Yandamoori Virendranath
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எண்டமூரி விரேந்திரநாத்தெலுங்கில் ‘ப்ரேமா’ என்ற பெயரில் எழுதப்பட்டு தமிழில் கௌரி கிருபானந்தன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள எண்டமூரியின் இந்த நாவலை நான் ஏற்கனவே படித்து இருக்கிறேன் ஆனால் சரியாக நினைவில்லை. இம்முறை மீண்டும் படித்தபோது எனக்கு பிடித்து இருந்தது. தலைப்பு ’காதல் எனும் தீவினிலே’ என்றிருந்தாலும், என்னை பொருத்தவரை இது வழக்கமான காதல் கதை என்று ஒதுக்கிவிடமுடியாது. மனிதர்கள் பரஸ்பரம் வைக்கும் அன்பை, எதிர்பார்ப்பு இல்லாமல் ஒரு லட்சியத்துக்காக வைக்கப்படும் அன்பை, நம்பிக்கையை அழகாக விவரிக்கிறது இந்த நாவல். It worked for me for various reasons - ஒரு எளிமையான கிராமத்தில் வாழும் எளிமையான மக்களிடையே நடக்கும் நாவல் என்பதால் எழுதப்பட்ட நடையும் மிக எளிமையாக இருக்கிறது. எனினும் கதை உலகளாவிய phenomenon-ஆன ஆழமான அன்பை பற்றி கொஞ்சம் complex-ஆகவே இருக்கிறது.

ஒரு அழகான மாலை வேளையில் ஆதித்யபுரம் வந்து இறங்கும் வேதசம்ஹிதா என்கிற இளம்பெண் தனக்கு அந்த ஊரில் தங்குவதற்கு வீடு வேண்டும் என்று கேட்பதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. யார் இந்த சம்ஹிதா, எதற்காக இப்படி முன்பின் தெரியாத கிராமத்தில் வந்து வீடு கேட்கிறாள் என்று நமக்கு ஒரு குறுகுறுப்பு ஏற்படுகிறது. சிறிது நாட்கள் கழித்து அந்த ஊருக்கு அவள் கணவன் என்று சொல்லிக்கொண்டு அபிஷேக் வர, the plot thickens. இதனிடையில் சம்ஹிதாவை காதலிப்பதாக சரவணனும், அருணும் கூற கதை நாற்கோணமாக விரிகிறது. யார் இந்த சம்ஹிதா என்பதை அவளை படைத்த பிரம்மா மற்றும் சரஸ்வதியின் வாயிலாக கோடி காட்டியிருப்பது ஒரு சுவாரசியமான அனுபவம்.

‘காதல் எனும் தீவினிலே’-வில் எண்டமூரி மனித பந்தங்களை அக்குவேறு ஆணிவேறாக அலசியிருக்கிறார். இந்த நாவலில் ‘ஆந்த்ரோபோலஜி’ எனப்படும் மனிதவியல் ஆராய்ச்சி இந்த கதைக்கு ஏற்ற பின்புலம். மனித உறவுகளின் ஆதியையும், அதன் பரிணாம வளர்ச்சியையும், கலாச்சார வளர்ச்சியுடன் அன்பு எத்தகைய வடிவங்களை எடுத்தது என்பதையும், அழகாக எழுதியிருக்கிறார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ராதாகிருஷ்ண காதையில் காதலுடன் சிருங்காரமும் இயல்பாக எழுதப்பட்டது போல தற்காலத்தில் காதல் தனியாகவும் மற்றும் சிருங்காரம் காணாமல் போனது ஏன் என்ற கேள்வியை எழுப்பிவிட்டு, பதிலை நம் போக்குக்கு விட்டிருப்பது மாஸ்டர் ஸ்ட்ரோக். ’காதல் எனும் தீவினிலே’யில் காதலுக்கும் ஈர்ப்புக்கும் உள்ள வித்தியாசத்தை பாரதி மற்றும் சரவணன் மூலம் தன்னால் முடிந்த அளவுக்கு எளிமையாக சொல்லியிருக்கிறார் எண்டமூரி. அவ்வப்போது சந்தோஷமில்லாத திருமண வாழ்க்கையை போலித்தனமாகவேனும் தொடரவேண்டும் என்கிற உலக நியதியை படைத்த பிரம்மா மற்றும் சரஸ்வதியின் மூலமாகவே சாடியிருக்கிறார்.

இருப்பினும் இந்த நாவலை மூடிவைத்த பின்பு நம் மனதில் நிறைந்து நிற்பது சக மனிதர்களுக்காக நாம் துணை நிற்கவேண்டும் மற்றும், அத்தகைய சுயநலமற்ற அன்பு என்றைக்கும் வீண்போகாது என்ற பாடங்களும் தான். இதற்கு ஊடாக காதலிக்கவும், காதலிக்கப்படவும் ஒரு ரசனையான மனது வேண்டும்... அந்த மனதில் நம்முடைய சுற்றுப்புற சூழலை, செடியை, பூவை ரசிக்கத்தெரியவேண்டும் என்ற நறுக்குதெறிக்கும் பாடமும் வாசகர்கள் மனதில் பதிகிறது. அபாச்சிகளையும், கார்டிஸ் மற்றும் ‘லயன் ஆஃப் அபாச்சியி’ன் கதையையும் சுவாரசியமாக இருக்கிறது என்ற போதும் ஒரு இடைச்செருகலாகவே தோன்றுவது கொஞ்சம் நெருடல். குறிப்பாக இந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் முழுமையாக white / black-ஆக இருப்பது கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது. நம்மை ஒரு சோகமயமான முடிவுக்கு தயார் செய்துவிட்டு, கடைசியில் எதிர்பாராத திருப்பமாக இனிமையான முடிவு தந்துவிட்டு அதிலும் ஒரு சோகமான முடிச்சு வைத்து முடித்து இருப்பது ஒரு long lasting impression-ஐ தருகிறது.

இவற்றை தவிர இதில் கொஞ்சம் நெருடுவது என்னவென்றால் இதில் வரும் பெயர்கள் இது தெலுங்கினில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட நாவல் என்பதை அடிக்கடி நினைவுபடுத்துகிறது. கௌரி இதை மொழிபெயர்க்கும்போது பெயர்களையும் தமிழ்ப்படுத்தி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ’வேதசம்ஹிதா’வின் பெயருக்கு அழகாக அர்த்தம் தந்திருந்தபோதும், அது நாவலில் ஒரு முக்கிய திருப்பத்தை தந்திருக்கும் போதும், அந்த பெயர் தெலுங்கு பெயராகவே தோற்றமளிக்கிறது. எனினும் இது போன்ற சிறு குறைகளை தாண்டி நம் மனதில் ஒரு Feel Good நாவலாக இடம்பெறுகிறது இந்த ‘காதல் எனும் தீவினிலே’

பதிப்பாளர்கள்:- அல்லையன்ஸ் ப்திப்பகத்தார், மயிலாப்பூர், சென்னை
பக்கங்கள்: 184
விலை: ரூ.xx/-
இதுவரை இந்த பதிவை படித்தவர்கள்: {oshits} வாசகர்கள்... உங்களையும் சேர்த்து....