Sujatha
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Click the image to read furtherமறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் புகழ் பெற்ற விஞ்ஞான நாவல்களில் ஒன்று "என் இனிய இயந்திரா" மற்றும் அதன் தொடர்ச்சியான "மீண்டும் ஜீனோ"வும். இதில் "என் இனிய இயந்திரா" முதலில் எனக்கு தொலைக்காட்சி தொடராக தன் அறிமுகம் ஆனது. அப்போது பதினொன்றாவது படித்துக்கொண்டிருந்தேன். அந்த சமயத்திலேயே எனக்கு அந்த நாவல் பிடித்திருந்தது. எனினும் அதை புத்தகமாக கடந்த சென்னை புத்தக கண்காட்சியில் தான் வாங்கினேன். அதை விட கொடுமை வாங்கியதை படிக்க ஒரு வருடம் பிடித்தது. முதலில் “என் இனிய இயந்திரா” படித்ததும் அதன் தொடர்ச்சியான “மீண்டும் ஜீனோ”வையும் தேடிப்பிடித்து படித்த பிறகே இது குறித்த எனது பதிவை போடவேண்டும் என்று பொறுத்து இந்த வாரம் “மீ. ஜீனோ” படித்த பிறகு பதிவு இதோ.

என் இனிய இயந்திரா - கி.பி 2020-ல் (கிட்டே வந்துடுச்சே) இந்தியா ஜீவாவின் ஆட்சியில் வல்லரசாக விளங்குகிறது. ஜீவாவின் ஆட்சியில் சுபிட்சமாக இருந்தாலும், வாழ்வு, சாவு என்பது முன்னமே தீர்மானிக்கப்பட்ட நாடகமாக போய்க்கொண்டிருக்கிறது. மக்களின் வாழ்க்கைத்தரம் விஞ்ஞான ரீதியாக sophisticated-ஆக இருந்தாலும், பெயரில்லா மக்கள், ரேஷனில் அனுமதிக்கப்பட்ட அளவில் மது, செக்ஸ் மற்றும் லாகிரி வஸ்துக்கள், பிள்ளை பெற்றுக்கொள்ள அரசாங்க அனுமதி என கிட்டத்தட்ட பொம்மைகளாக வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர். நிலா - சிபி தம்பதியினருக்கு பிள்ளை பெற்றுக்கொள்ள அனுமதி கிடைத்துள்ள தருணத்தில் அரசாங்கத்தை எதிர்க்கும் ரவி அவர்கள் வீட்டுக்கு வாடகை சீட்டுடன் நுழைய, ஆடு புலி ஆட்டம் ஆரம்பமாகிறது. தகவல் அறிய சென்ற சிபி மாயமாகிறான். ரவியுடன் வந்த ஜீனோ என்ற இயந்திர நாய் நிலாவுக்கு தோழனாக மாறுகிறது.

‘என் இனிய இயந்திரா’ எண்பதுகளின் மத்தியில் எழுதப்பட்டது என்று அறிகிறோம். அப்போதிலிருந்து 40 வருடங்களில் மக்களின் வாழ்க்கை தரம் எப்படி மாறியிருக்கும் என்ற கற்பனையை கொஞ்சம் அதிகமாகவே ஓடவிட்டு சுவாரசியமாக எழுதியிருக்கிறார். குறிப்பாக ரோபோட்டுகள் நமது வாழ்வில் ஒரு முக்கியமான அங்கமாக மாறினால் எப்படி இருக்கும் என்ற தொலைநோக்கு பார்வை. (ஆனால் இந்த 40 வருடத்தில் மட்டுமல்ல 400 வருடங்கள் ஆனாலும் நமது நாட்டில் நல்ல சாலைக்கு கூட வக்கில்லை என்பது வேறு விஷயம்.). அந்த சமயத்தில் தானியங்கி கதவுகளும், காந்த வாகனமும், விவி திரையும், access card-களும் 80-களில் பிரமிப்பூட்டுவனவாக இருந்தன. சுஜாதா கொலையுதிர் காலத்தில் குறிப்பிட்டிருந்த லேசர் ஹோலோகிராம் டெக்னாலஜி இந்த புத்தகத்தில் ஒரு முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது. கிட்டத்தட்ட தமிழின் முதல் sci-fi நாவல் (அல்லது நாவல்களில் ஒன்று) என்பதால் மிக சுவாரசியமாக இருந்தது. மொத்தத்தில் ”என் இனிய இயந்திரா” ஒரு சிலிர்ப்பான அனுபவமாக இருந்தது.

குமுதத்தில் தொடராக வெளிவந்த சமயத்தில் இதன் முடிவு இப்படி தான் இருந்ததா (இரண்டாவது பகுதி ஆரம்பித்து இருந்தது) அல்லது நாவலாக விசா பதிப்பகத்தார் வெளியிட்ட போது அடுத்த பகுதியும் விற்கவேண்டும் என்பதற்காக செய்த (முடிவு) யுக்தியா என்று தெரியவில்லை.

Meendu Jeeno‘மீண்டும் ஜீனோ’ மிகச்சரியாக ’என் இனிய இயந்திரா’ விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கிறது. ஒரு path breaking முயற்சிக்கு அடுத்த பாகம் (sequel) எழுதுவது என்பது மிக கஷ்டம். ஹாலிவுட்டின் மைக்கேல் க்றிஸ்டனுக்குமே ’ஜுராசிக் பார்க்’கின் series-களில் இந்த தடுமாற்றம் தெரியும். ஏன் திடீரென்று மைக்கேல் க்றிஸ்டன் இங்கே நுழைந்தார் என்று பின்பு சொல்கிறேன். சுஜாதாவும் ’எ.இ.இ’ன் அடுத்த பாகமான ‘மீண்டும் ஜீனோ’வில் தடுமாறியிருக்கிறார் என்றே சொல்ல தோன்றுகிறது. காரணம் இரண்டாவது பாகத்தில் புதியதாக எந்த ஒரு வித்தியாசமான அம்சமும் வராமல் முதல் பகுதியில் வந்த வி.வி திரையையும், லேசர் துப்பாக்கியையும் வைத்து ஓட்டியிருக்கிறார்.

மேலும் முதல் பாகம் போல வலுவான சம்பவங்கள் இல்லாததும் மற்றொரு காரனம். இரண்டாவது பாகத்தில் எல்லா கதாபாத்திரங்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முன்நிற்பது ஜீனோ என்கிற இயந்திர நாய் தான். ஒருவகையில் அதுவும் ஒரு பலவீனமாக போய்விட்டது. ஜீனோ சாமர்த்தியசாலி தான், ஆனால் நாட்டை ஆளும் நிழல் ராஜா நிலாவையும், ஜீனோவையும் கைது செய்ய கைது செய்ய பயப்படுவதாக காட்டியிருப்பது வில்லன்களை நகைச்சுவையாளர்களாக இறக்கியிருப்பது சறுக்கல். மேலும் ஜீனோ இதில் மிக நிறைய technical-ஆக பேசுவதாக எனக்கு தோன்றியது. முடிவில் நாட்டுக்கு ஜனநாயகம் கிடைத்தவுடன் இளைஞர்கள் குடித்துவிட்டு அருங்காட்சியகத்துக்கு நெருப்பு வைப்பதிலிருந்தும், ‘கடந்த நூற்றாண்டின் மகத்தான தப்பு ஜனநாயகம்’ என்று ஜீனோ சொல்வதிலிருந்தும் தற்சமயம் நம் நாட்டுக்கு எத்தகைய தலைமை வேண்டும் என்று சுஜாதா கோடிட்டு காட்டியிருக்கிறார்.

Sujathaமைக்கேல் க்றிஸ்டன் - எனக்கு தெரிந்த புகழ் பெற்ற ஆங்கில sci-fi எழுத்தாளர். அவரும் பல நேனோ டெக்னாலஜி, Artificial Intelligence, Virtual Imaging என பலதரப்பட்ட தொழில் நுட்பங்களை மட்டுமல்ல, ‘Disclosure' போன்ற உணர்ச்சி போராட்டங்களையும் எழுதியுள்ளார். அவரது எழுத்து நடையும் சுஜாதாவின் நடையையொத்திருகுக்கிறது என்பது எனது அபிப்பிராயம். மைக்கேல் க்றிஸ்டனும் தன்னுடைய ’ஜுராஸிக் பார்க்’ நாவலின் பிரபலத்தை கண்டு அதற்கு ’The Lost world' என்று ஒரு sequel-ஐயும் எழுதினார். ஆனால் அது ஜுராஸிக் அளவுக்கு வெற்றி பெறவில்லை. காரணம் என்று எனக்கு தோன்றுவது - முதல் பாகத்தில் புதிய கதாபாத்திரங்களும், புதிய தொழில்நுட்பங்களும் அறிமுகமாகும் போது உண்டாகும் சுவாரசியம் அடுத்த பாகத்தில் இருக்காது. அதனால் மனதில் பதியும் அழுத்தமான சம்பவங்களை நம்பி தான் அதன் வெற்றியோ தோல்வியோ இருக்கும். ‘என் இனிய இயந்திரா’ மற்றும் ‘மீண்டும் ஜீனோ’வில் நடந்ததும் இது தான்.

Sivaranjani”என் இனிய இயந்திரா” அதே பெயரில் 1992-93ல் ’லேகா ரத்னகுமார்’ தயாரிப்பில் டி.டி-1ல் 13 வார தொடராக வெளிவந்தது. நிலாவாக அப்போது வளர்ந்து வந்த நடிகை சிவரஞ்சனி நடித்திருந்தார். Windows screensaver போன்ற திரைகளுடனும், அந்த சமயத்தில் உச்சபட்ச கிராபிகஸ் காட்சிகளுடனும் சுவாரசியமாகவே இருந்தது. முடிவு மாத்திரம் ஜீனோ நாட்டின் அதிபராக பதவியேற்பதாக முடித்திருந்தார்கள். பொதுவாக மார்க்கெட் இழக்கும் நடிகைகள் டி.வியில் அடைக்கலம் புகுவதற்கு விதிவிலக்காக இந்த நாடகத்தில் டி.வி கிடைத்த புகழ் சிவரஞ்சனியை தமிழின் முன்னணி நாயகியாக உயர்த்தியது. ’சின்ன குஷ்பு’ என்று அழைக்கப்பட்டவர், தெலுங்கில் “ஊஹா” என்ற பெயரில் அறிமுகமாகி, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்தை காதலித்து கல்யாணம் செய்துக்கொண்டு குடும்பினியாக செட்டில் ஆகிவிட்டார். என் போன்ற 30+ வயதுக்காரர்களுக்கு சிவரஞ்சனி என்றால் ஒரு கிளுகிளுப்பு தோன்றுவதற்கு “காத்திருக்க நேரமில்லை” படத்தில் வரும் “வா! காத்திருக்க நேரமில்லை” பாடல் பார்த்தவர்களுக்கு புரியும்.

”எந்திரன்” படம் துவங்கப்பட்டபோது இது “என் இனிய இயந்திரா” மற்றும் “மீண்டும் ஜீனோ”வின் ஒருங்கிணைந்த படைப்பு என்று கோலிவுட் கிசுகிசுத்தது. ஆனால் கதை வேறாக, முடிவு மாத்திரம் ஒன்றாக இருந்தது. ”மீண்டும் ஜீனோ”வில் sequel உண்டாவதற்கு எல்லா சாத்தியங்களும் வைத்து தான் முடித்திருந்தார் - தப்பிச்சென்ற வில்லன், அவசியம் ஏற்பட்டால் கிருஷ்ண பரமாத்மா போல மீண்டும் உயிர்ப்பிக்கும் என்ற மக்கள் நம்பிக்கையில் ஜீனோ” என்று open end வைத்து முடித்திருந்தார். ஒருவேளை சுஜாதா உயிரோடு இருந்தால் 3வது பாகம் எழுதியிருப்பாரோ என்னவோ. ஏனோ எனக்கு “என் இனிய இயந்திரா” மற்றும் “மீண்டும் ஜீனோ” படிக்கும்போது ஏற்பட்ட அனுபவம் படம் பார்க்கும்போது கிடைத்த சந்தோஷத்தை விட அதிகமாக இருந்ததாக தோன்றுகிறது. காரணம் ‘எந்திரன்’ படம் ஷங்கரின் கற்பனையில் உருவாக்கப்பட்ட காட்சிகள் ஆனால் இந்த நாவல்கள் படிக்கும்போது என் மனதில் விரிந்த காட்சிகள் எனது சொந்த கற்பனை சித்திரங்கள் என்பதனால் இருக்கலாம்.

{oshits} வாசகர்கள் இந்த சுஜாதாவின் நாவல் குறித்த எனது அனுபவத்தை படித்துள்ளனர்.