Girls
Typography

{mosimage}

தமிழ் திரையுலகில் உண்மையான சுட்டிப்பெண் யாரென்று கேட்டால் சட்டென வரும் எனது பதில் ‘ரேவதி’. நான் ஒன்றும் புராதன காலத்தில் வாழும் மனிதன் அல்ல எனினும் எத்தனை நடிகைகளை பார்த்து வருகிறேன், எனினும் தமிழ் திரையில் Original bubbly girl யார் என்று கேட்டால் எனக்கு சட்டென்று நினைவுக்கு வருவது ‘மௌன ராகம்’ ரேவதி தான். சமீப காலமாக எனது iPod-ல் புன்னகை மன்னன் பாடல்களை, குறிப்பாக “சிங்களத்து சின்ன குயிலே”, “கவிதை கேளுங்கள்” ஆகிய பாடல்களை, பார்க்கும் போது இந்த இளமையும், துறுதுறுப்பும், நடிப்பு திறமையும் இணைந்து இனிமேல் நடிகைகள் யாருமே தமிழ் சினிமாவுக்கு கிடைக்க மாட்டார்களா? என்ற ஆதங்கம் மேலோங்குகிறது. அந்த ரேவதி இப்போது ஒரு வயதான சேச்சியாக என்னால் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. நடிகை, சமூக சேவகி, இயக்குநர், நாட்டிய தாரகை என்று பலதரப்பட்ட முகங்களை கொண்ட ரேவதியை இப்போது தமிழ் சினிமாவில் பார்க்க முடிவதில்லை. எனவே ரேவதியை குறித்து ஒரு சின்ன தேடல் தான் இந்த பதிவு.


Page 1

நான் மிகவும் சின்ன பையனாக இருந்தபோது என் குடும்பத்தோடு காஞ்சிபுரம் கோவிலுக்கு போயிருந்தேன். அங்கே ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தது. கூட்டத்தில் ‘ரேவதி வந்திருக்காங்க..’ என்று பரபரப்பாக செய்தி பரவியது. என் அம்மா ’அதோ அந்த வெள்ளை புடவையில் இருப்பது தான் ரேவதி’ என்று காட்டினார். மிக சிறிய வயது ஆனதால் எனக்கு ரேவதியின் முகமே நினைவில்லை. ஆனாலும் நான் பள்ளிக்கூடத்தில் நான் ரேவதியை பார்த்தேன் என்று சொல்லிகொண்டு இருந்தேன்.

{mosimage}கொச்சியில் மேஜர் எம். கேளுன்னிக்கும், லலிதா அவர்களுக்கு ஆஷா கேளுன்னியாக பிறந்து தேசமெங்கும் பல இடங்களில் வளர்ந்து கடைசியில் சென்னையில் மட்டுமல்ல நல்ல திரைப்பட விரும்பிகள் மனதிலும், தாய்மார்களின் உள்ளத்திலும்’ரேவதி’யாக செட்டில் ஆன கதை கிட்டத்தட்ட ஒரு fairy tale என்றே சொல்லலாம். நான் ரேவதியின் சுயசரிதையை எழுதப்போவதில்லை மாறாக எனக்கு எப்படி ரேவதியை (திரையில்) தெரிந்தது, என் all time favourite நடிகையாக உயர்ந்தார் என்பதை பற்றி தான் இந்த பதிவு. ரேவதி தன் பெயரிலேயே ஒரு இணையதளத்தை வைத்திருக்கிறார் (http://www.revathy.com ) எனவே அவரது வாழ்க்கையை அவரது வார்த்தைகளாலேயே அதில் படித்துக்கொள்ளலாம்.

பின்பு நான் ஏழாவதோ / எட்டாவது படிக்கும்போது டி.டி-1ல் மௌனராகம் படம் போட்டு இருந்தார்கள். ஏகத்துக்கும் கட் செய்யப்பட்டு காட்டப்பட்ட அந்த படத்தில் எனக்கு ரேவதியின் முகம் கொஞ்சம் பதிவானது. குறிப்பாக ‘ஓஹோ மேகம் வந்ததோ’ பாடலும், ஸர்தாருக்கு தமிழ் சொல்லித்தரும் காட்சிகளும் எனக்கு பிடித்தது. படம் புரியும் பக்குவம் இல்லாத வயதினால் எனக்கு ஃப்ளாஷ்பேக்குக்கும், மோகன் கதைக்கும் வித்தியாசம் புரியாமல் குழம்பியது தான் மிச்சம். ஆனால் இது தான் ரேவதி, ஒரு நல்ல நடிகை என்று அபிப்பிராயம் உருவானது.

{mosimage}எனினும் ரேவதியை பற்றி தீவிரமாக ஒரு நல்ல அபிப்பிராயம் தோன்றியது என்றால் அது அவரது கணவர் சுரேஷ்மேனனுடன் நடித்த சொந்த தயாரிப்பான “இரவில் ஒரு பகல்” என்ற தொலைக்காட்சி தொடரிலிருந்து தான். பெரிதாக ஒன்றும் காரணமில்லை, ஒரு familiarity தோன்றியதும், அதன் பிறகு அவர் என்னென்ன படங்களில் நடித்து இருக்கிறார் என்று ஒரு ஆர்வம் வந்தது. அந்த அபிப்பிராயத்துக்கு பின்பு நான் ரேவதி நடித்திருந்தால் அது நல்ல படமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் டி.டி-ல் வரும் படங்களை பார்க்க ஆரம்பித்தேன். தொலைகாட்சி தொடர் வந்தபோது எல்லாம் ரேவதிக்கும் சுரேஷ்மேனனுக்கும் திருமணம் முடிந்துவிட்டு இருந்தது. இந்த தொலைகாட்சி தொடருக்கு பிறகு ரேவதி மீண்டும் நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்து இருந்தார். (அஞ்சலி, ஆயுள் கைதி, இதயத்தாமரை, ராஜா கைய வச்சா.. என அவரது இரண்டாவது இன்னிங்க்ஸும் நல்லபடியாக போய்க்கொண்டு இருந்தது)

For some strange reasons, நான் ரேவதி ஊட்டியில் வசிப்பது போலவும், அவர் ஒரு மாமூல் தமிழ் நடிகை அல்ல என்பது போலவும் ஒரு அபிப்பிராயம் வைத்து இருந்தேன். ரேவதியின் ஒரு பேட்டியில் ‘நான் ஓய்வு நேரத்தில் என் பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் கும்பலாக சைக்கிள் எடுத்துக்கொண்டு அடையாறில் ரவுண்ட் அடித்து விட்டு, அவர்களோடு ஐஸ்க்ரீம் சாப்பிடுவது, என்னை ஒரு சாதாரண மனுஷியாக, grounded-ஆக வைத்திருக்கிறது’ என்று சொல்லியிருந்தார். அப்போது தான் எனக்கு உறைத்தது இவரும் சென்னையில் வசிக்கும் ஒரு சராசரி நடிகை என்று. A funny preconceived notion.

{mosimage}திருமணம் ஆனாலும், ஏற்கனவே இருந்த நல்ல பேர் மற்றும் குடும்பப்பாங்கான நடிகை என்ற இமேஜ், ரேவதிக்கு தொடர்ந்து படங்கள் வந்துக்கொண்டு இருந்தன. அவருக்கு சமகாலத்தில் அறிமுகமான ஊர்வசி மலையாள பக்கம் ஒதுங்கிவிட்டதற்கு காரணம் என்னவென்று ஊர்வசியே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். “ஒரு காலகட்டத்தில் என்னை பட அதிபர்கள் கவர்ச்சியாக நடிக்குமாறு நிர்பந்தித்தனர். அதனால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானேன். அந்த சமயத்தில் ரேவதி மிக அழகான கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். ஒரு சமயத்தில் என்னை கவர்ச்சியாக நடிக்க சொன்ன பட அதிபரிடம் எனக்கு ஏன் ரேவதிக்கு கொடுப்பது போன்ற கதாபாத்திரங்களை தரமாட்டேன் என்கிறீர்கள். எனக்கு அது போல நடிப்பது தான் பிடிக்கிறது. அதற்கு அந்த பட அதிபர் ரேவதி குள்ளம், அதனால் அவருக்கு கவர்ச்சியான உடைகள் ஒத்துவராது என்று கூறினார்”. அதற்கு பிறகு ஊர்வசி தமிழில் நடிப்பதில்லை என்று முடிவு செய்து மலையாளத்தில் ஒதுங்கிவிட்டாராம். எனவே ஒரு வகையில் ரேவதியின் குள்ளமான உயரமே அவருக்கு ப்ளஸ் பாயிண்டாக மாறியது.

Page 2

பரதனின் ”காட்டத்தே கிளிக்கூடு” படத்தின் மூலம் ரேவதி தன் தாய்மொழியான மலையாளத்தில் அறிமுகம் ஆனபோதும், அவர் மலையாளத்தில் மிக கொஞ்சமே நடித்திருக்கிறார், அதுவும் மோகன்லால் ஜோடியாக. ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ரேவதி மலையாளி என்றபோதும், அவருக்கு மலையாளத்தில் எழுத படிக்க தெரியாதாம். தமிழ் தான் கூடுதலாக வரும் என்பதால் கல்கி, ஜெயகாந்தன் என இலக்கியவாதிகளின் படைப்புக்களை படித்து சிலவற்றை தொலைக்காட்சி தொடருக்கும் உபயோகப்படுத்தி இருக்கிறாராம். இந்த விஷயத்தில் எனக்கு ரேவதியை ரொம்ப பிடித்துபோயிற்று.

{mosimage}அதே பரதனின் அழைப்பை ஏற்று கடைசி நிமிடத்தில் பொள்ளாச்சிக்கு போய் முதல் நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகே கதை கேட்டு நடித்த “தேவர் மகன்” ரேவதிக்கு தேசிய விருதை பெற்று தந்தது. முதலில் மீனா நடிக்க இருந்த ’பஞ்சவர்ணம்’ கதாபாத்திரத்தில், கால்ஷீட் குழப்பம் காரணமாக மீனா நடிக்க முடியாமல் போக, கமல்ஹாஸனும், பரதனும் ரேவதியை தொலைபேசியில் அழைக்க, அன்றிரவே பொள்ளாச்சிக்கு கிளம்பிய ரேவதிக்கு, அடுத்த நாள் காலை லொக்கேஷனில் அன்றைய காட்சி என்ன என்று மட்டும் சொல்லிவிட்டு படப்பிடிப்பு நடத்திவிட்டு மாலை போல கமலும் பரதனும் கதை சொன்னார்களாம். விருது எப்படி வேண்டுமானாலும் வரும் என்பதற்கு இது ஒரு உதாரணம். அடுத்த வருடம் “மறுபடியும்” (தமிழ்), ”அங்கூரம்” (தெலுங்கு) என ஒரே வருடத்தில் (1992) இரண்டு மொழிகளில் ஃபிலிம்ஃபேருக்கான சிறந்த நடிகை விருது வாங்கிய ரேவதியின் இந்த சாதனை இன்று வரை முறியடிக்கப்படாமலேயே இருக்கிறது.

{mosimage}‘புன்னகை மன்னன்’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘தேவர் மகன்’ என கமலுக்கு மிக பொருத்தமான on-screen ஜோடிகளில் ஒன்றான ரேவதிக்கும் கமலுக்கும் ‘மகளிர் மட்டும்’ படத்தின் மூலம் சண்டை வந்தது. “கறவை மாடு மூணு... காளை மாடு ஒண்ணு” என்ற பாடலில் வந்த “கறவை மாடு” வரிகளுக்கு ஆட்சேபனை செய்து நடிக்க மறுத்ததால் ரேவதிக்கும் கமலுக்கும் மனஸ்தாபம் வந்து படம் கிட்டத்தட்ட 1 வருடம் முடிக்கப்படாமலேயே இருந்தது. கடைசியாக பஞ்சாயத்தில் இந்த படத்தை முடித்துக்கொண்டு இனிமேல் இருவரும் திரையில் ஒன்று சேர்வதில்லை என்று கசப்பாக பிரிந்தது இந்த பாந்தமான ஜோடி. இடையில் ஹிந்தியில் ”லவ்”, “ராத்”, “முஸ்குராஹட்” என்று மூன்று படங்களில் நடித்த ரேவதிக்கு அவரது திருமணமான அந்தஸ்து பாலிவுட்டில் கைகொடுக்கவில்லை. எனினும் ராம்கோபால் வர்மா, ப்ரியதர்ஷன் ஆகியோரின் நட்பு கிடைத்தது.

ரேவதியின் அரசியல் பிரவேசம் & அனுபவம் அவர் மீது மக்கள் கொண்டு இருந்த நல்ல நம்பிக்கைக்கு சான்றாக அமைந்தது. சுயேச்சையாக தென் சென்னை தொகுதியில் நின்ற ரேவதி எந்த கட்சிகளின் பின்பலமும் இல்லாமல் 42 ஆயிரம் சொச்ச வாக்குகள் பிடித்து தி.மு.க & ஆ.தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக வந்தார். சென்னை முகப்பேரில் உள்ள ‘தி பான்யன்’ (http://www.thebanyan.org/ ) என்ற மனநலம் குன்றிய தெருவோர பெண்களுக்கான காப்பகத்தை endorse செய்ததன் மூலம் ரேவதியின் சமூக வாழ்க்கை ஆரம்பமானது. வெளியூரில் விற்கப்பட்டு, பின்பு மீட்கப்பட்ட பெண்களுக்கு சுஹாசினியோடு சேர்ந்து உதவி செய்த நிகழ்ச்சி ரேவதியின் மற்றொரு பரிணாமத்தை வெளிக்கொணர்ந்தது. வாரமலரில் “சமூக சேவகி நடிகை” என்ற பெயரில் கிசுகிசுக்கப்பட்ட ரேவதியின் பொதுவாழ்க்கை கொஞ்சம் intresting.

{mosimage}கடைசியில் இயக்குநராக அவதாரம் எடுத்த ரேவதியின் படங்கள் அனைத்துமே வட இந்திய பத்திரிகைகள் மற்றும் விமர்சகர்கள் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சமுதாயத்தின் குழப்பத்தை சொன்ன “மித்ர் - மை ஃப்ரெண்ட்” படம் ஷோபனாவுக்கு தேசிய விருதை பெற்று தந்தது. சமுதாயத்தில் தனக்கான அங்கீகாரத்தை பெற போராடும் HIV நோயாளியின் படமான, இவர் இயக்கிய இரண்டாவது படமான “ஃபிர் மிலேங்கே’ படத்தை உலக நாடுகள் சபை பாராட்டியது. தற்போது அமிதாப் பச்சனை வைத்து “ஜஸ்ட் ஆப்கே லியே” என்ற வழக்கறிஞர்களை குறித்த படத்தை எடுக்க முயற்சித்து வருவதாக தகவல். தனக்கு இயக்குநராக தெற்கை விட வடக்கில் மிகுந்த மரியாதை தருவதாக சிலாகித்துக்கொண்டார் ஒரு பேட்டியில். அவர் இயக்கிய படங்களை பார்த்து இருக்கிறேன். அதில் ஒரு மென்மை இழைந்தோட, காட்சிகள் கவிதை போல படமாக்கப்பட்டு இருக்கும் விதம் எல்லாம் எனக்கு பிடிக்கும்.

புதிதாக வரும் நடிகைகள் எல்லோரும் ”நான் ரேவதியை போல நடிக்கவேண்டும்” என்று சொல்லும் அளவுக்கு ஒரு அடையாளத்தை தனக்காக உருவாக்கிக்கொண்ட ரேவதியை தமிழ் திரையில் இப்போது ரொம்பவே மிஸ் செய்கிறேன்.

{oshits} வாசகர்கள் இந்த ரேவதியின் என் மலரும் நினைவுகளை படித்துள்ளனர்.
About myself
Maheshwaran
Author: MaheshwaranWebsite: https://www.maheshwaran.com
I am a SAP Consultant in my late 30s, residing in the happeing IT City - Bangalore. My interests vary from reading to travelling to handicrafts to photography. My latest interest is on Body building. May be this vivid interest keeps me going in my life without getting bored.