Miscellaneous
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

mulpaadhai

புத்தக விமர்சனத்துக்கு போகும் முன்பு இந்த புத்தகத்தை எப்படி நான் அறிந்தேன் என்பதற்கு ஒரு சிறிய கதை. அப்போது டி.டி-1 ல், சுஜாதாவின் ‘வாய்மையே வெல்லும்’ நாவல் ‘மறக்கமுடியவில்லை’ என்ற பெயரில் தொலைகாட்சி தொடராக வந்தது. அதனை அடுத்து ‘மறக்கமுடியவில்லை - 2’ என்று மற்றொரு கதை வந்தது. ஆனால் என்னால் அதை பார்க்கமுடியவில்லை. யதேச்சையாக 1 வாரம் மட்டும் பார்த்து இருந்தேன். பின்பு என் அண்ணி வீட்டுக்கு போனபோது பொழுதுபோகாமல் அங்கே இருந்த ஒரு புத்தகத்தை படிக்க தொடங்கினேன். பாதியில் நான் பார்த்த தொடரின் சில காட்சிகளை கதையின் சில பக்கங்களில் படித்தபோது எனக்கு ஆர்வம் அதிகமானது. விடாமல் வேகமாக 1 நாளில் அதை படித்து முடித்தேன். பின்பு தான் அதன் தகவல்களை படித்தேன். ’முள்பாதை’ என்பது அதன் பெயர், தெலுங்கில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட நாவல் (மீனா) என்றும் தெரிந்தது. For some strange reasons, அதை எழுதியது எண்டமூரி விரேந்திரநாத் என்று நினைத்துக்கொண்டேன். இது நடந்து 14 வருடங்கள் ஆகின்றது. நான் வேலைக்கு போக ஆரம்பித்த பிறகு இந்த புத்தகத்தை தேடினேன்... தேடினேன்... தேடிக்கொண்டே இருந்தேன் ஆனால் கிடைக்கவில்லை... சமீபத்தில் 32வது சென்னை புத்தக கண்காட்சிக்கு போகும் வரை. அல்லையன்ஸ் பதிப்பகத்தாரின் ஸ்டாலில் இந்த புத்தகத்தை பார்த்தவுடன் அப்படி ஒரு பரவசம். எனினும் கடந்த வாரம் சேலம் போனபோது தான் முழுமூச்சாக படிக்க முடிந்தது.

 

தங்க கூண்டுக்குள் செல்லக்கிளியாக வளர்க்கப்படும் மீனாவுக்கு தன் தாயாரின் அதிகாரத்தை மீறவும் பயம், அதே நேரத்தில் தன் வயதுக்கு ஏற்ற ஆசைகளை விடவும் முடியவில்லை. தன்னை மணம் முடிக்கபோகும் சாரதியின் வருகையை தவிர்க்க வேறு வழியில்லாமல் மெலட்டூரில் உள்ள தன் தந்தை வழி அத்தை வீட்டுக்கு போகிறாள் மீனா. பட்டணத்தின் போலி சம்பிரதாயங்களாலும், மேலுதட்டு அன்பினாலும் வெறுத்து போயிருக்கும் மீனாவுக்கு அங்கே கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் அன்பும், அமைதியும் பிடித்து போகிறது. அத்தையிடமும், அவர் மகள் ராஜியிடமும் நெருங்கிவிடுகிறாள் மீனா ஆனால் கிருஷ்ணனிடம் அவளுக்கு மல்லுக்கு நிற்கவே சரியாக இருக்கிறது. பட்டணத்து பொய்க்கலாச்சாரத்தில் வளர்ந்த மீனாவுக்கு நெஞ்சில் இருப்பதை தைரியமாக அதேசமயம் ஆணித்தரமாக பேசும் கிராமத்து கிருஷ்ணனைடம் வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

கிட்டத்தட்ட இது ஒரு ’மில்ஸ் அண்ட் பூன்ஸ்’ வகை கதை தான், ஆனால் இதில் கிராமம் v/s நகரம் கலாச்சார மோதல்கள் சுவைபட அலசப்பட்டு இருக்கின்றன. அதனாலோ என்னவோ இந்த புத்தகம் படிக்க படிக்க மிக சுவாரசியமாக இருந்தது. மேலும் கிராமத்து கதைகள் என்கிறபோது ஒரு எளிமை இருக்கும். அது இந்த புத்தகத்தில் மிகவும் அழகாக பரவிக்கிடக்கின்றது. குறிப்பாக மீனா முதன் முறையாக மெலட்டூருக்கு வரும் காட்சிகளில் எல்லாம் மாலை தென்றல் போல ஒரு இனிமையான சுகம். மீனாவும் கிருஷ்ணனும் தங்கள் வளர்ப்பு வித்தியாசங்களை மீறி நட்பு கொள்ளும் காட்சிகளில் ஒரு மெல்லிய கிறக்கம் தீண்டியது. அந்த அழகான கிராமத்தையும் அதில் வரும் கதாபாத்திரங்களையும் கற்பனையில் பார்த்துக்கொள்வது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. அதனாலோ என்னவோ கிட்டத்தட்ட 800 பக்கங்களில் விரிந்த இந்த புத்தகம் படிக்க படிக்க அலுக்கவும் இல்லை, ஒரு இடத்தில் கூட போர் அடிக்கவும் இல்லை. சொல்லப்போனால் முடியும் போது ‘ஐயோ அதற்குள்ளே முடியப்போகிறதே’ என்ற ஆதங்கம் தான் வந்தது.

எனக்கு மிகவும் பிடித்தது இதில் வரும் மீனா கதாபாத்திரம் தான். இளமை துறுதுறுப்புடனும் அதே சமயத்தில் அம்மாவுக்கு பயந்து தன் இயல்பை அடக்கிக்கொள்ளும் விதமும் படிக்கும் எல்லாருக்கும் பிடிக்கும். அதே சமயம் தன் நல்ல எண்ணங்களையும் மீறி சங்கடங்களில் மாட்டிக்கொள்ளும் போது நமக்கே கொஞ்சம் பதைக்கத்தான் செய்கிறது. இந்த மீனாவின் கதாபாத்திரத்துக்கு இணையாக கம்பீரமாக படைக்கப்பட்ட கேரக்டர் என்றால் அது பட்டிக்காட்டு கிருஷ்ணனின் கதாபாத்திரம் தான். தன் திடமான சிந்தனைகளாலும், பாசத்தில்லும் கிருஷ்ணனிடம் உள்ளத்தை பறிகொடுப்பது மீனா மட்டும் அல்ல, படிக்கும் நாமும் தான். அடுத்து ராஜி - அமைதியான கிராமத்து கிளி. தன் அண்ணனிடமும், மீனாவிடமும் பாசமாக இருந்தாலும், குடும்ப சூழ்நிலை கருதி தன்னால் சுயமாக முடிவு எடுக்க முடியாத ஒரு இனிமையான் மனது இவளுக்கு. இந்த புத்தகம் கிட்டத்தட்ட 70களில் எழுதப்பட்டு இருந்தாலும் இன்றும் நம்மால் விரும்பப்படும் கதாபாத்திரங்களை கொண்டு இருப்பது எத்தனை காலம் ஆனாலும் இனிமையான மனிதர்களின் சுபாவம் ஒன்றுபோலவே தான் இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம்.

கௌரி கிருபானந்தன்இந்த நாவலை மேலும் சுவாரசியமாக்கியிருப்பது இதன் எளிய நடையில் அமைந்த வார்த்தைகள். தெலுங்கி்ல் யத்தன்னபூடி சுலோசனாராணி எழுதிய ‘மீனா’ நாவலில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டு இருந்தாலும் தமிழ் மண்வாசனையுடன் எளிமையாக அதே சமயம் இனிமையாக வார்க்கப்பட்டு இருக்கிறது கௌரி கிருபானந்தனின் வரிகள். சமீபத்தில் தான் அவருடைய பேட்டியை படித்தேன். அவருக்கும் மிகவும் பிடித்த (dream project) இந்த நாவலை மொழிபெயர்க்க அவருக்கு 9 மாதங்கள் பிடித்ததாம். A worthy effort. ஆந்திராவில் பிறந்து வளர்ந்த கௌரி, கல்யாணத்துக்கு பிறகு கதையில் வரும் மெலட்டூரில் குடியேறிய பிறகு தான் தமிழ் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தாராம். ஆந்திராவில் வளர்ந்ததால் தெலுங்கில் எழுத படிக்க தெரிந்ததால் இரண்டு மொழிகளிலும் நாவல்கள் மற்றும் சிறுகதைகளை மொழிபெயர்த்து வருகிறார்.

படிக்கும்போது இந்த பாத்திரத்துக்கு நான் கொடுத்துக்கொண்ட உருவம் கொஞ்சம் பெரிய கண்களுடன், கொஞ்சம் அப்பாவித்தனத்துடனும், அதே சமயம் நகரத்தில் வளர்ந்த பெண் என்பதால் கொஞ்சம் மாடர்னாகவும் இருந்தது... கிட்டத்தட்ட் இளம் வயது பானுப்ரியாவை போல. கிருஷ்ணன் கிராமத்து கதாபாத்திரம் என்பதாலும், வயலில் உழைக்கும் கடின உழைப்பாளி என்பதாலும், ஒரு raw manliness வேண்டும் என்பதற்காக எனது தேர்வு சரத்குமார் (ofcourse இளம்வயது). ராஜி கதாபாத்திரத்துக்கு ‘சுப்ரமணியபுரம்’ சுவாதியை தவிற வேறு யாரையும் என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. மீனாவின் அம்மா பணக்கார கர்வமும், அதே சமயம் தன் குடும்பத்துக்காக யோசிக்கும் ஒரு dominant கதாபாத்திரம். எனது சாய்ஸ் - ஜெயசித்ரா. மேலும் அத்தை கதாபாத்திரத்துக்கு மஞ்சு பார்கவி, மீனாவின் அப்பா ஆனந்தனாக ஜெயசங்கர்... இவர்கள் தான் என் கற்பனையில் விரிந்த திரை வடிவத்து நடிகர்கள்.

இதன் தொலைகாட்சி பதிப்பை 7th சேனல் நாராயணன் பொன்வண்ணன், யுவராணி, ஸ்ரீவித்யா, ஜெயசங்கர் ஆகியோரை வைத்து எடுத்திருந்தார், நான் 2 episodes மட்டும் தான் பார்த்து இருந்தேன், அதில் ஒன்று கடைசி வாரம். புத்தகத்தில் இருந்த அந்த கவர்ச்சி தொடரில் காணாமல் போயிருந்தது.

முடிந்தால் இந்த புத்தகத்தை ஒரு முறை படித்து பாருங்கள்... உங்களுக்கும் இந்த ‘மீனா’ பிடித்தவளாவாள்...

பதிப்பகத்தார்: வாசன் பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை
பக்கங்கள்: 770 (396 + 374)- இரண்டு பாகங்கள்
விலை: ரூ. 245 (ரூ. 125 + ரூ. 120)- இரண்டு பாகங்கள்

இந்த பதிவுக்கு மொத்த வாசகர்கள்: {oshits}, வழக்கம் போல உங்களையும் சேர்த்து தான்...