Miscellaneous
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சரஸ்வதியின் சபதம்எழுத்தாளர் / நடிகர் / இயக்குநர் / அரசியல் விமர்சகர் ‘சோ’வின் இந்த நாடகம் (தற்போது புத்தகமாக) கிட்டத்தட்ட 80-களின் இறுதியில் டி.டி-1 தொலைகாட்சியில் ஞாயிறு காலை தொடராக வந்தது. அப்போது தமிழ் சினிமா தாய்மார்கள் மற்றும் பாமரர்களின் கையில் இறுக்கமாக மாட்டிக்கொண்டிருந்த சமயம். எனவே லாஜிக் என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு அபத்தங்களின் கலவையாக திரையில் மயக்கிக்கொண்டு இருந்தது தமிழின் வணிகரீதியான சினிமா. இந்த நாடகம் மூலம் எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொண்டு தங்களை நாடி வந்த தயாரிப்பாளர்களையும், சினிமா ரசிகர்களையும் ஏமாற்றிக்கொண்டு பிழைப்பு நடத்திக்கொண்டு இருந்த கதாசிரியர்களை ஒரு பிடி பிடித்து இருந்தார் சோ அவர்கள். இந்த (நாடக) புத்தகத்தை யதேச்சையாக தான் பார்த்தேன் & வாங்கினேன். ஏற்கனவே தொடராக பார்த்திருந்தாலும், படிக்க படிக்க சுவாரசியமாகவே இருந்தது இந்த ‘சரஸ்வதியின் சபதம்’. தொலைகாட்சி நாடகம் 13 வாரங்களுக்கு நீண்ட காரணத்தால் மேலும் சில சுவாரசியமான சம்பவங்களை சேர்க்க முடிந்தது சோ-வுக்கு. எனவே மேடை நாடகத்தின் பதிப்பான இந்த புத்தகத்தில் அந்த சம்பவங்கள் எல்லாம் இல்லாதது கொஞ்சம் வருத்தமே.

எழுத்தாளர் தாஸானுதாஸன் (கண்ணதாசன் / பாரதிதாசன் போல பெரிய புலவர்களுக்கும் யாராவது தாசனாகிவிட்டார்கள்... நான் தாசனாக யாரும் மிஞ்சவில்லை... அதனாலே தாசர்களுக்கு எல்லாம் தாசனாகிவிட்டேன்’) தயாரிப்பாளர் அமர்நாத், இயக்குநர் கதிரேசனுக்கு தன் கதையை திரைக்கதையை உணர்ச்சிபொங்க சொல்லிக்கொண்டு இருக்கிறார் தாஸானுதாஸன். அந்த சம்பவங்கள் நமக்கு காட்சிகளாக விரிகிறது. 80-களில் சினிமாவை ஆட்டிப்படைத்துக்கொண்டு இருந்த ‘பரம்பரை வியாதி’, ‘ஏழை, வேலையில்லாத ஆனால் நல்லவனான கதாநாயகன்’, ‘காதலிக்க மட்டுமே தெரிந்த கதாநாயகி’, ஒரு முட்டாள் வில்லன், உயில் எழுத மட்டுமே படித்த வக்கீல், ‘யாரும் உரக்க பேசக்கூடாது’ என்று மட்டுமே சொல்லத்தெரிந்த டாக்டர்... என stereotype-களின் கலவையாக ஒரு நகைச்சுவை நாட்கத்தை கொடுத்து இருக்கிறார் சோ.


’சோ’ ராமஸ்வாமிதயாரிப்பாளர் அமர்நாத்துக்கு எழுத்தாளர் தாஸானுதாஸன் சொல்லும் கதையில் “வயதான கிழவர் குலசேகரனுக்கு ‘தொண்டையில்’ அப்பெண்டிசைட்டிஸ், அதனால் ஓயாமல் இறுமிக்கொண்டு இருக்கிறார். சாவின் வாயிலில் இருக்கும் அவருக்கு சச்சு என்கிற சரஸ்வதி தான் ஒரே பேத்தி. ஜெயராஜ் என்கிற முறை மாமன் (வில்லன்) இருந்தாலும், கதாநாயகிக்கு லட்சணமாக நாயகன் ஏழை ரமேஷை காதலிக்கிறாள். தாத்தாவின் சொத்தை தர்மத்துக்கு போகாமல் தடுக்க நரேஷை தாத்தாவின் இறந்த மகனின் மறுஜன்மமாக வீட்டுக்குள் கொண்டுவருகிறான் ரமேஷ். புத்திசாலியான வில்லன் தாத்தாவை கொலைசெய்துவிடுகிறான்......” இந்த அபத்தத்தை பொறுக்கமுடியாமல் கடவுள் சரஸ்வதி, இது போன்ற அபத்த எழுத்தாளர்களை தண்டிப்பதாக சபதம் செய்து, அத்தனை கதாபாத்திரங்களையும் உயிர்ப்பித்து தாஸானுதாஸனின் வாழ்க்கையில் குறுக்கிடவைக்கிறாள். அடுத்து என்ன நடக்கிறது என்பது தான்” இந்த புத்தகத்தின் மீதி.

ஓரளவுக்கு மாறி வந்திருக்கும் தற்கால சினிமாவுக்கு இந்த நாடகம் கொஞ்சம் outdated-ஆக இருந்தாலும், இன்னும் இது போன்ற அபத்தங்களில் இருந்து தமிழ் சினிமா மீளாமல், குறிப்பாக இது போன்ற கதைகளை எழுதும் கத்துக்குட்டி எழுத்தாளர்கள் வெற்றிகரமாக உலாவிவருவதையும் மறுப்பதற்க்கில்லை. எனவே படிக்கும்போது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது இந்த புத்தகம்.

இந்த நாடகத்தை ஏற்கனவே பார்த்து இருந்தாலும் / இல்லையென்றாலும் இந்த புத்தகம் படிப்பவர்களை சிரிக்கவைத்து, சினிமாவின் அபத்தத்தை குறித்து சிந்திக்கவும் வைக்கிறது. எனவே நீங்கள் இந்த புத்தகத்தை மிகவும் ரசிப்பீர்கள் என்பது உறுதி.

பதிப்பாளர்கள்: அல்லையன்ஸ் பதிப்பகத்தார், மயிலாப்பூர், சென்னை
பக்கங்கள்: 116
விலை: ரூ. 36/-
இதுவரை இந்த பதிவை படித்த வாசகர்கள்: {oshits} - உங்களுடன்.