Miscellaneous
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Kurudhippunalஇது இந்திரா பார்த்தசாரதி எழுதி சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவல். நடிகர் கமல்ஹாசன் கோவிந்த் நிஹாலனியின் ‘துரோஹ்கால்’ என்ர இந்திப்படத்தை தமிழில் “துரோகி” என்ற பெயரில் ரீமேக் செய்தபோது ரசிகர்கள் ஆட்சேபித்ததால் அதன் தலைப்பை“குருதிப்புனல்” என்று மாற்றிய போது தான் அந்த பெயரில் ஒரு புகழ் பெற்ற நாவல் இருப்பதை அறிந்துக்கொண்டேன். என்றாவது ஒரு நாள் அந்த நாவலை படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை இன்றைய ரயில் பயணத்தில் தான் நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது. நம்புங்கள்... படத்தை (கதை வேறானாலும்) போல நாவலும் பரபரப்பாக இருந்தது. தஞ்சை கீழ்வெண்மணியில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புணையப்பெற்ற இந்த கதை படிப்பவர்களின் மனதை உலுக்கிவிடும். அது என்ன கீழ்வெண்மணி சம்பவம்? Google-ல் தேடிக்கண்டு பிடிக்கும் பொறுப்பை உங்களுக்கு விட்டுவிடுகிறேன். மேலும் உங்களில் எத்தனை பேருக்கு - குருதிப்புனல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியும்?


தில்லியிலிருந்து சிவா தன் நண்பனான கோபாலை தேடிக்கொண்டு திருவாரூருக்கு அருகே உள்ள பெயர் வெளியிடப்படாத கிராமத்துக்கு வருவதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. சோஷியாலஜியில் டாகட்ரேட் பட்டம் பெற்ற கோபால் அந்த கிராமத்துக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இரண்டு வருடங்களாக வேலை எதுவும் செய்யாமல் இருப்பதால் ”காம்ரேட்” வாத்தியார் ராமய்யாவுக்கு அவன் மீது சந்தேகம் - கம்யூனிஸத்தை உடைக்க அமெரிக்க அரசிடம் வேலை பார்க்கும் உளவாளியோ என்று. பின்னர் நம்பிக்கை வந்தபிறகு அவனையும் தன்னுடன் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்த்துக்கொள்கிறார். நில உச்சவரம்பு சட்டத்தை சாமர்த்தியமாக ஏமாற்றி ஊரை நாட்டாமை செய்யும் கண்ணையா நாயுடுவின் அராஜகத்தை கோபால் எதிர்க்கும்படி சூழ்நிலைகள் அமைய, இயல்பாகவே போராளி ஆகிறான் கோபால். நண்பனை காண வந்த இடத்தில் அவனுக்கு துணை நிற்க வேண்டி சிவாவும் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தலைவன் ஆகிறான். மெல்ல மெல்ல கண்ணைய்யா நாயுடுவுக்கும், ஏழை மக்களின் சார்பாக கோபாலுக்கு நடக்கும் மறைமுக யுத்தம் பகிரங்க யுத்தமாக மாற, ஒருவரை ஒருவர் வீழ்த்த நகர்த்தும் காய்களும், வகுக்கும் வியூகங்களும் மீதிக்கதை.

படித்த இரு இளைஞர்கள் இந்த சுழல் வெள்ளத்தில் தங்கள் சுய விருப்பமின்றி தானாக இழுக்கப்படுவதை அழகாக சொல்லியிருக்கிறார் இந்திரா பார்த்தசாரதி. நம் நாட்டில் இது போன்ற கொடுமைகள் காலம் காலமாக நடைபெற்று வருவதற்கான காரணத்தை, அது குறித்த இந்தியர்களின் மனோபாவத்தை ஆழ்ந்து ஆராய்ந்திருக்கிறார். எந்த வித துன்பங்கள் ஏற்பட்டாலும், அதற்கான தீர்வை காணாமல் , மூலத்தை மட்டும் கண்டுபிடித்து திருப்திபட்டுக்கொள்ளும் மனநிலை உடையவர்கள் நாம். எந்த கஷ்டம் வந்தாலும் அதனுடன் சமரசம் செய்துக்கொண்டு, “துன்பம் நேர்கையில் யாழெடுத்து பாடமாட்டாயா?” என்று தவறான போதனைகளுடன் வளர்ந்தவர்கள் நாம். அதனால் தான் நம் நாட்டில் எந்த ஒரு புரட்சியாளர்களோ, புரட்சியோ உருவாகவில்லை. எத்தனை நிதர்சனமான் உண்மை?

உலக அளவில் புரட்சி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வரும் பெயர்களில் ஒன்று - லெனின். சொல்லப்போனால் அவருடைய புரட்சியின் அடித்தளமே ரஷ்ய வீரர்கள் அவருடைய அண்ணனை சுட்டுக்கொன்றதில் இருந்து தான் ஆரம்பித்ததாம். மேலும் ஹிட்லருக்கு யூதர்கள் மீதிருந்த வெறுப்பே ஒரு mass genocide-க்கு வழிவகுத்தது. குருதிப்புனலில் வரும் கண்ணையா நாயுடுவின் கதாபாத்திரத்தின் தனி மனிதனின் ஜாதி வெறியையும், இயற்கை குறைபாட்டை சுட்டிக்காட்டப் போக, அது எழுப்பிவிடும் மிருகம் போடும் ஆட்டம் தான் பயங்கரம். புரட்சியோ, சர்வாதிகாரமோ - ஒரு தனி மனிதனின் வெறுப்பு புள்ளியில் தோன்றி எப்படி ஒரு சமுதாயத்தை பாதிக்கிறது என்பதை இந்த நாவலின் மூலம் சொல்லியிருக்கிறார் இந்திரா.

கண்ணையா நாயுடுவின் ஆண்மை குறையை கோபால் சுட்டிக்காட்டி பேச, அதன் விளைவாக வடிவேலுவையும், பாப்பாத்தியையும் நாயுடு செய்யும் கொடுமை படிக்கும்போதே நம்மை பதற வைக்கிறது. என்ன நடந்தது என்பதை விளக்காமல் ஆனால் புரியும்படி கோடி காட்டியிருப்பது ’விளக்கத்தை’ விட பலமடங்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. ”ஊர்ல இருக்குற ஆம்பளைங்க சா*னை அறுக்குறேண்டா!!” என்று நாயுடு போடும் வெறியாட்டம் இந்த நாவலின் முடிவில் நடத்தும் சம்பவத்துக்கும் இந்த தனிமனித வெறுப்பே அடிப்படையாக முன்னிறுத்தப்படுகிறது.

படித்தவர்கள் இது போன்ற புரட்சியில் ஈடுபட தயங்குவதையும், இறங்கிய பிறகு போராட்டத்தில் காணும் காட்சிகளால் பாதிப்புக்கு உள்ளாவதில் உள்ள இரட்டை நிலையை - துப்பாக்கி சூட்டில் எத்தனை பேரை கொன்றாலும் நாம் பாதிப்புக்கு உள்ளாவதில்லை ஆனால் அரிவாளால் வெட்டிக்கொல்வது மிருகத்தனம் என்கிறோம். கொல்வதில் கூட ஒரு நாசூக்கை எதிர்பார்க்கும் நாம் hypocrites என்று சாடியிருக்கிறார்.

இது போன்ற சூழலில் அரசாங்கமும், சோஷலிஸமும் உதவாதா என்ற நம்முடைய கேள்விக்கு பல சம்பவங்கள் மூலம் பதிலளிக்கிறார் இந்திரா. காவல் துறையும், சட்டமும் பணம் படைத்தவர்களுக்கே கை கொடுக்கும், ஜனநாயக சோஷலிஸம் என்பது கோவேறு கழுதை போல பொதி சுமக்க மட்டுமே உதவும், ஏழைகளுக்கு அல்ல என்று அரசியல் மட்டும் சட்டத்தின் மீதான தன்னுடைய நம்பிக்கையின்மையை பொதுவான குரலாக ஒலிக்கிறார் இந்திரா. மேலும் நாயுடுகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சமரசம் பேச வந்த மந்திரி பிரச்சனையில் கவனம் செலுத்தாமல் குடிபோதையில் விவசாயிகள் பிரச்சினையை “பாப்பாத்தி பிரச்சினையாக” திசைதிருப்பி குழறுவதிலேயே அரசின் பாரபட்சத்தை காட்டிவிடுகிறார். அவர் எழுப்பிய ஒரு சுவாரசியமான கேள்வி - திருவாரூரில் பழுதாகி பழமையின் சின்னமாக நின்றுவிட்ட தேரை பின்னர் “பகுத்தறிவும் நாத்திகமும் பேசும் கட்சி” ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக பழுதுபார்த்து ஓட வைத்தது ஏன்? சமயம் சார்ந்த அரசியல் ஆதாயமன்றி வேறென்ன காரணமாக இருக்க முடியும்?

புரட்சிகள் முடிந்துவிடக்கூடாது என்று ஒரு புதுக்கருத்தை முன்வைக்கிறார் இந்திரா. இது போன்ற புரட்சிகள் மெல்ல மெல்ல ஸ்தாபனமாக உருவாகி, அதை சார்ந்தவர்களுக்கு ஒரு சோம்பேறித் தனத்தையும், அதிகார சுகத்தையும் பின்னர் ஊழலையும் கொண்டுவந்து புரட்சியின் நோக்கத்தையே வீணடித்துவிடுகிறது என்ற அவர் அபிப்பிராயம் இந்த நாவல் வந்து பல வருடங்களுக்கு பின்னர் ரஷ்யா துண்டு துண்டாக சிதறியதன் மூலம் சரியென நிரூபிக்கப் படுகிறது.

அப்பப்பா! என்ன ஒரு விறுவிறுப்பு!!! சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவல் என்றவுடன் கொஞ்சம் வறட்சியாக தான் இருக்கும் என்று எதிர்பார்த்த எனக்கு இதன் வேக நடை கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. என் வழக்கமான நிதான கொள்கையை காற்றில் பறக்கவிட்டு 4 மணி நேரத்தில் படித்து முடித்தேன். கொஞ்சம் மெல்லிய மனம் படைத்தவர்களுக்கு இதன் மொழி வழக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். ஜாக்கிரதை!!! குறிப்பாக ஜாதி வெறி அதிகம் வியாபித்திருக்கின்ற காரணத்தால் அது குறித்த வார்த்தைகள் ஏராளமாக வந்து விழுகின்றன.

Indhra Parthasarathyநான் கம்யூனிஸ்ட் அல்ல, சொல்லப்போனால் இயக்கங்களின் மீது நம்பிக்கை இல்லாதவன் நான். இந்த நாவலை படித்து முடித்தபோது, அதிலும் இது உண்மையில் நடந்த சம்பவத்தை ஆதாரமாக கொண்டது என்று அறிந்தபோது, நாம் நம்முடைய சமூதாயத்துக்கு என்ன செய்தேன் என்ற ஒரு கையாலாகாத கோபமும், சுயபச்சாதாபமும் வந்தது. சொல்லப்போனால் நாம் - நகரத்தில் வாழும் மக்கள் எல்லாரும் போலிகள் தாம். வேகமான வாழ்க்கை, நேரமின்மை என்று சொல்லிக்கொண்டு நம்மை சுற்றி நடப்பதை பற்றி கவலைப்படாமல் பொறுப்புகளை தட்டிக்கழித்துக் கொண்டு போய்விடுகிறோம். அதனால் தான் இந்த நாவலில் சொல்லப்படுவது போல “புரட்சிகள் கிராமங்களில் இருந்து தான் உருவாகவேண்டும்” என்ற கூற்றை ஏற்கிறேன். கம்யூனிஸ்டுகளின் கொள்கைகள் நீர்த்துபோய் திராவிட கட்சிகளை அண்டிப்பிழைக்க வேண்டி இருப்பதையும், திராவிட & தேசிய கட்சிகள் தம் ஆரம்பகால கொள்கைகளை மறந்து நிறுவனங்களாக மாறிப்போன அவலத்தையும் நம்மால் உணர முடியவில்லை.

குருதிப்புனல் வெளியான சமயத்தில் பலவித சர்ச்சைகளை உண்டாக்கியதாம். பாலியல் பிரச்சினையை புகுத்தி பொருளாதார ரீதியான ஒடுக்குமுறையை எதிர்த்த போராடத்தை நீர்த்து / கொச்சைப்படுத்திவிட்டதாக கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்தனராம். கீழ்வெண்மணி சம்பவத்தை ஆதாரமாக கொண்டதால் பிரபல இதழ்கள் இதனை தொடர்கதையாக வெளியிட முன்வராத நிலையில் “கணையாழி” கஸ்தூரிரங்கன் இதை தொடராக வெளியிட்டு, முடிவில் புத்தகமாகவும் வெளியிட்டாராம். சாகித்ய அகாடெமி விருது பெற்ற பிறகு இந்தி, பெங்காலி, ஒரியா, குஜராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

இந்த நாவலை படிக்கும்போது என் சிறிய வயதில் பார்த்த “கண் சிவந்தால் மண் சிவக்கும்” படம் நினைவுக்கு வந்தது. அதில் கிராமிய கலைகளை குறித்து ஆராய்ச்சி செய்யவரும் இரு பத்திரிகையாளர்கள் (பெண் நிருபராக பூர்ணிமா ஜெயராம், ஒடுக்கப்பட இனத்தின் தலைவராக ஜெயசங்கர்) அந்த கிராமத்தில் நிகழும் அநியாயங்களை கண்டு தங்களை அறியாமல் கிராம பிரச்சினையில் இழுக்கப்பட்டு அந்த கொடுமைக்கார பண்ணையாரை எதிர்க்க ஆரம்பிக்கின்றனர். போராட்டம்”மனிதா மனிதா விழிகள் சிவந்தால்...” என்ற பாடல் அந்த படத்தில் உண்டு. அந்த படம் காட்சிகள் அளவில் நினைவில் இல்லை என்றாலும் அதன் பல கதாபாத்திரங்கள் இதில் வரும் கதாபாத்திரங்களை ஒத்திருக்கின்றன. 'க.சி.ம.சி’ - இந்த நாவலை அடிப்படையாக எழுதப்பட்டதா என்பதை தேடிப்பார்க்கவேண்டும். மேலும் சமீபத்தில் மலையாளத்தில் நான் பார்த்த, பிருத்விராஜ் போராளியாக நடித்த “தலப்பாவு” படமும் இது போன்ற கதைகளத்தை கொண்டது தான். இது போன்ற படங்களை ஏற்கனவே பார்த்துவிட்டதால் ”அனாவசிய குறுக்கீடுகளை” தவிர்க்கமுடியவில்லை.

(அர்த்தம் தெரியாதவர்களுக்காக) குருதிப்புனல் என்றால் ”ரத்த ஆறு”. இந்த தலைமுறைக்கு தமிழுக்கு என்று ஒரு தமிழ் அகராதி போட்டால் கூட படிக்க ஆளிருக்க மாட்டார்கள் என்பது மிகவும் வருத்தமான் விஷயம். என் பல நண்பர்களுக்கு “வாரணம் ஆயிரம்” படம் பிடித்திருந்தது. அவர்களிடம் அதன் அர்த்தம் என்ன என்று கேட்டபோது யாருக்குமே தெரியவில்லை. “படத்தின் தலைப்பு புதிய வார்த்தையாக இருந்தால் அதன் அர்த்தத்தை தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் கூடவா இல்லை?” என்று கேட்டேன். ”தெரிஞ்சு என்ன பண்ன போறோம்”. தமிழ் இனி மெல்ல சாகும் என்று தன் கவலையை வெளியிட்டார் பாரதியார். ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட வேகமாகவே அழிந்துவிடும் தமிழ் மொழி. நம் மொழி, கலாச்சாரம் மீது நமக்கு இருக்கும் ஈடுபாடு அவ்வளவு தான்.

இந்த புத்தகத்தை சமுதாய பிரக்ஞை இல்லாதவர்கள் பொழுதுபோக்காக கூட படிக்கலாம், அவ்வளவு விறுவிறுப்பு. ஆனால் முடிந்தவரை ஒரு முறையேனும் படிப்பது நலம். ஆனால் இந்த பதிவை படித்தவர்கள் “கீழ்வெண்மணி” என்று Google-ல் தேடிப்பாருங்கள். நாம் வாழும் தமிழ் சமுதாயத்திலேயே எத்தனை கொடுமைகள் புரட்சிகள் இல்லாததால் காலத்தால் அமுக்கப்பட்டு விட்டது என்ற கசப்பான உண்மை உரைக்கும்.

புத்தக விவரம்:
வெளியீட்டாளர்கள்: கிழக்கு பதிப்பகம் (A Unit of New Horizon Media), 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018. (இவர்களுடைய NHM Writer என்கிற இலவச மென்பொருள் கொண்டு தான் நான் தமிழ் பதிவுகளை எழுதிக்கொண்டு இருக்கிறேன்)
பக்கங்கள்: 237
விலை: ரூ. 150/-