Tamil
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

{mosimage}

ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் வந்துள்ள உண்மையான பசங்க படம்.. தமிழில் ராமநாராயனன் இயக்கத்தில் பாம்பு, மாடு, யானைகளோடு ஷாம்லி நடித்த படங்களை தவிர்த்துவிட்டு கடைசியாக எப்பொழுது ஒரு mainstream குழந்தைகள் படம் வந்தது என்று யோசித்தால் நினைவுக்கு வருவது மணிரத்னத்தின் ‘அஞ்சலி’ தான். அதில் கூட குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறிய நடவடிக்கைளோடு கொஞ்சம் கூடுதலாகவே கடுப்படித்து இருந்தனர். சமீபத்தில் எந்த வித முகாந்திரமும் அல்லது பரபரப்பும் இல்லாமல் இறங்கிய ‘பசங்க’ தமிழின் நல்ல பசங்க திரைப்படத்தில் ஒன்றாக காலத்துக்கும் பெயர் பெற்று நிற்கும். இந்த பதிவுக்கு போகும் முன்பு இதன் தயாரிப்பாளர் சசிகுமாரிடமும், இயக்குநர் பாண்டிராஜிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்தை நான் இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்து பார்த்தேன். இது போன்ற நல்ல முயற்சிகளுக்கு ஆதரவு தராவிட்டால் எப்படி நாமும் நல்ல படங்களை எதிர்பார்க்கமுடியும்? ஆனால் இந்த ‘பசங்க’ படம் இங்கே துபாயில் வெளியாகவில்லை. எனவே எனக்கு வேறு வழியுமில்லை.


இந்த படம் பார்க்கும் நம் எல்லோரையும், குறிப்பாக என் போன்ற சிறிய நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களை நம் குழந்தை பருவத்துக்கு நம்மை வழிநடத்திச்செல்லும். கொஞ்சமும் sophistication புகாத அந்த அப்பாவித்தனம் நிறைந்த பள்ளிக்கூடங்கள், படிப்பு சொல்லித்தருவதை கடவுளாக மதித்த ஆசிரியர்கள், அவர்களை பார்த்து பயந்தும், மரியாதை செய்தும் அடங்கி ஒடுங்கி இருந்த மாணவர்கள், பக்கத்து வீடுகளில் இருந்தவர்களுடன் வம்பு பேசியும், குடும்பமாக கூடி வாழ்ந்த தொலைக்காட்சி புகாத காலம், சிறியவர்களாகவே நடந்துக்கொண்ட பிள்ளைகள்... என நம்மை வாழ்க்கை எளிமையாகவும், இனிமையாகவும் இருந்த அந்த காலத்துக்கு கொண்டு போகிறது இந்த ‘பசங்க’. இன்றும் என்னை பொறுத்தவரை வாழ்க்கை மிச்சமிருப்பது கிராமங்களிலும், சிறிய நகரங்களிலும் தான். பட்டணங்களில் வாழ்க்கை இயந்திரத்தனமாக மாறிவிட்ட கொடுமையை வாய் மூடி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ’பசங்க’ படத்தின் கதைக்களமும் அத்தகைய ஒரு சிறிய ஊரில் - காரைக்குடி மாவட்டத்தில் திருமயத்துக்கு அருகே உள்ள விரச்சாலையில்.

{mosimage}கதையின் நாயகர்கள் - ஜீவா (ஸ்ரீராம்) மற்றும் அன்புக்கரசு (கிஷோர்), இருவரும் 6வது வகுப்பு மாணவர்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக அரசு பள்ளிக்கு மாற்றிக்கொண்டு வரும் அன்புக்கரசு தன் தன்மையான பழகும் விதத்தால் ஆசிரியர்கள் (ஒருவர் ஜீவாவின் தந்தை), ஜீவாவின் மாமன் மகள் என அனைவரையும் கவர்ந்துவிட, ஜீவாவின் செல்வாக்கு, க்ளாஸ் லீடர் பதவி எல்லாம் பறிபோகிறது. ஜீவாவும், அன்புவும் ’அக்னி நட்சத்திர’மாக முட்டிமோதிக்கொள்ள, ஜீவாவின் சகோதரி செவப்புகண்ணி என்கிற கோப்பெருந்தேவியும் (’சரோஜா’ வேகா), அன்புவின் சித்தப்பா மீனாட்சி சுந்தரமும் (விமல்) காதல் கொள்கின்றனர். சிறுவர்களின் பகை பெரியவர்களையும் பாதிக்க, என்ன நடக்கிறது என்பது தான் மீதிக்கதை.

படம் முழுக்க எளிமையும், நல்ல செய்திகளும் பரவிக்கிடக்கின்றன. ஆனால் அவை ‘போதனை’ என்கிற ரீதியில் சொல்லப்படாமல், வெகு இயல்பாக அந்த செய்திகள் படம் பார்ப்பவர்களை எட்டியிருப்பது அழகு. ஜீவாவின் பெற்றோர்களின் சண்டை எப்படி குழந்தைகளின் படிப்பை, பள்ளி வாழ்க்கையை பாதிக்கிறது என்பதையும், குழந்தைகளுக்காக பெற்றோர்கள் தங்கள் கெட்ட பழக்க பழக்கங்களை விடவேண்டும் என்பதை ஆசிரியர் சிகரட்டை விடுவது என அழகான செய்திகள் நம் மனதை தொடுகிறது. அன்பு தன் தங்கைக்காக ஜீவாவை மொத்தும் காட்சிகளில், எனக்கு நிறைய குற்ற உணர்ச்சி தோன்றியது. நானும் என் தங்கையும் ஒரே பள்ளியில் படித்தபோதும், நான் அவளை பெரிதாக கண்டுக்கொள்ளவே இல்லை. அவள் மதியம் என்னோடு சாப்பிட வரும்போது எல்லாம் (நான் என் வகுப்பு பசங்களோடு தான் சாப்பிடுவேன்) நான் அவளை ’நீ உன் க்ளாஸ் பிள்ளைகளோடு சாப்பிடவேண்டியது தானே’ என்று எரிந்து விழுந்து உதாசீனப்படுத்தி இருக்கிறேன். Ofcourse இப்போது இருவரும் நல்ல நண்பர்கள் என்ற போதும், இது வரை அவளிடம் நான் மன்னிப்பு கேட்டதில்லை. அதற்கெல்லாம் சேர்த்து இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

{mosimage}

இதில் ஊடாக வரும் காதல் கதை மிக இயல்பாக நினைத்தாலே இனிக்கிற வகையில் அமைந்திருப்பது ஒரு ஜிலீர் அனுபவம். சரோஜா படத்தில் பணக்கார நகரத்துப் பெண்ணாக வந்த வேகா, இதில் சிவப்பு கண்ணியாக மிக யதார்த்தமாக இருக்கிறார். கலர் மட்டும் கொஞ்சம் கம்மியாக இருந்திருந்தால் நிச்சயம் இது காரைக்குடி பொண்ணு என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்திருக்கலாம். அத்தனை நேர்த்தியான தோற்றம் மற்றும் வாயசைப்பு. மீனாட்சியாக வரும் விமலும் நல்ல தேர்வு. வெள்ளந்தியான சிற்றூர் பையனாக அசத்தியிருக்கிறார். அந்த ரிங்டோன் மூலமாக தங்களின் காதலை வெளிப்படுத்திக்கொள்வது கவிதை. காதலுக்கு ஞாபகார்த்தமா ஒரு பாலிசியாவது எடேன் ஒன்று காதலியை தாஜா செய்வது நல்ல நகைச்சுவை. எனக்கு மற்ற குணச்சித்திர நடிகர்களின் பெயர்கள் தெரியவில்லை, அதனால் குறிப்பிட்டு எழுதமுடியவில்லை. எப்போதும் சண்டை போட்டுக்கொள்ளும் அன்புவின் பெற்றோர்களும், பாந்தமான ஜீவாவின் பெற்றோர்களும், பக்கடாவும், கண்ணாடி போட்ட தோழன் என் அனைவரும் பிரமாதமாக பின்னியுள்ளனர். சொல்லப்போனால் இன்றைய ‘தேர்ந்த’ நடிகர்கள் அனைவரும் இந்த படத்தை பார்த்து இயல்பாக நடிப்பது என்றால் என்ன என்று படித்துக்கொள்ள வேண்டும்.

{mosimage}

பசங்க படம் என்று மேம்போக்காக செயல்படாமல் துடைத்து வைத்தது போன்ற பளிச் காட்சியமைப்புகள் (ஜூலை, அக்டோபர், ஏப்ரல்... என வெயில், மழைக்காலம் முதலிய பருவகாலங்களையும், அதன் நிறச்சேர்க்கையும்) , அற்புதமான கேமிரா கோணங்கள், ஸ்லோ மோஷன் காட்சிகள், நறுக்கான படத்தொகுப்பு, ஜேம்ஸ் வசந்தனின் இசை மற்றும் ரொம்ப நாளுக்கு கழித்து பாலமுரளிகிருஷ்ணாவை பாடவைத்திருப்பது என்று டெக்னிக்கலாக பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறனர் இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் தொழில்நுட்ப குழு. குறை என்று பார்த்தால் கடைசியில் கொஞ்சம் சினிமாத்தனமாக இருக்கும் க்ளைமேக்ஸ் காட்சி தான். அதில் வந்த கூட்டு பிரார்த்தனை காட்சியில் கூட எனக்கு கொஞ்சம் கண்ணீர் முட்டிக்கொண்டது. அதனால் மன்னித்துவிடலாம்.

‘பசங்க’ படம் எல்லாரும் பார்ப்பது தமிழ் சினிமாவை நல்ல பாதைக்கு இட்டுச்செல்வதை வழிவகுக்கும். சுப்ரமணியபுரத்துக்கு அப்புறம் மிக துணிச்சலாக தயாரித்த இயக்குநர் சசிக்குமாருக்கும், வித்தியாசமாக யோசித்த இயக்குநர் பாண்டிராஜுக்கும் பெரிய பாராட்டுக்கள். இந்த படத்தை பார்த்தப்புறம் பேசாமல் மீண்டும் ஏதாவது சிறிய ஊருக்கு போய் செட்டில் ஆகி, மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிடலாம் என்ற யோசனை தீவிரமாக வருகிறது. போனாலும் போய்விடுவேன் என்று தான் தோன்றுகிறது. ஹா! ஹா! ஹா!

{oshits} வாசகர்கள் இந்த பதிவை படித்துள்ளனர்...