Relationships
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

{mosimage}

பாரதியாரின் பாடல் ஒன்று நினைவுக்கு வர, அதன் மூலம் ‘inspire' ஆகி எழுதியது தான் இந்த பதிவு. அந்த பாடல் இப்படி ஆரம்பிக்கிறது... ‘எங்கிருந்தோ வந்தான்.. இடைச்சாதி நான் என்றான்.. இங்கிவனை நான் பெறவே... என்ன தவம் செய்துவிட்டேன்”. கண்ணன் ஒரு பெரிய குடும்பம் இருக்கும் வீட்டுக்கு உதவியாளராக வந்து எல்லோருக்கும் தேவையான பணிவிடைகளை செய்வதாகவும், ஆனால் கண்ணன் எங்கிருந்து வந்தான் என்பது வீட்டிலுள்ளவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. நமது வாழ்க்கையிலும் சில அவசியமான நேரங்களில் நாமே எதிர்பாராத வகையில் கண்ணன் போல சிலர் திடீரென்று தோன்றி நமக்கு உதவி செய்துவிட்டு வேலை முடிந்தவுடன் காணாமல் போய்விடுவது உண்டு. சமீபத்தில் என் வாழ்க்கையில் அப்படி எங்கிருந்தோ வந்து உதவி செய்த சில நல்ல உள்ளங்களை பற்றியது தான் இந்த பதிவு.

Page 1

திரு. கணேஷ்:- முன்பே பலர் உதவியிருக்கிறார்கள் எனினும் என் நினைவில் முதலில் வருவது திரு. கணேஷ். நான் 10வது படித்துக் கொண்டிருந்தபோது ஹிந்தியில் விஷாரத் உத்தரார்த் முடித்துவிட்டேன். அந்த சான்றிதழை சென்னையில் இருக்கும் தக்ஷின பாரத ஹிந்தி பிரசார சபாவில் நடக்கும் convocation-இல் தான் வாங்கவேண்டும். Convocation நடந்தது ஒரு வார நாள் ஆதலால் ஏதோ அவசியமான காரியத்தால் என் அப்பா கூட வருவதற்கு ரொம்ப முடியாத சூழ்நிலை. அப்போது நான் சென்னைக்கு போனது இல்லை. சான்றிதழ் வாங்க என் உடன் படித்த ஒரு பையனும் அவனுக்கு தெரிந்த ஒரு பெண்ணும் என கிளம்புவதாக திட்டம். பஸ் ஸ்டாண்டில் இன்னும் இரு (+1, +2 படிக்கும்) பெண்கள் சேர்ந்துக்கொள்ள ஏதோ தைரியத்தில் நாங்கள் எல்லாம் தனியாக கிளம்புவதாக ஏறிக்கொண்டோம். அப்போது திரு. கணேஷ் எங்களிடம் ‘எல்லோரும் எங்கே போகிறீர்கள்?’ என்று கேட்டார். நாங்கள் ‘ஹிந்தி பிரசார சபாவுக்கு போகிறோம்’ என்றோம். அவர் ‘போக வழி தெரியுமா?’ என்று கேட்டார். நாங்களும் ஏதோ எங்களுக்கு சொல்லப்பட்ட பஸ் நம்பரை சொன்னோம். கணேஷ் எங்களை சென்னையில் சபாவுக்கு அழைத்து சென்று, சான்றிதழ்களை வாங்க வைத்து, பிராட்வேயில் மதியம் உணவருந்தவைத்து பத்திரமாக திரும்ப கடலூர் பஸ் ஸ்டாண்டு வரை கொண்டு சேர்த்தார். என்ன காரணத்துக்காக அவர் சென்னை கிளம்பினாரோ அந்த வேலையை தொலைபேசி மூலமாவது முடித்தாரா இல்லையா என்று தெரியவில்லை. என்னோடு வந்த மாணவனின் தந்தையிடம் தமிழ் படித்திருந்தாராம். அந்த ஒரே நன்றிக்காக எங்களை கருத்தாக பார்த்துக்கொண்டது அவரது பெருந்தன்மை. சில மாதங்களுக்கு பிறகு எங்கள் தெரிந்தவர்களின் வீட்டுக்கு போனபோது அவர்களது பெண்ணுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்று ஒரு போட்டோவை காட்டினார்கள். ஆச்சரியம்!!! அது திரு கணேஷின் புகைப்படம். ‘உங்கள் பெண்ணுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்’ என்று மனமார சொன்னேன். அவர்கள் வீட்டில் திரு கணேஷை மீண்டும் ஒரு முறை பார்க்க நேர்ந்தது. அவர் தான் செய்த உதவியை பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை. பின்னர் அந்த குடும்பம் வேறெங்கோ மாறிவிட்டார்கள், எனவே கணேஷ் வெறுமனே நினைவாக சுருங்கிவிட்டார்.

திரு. பிரபுஷங்கர்:- மூன்று வருடங்களுக்கு முன்பு... நான் IT-யில் வேலை தேடிக்கொண்டிருந்த சமயம். SAP Certification முடித்துவிட்டு அபுதாபியில் வேலை தேடிக்கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டேன். இங்கேயே இருந்த என் நண்பர்கள் எல்லாம் Accenture-ல் கும்பலாக வேலைக்கு சேர்ந்துவிட்டார்கள். மூன்று மாதங்களுக்கு பிறகு அபுதாபியில் SAP வேலை கிடைக்க வழி இல்லை என்று தெரிந்தபிறகு இந்தியாவுக்கு வந்துவிட்டேன். வந்து பல நேர்முகத்தேர்வுகள் attend செய்துவிட்டு, கடைசியில் Accenture-ல் வாய்மொழியாக வேலைக்கான உத்தரவை கொடுத்துவிட்டார்கள். பின்பு 2 மாதங்கள் இழுத்தடித்துவிட்டு ‘இப்போது வேலை காலி இல்லை, புதிதாக தேவைகள் வரும்போது உங்களை தொடர்புகொள்கிறோம்’ என்று ஒரு இடியை சர்வ சாதாரணமாக மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார்கள். SAP Certification முடித்து 9 மாதங்கள் ஆகிவிட்டன. நேர்முகத்தேர்வுகள் அனைத்திலும் குறைந்தபட்சம் ஒரு implementation-ஆவது அனுபவம் இருக்கவேண்டும் என்று கடுப்படித்தார்கள். திருமணம் ஆகவேண்டிய காலக்கட்டத்தில் எவ்வளவு நாட்கள் தான் வேலையில்லாமல் இருப்பது, எனவே IT கனவை மறந்துவிட்டு மீண்டும் துபாய்க்கே போய்விடலாம் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டு துபாய் கம்பெனிகளில் வேலை தேடி, கடைசியில் StorIT என்ற கம்பெனியில் இருந்து offer letter-ம் வாங்கியாயிற்று. அப்போது ஒரு பொதுவான நண்பன் மூலம் என்னோடு SAP Certification செய்த பிரபுஷங்கரிடம் பேசினேன். அவர் அப்போது ஒரு கம்பெனியில் சேர்வதாக இருந்தார். எனக்கும் அதே இடத்தில் வேலை வாங்கிக்கொடுத்து எனது IT கனவுக்கு உயிர்கொடுத்தார். அந்த சமயத்தில் பிரபுவை மட்டும் சந்திக்காமல் போயிருந்தால் இந்நேரம் எனக்கு பிடித்த IT field-ல் இல்லாமல் மீண்டும் துபாயில் Sales-ல் இருந்திருப்பேன். அதனால் எனக்கு பிரபு மீது அளவு கடந்த மரியாதை. பிறகு நாங்கள் வேலை செய்த இடத்தில் எனது மிக நல்ல நண்பராக மாறினார். எனக்கு வருத்தமான விஷயம் என்னவென்றால் இப்போது அவர் IT-யை விட்டு விலகிவிட்டு Hotelier-ஆக மாறிவிட்டார். அவர் எந்த தொழில் செய்தாலும் அதில் நிச்சயம் வெற்றிகரமாக வருவார்.

திரு. இளங்கோ: இது கடந்த வருடம் 2009-ல் நடந்தது. எனது துபாய் பயணத்துக்கு எல்லாம் ஏற்பாடாகிவிட்டது. அப்போது தான் கவனித்தோம் எனது பாஸ்போர்ட்டில் 6 மாதங்களுக்கு தான் validity இருக்கிறது என்று. எனவே அங்கே 3 மாதங்களுக்கு மேலே தங்குவதில் பிரச்சனை வரும் என்று தெரிந்தது. புது பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தபோது ஏற்கனவே செய்திருந்த ஒரு சிறு தவறால் விசாரணைக்கு பிறகே பாஸ்போர்ட் மேலதிகாரியின் கவனத்திற்கு வரும் என்றும் அது நடக்க சில காலம் பிடிக்கும் என்றும் சொல்லப்பட்டது. அதுவாக நடப்பதற்குள் நான் துபாய் செல்லவேண்டிய தேதி தாண்டிவிடும். குறித்த தேதியில் செல்லவில்லை என்றால் என் வேலைக்கே கூட உலை வைக்கக்கூடும். வீட்டில் வந்து எல்லாம் முடிந்து போயிற்று என்று உட்கார்ந்தபோது அகிலா தன் தந்தையின் நண்பர் திரு. இளங்கோ அங்கிளை பற்றி சொன்னாள். அடுத்த நாள் அவரை போய் பார்த்தோம். என்ன பிரச்சினை என்று நிகழ்ந்தவற்றை பொறுமையாக கேட்டார். பின்னர் நடந்த தவற்றுக்கு திருத்தமாக என்ன செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசினார். பிரச்சினை தீர்ந்து குறித்த தேதியில் துபாய்க்கு போகமுடிந்தது. அன்று மட்டும் திரு. இளங்கோ துணைக்கு வரவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைக்கவே பயமாக இருக்கிறது.

Page 2

அனன்யா அக்கா & பிரகாஷ்: நான் 2004-ல் முதன் முதலாக துபாய்க்கு வேலைக்கு செல்லவேண்டும். புது இடம், புது மனிதர்கள்... எப்படி இருக்கப்போகிறதோ என்று பயந்துக்கொண்டிருந்த எனக்கு துணையாக இருந்தது என்னுடைய கஸின் பிரகாஷ் தான். நான் துபாயில் இறங்கிய அன்றே என்னை ஊர் சுற்றிக்காட்டி, அந்த ஊரோடு ஒரு familiarity-ஐ கொண்டு வந்தது பிரகாஷ் தான். ஒரு வருடத்தில் தெரிந்துக்கொள்ளக்கூடிய (ஊர் பற்றிய) விவரங்களை 1 மாதத்தில் எனக்கு புரியவைத்தது அவன் தான். அது போல நான் அபுதாபியில் இருந்து திரும்ப வந்த பிறகு அந்த ஊரோடு எனக்கு என்று எந்த உறவும் இல்லை என்றாகிவிட்டது. அந்த சமயத்தில் கிடைத்தது தான் அனன்யாவின் நட்பு. சில நாட்களில் எல்லாம் ‘அக்கா... தம்பி’ என்னும் அளவுக்கு நெருங்கிவிட்டோம். கடந்த முறை துபாய்க்கு புராஜெக்டுக்கு 2009-ல் போனபோது தான் அனன்யாவை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அபுதாபியில் போய் ஒரு வேளை சோறு சாப்பிடக் கிடைத்தது அனன்யா வீட்டில் தான். ஒரு புது இடத்தில் தெரிந்த வீடு என்று போய் ஒரு வேளை சோறு சாப்பிட்டு பாருங்கள், அந்த அனுபவமே நெகிழ்ச்சியானது தான். அது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

’மெல்போர்ன்’ விஜய்: அதே புராஜெக்ட்டின் கடைசியில் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளான சமயத்தில் கிடைத்த நட்பு தான் நான் தற்போது அதிகம் சிலாகிக்கும் மெல்போர்ன் விஜயகிருஷ்ணன். வழக்கமான chat friendship என்பதையும் தாண்டி அந்த சமயத்தில் மன ரீதியாக ஒரு diversion, refreshing change கொடுத்தது விஜய்யின் நட்பு. குடும்பத்தை விட்டுவிட்டு புராஜெக்டில் இருக்கும்போது ஏதாவது மன அழுத்தம் என்றால் நாம் பொதுவாக நமது மேலதிகாரியின் உதவியையோ அல்லது கூட வேலை பார்க்கும் நண்பர்களின் துணையை நாடுவோம். ஆனால் எனது விவகாரத்தில் மேலதிகாரியின் (காரணமற்ற) அதிகாரப்போக்கை ஏற்க மறுத்தது தான் முதல் பிரச்சனை. மற்ற நண்பர்களும் என்னை விட அதிகமாக அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கும் போது அவர்களின் துணையை எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம். அந்த தனிமையின் கொடுமையில் ‘தள்ளாடும் கொடிக்கு கிடைக்கும் கொம்பின் துணை’ போல கிடைத்தது விஜய்யின் நட்பு. பிறகு காலையிலும், மாலையிலும் விஜய் online-ல் வந்துவிடுவார் என்ற நினைப்பே ஒருவித புத்துணர்ச்சியை தந்தது. உடலளவில் அருகில் இல்லை என்கிற போதும் நினைவில் எப்போதும் விஜய் கூடவே இருப்பது போலவே தோன்றியது நான் அந்த சமயத்தில் survive பண்ண உதவியது. நடந்தவற்றை இப்போது நினைத்துப் பார்க்கும்போது அந்த சமயத்தில் விஜய் மட்டும் என் வாழ்வில் நுழையவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைக்கவே கொஞ்சம் திகிலாக தான் இருக்கிறது.

பாண்டியன் மாமா: சமீபத்தில் பெங்களூருக்கு இடம்பெயரும் முயற்சியில் இவரது உதவி மிகவும் அதிகம். நான் சென்னையில் இருந்துக்கொண்டு பெங்களூரில் வீடு தேடிக்கொண்டு இருந்தேன். வார இறுதிகளில் பெங்களூருக்கு போகும்போது எல்லாம் சளைக்காமல் என்னோடு நான் கொண்டு வந்திருந்த முகவரிகளுக்கு எல்லாம் அலைந்து, புது இடங்களையும் தேடிப்பிடித்து கன்னடத்தில் பேசி கடைசியில் தற்போது நாங்கள் வாங்கியிருக்கும் ஃப்ளாட்டையும் இவர் தான் கண்டுபிடித்து முடித்துக்கொடுத்தார். இத்தனைக்கும் அவர் அகிலாவின் சித்தப்பா & நான் அவரோடு இதற்கு முன்பு அதிகம் interact செய்ததில்லை. எங்கள் கல்யாணத்தில் பார்த்தது மற்றும் அகிலா பெங்களூரை விட்டு கிளம்பியபோது அவளுடைய பொருட்களை அவர் வீட்டில் வைக்கப்போனது தான் நான் அவரோடு முன்னால் பழகியது. இவரும் திடீரென்று என் வாழ்க்கையில் வந்து புது இடத்தில் புலம்பெயர மிகவும் உதவியவர் பாண்டியன் மாமா. ஒரு நாள் பேச்சுவாக்கில் அகிலாவிடம் ’உன் அப்பாவை விட உன் சித்தப்பாவிடம் மிக comfortable-ஆக feel பண்ணுகிறேன்’ என்று சொல்லப்போக, அகிலா முகத்தை தூக்கிவைத்துக்கொண்டது தனி கதை.

நான் இதுவரை சொன்னது எனக்கு உதவி செய்த மிகச்சிலரை பற்றி மட்டுமே! எனது வாழ்க்கை பயணத்தில் முகம் / பெயர் தெரியாத நிறைய பேர் உதவியிருக்கிறார்கள். உதவி செய்த கையோடு விலகியும் விட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். எப்போதும் எல்லாமே எனக்கு நன்றாகவே நடந்தது / நடந்துக்கொண்டிருக்கும் / நடக்கும் என்னுமளவுக்கு நான் அவ்வளவு அதிர்ஷ்டமான ஆசாமி எல்லாம் இல்லை. பல தடவைகள் எனக்கு தடங்கல்களாக நிகழ்ந்திருக்கிறது, எனினும் நடக்கவேண்டிய நல்ல விஷயங்கள் எல்லாம் ஒருவழியாக நடந்துமுடிந்திருக்கின்றன. (உதாரணத்துக்கு மேலே சொன்ன IT-க்கு மாறிய நிகழ்ச்சி. ஒரு கட்டத்தில் இது நடக்காது என்று ஒதுங்கிய சமயத்தில் தான் அது நிறைவேறியது.) அதனால் தான் எனக்கு சிறிய அளவில் உதவும் நண்பர்கள் / அன்பர்களை கூட மிகவும் சிலாகித்து நினைவுகூர்கிறேன். நான் பலமுறை முன்பு சொன்னது போல ‘Man can't exist in vaccum' எனவே ஏதாவது ஒரு வகையில் மற்றவர்களது துணை அவசியமாகிறது. எனது விஷயத்தில் நான் மனிதர்களை நம்பியதால் அவர்களுக்கும் என் மீது பொறுப்பாக உணர்ந்து அவர்களும் என்னை நல்லவிதமாக நடத்துகின்றனர். உதாரணம். எனது banker HDFC விஜய். அவர் பிரபுஷங்கர் மூலம் அறிமுகமானதாலோ என்னவோ அவரை முதல் சந்திப்பிலேயே நம்பிவிட்டேன் அதனாலோ என்னவோ எனக்கு எந்தெந்த வகையான முதலீடுகள் உகந்ததாக இருக்குமோ அதையே பரிந்துரைக்கிறார். இன்னும் எனக்கு என் வாழ்க்கையில் வரும் மனிதர்கள் மீதான நம்பிக்கை குறையவில்லை. இந்த நிலைமை நீடிக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.

{oshits} வாசகர்கள் என்னுடைய இந்த நினைவுக்கூறும் பதிவுக்கு வருகை தந்துள்ளனர்.