Tamil
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Click the image to read further”மன்”னார், “மதன”கோபால், “அம்பு”ஜாக்‌ஷி ஆகியோரிடையே நிகழும் உணர்ச்சிகரமான கண்ணாமூச்சி ஆட்டம் தான் “மன்மதன் அம்பு”. படத்தின் பேர் தான் கிளுகிளுப்பாக உள்ளது ஆனால் (ஆச்சரியமாக) இந்த கமல் படத்தில் முத்தங்கள் இல்லை, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை... சொல்லப்போனால் நல்லதிரைக்கதையும் இல்லை. படத்தின் முதல் குழப்பம் - இதை உணர்ச்சிப்போராட்டமாக கொண்டுபோவதா இல்லை நகைச்சுவையாக கொண்டுபோவதா என்கிற தெளிவு இல்லாதது. இரண்டாவது குழப்பம் - கிட்டத்தட்ட “மின்சார கனவு” படத்தின் சாயல் எளிதில் முடிவை யூகிக்க வைப்பது. கமல் நல்ல நடிகர் என்பதில் ஐயமில்லை, ஆனால் திரைக்கதையாசிரியராக, (நிழல்) இயக்குநராக அவரது ரெண்டுங்கெட்டான் நிலையும் ஐயமில்லை. அதனால் “மன்மதன் அம்பு”வை பார்க்க உட்காரும்போதே சில இழுவைகளுக்கு மனதை தயார் படுத்திக்கொண்டே உட்கார்ந்தேன். எனினும் எதிர்பார்த்ததைவிட கூடுதல் இழுவை போட்டு கமல் தன்னை நிரூபித்துவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

நடிகை நிஷா (எ) அம்புஜாக்‌ஷிக்கும், தொழிலதிபர் மதனகோபாலுக்கும் இடையே நடக்கவிருந்த நிச்சயதார்த்தம் நடிகர் சூர்யாவால் சந்தேகத்தின் பெயரில் நின்றுபோய்விடுகிறது. புண்பட்ட மனதை ஆற்றிக்கொள்ள நிஷா தன் தோழியுடன் ஐரோப்பா சுற்றுலாவுக்கு சென்றுவிட, அவரை வேவு பார்க்க (பணமுடையில் உள்ள) மேஜர் மன்னாரை அனுப்புகிறார் மதனகோபால். ஒற்றனுக்கும் இரைக்கும் நாம் எதிர்பார்த்தபடியே காதல் வந்துவிடுகிறது. இதை “An affair to remember" போல உணர்ச்சிக்காவியமாக சொல்லியிருக்கலாம், இல்லையென்றால் முழுநீள நகைச்சுவையாக சொல்லியிருக்கலாம். ஆனால் “மன்மதன் அம்பு” முதல் பாதியில் அழகாக பயணித்து இரண்டாவது பாதியில் ‘U' turn எடுத்து “பஞ்சதந்திரம்”, “தெனாலி” பாதையில் பயணிக்க முற்பட்டு குட்டுபட்டிருக்கிறது.

எனக்கு தோன்றிய முதல் நல்ல அம்சம் - கமலின் narcissm levels-ல் கொஞ்சம் குறைவு தென்பட்டது. பொதுவாக கமல் எழுதும் படங்களில் 99% screen space-ஐ தனக்கு மட்டுமே ஒதுக்கிக்கொள்வார். அவ்வளவு narcissm, self obsession இருக்கும். (நகைச்சுவையாக சொல்லவேண்டுமென்றால் ‘ஹே ராம்’ படத்தில் ராணி முகர்ஜீ பலாத்காரம் செய்யப்படும்போது கூட தன்னையே காட்டிக்கொள்வார் கமல்... ஹா! ஹா! ஹா!). ஆனால் முதல் முறையாக இதில் மதனுக்கும், அம்புஜாக்‌ஷிக்குமான உறவுக்கு நிறைய space கொடுத்து கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் கழித்து நடிகர் கமல் கதைக்குள்ளே நுழைகிறார்.

Manmadhan Ambu“The matrimony was bad but alimony is too good" என்று சிலாகித்துக்கொள்ளும் சங்கீதாவின் கதாபாத்திரம் தமிழுக்கு புதுசு. சொல்லப்போனால் படத்தின் கதாநாயகி இவர் தானோ என்று அவ்வப்போது சந்தேகம் வருவதை தவிர்க்கமுடியவில்லை. அந்த அளவுக்கு livewire-ஆக சங்கீதா. சில சமயம் Over the top என்றபோதும், சங்கீதா தனக்கு கிடைத்த வாய்ப்பை கோட்டைவிடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டுவிட்டார் என்றே சொல்லவேண்டும். படத்துக்கு படம் ரொம்ப decent-ஆக வந்துபோய்க் கொண்டிருந்த மாதவனை படத்தில் பாதி நேரத்தில் ‘தண்ணி’யில் மிதக்க விட்டிருப்பதும் புதுசு தான். தன்னை வேவுபார்க்க வந்த கமலிடம் முதலில் குற்ற உணர்ச்சியுடன் பழகி பின் தன் மனதை பறிகொடுக்கும் (வேற வழி) திரிஷாவின் நடிப்பு (அல்லது lack of it?) கூட கொஞ்சம் புதுசு தான்.

சங்கீதாவின் மகனாக வரும் குட்டிப்பையன் செம ரகளை. “கொச்சு கொச்சு ஹோதா ஹை” என்று காமெடி செய்யும் மலையாள நடிகர்கள் - குஞ்சனும், மஞ்சு பிள்ளையும் நம்மை சிரிக்க வைப்பதில் வெற்றியடைகிறார்கள். ஊர்வசியும், ரமேஷ் அரவிந்தும் கமலுக்கு பிடித்த நடிகர்களுக்கு படத்தில் இடம் கொடுக்கவேண்டும் என்பதற்காக் உருவாக்கப்பட்ட ’செண்டிமெண்ட்’ கதாபாத்திரங்கள் போல ஒட்டாமல் தனித்து நிற்கிறார்கள்.

”நீலவானம்” கவிதையில் அந்த Reverse story telling technique நிச்சயம் இந்திய சினிமாவுக்கு புதுசு. அது "The Scientist"-ல் இருந்து சுட்டதாம் (உபயம்: என் தங்கை பிரியா). அந்த French நடிகை Catherine கொஞ்ச நேரமே வந்தாலும் அழகான கண்களால் நம் மனதை திருடிக்கொண்டு சென்றுவிடுகிறார். பொன்மாலை வெயிலில் நடுக்கடலில் Cruise-ன் shots, ஐரோப்பாவின் அழகிய நிலபரப்புகளை புதுமுக ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் இன்னும் அழகாக தன் Digital Red camera-வில் சுருட்டிக்கொண்டு வந்துள்ளார். Digital-ல் முறையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்று ஒரு இடத்தில் கூட தெரியவில்லை. அத்தனை துல்லியம்! இந்த படத்தில் இசைக்கு அவ்வளவு scope இல்லையென்று எனக்கு தோன்றியது.

மொத்தத்தில் ”மன்மதன் அம்பு” நன்றாக இருந்திருக்கலாம். மாறாக ஐரோப்பிய சுற்றுலா கழகத்துக்காக எடுக்கப்பட்ட வீடியோ போல இருந்ததை தவிர்த்திருக்கலாம். கமல் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக இதை கமல் ரசிகர்கள் ”ஆஹா! ஓஹோ!” என்று சிலாகிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விட்டால் கமல் தன் மலத்தை திரையில் காட்டினாலும் “அழகான பொன்னிறத்தில் வர்ணஜாலம் காட்டுகிறார்” என்று வாய்பிளக்கும் ”அறிவுஜீவி ரசிகர்கள்” என்ற போர்வையில் இருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளின் கூட்டத்தில் நான் சேர விரும்பவில்லை. மாறாக சராசரி ரசிகனாக ஒரு தூரத்தின் தள்ளி நின்று ரசிப்பதிலேயே சந்தோஷம். Better luck next time, கமல்ஹாசன்!!!

{oshits} வாசகர்கள் இந்த மன்மதன் வம்பை படித்து ரசித்துள்ளனர்!!!