Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Click the image to read furtherஎனது வாசக நண்பர்கள் அனைவருக்கும் எனது மற்றும் குடும்பத்தினரின் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புது வருடம் உங்களுக்கு எல்லாவித சௌக்கியங்களையும், சௌபாக்கியங்களையும் அளிக்கட்டும் என்று கடவுளிடம் பிரார்த்தித்து கொள்கிறேன். கடந்த 2-3 வருடங்களாக நான் புத்தாண்டுக்கு "திரும்பி பார்க்கும்" பதிவுகள் எதுவும் போடவில்லை. காரணம் ஏக்கத்தோடு திரும்பி பார்க்கும் அளவுக்கு நிலைமை மோசமாக போனதில்லை. ஆனால் 2010-இல் எனக்கு ஏதோ குறையாகவே பட்டது. திரும்பி பார்த்தால் பல நல்ல நிகழ்வுகள் நடந்திருந்தன. நடந்த அத்தனை நல்ல நிகழ்ச்சிகளுக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது. எனினும் வாழ்க்கையில் ஒரு நிறைவே இல்லை என்று தோன்றியது.

நான் பெரிதும் எதிர்பார்த்து, ஆசையோடு செய்த இடமாற்றம் செம ஏமாற்றமாக 2010-ளில் முடிந்தது. சொல்லப்போனால் இந்த இடமாற்றத்தில் ஐ.டி துறையில் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் முதல் முறையாக அனுபவிக்க நேர்ந்தது. ஒன்று முழுவதுமான பகல் நேரத்தில் வேலை செய்யவேண்டும் அல்லது முழுவதுமான இரவு நேரத்தில் வேலை பார்க்கவேண்டும். ஆனால் இரண்டுக்கும் நடுவே UK ஷிப்ட்டில் வேலை செய்வது எவ்வளவு கஷ்டம் என்று புரிந்தது. கிட்டத்தட்ட எனது குடும்ப வாழ்க்கைக்கே உலை வைக்கும் அளவுக்கு போய்விட்டது. இதை எனது மேலாளரிடம் சொன்னபோது "IT-ல வேலை செய்யணும்னா இதுக்கு எல்லாம் பழகிக்கணும்" என்று பதில் கிடைத்தது. "ஐயா! நான் இல்லைன்னா வேற யார் வேணும்னாலும் அந்த வேலையை செய்யலாம், ஆனால் என் வாழ்க்கையை நான் தான் வாழனும். அதனால என்னை இந்த project-ல இருந்து கழற்றிவிட்டுட்டுங்க" என்று சொல்லியபோது ஏதோ ஒரு நிம்மதி. இந்த ரெண்டுங்கெட்டான் சமயத்தால வார இறுதிகளிலே பயணம் செய்யமுடியாமல், தளர்ச்சி காரணமாக பிடித்த வரைதல், படித்தல் போன்ற வேலைகளை செய்யமுடியாமல் வெறுமனே திரைப்படங்கள் பார்த்து நாட்களை வீணடித்தது என்னுடைய பதிவுகளிலேயே தெரிந்திருக்குமே!

இந்த வருடம் நான் மானாவாரிக்கு படங்கள் பார்த்தது தான் எனது பொழுதுபோக்கின் வரையறை. கணக்கு வழக்கில்லாமல் படங்கள் பார்த்ததில் எதை பார்த்தோம், எதை பார்க்கவில்லை என்று சமயத்தில் மறந்துபோய் விட்டது. முன்பெல்லாம் ஒரு படம் பார்த்தாலும் அதை ஆழமாக ஆராயும் அளவுக்கு பார்ப்பேன். ஆனால் இப்போது பார்த்த படத்தை பற்றி 4 வரிகளுக்கு மேல் எழுத வரமாட்டேன்கிறது. அதனால் இந்த வருஷம் படங்கள் பார்ப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். அளவாக பார்த்தாலும் ஆழமாக பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.

படம் பார்ப்பதை குறைத்துவிட்டு, மீண்டும் புத்தகம் படிப்பதை அதிகப்படுத்த வேண்டும். சமீபத்திய சென்னை பயணத்தின்போதும், சேலத்திலும் கொஞ்சம் ஜெயகாந்தனின் குறுநாவல்களை வாங்கினேன். அவற்றை எல்லாம் படித்து முடிக்கவேண்டும். ஒருவகையில் நல்ல புத்தகங்கள் படிக்கும்போது வாழ்க்கையில் ஒருவித சமன் நிலை ஏற்படுவதை கவனித்திருக்கிறேன். (இல்லை வாழ்க்கை சீராக போகும்போது தான் நிறைய படிக்க தோன்றுகிறதா?). எனவே இந்த வருடம் என் புத்தக அலமாரியில் கிடக்கும் படிக்காத புத்தகங்களை எல்லாம் முடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

கடந்த 3-4 வருடங்களாக எனது பதிவுகளில் என்னை சுற்றி நிகழும் சம்பவங்களை பற்றிய கருத்துக்கள், புத்தகங்கள் என சினிமா சாராத பதிவுகள் நிறைய இருக்கும். ஆனால் கடந்த வருடத்தில் இது போன்ற கருத்துப் பதிவுகள் மிக குறைந்த அளவே இருந்தது எனக்கு உறுத்தலாக இருந்தது. வாழ்க்கையில் ஒரு நிம்மதியே இல்லாத சமயத்தில் எனது கருத்துக்களை பதிவு செய்யவேண்டும் என்று தோன்றவே இல்லை. அப்படியே தோன்றினாலும் வார இறுதிகளில் ஏற்பட்ட அலுப்பும், அசதியின் காரணமாக பல முறை தோன்றியதை எல்லாம் எழுதாமல் விட்டிருக்கிறேன். இந்த வருடம் எனது வேலை மற்றும் சொந்த வாழ்க்கையை சமமாக சமன் செய்து நான் விரும்பிய வகையில் வாழ்க்கை பாதையை அமைத்து எனது கருத்துகளை பதிவு செய்யவேண்டும் என்பதை முதல் வேலையாக செய்யவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

வேலை வகையில் இந்த வருடம் சம்பளத்துக்கு முக்கியத்துவம் தராமல் நல்ல Implementation Project-களை தேடிப்பிடித்து வேலை செய்யவேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். இதனால் Freelancer-ராக மாறினாலும் பரவாயில்லை, ஆனால் எனது resume-வில் நல்ல வேலைகளை போட்டுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கி நிற்கிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல இப்போது செய்யும் வேலையால் பிற்காலத்தில் நல்ல Trainer-ராகவோ அல்லது Project Manager-ராகவோ செட்டில் ஆகமுடியும். அப்போது தான் நான் இன்னும் 12-17 வருடத்தில் IT-யீல் இருந்து விலகி எனது ஆர்வமான வரைதலையும், புகைப்படக்கலையையும் முழுநேர தொழிலாக எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு இப்போதே முடிந்த வரை பொருளாதார ரீதியாக நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக்கொள்ள இந்த வருடம் அமையவேண்டும் என்று முயற்சிக்கிறேன்.

இந்த வருடம் முடிந்தவரை குடும்பத்தோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும், கடந்த வருடம் செய்த தவறுகளை இந்த வருடம் தவிர்க்கவேண்டும் என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். முடிந்தவரை இவற்றை பின்பற்றுவேன் என்று நம்புகிறேன்.

a. இந்த வருடம் முதலில் பிரெஞ்சு கிளாசில் சேரவேண்டும்.

b. மீண்டும் ஏதாவது ஒரு பெயிண்டிங் workshop-க்கு போகவேண்டும். அது சென்னையில் ஆனாலும் சரி, ஆனால் ஏதாவது ஒரு கிளாசுக்கு போகவேண்டும்.

c. பொருளாதார ரீதியாக நலம் பெற நல்ல வெளிநாட்டு அஸ்ஸைன்மெண்டுகளுக்கு முயற்சிக்க வேண்டும்.

d. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு முறை தஞ்சாவூர் கோவிலுக்கு போய்விட்டு வரவேண்டும். கடந்த வருடம் 4-5 முறைகள் டிக்கெட் புக் செய்தும் போகமுடியவில்லை. அதனால் தஞ்சை பெருவுடையாரே, இந்த வருடம் என்னை உம்மிடம் வார உத்தரவு கொடுங்கள் கடவுளே!

O.K - இனி கடந்த வருடம் நடந்த நல்ல விஷயங்களுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லும் நேரம்.
1. பெங்களூருவில் புதிய வீட்டில் குடிபுகுந்ததற்கு முதலில் என் அம்மாவுக்கு தான் நன்றி. சமயத்தில் அம்மா பொருளாதார ரீதியாக செய்த உதவியால் தான் இது சாத்தியமானது.
2. வேலை நிமித்தமாக லண்டன் சென்றது ஒரு நல்ல அனுபவம். யூரோப் இதுவரை ஒரு கனவு பிரதேசமாகவே இருந்தது. இப்போது அதையும் கொஞ்சமாவது பார்த்தாச்சு.

3. புட்டுவின் மழலையை அனுபவிக்க முடிந்தது என் வாழ்க்கையின் பெரும்பாக்கியங்களில் ஒன்று. அவன் தவழ்ந்தது, நடக்க ஆரம்பித்தது என ஒவ்வொரு நிலையையும் உணர்ந்து அனுபவிக்க நேர்ந்தது உண்மையிலேயே அழகான தருணங்கள். வாழ்க்கையில் ஒரு பிடிப்பையும், குறிக்கோளையும் கொடுப்பதே குழந்தைகள் தான். சொல்லப்போனால் நாம் அவர்களுக்கு வாழ்க்கை கொடுப்பதில்லை, மாறாக அவர்கள் தான் நாம் வாழ ஒரு காரணத்தையும், வாழ்க்கையையும் கொடுக்கிறார்கள். எனவே புட்டுவின் முதலாம் ஆண்டு (2010) எனது வாழ்க்கையிலும் மிக அழகானது.

Aadhithya (a) Buttu

{oshits} வாசிப்புகள் & வாழ்த்துகள்!!!