Leisure
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
Click the image to read furtherவிதி வலியது என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். சேலம் பெண்ணை கல்யாணம் செய்துகொள்வதற்கு பதிலாக காலத்துக்கும் “கன்னி”யாகவே இருப்பேன் என்று வீரவசனம் பேசிய நான் கடந்த இரு மாதங்களாக வார இறுதிகளில் தவறாமல் சேலத்துக்கு போய்வந்துக் கொண்டிருக்கிறேன். எல்லாம் புட்டுவின் கைங்கரியம் தான். எனினும் இந்த பதிவு அவற்றை குறித்து அல்ல. பொதுவான வார இறுதி பயணத்தை குறித்து தான். சனிக்கிழமை காலையில் பெல்லந்தூர் - சேலம் ஃபாஸ்ட் பேசஞ்சரில் தான் எங்கள் வார இறுதி பயணம் தொடங்கும். சில நாட்களுக்கு பிறகு பஸ்ஸில் போகலாமா என்று அகிலா கேட்டாலும் நான் மறுத்துவிடுவதற்கு காரணம் - தொப்பூர்.

 

தொப்பூரில் கிடைக்கும் நுங்குக்காகவே நான் தாமதமானாலும் பரவாயில்லை என்று சனிக்கிழமை காலை ரயிலுக்கு கிளம்பிக்கொண்டிருந்தேன். வயிற்று வலி வந்தாலும் பரவாயில்லை என்று 2-3 பாக்கெட்டுகள் தின்று எனது நுங்கு பேராசையை தீர்த்துக்கொண்டிருந்தேன். இரு வாரங்களுக்கு முன்பு Season முடிந்து நுங்கு வரத்து நின்றபோது கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது. எனது வாழ்க்கையில் இந்த கோடையில் தான் அதிக நுங்குகள் தின்று குவித்தேன். ஒரு சனிக்கிழமை, தொப்பூர் ரயில் நிலையம்.... “ஏங்க, அடுத்த வாரம் நாம மேட்டூர்ல அக்கா வீட்டுக்கு போயிட்டு வரலாம்” - இது அகிலா. “இன்னொரு சமயம் சாவகாசமா தங்குறாப்புல போகலாமே. நாம சேலம் போகவே மதியானம் ஆயிடுது. ஆதியை போய் தூக்கிகிட்டு மேட்டுர் போயிட்டு, திரும்ப வரும்போது விட்டுட்டு பெங்களூர் கிளம்பறதுக்குள்ள அசதியில உடம்பு அழண்று போயிடும்” - இது கொஞ்சம் பரிதாபமாக நான். “அவங்களும் நமக்கு கல்யாணம் ஆன நாள்ல இருந்து கூப்பிட்டுட்டு இருக்காங்க. எங்க பக்கம் இன்னும் யார் வீட்டுக்கும் போகலை” - கொஞ்சம் வேகமாக அகிலா. இது பெரிய எங்க-உங்க சண்டையாயிடப்போகுது என்று பயந்து அடுத்தவாரம் மேட்டூர் போவது உறுதிசெய்யப்பட்டது.

நான் சேலத்தில் 4 வருடங்கள் படித்திருந்த போதும், அவ்வப்போது சேலம் வந்து சென்றுக்கொண்டிருந்த போதும் ஏனோ எனக்கு மேட்டூர் பக்கம் எட்டிப்பார்க்க வேண்டும் என்று தோன்றியதே இல்லை. அகிலாவின் அக்கா வீட்டுக்கு கல்யாணம் ஆன புதிதில் போகலாம் என்று டிக்கெட் புக் செய்த வாரம் அவர்கள் பாட்டி தவறியதில் அந்த பயணம் தடைபட்டது. பிறகு நான் துபாய் போய்விட்டு திரும்புகையில் அகிலா கர்ப்பிணியாக இருந்ததில் பயணம் செய்ய முடியாமல் போனது. ஆதி பிறந்து கொஞ்சம் வளரும் வரையில் பயணம் என்கிற பேச்சுக்கே இடமில்லாமல், இதற்கு மேல் பொறுக்க முடியாது என்று அகிலா முடிவெடுத்து இந்த குறும்பயணம் ஒரு சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு மேட்டூர் நோக்கி நிகழ்ந்தது.

ஓமலூர் - மேச்சேரி சாலையில் முதல் முதலாக அன்று தான் பயணிக்கிறேன். வழக்கமான சேலத்தின் வறண்ட அல்லது கரிசல் பூமி.. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியின் Landscape-க்கும் ஒரு தனி முகம் உண்டு. கொஞ்சம் அதிகமாக பயணம் செய்பவர்களுக்கு அது புரியும். எல்லா இடத்திலேயும் அதே மண், குளம், மலை, மரம் தானே இருக்கு, இதில் என்ன “புதிய முகம்” இருக்கப்போகிறது என்று கேட்பவர்களுக்கு “எல்லா முகங்களிலேயும் அதே கண், மூக்கு, வாய் தான் இருக்கிறது எனினும் முகங்கள் எப்படி வேறுபடுகின்றது?” என்பது எனது பதிலாக இருக்கும். அதனாலேயே படங்களோ நாடகங்களோ பார்த்தவுடன் சொல்லிவிடுவேன் - இது பொள்ளாச்சி / நாகர்கோவில் / நெல்லை / உடுமலை பக்கம் என்று. இனி மேட்டூர் பக்கம் ஏதாவது காட்சிகள் வந்தால் கண்டுபிடித்து விடலாம்.

1:15 மணி நேர பயணத்துக்கு பிறகு பஸ் மேட்டூர் அணையின் ஆரம்பத்துக்கு வந்தது. தண்ணீர் மட்டம் குறைவாக மேட்டூர் அணை கொஞ்சம் இளைத்த சிங்கம் போல இருந்தது. அணையை கடக்கும்போது பின் சீட்டில் ஆள் இல்லாததால் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து முதல் முறை பயணம் செய்யும் குழந்தை போல ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருந்தேன். உடன் வந்த அகிலாவின் தங்கை “மாமா, இது Lower மேட்டூர். இப்போ பஸ் upper மேட்டூருக்கு போகிறது” என்று குறிப்பு கொடுத்துக்கொண்டு வந்தாள். பஸ் மேலே ஏறி ஓர் வளைவில் திரும்ப, அந்த இடத்தில் மொத்த மேட்டூரும், காவிரியோடு இழைந்து அழகான காட்சியாக ஒரு மெல்லிய மழைத்தூறலோடு விரிய அந்த ஒரு நொடியில் மேட்டூரை பிடித்துப்போனது. பொதுவாக எந்த இடங்களுக்கு நான் முதல் முறை போகும்போது மழை / தூறலோடு என்னை வரவேற்கிறதோ அந்த இடம் எனக்கு பிரியமானதாக மாறிவிடும் - திருமூர்த்தி மலை, தஞ்சை, நாகர்கோவில் எல்லாமே எனக்கு ஒரு மழை நாளில் அறிமுகமானவை தான்.

அகிலாவின் அக்கா வீட்டில் நாங்கள் நல்லபடியாக வரவேற்கப்பட்டோம். சாம்பிரதாயமான விசாரிப்புகள், குசலங்கல் எல்லாம் முடிந்தபின்பு இரவு உணவு பரிமாறப்பட்டது. என் சகலை அதாவது அகிலாவின் அக்கா கணவர் அமிர்தராஜ் மேட்டூரில் CSC கிளையையும், அதை ஒட்டி ஒரு Stationary கடையையும் நடத்தி வருவதால் கடைகளை அடைத்த பிறகு தான் நிதானமாக பேச அவர்களுக்கு சமயம் கிடைத்தது. இரவு உணவு முடித்தபின்பு கிட்டத்தட்ட 11:00 மணிக்கு நாங்கள் வெளியே கிளம்பினோம். மழை தூறிக்கொண்டிருந்ததால் சிலுசிலுவென மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது.

நாங்கள் கிளம்பியது “சதுரங்காடி”, ஆங்கிலத்தில் Square Market எனப்படும் வணிகப்பகுதியில் இருந்து. ஆங்கிலேயர்கள் காலத்தில் அமைக்கப்பட்டு, வணிகர்களுக்கு ஒதுக்கப்பட்டதாம். ஒரு சதுரமாக அமைக்கப்பட்டு, கிட்டத்தட்ட பெரிய கடைகள் எல்லாம அந்த இடத்தில் தான் உள்ளன. அதை ஒட்டி செல்லும் இரு தெருக்களிலும் கடைகள் உள்ளனவாம். அது தான் மேட்டூரின் வணிக மையம்.

பின்னர் எங்களை அமிர்தராஜ் மேட்டூரின் “Jumping Bridge" எனப்படும் பாலத்தின் மேலே சென்று வண்டியை நிறுத்தினார். அகிலாவின் அக்கா லாவண்யா அந்த பாலத்தை பற்றி குறிப்புகளை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த பாலத்தின் மீது எந்த ஒரு கணரக வாகனம் சென்றாலும் பாலத்தில் அதன் அதிர்வு தெரியும். நாங்கள் நின்ற கொஞ்ச நேரத்தில் ஒரு லாரி எங்களை கடந்து செல்ல, எங்கள் வண்டி மேலும் கீழுமாக அதிர்வது நன்றாக தெரிந்தது. இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது என்று சொன்னார். “என்னங்க... இது அவ்ளோ பழைய பாலமா? அதனால தான் ஆடுதோ” என்று கொஞ்சம் திகிலாகவே கேட்டேன். ”இல்லை... இது அப்படி தான் design செய்யப்பட்டது” என்று சொன்னார்.

பாலத்திலிருந்து பார்க்கையில் நள்ளிரவில் சோடியம் விளக்கு வெளிச்சத்தில் மின் நிலையம் மிக அழகாக ஜொலித்துக்கொண்டிருந்தது. இரண்டாவது Production Unit போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்று உபரி தகவலையும் அமிர்தராஜ் சொன்னார். பாலத்துக்கு கீழே மெல்லிய சலசலப்போடு ஓடும் காவிரி, அழகான வெளிச்சத்தில் கட்டிடங்கள், குளிர்ந்த காற்று... அப்படியே அங்கேயே இறங்கி நின்றுக்கொள்ளலாமா என்று என் மனம் கொஞ்சம் சலனப்படட்து உண்மை.

பின்னர் முனியப்பன் கோவில் பற்றி சொன்னார். மேட்டூர் அணை உண்டாக்கும் போது அங்கு இருந்த முனியப்பன் கோவில் தண்ணீரில் மூழ்கிவிட்டதாம். கட்டிட வேலை நடைப்பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் அணை இரு முறை தகர்ந்து விட்டதாம். அப்போது அங்கு வேலை செய்த உள்ளூர் ஆட்கள் அதை வடிவமைத்த கலோ. எல்லீஸ் என்பவரிடம் “இங்கு உள்ள முனியப்பனை நம்பி பிரார்த்தனை செய்துக்கொண்டு வேலையை மீண்டும் தொடங்குங்கள்” என்று சொல்ல, அதை ஏற்று முனியப்பனின் அனுக்கிரகம் பெற்று வேலையை ஆரம்பித்து வெற்றிகரமாக முடித்தார்களாம். முனியப்பன் அந்த அணையை பாதுகாத்துக் கொண்டிருப்பதால் தான் ஒரு முறை இடி விழுந்தபோது பாலத்துக்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லை என்று சொன்னார். அணையில் நீர் மட்டம் மிகவும் குறையும் சமயங்களில் முனியப்பன் கோவில் தெரியுமாம். பின்னொரு நாள் போய்க்கொள்ளலாம் என்று முடிவுடன் அடுத்த இடத்துக்கு போனோம்.

Mettur Damஅடுத்து நாங்கள் சென்றது அணைக்கட்டு பூங்காவுக்கு. அந்த இடத்திலிருந்து பார்க்கும்போது தான் அணைக்கட்டின் பிரம்மாண்டம் தெரிந்தது. அந்த பூங்காவுக்கு போகும்போது Cooling Towers-ஐ கடந்து போக நேர்ந்தது. சில்லென்று மெல்லிய நீர் முத்துக்கள் நம் மீது Talcum Powder போல ஒட்டுவதை அனுபவிப்பது தனி அனுபவம். அந்த சாலையில் தொடர்ந்து சென்றால் மாதேஸ்வரன் மலை, அதை கடந்து மைசூர் போய்விடலாம் என்ற உபரி தகவலையும் தந்தார் அமிர்தராஜ்.

அந்த நள்ளிரவில் நாங்கள் அடுத்து சென்றது காவேரி கிராஸ் என்ற இடத்துக்கு. அது “கோடம்பாக்கம்” என்ற படத்தில் வரும் “ரகசியமானது காதல்” என்ற பாடல் காட்சியில் வந்திருக்கிறது. நான் இத்தனை நாட்களாக அது பொள்ளாச்சியில் உள்ளது என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். அந்த இடத்தில் கொஞ்சம் நேரம் செலவழிக்கவேண்டும் என்று ஆசை தான். என்னை போன்ற Hydrophiles - நீர் விரும்பிகளுக்கு அந்த இடம் மிகவும் பிடிக்கும். அமைதியான கால்வாயில் நீரின் சலசலப்பு மட்டும், தனிமை.... நினைக்கும் போதே ஆனந்தமாக உள்லது. ஆனால் நள்ளிரவு, மேலும் அந்த இடத்தில் இரவில் நடக்கக்கூடாது என்ற கட்டுப்பாடும் இருப்பதால் அடுத்தமுறை வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டாயிற்று.

அப்படியே ஒரு நகர்வலம் வந்தோம். மேட்டூரின் அரசாங்க அலுவலகங்கள், ”குஷ்பு” கோர்ட் ஆகிய இடங்களை காட்டினார்கள் அமிர்தராஜ் தம்பதியினர். இந்த நல்ல குளிர்ந்த காற்றில் ஆதி நன்றாக சொகுசாக தூங்கிக்கொண்டு வந்தான். அவர்கள் குழந்தை ஹர்ஷிதாவும் பாதி தூரத்தில் எல்லாம் தூங்க ஆரம்பித்துவிட்டாள். வீட்டுக்கு வந்து இறங்கியதுமே இரண்டு வாண்டுகளும் விழித்துக்கொண்டு 2 மணி வரைக்கும் தூங்காமல் அதகளம் பண்ணிக்கொண்டு இருந்தது தனி கதை.

அடுத்த நாள் 11:00 மணி வாக்கில் அணைக்கட்டில் உள்ள முனியப்பன் கோவில் (முன்பு சொன்ன கோவில் அல்ல) போய்விட்டு வரலாம் என்று முடிவு செய்து நான், அகிலா, அமிர்தராஜ், குழந்தைகள் ஆதித்யா & ஹர்ஷிதா ஆகியோர் கிளம்பினோம். வழியில் அணையை கட்டிய கலோ. எல்லீஸின் சிலையை பார்த்துவிட்டு அணையை நோக்கி பயணித்தோம். ஆனால் அணைக்கட்டில் வண்டியை நிறுத்திவிட்டு கோவிலுக்கு போனால் பயங்கர கூட்டம். முனியப்பன் கோவிலில் நிறைய பேர் பொங்கல் வைத்துக்கொண்டும், சமைத்துக்கொண்டும் ஒரே புகை மண்டலமாக இருந்தது. குழந்தைகளுக்கு இந்த சூழல் ஒத்துக்கொள்ளாது என்று முடிவு செய்து பின்னொரு நாளில் வந்து தரிசித்துக்கொள்ளலாம் என்று திரும்பி வந்துவிட்டோம்.

அணைக்கட்டுக்கு அருகில் நிறைய மீன் கடைகள். சுடச்சுட பொறித்துக் கொடுத்து விற்பனை செய்துக்கொண்டிருந்தார்கள். சுற்றுலாவுக்கு வருபவர்கள் அணைக்கட்டில் குளித்துவிட்டு, இந்த மீன்களை வாங்கி சாப்பிட்டு பொழுதுபோக்குவார்களாம். நாங்கள் சென்றது மே மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பயங்கர கூட்டம். அதனால் அங்கும் அடுத்த முறை வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று வந்துவிட்டோம். மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு குட்டி தூக்கம் போட்டுவிட்டு சேலத்துக்கு கிளம்பியாயிற்று.

எல்லா இடங்களுக்கும் அடுத்த முறை போய்க்கொள்ளலாம் என்று வந்துவிட்டதால் இந்த முதல் வரவு ஒரு முன்னோட்ட வரவு போல ஆகிவிட்டது. மேலும் இந்த சமயத்தில் மேட்டூர் ப்யங்கர சூடாக இருக்குமாம். அதனால் அடுத்த முறை எப்போது காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என்று செய்தி வருகிறதோ அந்த வார இறுதியில் மேட்டூருக்கு மீண்டும் பயணிக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அனேகமாக ஆகஸ்ட் மாதத்தில் நடக்கலாம் என்று யூகிக்கிறேன்...