற்றி பொய்ப்புகார் கூறுகிறாள்.

அரண்மனைக்கு வந்ததும் பழுவேட்டையரை மதுராந்தகனை அழைத்துவருமாறு சொல்லி அவரை கடம்பூர் அரண்மனையிலிருந்து அப்புறப்படுத்துகிறாள். அந்த கடம்பூர் அரண்மனை பல பயங்கரமான நிகழ்வுகளை சந்திக்கப்போகிறது என்பது திண்ணம் ஆகிறது.

முன்பே சொன்னது போல இந்த பகுதியில் கொஞ்சம் ”த்ரில்” இருந்தபோதும், முதல் மூன்று பகுதிகளில் இருந்த சுவாரசியம் இல்லை. ஒருவேளை இந்த பாகத்தில் இயற்கையின் / வர்னனைகளின் பங்கு குறைவாக இருந்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பாகத்தை படித்து முடிக்கும்போது “ஐயோ! இன்னும் ஒரு பாகம் தான் மிஞ்சியிருக்கிறது” என்று ஒருவித ஆதங்கம் தோன்றியது உண்மை.

நடிகர் சத்யராஜ் தன் சமீபத்திய பேட்டியில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் “பெரிய பழுவேட்டரையர்” கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தமாகியிருப்பதாக சொல்லியிருக்கிறார். நல்ல தேர்வு!!! அதே போல குந்தவை பாத்திரத்துக்கு அனுஷ்கா ஒப்பந்தமாகியிருக்கிறாராம். மிகச்சரியான தேர்வு.

{oshits} வாசிப்புகள் இந்த பதிவுக்கு.