Jayakanthan
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Parisukku Poஇது நான் படித்த 6வது ஜெயகாந்தனின் படைப்பு. அவருடைய சிறந்த படைப்புகளில் ஒன்று என்று அறிந்த பிறகே வாங்கினேன். மேல்நாட்டில் வாழ்ந்துவிட்டு பின் தன் தாய்நாட்டில் குடியேற விரும்பும் இசைக்கலைஞன் ஒருவன் கடைசியில் பாரீஸுக்கே போய்விடுவதாக முடிகிறது இதன் கதை. 1966-களில் எழுதப்பட்ட இந்த நாவல் இந்திய மேல்தட்டு சமூகத்தில் பழக்கவழக்கங்கள் ’நவீன முறை’ என்கிற பெயரில் மேற்கத்திய கலாச்சாரத்தை தழுவிக்கொண்டாலும், கருத்து ரீதியாக சில நூற்றாண்டுகள் பின்தங்கியே இருப்பதை சுட்டிக்காட்டுகிறார் ஜெயகாந்தன். ‘பாரீஸுக்கு போ’வில் ஜெயகாந்தன் வாழ்க்கையும் கலைகளும் நவீனமுற வேண்டும், அப்படி ஆகவேண்டுமென்றால் மனதளவில் எத்தகைய மாற்றங்கள் வரவேண்டும் என்று தன் கருத்தை நாவல் முழுவதும் வலியுறுத்துகிறார். ஜெயகாந்தனின் பாணியே கொஞ்சம் விஸ்தாரமாக எழுதுவது என்பதால் அவர் வார்த்தைகளை மனதளவில் படமாக விரித்து ரசிக்கவும், அவருடைய கருத்துகளை ஒத்துக்கொள்ளவும், மறுக்கவும் நிறைய வாய்ப்பளிக்கிறார்.


1960-களின் மத்தியில் பாரீஸில் இருந்து சென்னை வரும் சாரங்கன், சில வருடங்களுக்கு முன்பு தன் தந்தையான இசைமேதை சேஷைய்யாவுடன் மனஸ்தாபம் கொண்டு சென்றுவிட்டபடியால், தன் சொந்த வீட்டிலேயே அழையா விருந்தாளியாக வந்திறங்குகிறான். பணக்கார ஆந்திர பிராமண குலத்தில் வந்ததால் வீட்டில் பணத்துக்கும், இசைக்கும் குறைவில்லை. தன் படிப்பையும், 40 வயது வரையான வாழ்க்கையை லண்டனிலும், பாரீஸிலும் கழித்துவிட்ட சாரங்கனுக்கு தன் தந்தையின் கட்டுப்பெட்டியான சித்தாந்தங்களும், அதிகாரமும் மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இந்த சமயத்தில் குடும்ப நண்பர்களான மகாலிங்கமும், அவர் மனைவி லலிதாவும் சேஷைய்யாவுக்கும், சாரங்கனுக்கும் இடையே பாலமாக இருந்து உதவ முயற்சிக்கிறார்கள். எழுத்தாளினியான லலிதாவுக்கும், நல்ல ரசிகரான மகாலிங்கத்துக்கும் சாரங்கனின் முற்போக்கான கருத்துகள் பிடித்துபோக அவனது ஆதரவாளர்கள் ஆகிறார்கள். சாரங்கனின் கருத்துக்களை ‘மனோன்மணி’ இதழில் தொடராக வெளியிடும் சந்தடியிலும், ஓவியக்கல்லூரி தாளாளர் மேனனுடனான சந்திப்புகளிலும் லலிதாவும் சாரங்கனும் ஒருவர்பால் மற்றொருவர் ஈர்க்கப்படுகின்றனர். இந்த மூலக்கதையுடன் கிளைக்கதையாக சாரங்கனின் சகோதரி பாலம்மாளின் முறிந்த திருமணமும், அவள் கணவன் நரசய்யாவின் கடைசி கால சம்பவங்களும் வருகின்றது.


சாரங்கன் சென்னை விமான நிலையத்தில் வந்து ஆரம்பிக்கும் கதை, அவனுடைய கடந்த காலத்தை அவ்வப்போது சொல்லியவாறு நகர்கிறது. ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் ஒன்றாக களத்துக்குள் நுழைந்துவிடுவதால் நமக்கு யார் யாரென்று புரிந்துக்கொள்ளவே கொஞ்சம் சமயம் எடுக்கிறது. பின்பு இந்த நாவலின் மூலக்கருவான “வாழ்க்கையை நவீனப்படுத்துவது” என்பது கர்நாடக இசை குறித்த உரையாடலில் இருந்து ஆரம்பிக்கிறது. ஜெயகாந்தன் மேற்கத்திய இசையின் நவீனத்துவத்தையும், உலகளாவிய பரவலையும் கர்நாடக சங்கீதத்தின் புராதனத்தையும் பாரம்பரியத்துடன் ஒப்பிட்டுவிட்டு கர்நாடக சங்கீதம் மதம் சார்ந்த விஷயமாக இருப்பதால் புதிதாக பரீட்சார்த்த முயற்சிகள் எடுக்க தயங்கி தேக்க நிலை அடைந்ததை உதாரணமாக சொல்கிறார். அதே சமயம் மேற்கத்திய சங்கீதம் பல கலாச்சாரங்களையும், பாணியையும் ஏற்றுக்கொண்டதாலேயே புதிய வடிவங்களை பெற்று காலத்துக்கேற்ப நவீனமாகி தழைத்து வாழ்கிறது என்று உதாரணமாக சொல்லி வாழ்க்கை நவீனமாக வேண்டிய அவசியத்தை விளக்குகிறார்.

அதுபோல தமிழில் நவீன இலக்கியம் பெரிதாக சோபிக்காமல் போனதையும் சாடுகிறார். கிட்டத்தட்ட 1920-களின் இறுதியில் தான் தமிழின் நவீன இலக்கியம் தோன்றியது என்றும், அதுவும் வணிகரீதியான Mass Journalism வகையில் பொதுஜனத்துக்கு பிடிக்கவேண்டும் என்கிற கட்டாயத்தால் சமரசங்களுக்கு ஆட்பட்டதால் தமிழில் சார்லஸ் டிக்கன், லியோ டால்ஸ்ட்டாய் ஆகியோரின் படைப்புகள் போல தமிழில் உருவாகவில்லை என்று தன் கருத்தை வெளியிடுகிறார் ஜெயகாந்தன்.

Jayakanthanகடைசியாக மக்கள் நவீனம் என்கிற பெயரில் மேற்கத்திய ஆடைகள் அணிவதையும், மது அருந்துவதையும், புகைப்பதையும் மட்டுமே கற்று வைத்துள்ளார்கள், எனினும் எண்ணங்கள் மற்றும் கருத்து ரீதியாக இன்னும் பழமையிலேயே வாழ்ந்துக்கொண்டிருப்பதாக முடிக்கிறார். வாழ்க்கையை நவீனப்படுத்தும் முயற்சி உடனே பலன் கொடுக்காது என்றும், அது அடுத்த தலைமுறைக்கு கட்டாயம் பலனளிக்கும் என்பதால் முயற்சிகளை கைவிடக்கூடாது என்று சொல்ல முயற்சித்திருக்கிறார் ஜெயகாந்தன்.

எனினும் எனக்கு ஜெயகாந்தனின் சில கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உதாரணத்துக்கு “Extra Marital affairs"-ல் விழும் தம்பதியினருக்கு அவர் சொல்லும் அறிவுரை. தடம் மாறிப்போகும் கணவனையோ / மனைவியையோ விலக்கி வைத்து தண்டிப்பதை “உண்மையான அன்பு” இல்லை என்று சொல்கிறார். ஆழ்ந்து யோசித்தால் அவர் சொல்வது போல மன்னித்து திரும்ப ஏற்றுக்கொள்வது சரி என்கிற போதும், இந்த ”மற்ற” உறவுகளில் ஏற்படும் மனதளவு காயங்களை ஜெயகாந்தன் அங்கீகரிக்க மறுப்பதாக தோன்றுகிறது. இது போன்ற உறவுகளால் பிரியும் தம்பதியினர் தங்கள் நம்பிக்கை பொய்க்கப்பட்டதாக உணர்வதையும், தத்தம் துணைவர் தம்மை விட வேறொருவர் மீது அதிக நாட்டம் கொண்டுவிட்டதை நினைத்து வருத்தப்படுவதையும் ஜெயகாந்தன் உணரவில்லை போலும். வெறுமனே உடல் ரீதியா இந்த பிரச்சனையை ஜெயகாந்தன் அணுகியிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நல்ல வேளையாக சாரங்கன், லலிதா ஆகியோரிடையே தோன்றும் ஈர்ப்பை சம்பிரதாயமான முடிவோடு முடித்திருப்பது ஆறுதலான விஷயம். அதே சமயம் லலிதா திடீரென்று தான் மகாலிங்கத்தை பூஜிக்க மட்டுமே செய்வதாகவும், யாரையும் காதலித்ததில்லை என்றும் கரணம் போட்டிருப்பது அந்த கதாபாத்திரத்தின் மீதான மதிப்பை குலைக்கவே செய்கிறது. சாரங்கனின் கதாபாத்திரம் குழப்பங்களின் கலவையாக விளங்குகிறது. தம்மை சுற்றியுள்ளவர்கள் தன்னை போல வாழ்க்கையை நவீனமாக அணுகவேண்டும் என்று எதிர்பார்த்து ஏமாந்தாலும், தன் வாழ்க்கையை தேவையான அளவுக்கு பொறுப்பாக நடத்திக்கொள்ளாதது படிக்கும் நம்மை ஏமாற்றத்துக்கு ஆளாக்குகிறது.

Nallathor Veenaiகொஞ்சம் பக்கங்களிலேயே தெரிந்துவிட்டது இது டி.டி-1ல் வந்த ”நல்லதோர் வீணை” தொலைக்காட்சி தொடர் தான் என்று. சாரங்கனாக நிழல்கள் ரவி, சேஷைய்யாவாக பூர்ணம் விஸ்வநாதன், லலிதாவாக லட்சுமி (ஜெயகாந்தன் ஒரு வேளை லட்சுமியை மனதில் வைத்தே கதை எழுதுகிறாரா இல்லை ஜெயகாந்தனின் படைப்புகளை திரை வடிவம் ஆக்குபவர்களுக்கு default-ஆக லட்சுமியை கதாநாயகியாக உருவகப்படுத்தி கொள்கிறார்களா தெரியவில்லை), மகாலிங்கமாக ஏ.ஆர்.எஸ் ஆகியோர் நடித்திருந்தனர். கிருஷ்ணசாமி இயக்கியிருந்தார். பொதுவாக கிருஷ்ணசாமி நிறைய டாகுமெண்டரிகளை இயக்கியிருந்ததாலோ என்னவோ “நல்லதோர் வீணை”யும் டாகுமெண்டரித்தனமாக இருந்ததால் என்னால் பார்க்கமுடியவில்லை. ஆனால் புத்தகம் நன்றாக இருந்தது. பொதுவாக ஜெயகாந்தனின் புத்தகங்கள் திரை வடிவில் சோபிக்காமல் போவதற்கு முக்கிய காரணம் - புத்தகத்தில் கதாபாத்திரங்களின் மனநிலையை, கருத்துக்களை வெளிப்படுத்தும் தன்னிலை விளக்கங்களும், வாதங்களும், தர்க்கங்களும் திரையில் ரொம்ப நேரம் பேச விடமுடியாது போவதால் தான். இந்த நாடகம் ராஜஸ்ரீ நிறுவனத்தாரின் வலைமனையில் இலவசமாக காணக்கிடைக்கிறது.

விளையாட்டுக்கு என் நண்பர் விஜயகிருஷ்ணனை சீண்டிப்பார்க்க வேண்டும் என்றால் ஜெயகாந்தன் பற்றி பேச்சு கொடுப்பேன், அவரும் எதிர்பார்த்தது போலவே கடுப்பாகிவிடுவார். விஜய் மட்டுமல்ல, என்னுடைய வட்டத்தில் பலரும் ஜெயகாந்தனை பார்த்து ‘பயப்படுபவர்”களாக இருக்கிறார்கள். ஜெயகாந்தனின் எழுத்துக்களில் ரொம்ப பிரச்சார நெடி அடிக்கிறது என்பது இந்த தலைமுறை வழக்கமாக வாசிக்கும் குற்றச்சாட்டு. இந்த SMS தலைமுறைக்கு இரண்டு கூடுதல் வரியில் பேசிவிட்டால் “லெக்சர் அடிப்பதாக” அங்கலாய்த்துக்கொள்ளும் மக்களுக்கு நான் சொல்வது எல்லாம் ஒன்று தான் - பொழுதுபோக்குக்காக படிப்பவர்களுக்கு ஜெயகாந்தன் உகந்தவரே அல்ல. மாறாக வாழ்க்கையின் nuances எனப்படும் நுணுக்கங்களை அறிந்துக்கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு ஜெயகாந்தனின் எழுத்துக்கள் ரொம்ப பிடிக்கும். ஜெயகாந்தன் சொல்லுவதை முழுவதும் ஒத்துக்கொள்ள வேண்டியது இல்லை. மறுக்கவும் கூட நமக்கு யோசிக்க வைப்பார். படிக்கும்போது complex-ஆக தோன்றினாலும், கொஞ்சம் யோசித்தால் அவரது கோட்பாடுகள் மிக மிக எளிமையானவையாக தோன்றும். எனது மறைந்த நண்பர் வைத்தி சொல்வது போல “The outcome of extreme complexity is simplicity". அது ஜெயகாந்தனுடைய எழுத்துக்களுக்கு பொருந்தும்.

புத்தக விவரம்:-
பதிப்பாளர்கள்: மீனாட்சி புத்தக நிலையம், தானப்ப முதலி தெரு, மதுரை - 625001.
பக்கங்கள்: 332
விலை: ரூ. 110/-