Miscellaneous
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பாவை விளக்கு1958-ல் அகிலன் அவர்களால் எழுதப்பட்டு, பின்னர் அதே பெயரில் திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டு புகழ் பெற்ற இந்த படைப்பை சமீபத்திய 32வது புத்தக கண்காட்சியில் வாங்கினேன். Quite a volumnous book by size. உருவத்தில் மட்டுமல்ல, உணர்விலும், கருத்திலும் கொஞ்சம் கனமான புத்தகம் இது. 60களின் திரைப்படங்களை போலவே கொஞ்சம் தூக்கலான melodrama-வும், யதார்த்தமும் விரவியுள்ள படைப்பு இது. இது ஒரு message based novel இல்லை. ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை, அதிலும் ஒரு கலைஞனை, அவன் 17-18வது வயதில் இருந்து 35-40 வயது வரையான பரிணாம வளர்ச்சிகளை, உணர்ச்சிபூர்வமாக தொடர்ந்து எழுதப்பட்டது என்றபோதும் நாவல் முழுவதும் சமுதாய சிந்தனையும், அதன் தாக்கமும், கலைஞர்களின் உணர்ச்சி கொந்தளிப்புகளும் அது எப்படி அவர்களை சுற்றி உள்ளவர்களை பாதிக்கிறது என்பதும் இயல்பாக கூறப்பட்டுள்ளது. கடைசி வரை நமக்கு ஏன் இதற்கு பாவை விளக்கு என்று பெயர் வைத்திருக்கிறார் என்று புரியாவிட்டாலும், இதன் மூன்றாவது பாகத்தின் கடைசி பக்கங்களில் விளக்கம் கொடுத்து கச்சிதமாக பொருத்திவிடுகிறார் அகிலன்.

 

இன்றைய வாசகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு புரிவது போல சொல்லவேண்டும் என்றால் இது அந்த கால ‘ஆட்டோகிராப்’. தணிகாச்சலத்தின் வாழ்க்கையில் குறுக்கிடும் 4 பெண்கள் - இளம் விதவையான தேவகி, நாட்டியக்காரியான செங்கமலம், மனைவியாகும் முறைப்பெண் கௌரி, பின்னர் அவன் மீது ஆண்டாளாக உருகும் உமா... இவர்கள் குறுக்கீடு தணிகாச்சலத்தின் வாழ்க்கையில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, மேலும் இளம் வயதில் இருக்கும் வேகத்தில் தன்னை சுற்றி நடக்கும் அநியாயங்களால் பாதிக்கப்படும் தணிகாச்சலம் வயது ஏற ஏற, முதிர்ச்சி ஏற்படும்போது எப்படி எதிர்கொள்கிறான் என்று காதலும், சமூக பிரக்ஞையும் விகிதமாக கலந்து கூறப்பட்டுள்ள கதை தான் ‘பாவை விளக்கு’. இலக்கியவாதிகள் என்ற போர்வையில் கதை மோசடி செய்து திரைப்படத்துரையில் கோலோச்சும் போலி எழுத்தாளர்களிடம் நல்ல இலக்கியவாதிகள் மாட்டிக்கொண்டு துன்பப்படுவது, இன்றளவும் அன்றாட நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. கிட்டத்தட்ட ’சித்திரப்பாவை’யை போலவே, வளர்ந்து வரும் சென்னைப்பட்டணத்தில் நிகழ்ந்து வந்த கலாச்சார மாற்றத்தின் நடுவில் நடைபெறுவதாக எழுதப்பட்டுள்ளது.எனினும் இதன் நடையில் ‘சித்திரப்பாவை’யின் அழுத்தமோ அல்லது மனதில் தங்கும் நிகழ்ச்சிகளோ இல்லை.

கதை ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கிறது. ஒரு நள்ளிரவில் தணிகாச்சலத்தின் அறையில் வந்து அவன் காலை கட்டிக்கொண்டு தன்னை மணந்துக்கொள்ளுமாறு கதறும் தேவகியின் காதலை நாசூக்காக மறுப்பதில் இருந்த வேகம், கம்யூனிஸ்டாக இருந்து புரட்சியை வளர்ப்பதில் இருக்கும் சமுதாய தாகம், பின்னால் செங்கமலத்துடனான காதலில் இருக்கும் இளமை, தணிகாச்சலம் எழுத்தாளனாக உருவாகும் விதத்தில் இருக்கும் பிரமிப்பு.. என பல ரசங்கள் இந்த நாவலில் இருந்தாலும் கதையின் போக்கில் பெரும் தொய்வு ஏற்படுவது வருத்தமே. குறிப்பாக இதன் மூன்றாவது பாகத்தில் உமாவின் பங்கு பெரும் உருவெடுக்கும் பகுதிகளில் இதன் ஆரம்பத்திய தாக்கம் தொலைந்துபோகிறது. கடைசியில் வெறும் ஆண்டாள் போல பக்தி கொண்ட பெண்ணின் முடிவாக முடிகிறது. ஒரு சாதாரண முடிவு. எனக்கு இதன் முடிவில் ஒரு சந்தேகம் உண்டு - இது கல்கியில் தொடராக எழுதப்பட்ட கதையாம். ஒருவேளை கதையை வளர்த்தது போதும், முடித்துக்கொள்வோம் என்று தடாலடியாக முடித்துவிட்டாரா என்பது தான் அந்த சந்தேகம்.

பல இடங்களில், குறிப்பாக ஆக்ராவில் தாஜ்மகாலில் நடக்கும் சம்பவங்கள் உணர்ச்சிபூர்வமாக எழுதப்பட்டபோதும், சற்றும் கதையோடு ஒட்டவில்லை. கொஞ்சம் மிகையாகவே விவரிக்கப்பட்டு உள்ளது. பம்பாயில் தணிகாச்சலம் செங்கமலத்தை பார்க்ககூடாத இடத்தில் பார்ப்பதும், அதன் பின் நடக்கும் உணர்ச்சி போராட்டங்களும் கொஞ்சம் சினிமாத்தனமானவை. தணிகாச்சலத்தின் குழந்தை மரணம் அடைவதும் melodrama-வை கூட்டுவதில் மட்டுமே குறியாக இருக்கிறது. எனினும் கடைசியில் உமா தன்னை பாவை விளக்காக எரித்துக்கொண்டு தணிகாச்சலத்தின் எழுத்துக்களில் ஒளிவிடுகிறாள் என்று முடிப்பது தணிகாச்சலத்தின் எழுத்தாளர் முதிர்ச்சிக்கும், அத்தனை கால அனுபங்களுக்கும் இழுக்கு. தணிகாச்சலத்துக்கு உமா மீது காதல் இருந்ததா இல்லையா என்பதை கடைசி வரை சொல்லாமலேயே குழப்பமாக கொண்டு போய் இருக்கிறார். அந்த தாஜ்மகால் சம்பவங்களிலேயே முடிவில் என்ன நிகழப்போகும் என்பதை யூகிக்க வைத்துவிடுகிறார்.

என்னுடைய பார்வையில் இந்த நாவலை பற்றி என்ன தான் சொல்ல வருகிறேன்? கூட்டிகழித்து பார்த்தால் கதையில் ஒரு இலக்கியத்துக்கு தேவையான எல்லா உணர்ச்சிகளும் நிறைந்து கிடக்கின்றன. அன்பு, புரட்சி, காதல், தியாகம், சமூக பிரக்ஞை, பக்தி என பல அம்சங்கள் இருந்தாலும், கதையின் நீளம் கொஞ்சம் கூடுதல் என்பதால் கடைச்யில் முதலில் வந்த அத்தனை நல்ல விஷயங்களும் உமாவின் பக்தி முன்பு அடிபட்டு போய்விடுகின்றது. தணிகாசலம் ஒரு சராசரி மனிதனாகவே சித்தரிக்கப்பட்டு இருப்பது இதமாக இருந்தாலும், உமாவுக்கும் அவனுக்குமான உறவை குழப்பமாகவே விட்டு இருப்பது குறையாக போய்விடுகிறது. கௌரி தணிகாச்சலத்தின் மீதான ஆழமான காதலால் ஆரம்பத்தில் முக்கியமான கதாபாத்திரமாக தெரிந்தபோதும் போக போக பத்தோடு ஒன்றாக குறுக்கப்பட்டு இருப்பதும் உறுத்தலே. செங்கமலத்தின் கதாபாத்திரம் கொஞ்சம் இயல்பாக நமது அன்பை அள்ளிச்செல்கிறது. உமாவின் கதாபாத்திரம் கடைசியில் விசுவரூபம் எடுத்து மற்ற கதாபாத்திரங்களையும், ஏன் மூலக்கதையயுமே பின்னுக்கு தள்ளிவிடுவது கதைக்கு அவ்வளவு நல்லது அல்ல. கொஞ்சம் பக்கங்களை குறைத்து தேவை இல்லாத உணர்ச்சிபூர்வமான melodrama-வை குறைத்து இருந்தால் இந்த புத்தகம் classic-ஆக விளங்கியிருக்கும்.

எழுத்தாளர் அகிலன்

இந்த நாவல் 1960-களில் சிவாஜி கணேசன் (தணிகாச்சலம்), சௌகார் ஜானகி (தேவகி), குமாரி கமலா (செங்கமலம்), எம்.என். ராஜம் (உமா) ஆகியோரின் நடிப்பில் அதே பெயரில் படமாக்கப்பட்டு தோல்வியை தழுவியதாம். எனினும் இதில் இடம்பெற்ற சி.எஸ். ஜெயராமனால் பாடப்பட்ட ‘காவியமா.. நெஞ்சில் ஓவியமா’ என்ற பாடல் இன்றளவும் இசை ரசிகர்களால் விரும்பி கேட்கப்படுகிறது. இந்த நாவல் கிட்டத்தட்ட தனது நெருங்கிய வட்டத்தில் இருந்த நபரின் சொந்தக்கதை என்று அகிலன் தன் முகவுரையில் சொல்லியிருக்கிறார். அவரிடம் இருந்த கற்ற பாடமோ என்னவோ ‘(அன்றைய) எழுத்தாளர்களில் வருமான வரி கட்டுபவன்’ என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சமர்த்தாக தன் கதைகளை திரைப்படமாக அனுமதித்து, தணிகாச்சலம் போல அல்லாது, தன் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொண்டவர் அகிலன்.

புத்தக விவரங்கள்:-
பதிப்பாளர்: தாகம், 34/35 சாரங்கபாணி தெரு, திருமலைப்பிள்ளை சாலை, தி. நகர், சென்னை - 600 017. ஃபோன்: 044-28340495
பதிப்பு: பதினைந்தாவது பதிப்பு, ஜனவரி 2007.
பக்கங்கள்: 668
விலை: ரூ. 250/-
இந்த பதிவை இது வரை படித்தவர்கள்: {oshits} வாசகர்கள்... உங்களையும் சேர்த்து...