Tamil
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Click the image to read furtherமணிரத்னத்தின் படங்கள் வெறும் படங்கள் அல்ல.... அவை ஒரு event by itself. ராவணன் படத்துக்கு எதிர்பார்ப்புகள் வேகமாக எகிறிக்கொண்டிருந்த சமயத்தில் அவரை வெறுக்கும் ரசிகர்கள் கூட “கிழிப்பத”ற்க்கேனும் படத்தை பார்க்கத் துடித்துக்கொண்டிருந்தார்கள். இந்நிலையில் வெளியான ராவண் / ராவணன் படத்துக்கு முதல் விமர்சனமான "SRK payroll”ராஜா சென் முதல் நடுநிலையான தரண் ஆதர்ஷ் வரை எல்லாருமே சொல்லி வைத்தது போல கிழித்தெடுக்க எனக்கு கொஞ்சம் ஆர்வக்குறைவு ஏற்பட்டது உண்மையே. ஆனால் இந்த ஞாயிற்றுக்கிழமை மிக மிக யதேச்சையாக என் அண்ணா குடும்பத்தினரோடு சேலம் கீதாலயாவில் பார்த்தபோது படம் “அசாதாரணமான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டதே தவிர அத்தனை மோசமான படம் அல்ல” என்று தோன்றியது. அழகான தருணங்கள், மிக திறமையான Technicians, பழமையை உடைக்க வாய்ப்பளிக்கும் அற்புதமான கதைக்களம் என எல்லாம் இருந்து மணிரத்னம் அசாதாரணமாக கோட்டை விட்டிருப்பது தான் பரிதாபம். இது என்னை ஏன் “ராவணன்” ஈர்த்தது / வெறுப்படித்தது என சொல்லும் பதிவு.


{tab=Page 1}

இது “ராமாயண”த்தின் அப்பட்டமான தழுவல் என்பதனால் எந்த ஒரு பெரிய “திருப்ப”ங்களுக்கு எதிர்பார்க்காமல் தியேட்டர் சீட்டில் செட்டில் ஆகும் நமக்கு இதன் ஆரம்ப காட்சியான “சீதாபஹரணம்” கொஞ்சம் இன்ப அதிர்ச்சியாக தான் உள்ளது. படத்தின் credits-க்கு முன்பே இந்த காட்சிகள் வந்து எந்த ஒரு தேவையற்ற வழவழ கொழகொழாக்கள் இல்லாமல் கதைக்குள்ளே நுழைந்துவிடுகிறோம். கதையின் மூல கதாபாத்திரங்கள் அத்தனையும் எவ்வித சினிமாத்தனமும் இல்லாமல் சடசடவென அறிமுகப்படுத்தப்படுவது படத்தின் “crisp" படத்தொகுப்பின் சாமர்த்தியம். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ”ஹனுமன்” கார்த்திக்கின் அறிமுகம். வயதானாலும் வசீகரம் குறையவில்லை என்று மனிதர் இன்னும் நிரூபித்திருக்கிறார். கொஞ்ச நேரத்துக்கேனும் “மௌன ராக”த்தில் காட்டிய அதே துறுதுறுப்பு - இதம். ஆனால் “ஹனுமன்” பாத்திரம் என்பதால் படம் முழுக்க கார்த்திக்கை குரங்கு போல குதித்துக்கொண்டும், குழறி குழறி பேசவைத்திருப்பதும் கொஞ்சம் கடுப்படிக்கிறது. “பொள்ளாச்சி” மொட்டப்பாறையில் பிருத்விராஜை இயல்பாக கதைக்குள் நுழைத்திருப்பதும், 28 என்கவுண்டர்கள் புரிந்த எஸ்.பி என்று வெறும் ஒரு வரி அறிமுகம் ஆறுதல்.

கேரளாவின் மூலாமட்டம் காடுகளின் குளிர்ச்சியையும், சாலக்குடியின் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியின் சாரலையும் கொஞ்ச நேரத்திலேயே தியேட்டரின் ஏ.சி குளிர்ச்சியில் உணர ஆரம்பித்துவிடுகிறோம். கிட்டத்தட்ட நாமே அந்த வனங்களின் இலைகளையும், பனியையும் தொட்டுக்கொண்டு இருப்பது போன்ற உணர்வு. மணிகண்டனின் கேமிராவின் சக்தி அது. மற்றொரு ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் பிற்பகுதியில் வந்திருந்தாலும் இருவரின் ஒளிப்பதிவிலும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் இருப்பது சிறப்பு. ராகினியை கடத்தும் போது ஒரு கழுகு வந்து அவர் முன்னால் அமரும்போது கேமிராவும் கழுகோடு பறந்து வந்து சரியாக கழுகின் விறிந்த இறக்கைகளிடையே மிரட்சியான ராகினியின் கண்களை இருத்தியபடி நிற்கும். இதுபோன்ற சிறு சிறு ஷாட்களிலும் ஓவியங்களை தீட்டியபடி படம் முழுக்க ஒரு visual fest-ஆகவே அளித்திருக்கின்றனர் இதன் தொழில்நுட்பக்குழு. அதே சமயம் அதுவே இந்த படத்துக்கு ஒரு பலவீனமாக அமைந்துவிட்டது என்பது எனது அபிப்பிராயம். பார்வையாளர்கள் காட்சியின் அழகில் பிரமித்து இருப்பதால் பல இடங்களில் மிக subtle-ஆக சொல்லப்பட்ட / கதாபாத்திரங்களின் முகபாவங்களை கவனிக்க மறந்துவிடுகின்றனர்.

Vikram, Aishwarya Rai in அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியின் மீதிருந்து ராகினி (அபத்தமான வசனம் பேசியபடி) குதித்து தன்னை மாய்த்துக்கொள்ள முயற்சிக்க, அந்த ஒரு கணத்தில் ராகினி மீது வீரா காதல் கொண்டு பதறியபடி பின்னாடியே குதிக்க, முதலில் நம்மை பிரமிக்க வைப்பது அதிரம்பள்ளியின் பிரம்மாண்டமும், மழைக்கால ஈர பாறைகளின் பளபளப்பும். இதை தாண்டி வீரைய்யனின் “காதல்” உடல் மொழியை சாதாரண ரசிகன் வேகமாக உணர்வது மிகவும் சந்தேகமே. இது போல பல இடங்கள்... முதல் முதலாக வீரைய்யன் ராகினியிடம் கொஞ்சம் வெளிப்படையாகவே தன் காதலை சொல்லும் இடம் “குருவம்மாவா நீங்க எங்க கூடவே இருந்துவிடுங்களேன்..” என்று கேட்கும் இடம். அது போல சக்கரை “14 மணி நேரத்தில் கொன்று விடுவதாக கடத்தி வந்துவிட்டு 14 நாட்களானாலும் ராகினியை கொல்லாமல் விட்டிருப்பதே வீராவுக்கு ராகினியின் மேலுள்ள ஆசையை காட்டுகிறது. 14 ஆண்டுகளானாலும் அவளை கொல்ல மாட்டான் அதனால் அனுப்பிவிடலாம்” என்று வசனமும், மேலும் க்ளைமேக்ஸில் ராகினியும் வீரையன் மீதான தன் காதலை சொல்ல “பக் பக்..” என்ற உளரலை உபயோகப்படுத்துவதும் ஜில்லென்ற இனிமை.

இது விக்ரமின் மிகச்சிறந்த கதாபாத்திரம் இல்லையென்றாலும் மனிதர் அழகாக score செய்கிறார். அந்த முகத்தில் எத்தனை உணர்ச்சிகளும் சேர்ந்து கலவையாக தாண்டவமாடுவது அழகு. கொல்வதற்காக கொண்டுவரப்பட்ட ராகினி மீது ஏற்படும் காதலையும், வெண்ணிலாவின் மரணத்தை நினைத்து உருகுவதாகட்டும், இந்த இரண்டு உணர்ச்சிகளும் போட்டு குழப்பி அவ்வப்போது வெறித்தனமாக வெளியேற்றிக்கொள்வதாகட்டும், அந்த கண்கள் பேசாமலேயே ஆயிரம் வார்த்தைகளை பேசுவது class.

படம் முழுக்க வீரைய்யனும், ராகினியுமே வந்துக்கொண்டிருப்பது கொஞ்சம் அலுப்பாக இருந்ததனாலோ என்னவோ வெண்ணிலாவாக பிரியாமணி கொஞ்ச நேரமே வந்தாலும் படம் பார்ப்பவர்களின் மனதையும் பரிதாபத்தையும் அள்ளிக்கொள்கிறார். நல்ல நடிகருக்கு தம்மை நிரூபித்துக்கொள்ள footage நீளம் அவசியமில்லை என்பதற்கு உதாரணம் இந்த வெண்ணிலா கதாபாத்திரம். Hats off to Priyamani. எனினும் இவர் போன்ற திறமையான நடிகர்களை (உ.தாரனம் - “குரு”வில் வித்யா பாலன், “இருவர்”இல் ரேவதி என பலர் )மணிரத்னம் சிறிய கதாபாத்திரங்கள் கொடுத்து வீணடிப்பது எரிச்சலாக உள்ளது. அது போல பிரபுவுக்கு பெரிய வேலை இல்லையென்றாலும் அந்த மை பூசிய கண்களோடு கொஞ்சம் போல நமது முகத்தில் புன்னகையை கொண்டு வருகிறார்.

ராகினியின் கல்யாண வாழ்க்கையை பற்றி அதிகம் விவாதிக்காமல் விட்டிருப்பது வீரைய்யன், ராகினியிடையே பூக்கும் காதலை நம்மால் வெறுக்கவோ, ஆட்சேபிக்கவோ செய்யாமல் இருக்க வழிசெய்கிறது. தேவ் நல்ல கணவனா இல்லை கடமை உணர்ச்சி மிக்க காவல்காரனா என்பதை அப்பட்டமாக சொல்லாமல் மெதுவாக establish செய்திருப்பது நல்ல யுக்தி. தன் மனைவியை விடுவிக்க சமரசம் பேச வரும் சக்கரையை, பிணைக்கைதியாக உள்ள ராகினிக்கு ஏற்படக்கூடிய பின்விளைவுகளை, பற்றி யோசிக்காமல் “போட்டுத்தள்ளு”வதிலும் சரி, கடைசியில் தந்திரமாக ராகினியை தூண்டிவிட்டு வீராவின் இருப்பிடத்தை அடைவதாகட்டும், தேவுக்கு ராகினியின் மீதான காதலை விட வீராவை பழிவாங்குவதில் உள்ள வெறி மட்டுமே முன்னிற்கிறது.

மும்பை அருகில் உள்ள மால்சேஜ் மலைப்பகுதிகளில் படமாக்கப்பட்ட அந்த கிளைமேக்ஸ் பாலம் சண்டை.. சமீபத்திய இந்திய சினிமா இதுவரை காணாத பிரம்மாண்டம். பாலத்தை உருவாக்கிய சமீர் சந்தாவையும், சண்டை பயிற்சி கொடுத்த ஷாம் கௌஷலையும், படமாக்கிய சந்தோஷ் சிவனையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

திரையில் வரும் “காட்டுச்சிறுக்கி” பாடல் சி.டி-யில் உள்ள பதிப்பிலிருந்து மாறுபட்டிருக்கிறது. சொல்லப்போனால் எனக்கு திரையில் வந்த பதிப்பு தான் பிடித்திருந்தது. பாடல் காட்சிகள் எல்லாம் படத்தில் 1-2 நிமிடங்கள் தான் வருகிறது. நறுக்கென்று முடித்திருப்பது நல்லது.

{tab=Page 2}

இனி பலவீனங்கள்... சுகாசினியின் வசனங்கள் இந்த பலவீன வரிசையை வழிநடத்துகிறது. உயிர் பயத்தில் இருக்கும்போது கூட “இலக்கியத்தனமான வசனங்கள்” பேசுவதும், தேவையில்லாமல் திருநெல்வேலி மொழிவழக்கை செருகி உயிரை எடுத்திருக்கிறார். ரூ. 110 கோடிக்கு படத்தை விற்ற மணிரத்னம் சில ஆயிரங்களை செலவழித்து ஒரு நல்ல வசனகர்த்தாவை வேலைக்கு அமர்த்தியிருக்கலாம். திரையில் வீராவும் ராகினியும் உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது தியேட்டரில் ஒரே சிரிப்பலைகள்.

அடுத்த பலவீனம் - ஐஸ்வர்யா ராய் பச்சன். ஒரு கனமான author backed role-ல் தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் நடித்திருக்கிறார் என்ற போதும் ஏதோ ஒருவித Plastic-த்தனம் தான் முன்னிற்கிறது. அதீத அழகே ஐஸ்ஸின் பலவீனம். என்ன தான் கஷ்டப்பட்டு நடித்தாலும் முகபாவங்களையும் மீறி அந்த அழகு தூக்கலாக நிற்பதால் அவரை சாதாரண பெண்ணாக ஏற்றுக்கொள்வது மிகவும் கஷ்டம் தான். ராகினியாக ஒரு இயல்பான அழகு உறுத்தாத நடிகையை (ஏன்.. பிரியாமணியையே கூட) போட்டிருக்கலாம். மேலும் கதாநாயகி ஐஸ் என்ற உடன் தெற்கத்திய ஒளிப்பதிவாளர்கள் awe struck ஆகி மிக அழகாக காட்டிவிடுவதும் இன்னொரு காரணம். அதனால் ஐஸ் இந்த படத்துக்கு பலம் என்பதைவிட பலவீனமாகவே கருதப்படுகிறார்.

என்ன தான் இந்த படம் “ராமாயண”த்தை adapt செய்ததாகவே இருக்கட்டும், அதற்காக ராமாயணத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் அப்பட்டமாக நவீனப்படுத்தியிருப்பது மணிரத்னத்துக்கு கற்பனை வறட்சியோ என்று எரிச்சலூட்டுகிறது. அதனால் தானோ என்னவோ முதலில் “கதை” யாருடையது என்று போடாமல் விட்டிருப்பது நல்லது.

Vikram in எல்லாவற்றையும் விட என்னை அதிகம் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியது இதன் கிளைமேக்ஸ். தன் மீது அன்பு இல்லாத கணவனை விட்டுவிட்டு வீராவிடம் வரும் ராகினி “பக் பக்” என்று உளறி தன் காதலை சொல்லும் போது வீரா கொல்லப்படுவதை வெறுமனே பார்த்துக்கொண்டு அவன் கையை பற்றிக்கொள்ள முயல்வதாக, ஆனால் வீரா மலை மீதிலிருந்து விழுந்துவிடுவதாக படம் முடிந்துவிடுகிறது. வீராவின் காதலை ஏற்றுக்கொள்ளும் ராகினியும் வீராவோடு சேர்ந்து இறந்துவிடுவதாக முடித்திருந்தால் ஒரு poetic justice-ஆக இருந்திருக்கும். மேலும் தேவ் மீது இனிமேல் அன்பு இல்லை என்கிற போது அவனோடு ராகினியின் மிச்ச வாழ்க்கை எப்படி சுகித்துருக்கும்? சந்தேகப்படும் ராமனை பொறுத்துக்கொண்டு சீதை அடக்கப்பட்டு இருக்கவேண்டும் என்கிற ராமாயணத்தின் “பிற்போக்கான” முடிவை மாற்ற, ராவணனின் காதலை சீதை அங்கீகரித்து, ராம்னின் male chauvanism-த்தை சவால் விட தனக்கு கிடைத்திருந்த அற்புதமான தருணத்தை மணிரத்னம் தொலைத்திருப்பது அவருடைய துணிச்சலின்மையையே காட்டுகிறது. எப்போதும் மணி plays safe. ஆனால் இம்முறை அது வேலைக்கு ஆகவில்லை.

இந்த படம் குறித்த, படத்துக்கு துளியும் சம்பந்தமில்லாத, பல நெகட்டிவான விமர்சனங்களை படித்தேன். Nativity இல்லை, காட்டுவாசிகளை பற்றி தரக்குறைவாக சித்தரித்திருந்தார் என்று ஒரு குறை இருந்தது. மணிரத்னத்தின் ”Dil Se..”விலும் இது போன்ற விமர்சனம் வந்தது (மணீஷா கொய்ராலா எந்த தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்று சொல்லப்படவில்லை). ”Dil Se.." & ”ராவணன்” இரண்டும் Documentry அல்ல. அதன் கதாபாத்திரங்களோடு நாம் பயணிக்க நேர்ந்தால் நமக்கு அவர்களுடைய வலியும் இன்பமும் புரியும். ”Dil Se..” ஒரு மனித வெடிகுண்டான மேகனாவின் வாழ்க்கையின் கடைசி தருணங்களில் காதல் வரும்போது ஏற்படும் கடமைக்கும், காதலுக்குமான உணர்ச்சிப்போராட்டம். ராவணனும் கிட்டத்தட்ட அதே நிலைமை தான். நா னும் 'Dil Se..."யை முதல் நாள் பார்த்துவிட்டு ”தீவிரவாதத்தை வைத்து சம்பாதிக்க மணிரத்னம் செய்த குப்பை” என்று படுகேவலமாக பேசினேன். ஆனால் அது "மனித வெடிகுண்டு” பெண்ணின் காதல் போராட்டம் என்றும், தீவிரவாதம் வெறும் பின்புலமே என்று உணர்ந்தபோது "Dil Se..."வை புதிய கண்ணோட்டத்தில் பார்த்து, மணீஷாவின் நுண்ணிய உணர்ச்சி வெளிப்பாடுகளில் பிரமித்துப்போனேன். அதனால் தான் என்னுடைய DVD Library-ல் “Dil Se.."வும் உள்ளது.

பழிவாங்க கடத்தி வந்தவனுக்கு எப்படி காதல் வரும்? அவளால் தன் தம்பி, இனத்து மக்கள் எல்லாம் இறந்த போதும் காதல் பித்து பிடித்தவன் என்ன கதாநாயகன்? என்றெல்லாம் படித்திருக்கிறேன். மனிதர்கள் எல்லாம் கறுப்பு வெள்ளையாக தான் இருக்கவேண்டும் என்பது கட்டாயம் அல்ல. All is fair in love. இது என்னுடைய சொந்த அனுபவம். நமக்கு ஒருத்தரை பிடித்துப்போக காரணம் தேவையில்லை. அப்படி unconditional-ஆக பிடித்துவிட்டால் rationalise / logical reasoning பண்ண தெரியாது. அதனால் “ராவணன்” வீராவும், “Dil Se.." அமன் வர்மாவும், மேகனாவும் எனக்கு சிறந்த காதலர்களாக தெரிகிறார்கள். ஒரு முறை நடிகர் கமல்ஹாசனின் பேட்டியில் “ராமனை விட சீதையை ஆழமாக காதலித்தது ராவணன் தான், அதனால் அவனுடைய காதலை மிகவும் மதிக்கிறேன்” என்று சொல்லியிருந்தார். 100% உண்மை.

“ராவணன்” தோல்வியடைந்ததும் எனது Twitter-ல் “இது மணிரத்னத்தின் அடுத்த ‘திருடா திருடா’வா அல்லது “Dil se.." வா என்று கேட்டிருந்தேன். இரண்டுமே படுதோல்விப் படங்கள் என்றபோதும் படு காரசாரமாக விமர்சிக்கப்பட்ட "Dil Se.." காலப்போக்கில் ஒரு மரியாதைக்குரிய இடத்தை அடைந்தது. குறைகள் உள்ளபோதும் “ராவணன்” கூட அந்த மரியாதையை பெறும் என்று எதிர்பார்க்கிறேன்.

பின்குறிப்பு: நான் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீசின் payroll-ல் இல்லை. மணிரத்னத்துக்கு என்னை யாரென்று தெரியாது!!!

{/tabs}