Sujatha
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுஜாதாஇந்த புத்தகத்தை பற்றி சொல்லும் முன்பு எனக்கு சொல்லத்தோன்றியது ஒன்றே ஒன்று. இயக்குநர் மணிரத்னத்துக்கும் சுஜாதாவுக்கும் பொதுவான ஒரு விஷயம் - இருவருடைய படைப்புக்களும் காலத்தை மீறி நிற்பவை. அதனால் தானோ என்னவோ இருவருக்கும் ”ரோஜா, பம்பாய், தில் சே..., கன்னத்தில் முத்தமிட்டால்..” என நன்றாக பொருந்திப்போனது. சுஜாதாவின் 'கொலையுதிர்காலமு'ம் அந்த வரிசையில் இடம்பெற்றதே. இது எழுதப்பட்டது 1981-ல் என்றபோதும், 28 ஆண்டுகளுக்கு பிறகு படிக்கும்போது அடுத்த நூற்றாண்டுக்கும் பொருந்துவதாக இருப்பது இதன் சிறப்பு. வழக்கம் போல ஒரு தொழிநுட்பத்தை எடுத்துக்கொண்டு சுஜாதாவால் அதை சுற்றி பின்னப்பட்ட ஃபார்முலா கதை. ஆச்சரியம் என்னவென்றால் அந்த தொழில்நுட்பம் இன்றும் வளர்ந்து வரும் நிலையிலேயே இருக்கிறது என்பது தான். அப்படியென்றால் சுஜாதா தொழில்நுட்பத்தை பொறுத்தவரை எத்தகைய தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்று யூகித்துக்கொள்ளலாம். இருப்பினும் ‘கொலையுதிர்காலம்’ஒரே நிகழ்வை விஞ்ஞானத்தையும், பிசாசுகளை மையப்படுத்தும் பைசாசத்தையும் கொண்டு விவரிக்க முற்பட்டு அதை படிப்பவர்களின் முடிவுக்கே விட்டிருப்பதிலும் ஒரு cult status-ஐ அடைகிறது. தங்கள் நம்பிக்கையை படிப்பவர்கள் ஏற்றுக்கொள்ளலாம். இத்தனை பீடிகைகளுக்கு உள்ளாகும் ‘கொலையுதிர் காலம்’ தான் என்ன?


குமார வியாசன், தன் அண்ணன் மகளான லீனாவுக்கு சேரவேண்டிய சொத்தை Guardian பொறுப்பிலிருந்து எழுதி தர, அந்த பத்திரத்தை மேற்பார்வையிட வரும் கணேஷ் - வசந்துக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. லீனாவின் முன்னோர்களில் பாதிக்கப்பட்ட புத்திரவதி என்ற பெண்ணின் ஆவி கொலைகளை அடுத்தடுத்து செய்ய, அந்த கொலைகள் லீனாவின் மூலம் நிறைவேற்றப்படுவதை பார்க்கும் ஊர் மக்களும், கணேஷும், வசந்தும் ஒரு கட்டத்தில் குமார வியாசனையும், லீனாவையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க, அடுத்தடுத்து மர்ம முடிச்சுகள் விழ ஆரம்பிக்கிறது. கணேஷ் இந்த கொலைகளையும், நிகழ்வுகளையும் விஞ்ஞான ரீதியாக அணுக, அவனுக்கு எதிராக வசந்த் பேய் செய்கிறது என்று பைசாச முறையில் முயற்சிக்க, இரண்டும் கிட்டத்தட்ட ஒரே கோட்டில் எதிரெதிராக பயணிக்க, கடைசியில் ஒரு புள்ளியில் ஒன்றாக கலக்கிறது. அப்போதும் அது பேயால் நிகழ்த்தப்பட்டதா இல்லை யதேச்சையாக நடந்ததா என்ற கேள்வியுடன் நாவலை முடிக்கிறார்.

நான் இந்த கதையை, அதில் உபயோகிக்கப்பட்டு இருக்கும் தொழில்நுட்பம் பற்றி ஏற்கனவே ஓரளவுக்கு கேள்விப்பட்டு இருக்கிறேன், அதனால் படிக்கும் போது கொஞ்சம் சுவாரசியம் குறைவாகவே இருந்தது. அதுவும் இந்த கொலைகளை நிகழ்த்துவது யார் என்று ஏற்கனவே தெரிந்துவிட்டதால், எப்படி தான் கண்டு பிடிக்கிறார்கள் என்று பார்ப்போமே என்ற ரீதியில் படிக்க தொடங்கினேன். ஆனால் பாதியில் நான் யார் இந்த கொலைகளை செய்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று நினைத்தேனோ, அந்த கதாபாத்திரம் மூர்க்கமாக கொல்லப்பட, எனக்கு ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசியில் உண்மையான கொலையாளியின் அடையாளம் வெளிப்பட ‘அட!’ என்று தோன்றியது. உண்மையிலேயே இந்த கொலைகளை அணுகிய விதம் அபாரம். விஞ்ஞான பூர்வமாக இப்படி தான் காய் நகர்த்தப்பட்டு இருக்கும் என்பதை ’சமன்படுத்தப்பட்ட நிலத்தில் ஒரு பி.வி.சி. வயர் இருப்பதை’ மட்டும் சொல்லி கோடிட்டு காட்டிவிட்டு என்ன நடந்திருக்கலாம் என்பதை படிப்பவர்களின் போக்கில் விட்டுவிடுகிறார் சுஜாதா. இந்த கதையில் விஞ்ஞான ரீதியாக வரும் தொழில்நுட்பத்தின் பெயர் என்ன என்று நான் சொல்லிவிட்டால் எளிதாக நடந்தவற்றை ஊகித்து விடமுடியும் என்பதால் நான் அதை பற்றி சொல்லாமல் விட்டு விடுகிறேன்.

நீங்கள் கணேஷ் - வசந்த் படிப்பவராக இருந்தால், வசந்த்தின் நகைச்சுவை குறும்புகளும், ’ஏ’-த்தனமான ஒரு வரி ஜோக்குகளையும், வழக்குகள் குறித்த கணேஷின் serious approach-ஐ ரசிப்பவராக இருந்தால், இந்த நாவல் உங்களுக்கு நல்ல தீனி. இதில் கொஞ்சம் வித்தியாசமாக வசந்த்துக்கு பைசாச முறையில் ஆராயவேண்டிய தீவிரமான வேலையை கொடுத்துள்ளதால், இரு வேறு துருவங்களை ஒரு சேர பார்த்தது போல ஒரு நிறைவான உணர்வு.

இது டி.டி-1 இல் மதிய நேரத்தில் தொலைகாட்சி தொடராக வந்திருந்தது. வழக்கம் போல ஒரே ஒரு எபிஸோடு மட்டும் பார்த்து இருக்கிறேன். லீனாவாக ‘மெட்டி ஒலி’ காயத்ரி நடித்து இருந்தார், வசந்த்தாக நடித்து இருந்தது விவேக்காம். நான் டி.வி-யில் பார்த்த காட்சி எதுவும் நாவலில் இல்லை. ஒருவேளை தொலைக்காட்சி தொடருக்காக திரைக்கதையை மாற்றி எழுதியிருக்கலாம். வழக்கமான அதே பல்லவி தான் - புத்தகம் அளவுக்கு தொடரில் production values தரமாக இல்லை. புத்தகமாக படித்தவர்களுக்கு எப்போதுமே திரை வடிவங்களில் நிறைவு ஏற்படாது போல.

இந்த புத்தகம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். மூடநம்பிக்கைகளை அறிவியல் ரீதியாக தோலுரிப்பதில் ஆர்வம் கொண்டவர் நீங்கள் என்றால் இந்த புத்தகம் நிச்சயம் உங்களை கட்டிப்போடும். அல்லது நீங்கள் வெறுமனே த்ரில்லர்களை மட்டும் ரசிப்பவர் என்றால் கூட, இதன் பரபரப்பும் வேகமும் உங்களை ஈர்க்கும். இல்லை நீங்கள் பேய் பிசாசு சம்பிரதாயங்களை நம்புபவர் என்றாலும், கதையை பேய் நடத்துவதாக சொல்லப்படுவதில் உங்களுக்கு உடன்பாடு ஏற்படும். இப்படியாக பலதரப்பட்ட ரசனைகள் மற்றும் நம்பிக்கைகள் கொண்டவர்களையும் ஈர்த்துள்ளது இந்த ‘கொலையுதிர் காலம்’. இது ‘அப்படியே’ திரைப்படமாக எடுக்க கூடிய ஒரு அற்புதமான திரைக்கதை.

P.S: இந்த புத்தகத்தை முடித்தவுடன் சுஜாதாவின் ‘பிரிவோம் சந்திப்போம் - 1 & 2’ நாவலை படித்துக்கொண்டு இருக்கிறேன். இது தற்போது ‘ஆனந்த தாண்டவம்’ என்ற பெயரில் புதுமுகம் சித்தார்த், தமன்னா நடித்து வெளிவர இருக்கிறது. படம் வரும் முன்பு நாவலை மீண்டும் ஒரு முறை படித்துவிடவேண்டும் என்ற முனைப்போடு படித்து வருகிறேன் (2009-ன் ஃபிப். 14-லும், பின்பு 27ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டு பின்பு ஒரு சத்தமும் இல்லை). நான் கடந்த வருடம் என் மறைந்த நண்பர் வைத்தியுடன் திருநெல்வேலி போயிருந்தபோது இதன் படப்பிடிப்பு கதையில் வரும் அதே பாபநாசம், தென்காசி ஆகிய இடங்களில் நடந்துக்கொண்டிருந்தது. ஆனால் அது பிரிவோம் சந்திப்போமின் திரை வடிவம் என்பது எனக்கு அப்போது தெரியவில்லை. சமீபத்தில் இதன் பாட்ல்களை கேட்டேன், அவையும் நன்றாகவே இருந்தது. படத்தை இயக்கியது காந்தி கிருஷ்ணா, இவர் சுஜாதாவின் நெருக்கமான திரைப்பட நண்பர்கள் வட்டாரத்தில் ஒருவராம். எனவே ‘பி.ச’-ஐ இயல்பு கெடாமல் எடுத்து இருப்பார் என்று நம்புகிறேன். இத்தனை காரணங்களால் ’பிரிவோம் சந்திப்போம் - 1 &2’-இன் திரை வடிவமும் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் இந்த ’ஆனந்த தாண்டவ’த்தை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.

பதிப்பாளர்: உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை - 600 018
பக்கங்கள்: 262
விலை: ரூ. 160/-
இந்த பதிவை இது வரை படித்தவர்களின் எண்ணிக்கை: {oshits} உங்களையும் சேர்த்து தான்.... (இது வழக்கமாகி போச்சு இல்ல?)