Relationships
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இன்று எனக்கு பிடித்த நண்பன் ஒருவனுக்கு பிறந்த நாள். அவனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இதை அவனிடம் நேரிடையாக சொல்லிக்கலாமே, எதுக்கு இப்படி ஒரு பதிவில் போடுறீங்கன்னு நீங்க கேட்குறது எனக்கு கேட்குது. நான் இப்போது அந்த நண்பனுடனான உறவு இப்போது பேசும் நிலையில் இல்லை. ஒரு காலத்தில் நான் என் ஆயுள் முழுவதும் எனது கூடவே அந்த நண்பனும் வரவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். எனது 'Thin Red Line between Love & Hate' என்கிற பதிவில் எங்களுடைய பழைய பதிவில் எழுதியிருந்தேன். அதில் சொன்னது போல ‘திரும்பி செலுத்தப்படாத’ அன்பு வெறுப்பாக மாறி, அந்த கோபத்தில் அவனை எப்படி எல்லாம் அணு அணுவாக பழிவாங்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்த நிமிடங்கள் பல. கல்லூரி முடிந்த பிறகு சில நள்ளிரவுகளில் அவனுக்கு Blank Calls கொடுத்தும், ஒரு முறை எனது cousin-இடம் சொல்லி அந்த நண்பனையும், எங்கள் குறுக்கே வந்ததாக நினைத்த நண்பனையும் அடிக்க முடியுமா என்று கூட முயன்றிருக்கிறேன். கடவுள் கருணையில் எனது மனக்கோட்டை எதுவும் நிறைவேறவில்லை. ஒரு கால வைத்தியன் குணப்படுத்த முடியாத மனக்காயங்கள் என்று எதுவும் இல்லை. காலப்போக்கில் கோபங்கள் எல்லாம் அடங்கி, ஒரு நாள் நான் உண்மையிலேயே எனது நண்பனை உண்மையாக நேசித்து இருந்திருக்கிறேனா என்று ஆராய்ந்தபோது, அன்பு வன்முறைக்கு போகாது என்று உணர்ந்தபோது மனதளவில் வெட்கப்பட்டு, 7 வருடங்களுக்கு பிறகு எனது தொந்தரவுகளுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டபோது கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. இவன் மட்டும் அல்ல.. இன்னொரு பெண்ணும் என் கோபப் பட்டியலில் இருந்தாள்.

 

அவள் எனது பள்ளித்தோழி. பல டியூஷன்களுக்கு ஒன்றாக போய்வந்துக்கொண்டு இருந்ததில் இரு நல்ல நட்பு உருவாகி இருந்தது. அது கல்லூரி போன பின்பும் தொடர்ந்தது. நான் படித்தது ஒரு பொறியியல் கல்லூரியில், அவள் B.Sc Computers படித்தது எங்கள் ஊரிலிருந்த மகளிர் கல்லூரியில். எனக்கு வந்த Computers / Electronics / Management பேப்பர்களுக்கு அவளிடம் இருந்து புத்தகம் வாங்கிக்கொள்வேன். எல்லா காதலும் நல்ல நட்பில் இருந்து தான் உருவாகும். ஏதோ ஒரு கணத்தில் நமக்கு படிப்பிலும் / தோழமையிலும் நல்ல துணையாக இருக்கும் இந்த பெண் வாழ்க்கை துணையாக வந்தாள் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. மேலே சொன்ன நண்பனின் track-ம் இதற்கு parallel-ஆக தான் போய்க்கொண்டு இருந்தது. அது பொறியியல் கல்லூரியின் கடைசி வருடம். அந்தப் பெண்ணும் அவள் கல்லூரி வாழ்க்கையின் கடைசி வருடத்தில் இருந்தாள். எப்படியும் படிப்பு முடிந்தவுடன் கல்யாணப்பேச்சு எடுத்துவிடுவார்கள் என்று தெரியும். எனவே என் மனதில் பொறியியல் முடித்தவுடன் ஏதாவது ஒரு வேலைக்கு சென்று இல்வாழ்க்கையை துவங்க தயாராக வேண்டும் என்று நினைத்தேன். அதனால் மேல்படிப்புக்கு விண்ணப்பிக்க என் அப்பா சொன்னபோது மாட்டேன் என்று சொல்லி ஒரு ரகளையே நடந்தது. அவளது பிறந்தநாளில் என் மனதை புரியவைத்தேன், ஆனால் அதற்குப் பிறகு அந்தப்பெண் என்னோடு பேசுவதையே நிறுத்திவிட்டாள்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘உன்னை கல்யாணம் செய்துக்கொள்ள பிடிக்கவில்லை” அல்லது “எனக்கு அது போன்ற எண்ணம் வரவில்லை” அல்லது “உனக்கு தைரியம் பத்தவில்லை” என்று காரணம் எதுவாகினும் நேரடியாக சொல்லி முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள கொஞ்ச நாள் பிடித்தது. அதே சமயத்தில் தான் எனது நண்பனுடனான நட்பு மிகவும் Rough patch-ல் போய்க்கொண்டு இருந்தது. கிட்டத்தட்ட வாழ்க்கையில் உறவுகள் மீது நம்பிக்கையே இழக்குமளவுக்கு இருந்த காலக்கட்டம் அது. இது நடந்த 1-2 மாதங்களுக்கு பிறகு அந்த நண்பனுடனான உறவும் முறிந்தது. சில மாதங்களுக்கு பிறகு அந்தப் பெண்ணும் தன்னுடைய கல்லூரி சீனியர் ஒருவனை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் மதம் மாறி கல்யாணம் செய்துகொண்டாள். இது நடந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது.

நான் காலம் முழுவது கூட வரவேண்டும் என்று ஆசைப்பட்ட இந்த இரண்டு உறவுகளிலும் ஒரே நேரத்தில் நிராகரிக்கப்பட்டது போல தோன்றியது. எனவே எனது கோபம் இந்த இருவரின் மீதும் திரும்பியது. அந்தப் பெண் மீது அவ்வளவு காட்டம் வரவில்லை, ஒருவேளை பழைய feelings-களின் பாதிப்பாக இருக்கலாம், எனினும் மன்னிக்க மனம் வரவில்லை. ஆனால் அந்த நண்பன் மீது பயங்கர கோபம். முன்பு சொன்னது போல காலப்போக்கில், நமது அன்பு உண்மை தானா என்று அலசி ஆராய்ந்தபோது, எதையும் மறந்து, மன்னிக்கும் பக்குவம் வந்தது. அந்தப்பெண்ணை மீண்டும் சந்திக்க வாய்ப்பு வரவில்லை, தேடிச்சென்று பார்க்கும் அளவுக்கு துடிப்பில்லை. ஆனால் பார்க்க நேர்ந்தால் ஒளிந்துக் கொள்ளமாட்டேன். ஆனால் அந்த நண்பனை மீண்டும் சந்தித்தபோது நான் முன்னோக்கி நகர்ந்துவிட்டது போல அவனும் போகவில்லை / ரொம்ப தாண்டி போய்விட்டான் என்று தோன்றியது. மீண்டும் அந்த பழைய அன்னியோனியம் வரவாய்ப்பில்லை என்று தெரிந்தது. ஒரு சராசரி உரையாடல் கூட நிகழ்த்தமுடியவில்லை. எனினும் எனக்கு கோபம் எல்லாம் வரவில்லை. காலம் தந்த அனுபவங்கள் - நல்லது / கெட்டது; உயர்வு / தாழ்வு; வெற்றி / தோல்வி எல்லாம் ஒரு relative term என்பது புரிந்தது. எனவே உறவில் யாரையும் நல்லவர்கள் என்றோ கெட்டவர்கள் என்றோ முத்திரை குத்த இயலவில்லை. ’நம்மோடு ஒத்துப்போகவில்லை, அவ்வளவு தான்’ என்று வெறுப்பில்லாமல் நகர்ந்து கொள்ள உதவியது இந்த இரு உறவுகள் தாம்.

எனது மிக நெருங்கிய நண்பர்களுக்கு நான் யாரை மிகவும் ”சிலாகித்து” குறைபட்டுக்கொள்கிறேனோ அவர்களிடம் இருந்து அன்பு திரும்ப கிடைக்காமல் இருந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரியும். காரணம் எனக்கு யாரோடு ஒத்துப்போகவில்லையோ அவர்களை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டேன். The best way to insult a person is to ignore them. இன்னும் கூட சில சமயங்களில் சிலரை “குறை” சொல்ல தோன்றும், எனினும் பெரிதாக குறை ஒன்றும் இல்லை. இந்த உறவுகள் தந்த அனுபவங்கள் என்னை மேலும் ”இலை மேல் நீராக” பக்குவப் படுத்தி இருப்பதால், நான் ’குறை சொல்ல’க் காரணம் எதுவும் இல்லை. இப்போது எனது திருமண வாழ்க்கையில் அந்த அனுபவங்களை உபயோகித்து கொஞ்சம் smooth-ஆக போய்க்கொண்டு இருக்கிறேன். இப்போது தொடர்பில் இல்லை என்றபோதும், அந்த பழகிய நாட்களின் இனிமையான நினைவுகள் இன்னும் சந்தோஷம் கொடுப்பதாகவே இருக்கிறது. எனவே இன்று பிறந்த நாள் காணும் எனது நண்பனுக்கு, ஒரு வெற்றிகரமான நடிகரின் பிறந்தநாள் அன்று பிறந்தநாள் காணும் அந்த தோழிக்கும், எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு.

{oshits} வாசகர்கள் எனது இந்த பேத்தலை படித்துள்ளார்கள்.... ஹா! ஹா! ஹா!