Miscellaneous
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஸ்டெல்லா புரூஸ்இது மறைந்த எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸின் புத்தகங்களில் ஒன்று. அவருடைய பல (சற்றே பெரிய) சிறுகதைகளின் தொகுப்பு இந்த புத்தகம் & மீண்டும் அந்த ஞாபகங்கள்' என்பது அந்த ஒரு சிறுகதைகளில் ஒன்று. பல கதைகள் இருப்பினும் நம் மனதில் சட்டென ஒட்டிக்கொள்வது இந்த 'மீண்டும் அந்த ஞாபகங்கள் தான்'. அத்தனை கதைகளிலும் இது மட்டுமே காதல் கதை. மற்றவை அனைத்தும் மனிதத்துவத்தின் பல்வேறு நிலைகளில் தனிமையின் தாக்கத்தை கூறுபவை. பொதுவாகவே ஸ்டெல்லா புரூஸின் எழுத்துக்களில் தனிமை கொஞ்சம் தூக்கலாகவே இழைந்தோடும் எனவே இந்த சிறுகதைகள் மட்டும் அதற்கு விலக்கல்ல. இருப்பினும் நம் மனதை பாறாங்கல் போல அழுத்தும் melodrama அல்ல. படித்து முடித்ததும் நாம் அந்த மனிதர்களை நம் அண்டை அயலாரிலேயே பார்க்கலாம். இந்த புத்தகத்தில் மொத்தம் 6 சிறுகதைகள் உள்ளன.இது திரு. ஸ்டெல்லா புரூஸின் கடைசி எழுத்துக்களில் ஒன்று என்கிற நினைப்பே நம் மனதில் பாரம் ஏற்றுகிறது.

 

1. மீண்டும் அந்த ஞாபகங்கள்:-
இது ஸ்டெல்லாவின் classic-ஆன 'அது ஒரு நிலாக்காலம்' நாவலின் முன்னோடி (prequel). எப்படி ராம்ஜியும், சுகந்தாவும் சந்தித்தார்கள் மற்றும் காதலில் விழுந்தார்கள் என்பதை ராம்ஜியின் பார்வையில் அழகாக கொண்டு போயிருக்கிறார். காதல் கொண்ட இளைஞனின் பார்வையில் நகர்வதால், தான் விரும்பிய பெண்ணின் கவனத்தை ஈர்க்க, வளைக்க, அவளிடம் பேச செய்யும் பிரயத்தினங்கள் சுவாரசியமாக இருக்கின்றன. அதனினும் சுவாரசியம் என்னவென்றால் இது ராம்ஜியும் சுகந்தாவும் அப்போது நடந்த நிகழ்ச்சிகளையும் நினைவு கூர்ந்து சிலாகிப்பதாக இருக்கிறது. அதே நிகழ்ச்சிகளை பின்னர் சுகந்தாவின் பார்வையில், அவளுக்கு என்ன தோன்றியது என்பதையும் நடுவில் கூறப்படுவதால் அழகாகவே இருக்கிறது. காதலிக்கும் இளைஞர்களுக்கு இந்த புத்தகம் ஒரு பைபிள் என்றே கூறலாம். கடைக்கண் பார்வைகளில் செய்திகள் பரிமாறப்படுவதும், அந்த ஒரு கடைக்கண் பார்வைக்காகவே பல மணிநேரங்கள் செலவழிக்கப்படுவதும் என இந்த சிறுகதை முழுவதும் இளமை வழிந்தோடுகிறது. ஒரு stand alone புத்தகமாகவும் இந்த ‘மீண்டும் அந்த ஞாபகங்கள்' works. எனினும் இது ‘அது ஒரு நிலாக்காலம்' நாவலின் முற்பாகம் என்ற ஒரே காரணத்தாலேயே ‘மீண்டும்...' ஒரு மரியாதையை பெறுகிறது. ஏனென்றால் பஸ்ஸில் சைட் அடிக்கும் ஒரு காவாலித்தனமான இளைஞனின் கதை என்று வெகு எளிதாக தள்ளப்படக்கூடிய ஆபத்தை ‘அது ஒரு நிலாக்கால'த்தில் சொல்லப்பட்ட ராம்ஜி-சுகந்தாவின் தீவிரமான காதல் என்ற கவசம் போக்கிவிடுகிறது. அதனால் ‘அது ஒரு நிலாக்காலம்' படித்தவர்களுக்கு இந்த ‘மீண்டும் அந்த ஞாபகங்கள்' ஒரு ஸ்பெஷல், இருந்தாலும் அதை படிக்காதவர்களுக்கு கூட இந்த கதை பிடிக்கும்.

2. கடலடியில் சில காலடிகள்
பெயரே கொஞ்சம் வித்தியாசமான கதை. அது என்ன கடலுக்கு அடியில் காலடிகள் கிடைக்குமா? தண்ணீரில் அழிந்து போயிருக்காதா? மனித மனம் என்பது கடலாழம் என்று சொல்லப்படுவது வழக்கம். என்ன தான் சந்தோசமான, வெற்றிகரமான மனிதனாக இருந்தாலும் அவனுடைய மனதின் ஆழத்தில் கூட சில நினைவுகள் தம் சுவடுகளை விட்டுபோயிருக்கும். அப்படிபட்ட ஒரு மனிதனான பழனிச்சாமி தன் கிராமத்தை விட்டு வந்து 12 வருடங்கள் ஆகியும் கிராமத்துக்கு போகாமல் தனியாக பட்டணத்து லாட்ஜ் ஒன்றில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறான். ஒரே லாட்ஜிலேயே, ஒரே அறையிலேயே 12 வருடங்கள் வாழும் பழனிச்சாமி, தீபாவளி, பொங்கல் சமயங்களில் லாட்ஜ்வாசிகளுக்கு ஏற்படும் பரபரப்பு ஒரு புரியாத புதிராகவே, ஆச்சரியமூட்டுவதாகவே இருக்கிறது. சில சம்பவங்கள் பழனிச்சாமியின் இந்த துறவு நிலையை அசைத்துவிட, தன் சொந்த வேர்களை தேடி ஒரு பொங்கலில் தன் பயணத்தை துவங்குவதாக முடிகிறது. என் போன்ற தனிமை விரும்பிகள் எளிதாக புரிந்துக்கொள்ளக்கூடிய கதாபாத்திரம் இந்த பழனிச்சாமி. இதுவும் பழனிச்சாமி என்கிற தனிமனிதனின் பார்வையிலேயே நகர்வதால் வாழ்க்கைக்கு ஒரு வித்தியாசமான கோணம் கிடைக்கிறது. கடைசியில் பழனிச்சாமி பொங்கலுக்கு ஊருக்கு கிளம்பும்போது நம்மையும் அறியாமல் ஒரு சந்தோஷம்.

3. கல்யாண ராமனின் கதை
இது கொஞ்சம் நகைச்சுவையான அதே சமயம் ஒரு தனிமனிதனின் ஆற்றாமை கதை. புத்தகப்புழுவான கல்யாணராமனுக்கு, பெண் எழுத்தாளர்கள் என்றால் ஒரு தனி பிரியம். அதிலும் எழுத்தாளினி கல்பனா என்றால் இன்னும் கூடுதல் பிரியம். கல்பனா திருமணமானவள் என்று தெரிந்த பின்பு கொஞ்சம் சோர்வுற்றிருக்கும் கல்யாணராமனுக்கு கல்பனாவின் தங்கையை தன் திருமணத்துக்கு பார்க்கிறார்கள் என்று தெரிந்தவுடன் அவ்வளவு சந்தோஷம். எதிர்பாராத சில சம்பவங்களால் கல்யாணராமன் கல்பனாவை தன் ஜென்ம சத்ருவாக பாவித்து, அவளை எதிர்த்து கதைக்களத்தில் எழுத்தாளனாக களமிறங்குகிறான். கொஞ்சம் நகைச்சுவையான கதை என்றாலும், மனிதர்களின் எதிர்பார்ப்புக்களும், அவை பொய்க்கும்போது நிகழும் போராட்டங்களும் யதார்த்தத்தில் இருந்து விலகாமல் இருக்கின்றது. நல்ல சுவாரசியமான முடிவும் கூட. ஸ்டெல்லா புரூஸின் நகைச்சுவை பக்கத்தை இந்த சிறுகதையில் காணலாம்.

4. ஒரு திரைப்படம் முடிந்துவிட்டது.
இந்த மொத்த சிறுகதை தொகுப்பிலுமே நம் மனதை பாரமாக அழுத்துவது இந்த கதை தான். ஒரு தரமான குறும்படத்துக்கான எல்லா அம்சங்களும் நிறைந்த கதை இது. தாய்மையின் மேன்மையை, அதிகம் செலுத்தப்படும் அன்பு நஞ்சாகும் ஆபத்தை மிகவும் யதார்த்தமாக சொல்லும் சிறந்த கதை இது. சிறிய வயதில் கணவனை இழந்த பட்டம்மாளுக்கு தன் மகன் கதிரேசன் மீது அளவு கடந்த அன்பு. அதை அன்பு என்று சொல்வதை விட பற்று / வெறி என்று என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அத்தகைய பட்டம்மாள் தன் மகனை கடைசி வரை குழந்தையாகவே பாவிப்பதால் நேர்ந்த விபரீதத்தை நம் மனசு கொள்ளை போகும் விதமாக கூறுகிறார். கடைசியில் அதே தாயே தன் மகனுக்கு உடம்புக்கு ஏதாவது வரவேண்டும் என்று வேண்டும் அளவுக்கு நிர்பந்திக்கப் படுவதையும் நம்மால் உணர்ந்துக்கொள்ள முடிகிறது. வயதான காலத்தில் தனிமை படுத்தப்படும் நிகழ்வுகள் காலம் காலமாக நடைபெற்று வந்தாலும், தன்னுடைய முத்திரையை பதித்து எழுதியிருக்கிறார் ஸ்டெல்லா புரூஸ்.

5. சொந்தத்தில் கல்யாணம்
சொந்தத்தில் திருமணம் செய்துக்கொள்ளும் ஒரு இளைஞனின் ஏக்கக்கதை இது. பெரியவர்களின் நிர்பந்தத்தால் சொந்த மாமா பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளும் அவன், தன் கல்யாண வாழ்க்கையில் புது மாப்பிள்ளை, புது மாமனார் என்ற Novelty factor-ஐ இழந்து தன் திருமண வாழ்க்கியில் இல்லாத சுவாரசியத்தை, தினசரிகளில் வரும் மணமகன் தேவை விளம்பரங்களில் தேடுவதாக முடிகிறது. கதையில் ஒரு மெல்லிய சோகம் இழைந்தோடினாலும், படிக்கும் போது அவ்வப்போது நம் உதடுகளில் மெல்லிய புன்னகையை ஒட்டவைக்கிறது இந்த ‘சொந்ததில் கல்யாணம்'

6. காணக்கிடைக்காத உண்மைகள்
உடலுக்கு மட்டுமே இறப்பு உண்டு, உயிருக்கு இல்லை என்கிற வேதாந்தத்தை அல்லது நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது இந்த சிறுகதை. தந்தையாரின் மரண செய்தி கிடைத்ததிலிருந்து காரியங்கள் முடிகின்றவரை நிகழும் சம்பவங்களின் தொகுப்பாக இதன் பெயரில்லாத lead character மூலம் கொண்டு போயிருக்கிறார்.

பதிப்பகத்தார்: கலைஞன் பதிப்பகம்; 10 கண்ணதாசன் சாலை; தியாகராய நகர்; சென்னை - 600 017.
பக்கங்கள்: 192
விலை: ரூ. 36/-