Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
SETC Busகூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்படுவதின் கொடுமையை நான் உணர்ந்தது ஒரு பேருந்து பயணத்தில். அது கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் மற்றும் நான் IT-யில் வேலை தேடிக்கொண்டிருந்த காலம். நான் சேலத்திலிருந்த என் அக்கா வீட்டுக்கு கிளம்பிக்கொண்டு இருந்தேன். கடலூரிலிருந்து நேரடியாக பஸ் கிடைக்காததால் கள்ளக்குறிச்சி வந்து மாறிக்கொள்வதாக திட்டம். பொதுவாக அந்த காலை நேரத்தில் பள்ளி, அலுவலகங்களுக்கு செல்லும் கூட்டம் அதிகம் இருக்கும். கள்ளக்குறிச்சிக்கு வந்தவுடன் ஒரு சேலம் பஸ் கிளம்பிக்கொண்டு இருந்தது. உடனே தடதடவென்று ஓடிப்போய் ஏறினேன். பஸ்ஸும் நிரம்பிவிட்ட காரணத்தால் உடனே கிளம்பிவிட்டது. நான் உட்கார்ந்த சீட்டுக்கு கீழேயும், மேலேயும் ஸ்பீக்கர் பெட்டி இருந்தது. கொஞ்ச நேரத்தில் எல்லாம் படம் போடப்பட்டது. படத்தின் பெயரை பார்த்தவுடன் திக்கென்றது - கவிதாலயா பெருமையுடன் வழங்கும் - ‘திருமலை’.

 

இழவு... இந்த கதாநாயகனுங்களுக்கு எல்லாம் மனசாட்சி-ன்னு ஒரு ஐட்டம் இருக்குதா? இவனுங்க நடந்தா பின்னாடியே ஊர் இவனுங்களை வாழ்த்தி பாடுமாம்... இவனுங்க அசால்டா நடப்பானுங்களாம்.. பஞ்ச் டயலாக் பேசுவானுங்களாம்... மெக்கானிக்கா இருந்தாலும் பணக்கார பொண்ணுங்க படிஞ்சுடுமாம்.. எவ்வளவு பெரிய வில்லனா இருந்தாலும் மெக்கானிக்கை தட்டி வைக்க முடியாதாம்... எவன்டா இந்த மலையாள (வேலையில்லாத) ஹீரோக்களை எல்லாம் வில்லனா தமிழில போட ஆரம்பிச்சது? மலையாளத்தில அற்புதமா நடிக்கிறவனுங்க இங வந்த உடனேயே உச்சஸ்தாயில ‘டேய்..’னு கத்தி (எல்லா வில்லனுங்களுக்கும் ஒரே குரல் தான்) காசு வாங்கிகிட்டு கேரளா போய் சொத்து வாங்கிபோட்டுட்டு “தமிழ் இயக்குநர்களுக்கு படம் எடுக்கவே தெரியலை”ன்னு சொல்லிட்டு இருப்பானுங்க... ஆனா நம்ம இயக்குநருங்க எல்லாம் அவனுங்களை வரிஞ்சு வரிஞ்சு கூட்டிட்டு வருவாங்க... coming to திருமலை - கடைசியிலே வில்லனுங்களே ‘அவன் ரொம்ப நல்லவண்டா..’ன்னு பாராட்டுவானுங்களாம்... ஹீரோயினோட தோழி - "அவன் வந்துட்டாண்டி"-ன்னு சொல்லுவாளாம், உடனே கதாநாயகி அவன் எங்கேன்னு தேட - தோழியோ “உன் மனசுக்குள்ள வந்துட்டாண்டி” - ன்னு டயலாக் அடிப்பாளாம்.. நம்ம கதாநாயகி உடனே வெட்கப்படுவாளாம்... ஐயோ!!!!! என்னால இறங்கி ஓடவும் முடியாம, ஸ்பீக்கர் சத்ததிலே கண்னை மூடி தூங்கவும் முடியாம 3 மணி நேரம் அவதிப்படும் போது தான் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்ணின் இயலாமையும், வேதனையும் புரிந்தது. ஒரு முறை அல்ல... இரு முறை இதே தெருமலை படத்தை வேறொரு பிரயாணத்திலும் ‘அனுபவிக்க’ நேர்ந்தது.

அதற்கப்புறம் எந்த வீடியோ கோச் பஸ் என்றாலும் என்ன படம் ஓடுது என்று பார்த்துவிட்டு ஏறுவதே வழக்கமாகி விட்டது. ‘மாட்டு டாக்டர்’ விஜய் படம் என்றால் அது சூப்பர் ஃபாஸ்ட் பஸ் என்றாலும் ஏறவே மாட்டேன். அப்படியும் ஒரு முறை வேறு வழியே இல்லாமல் சவகாசி... தப்பா எழுதலை.. I mean it.. சவகாசி படம் ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸில் ஏறவேண்டிய கட்டாயம். ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் போகவேண்டும்... திருப்புலானி கோவிலுக்கு போய்விட்டு மீண்டும் மாலைக்குள் ராமேஸ்வரம் வந்து ரயிலேறவேண்டும். சரி! இவன் படம் பார்க்குற பாவத்தை ராமர் கோவில் குளத்தில் கழுவிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து ஏறினோம். நல்ல வேளையாக 15 நிமிடத்தில் எல்லாம் இறங்கியாச்சு... அதிலேயும் நிறைய நேரம் அசின் பிசின் போல ஒட்டிக்கொண்டு இருந்தால்... கொஞ்சம் தப்பித்தேன்.

இந்த கொடுமைகளில் இருந்த தப்பிக்கவே நான் தொலைதூர பஸ் பிரயாணங்களை தவிர்த்துவிடுவேன். நல்லவேளை ரயிலில் வீடியோ எல்லாம் போடுவதில்லை. விடிய விடிய தூங்கவும் விடாமல் படம் போட்டு உயிரை எடுப்பாங்க. விவேக் சொல்வது போல “ஆளில்லாத டீக்கடையிலே யாருக்குடா இப்படி டீ ஆத்திக்கிட்டு இருக்கே? உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?” என்று கேட்பது போல எனக்கும் இந்த டிரைவரிடமும், கண்டக்டரிடமும் “தூங்குறவங்களுக்கு படம் போடுறீங்களே... உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா”ன்னு கேட்க தோன்றும். இன்னொரு கொடுமையான பிரயாணம் என்றால் வைத்தி (உயிரோடு இருந்தபோது) வீட்டுக்கு போக அசோக் பில்லரில் இருந்து திருச்சிக்கு போன பிரயாணம். ‘வல்லவன்’ என்ற ஒரு அற்புதமான காவியத்தை போட்டு இருந்தார்கள் அந்த டிராவல்ஸ் அன்பர். அது படம் என்பதை விட சிம்பு தான் உடுத்தினால், நயந்தாராவோடு ‘படுத்தால்’ எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்காக எடுத்த வீடியோ போல இருந்தது. இவன் மேட்டர் பண்ணி குஜால்ஸ் பண்ண அதை தமிழ்நாட்டு மக்கள் சொந்த காசு போட்டு பார்க்கவேண்டிய காலத்தின் கொடுமை என்று தோன்றியது. நல்லவேளையாக என் முன் சீட்டிலிருந்த வயதான மாமா ஒருத்தர் “படத்தை நிறுத்துறேளா? தூங்கமுடியலை” என்று சத்த்ம் போட, நான் வழிமொழிய, படம் நிறுத்தப்பட்டது.

அகிலாவின் பாட்டி திடீரென்று இறந்துபோக (இதுக்கெல்லாம் முன்னாடியே ரயில் டிக்கட் பதிவு செஞ்சு வைக்க முடியுமா என்ன?) அவசரமாக அதே அசோக் பில்லரில் சேலம் பஸ்ஸில் ஏற 2-3 பாடாவதிகளை Non-stop ஆக போட்டார்கள். இம்முறை நாக்குப்பூச்சி தனுஷின் படங்கள் - புதுப்பேட்டை (கருமம்... இது கலைப்படைப்பாமே), புதுக்கோட்டையிலிருந்து சரவணன்... பஸ்ஸுல போட்றதுக்குன்னே இதுபோல படத்தை எடுப்பானுங்களோ? இல்லை கண்டக்டர்கள் இது போன்ற அரிய படைப்புகளாக தேடி பிடிப்பார்களோ?. இல்லையென்றால் நம்ம சி.எம் (சினிமா மினிஸ்டர் இல்லைங்க.. சீஃப் மினிஸ்டர்) / தமிழக அரசு ஏதாவது சுற்றறிக்கை விட்டிருக்கிறார்களா? - கலைமாமணி விருதுகள் வாங்கிய மாட்டு டாக்டர் விஜய் படம், சொம்பு படம், நாக்குபூச்சி தனுஷ் படமாக தான் போடவேண்டும் என்று... தலைபோகிற அவசியம் ஏற்பட்டாலொழிய வீடியோ இருக்கும் பஸ்களில் ஏறுவது இல்லை. அப்படியே ஏறவேண்டும் என்றால் பழைய கறுப்பு வெள்ளை படம் ஓடுகிற வண்டியில் தான் ஏறுகிறேன்.

இவ்வளவு முன்ஜாக்கிரதையாக இருந்தும் கடைசியில் பொள்ளாச்சி போகும்போது பெரிதாக ஏமாந்தேன். கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் நின்ற பஸ்களில் ஓடிய வீடியோக்களில் பார்த்துவிட்டு கடைசியில் காமெடி காட்சி ஓடிக்கொண்டு இருந்த ஒரு பஸ்ஸில் ஏறினேன். அது விவேக் - கோவை சரளா நடித்த “சிநேகிதனை... சினேகிதனை...” காட்சி. அது காமெடி கேசட் என்று அனர்த்தமாக யூகித்துக்கொண்டு ஏறினேன். பஸ் சுந்தராபுரத்தை தாண்டியதும் தான் உரைத்தது - காமெடி அல்ல, முழுப்படமுமே ஓடிக்கொண்டு இருக்கிறது என்று. அந்த காலத்தால் அழியாத காவியம் - மாட்டு டாக்டர் நடித்த “ஷாஜஹான்”. அபத்தத்திலும் அபத்தமான படம்... கதையை பற்றி எழுதி ஏற்கனவே கொதித்துக்கொண்டு இருக்கும் என் ரத்த அழுத்தத்தை இன்னும் ஏற்றிக்கொள்ள விரும்பவில்லை. அந்த ஒரு மணி நேரத்தில் என் காது ஜவ்வு அறுந்து ரத்தம் கொட்டி... அப்பப்பா!!! நினைக்கவே மனசு பதறுதே!!!!

பஸ்ஸில் வீடியோ போட்டு பொதுஜனத்தை மன உளைச்சளுக்கு ஆளாக்க கூடாது என்று ஒரு பொதுநல வழக்கு போடலாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் யாராவது துணை நிற்பீர்களா?