Jayakanthan
Typography
நான் படித்த இந்த ஜெயகாந்தனின் நான்காவது நாவல் நான் மலையாள படங்களை பார்க்க ஆரம்ப காலத்தை நினைவூட்டியது. பரபரப்பான larger than life தமிழ், தெலுங்கு, இந்தி படங்களை பார்த்து பழகிய எனக்கு மலையாள படங்களின் எளிமையும், இயல்பான open endings-உம் கொஞ்சம் உறுத்தலாகவே இருந்தது. பின்பு மெல்ல மெல்ல இந்த உயிரோட்டமுள்ள கதையோட்டங்களுக்கு பழகிய பின்பு இந்தி படங்களும், தெலுங்கு படங்களையும் பார்ப்பது மிக கஷ்டமாக இருந்தது. (இப்போதைய நிலைமை முற்றிலும் தலைகீழ் என்பது வேறு விஷயம்). அதுபோல ஒரு தொடக்கம், பிரச்சினை, விவாதம் பின்பு முடிவு என்ற format-க்கு பழகிவிட்ட என் போன்ற வாசகர்களுக்கு, இந்த எளிமையான ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்” நாவலின் போக்கு முதலில் கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. ஆனால் கதையோடு ஒன்றிவிட்டு படிக்கும்போது இந்த நாவல் நம்மை ஒரு அழகான, சுற்றுப்புற சூழலாலும், மக்கள் மனதாலும் மாசுபடியாத அற்புதமான் உலகத்துக்கு கொண்டு சென்றபிறகு அந்த உலகத்தை விட்டு வரவே தோன்றாத அளவுக்கு ஐக்கியமாக முடிந்தது. படித்த பின்பு இந்த நாவலை பற்றிய விவரங்களை அறிய இணைதளத்தில் தேடியபோது தான் தெரிந்தது இது அவர் எழுதிய master piece-களில் ஒன்று என்று. Sometimes ingnorance can be a bliss.

 

கதை ஒரு கிராமத்து பாதையில் பயணிக்கும் லாரியில் இருந்து எந்த வித சம்பிரதாயமும் இன்றி ஆரம்பிக்கிறது. இளம் ஆசிரியர் தேவராஜன், டிரைவர் துரைக்கண்ணு, க்ளீனர் பாண்டு ஆகியோர் அறிமுகமாக, வழியில் லிஃப்ட் கேட்கும் பயணியாக நுழைகிறான் பட்டணத்து ஹென்றி. படித்த தேவராஜனுக்கும், பட்டணத்து ஹென்றிக்கும் இயல்பாகவே நட்பு மலர்கிறது. தமிழ் கூட சரியாக பேச தெரியாத ஹென்றிக்கு அந்த குக்கிராமத்தில் என்ன வேலை? பாதி நாவல் வரை இந்த முடிச்சு மர்மமாகவே வைக்கப்ப்ட்டுள்ளது.

பாதி நாவல் வரை தேவராஜனின் பார்வையிலேயே நகர்கிறது. அவன் பார்வையில் முதல் முறையாக கிராமத்தை பார்க்கும் பட்டணத்தான் ஹென்றியின் பிரமிப்பும், குதூகலமும், அழகை ஆராதிக்கும் குணத்தை கண்டு வியக்கும் நிகழ்வுகளும் நமக்கு படிக்க படிக்க இன்பமூட்டுவனவாக உள்ளன. கிட்டத்தட்ட இப்போதெல்லாம் கிராமங்களை நான் பார்க்கும் பார்வையும் இதே தான் என்பதால் என்னால் ஹென்ரியின் பரவசத்தையும், உள்ள துள்ளலையும் புரிந்துக்கொள்ள முடிந்தது. குளிக்கும் பெண்ணை உற்று பார்க்கிறாயே என்ற துரைக்கண்ணுவின் கேள்விக்கு நான் வரும்போது கேள்விக்குறி போல வாலை வளைத்துக்கொண்டு ஓடும் கன்றுக்குட்டியை பார்த்தேனே, திருப்பத்தில் தொப்தொப்பென்று குதித்த குரங்கை பார்த்தேனே, அதை பார்க்கவில்லையா என்று ஹென்றி பதிலலிக்கும் விதமும் இனிமை.

Jayakanthanஆனால் இந்த புத்தகமெங்கும் பரவியிருப்பது வெள்ளந்தியான கிராமத்து மனிதர்களின் நகரத்து கரைபடியாத இனிமையான வாழ்வு முறைகளும், பாசமும், உறவுகளுமே முழுமையான வாழ்க்கை என்ற அவர்களது சித்தாந்தங்களும். ஓரிடத்தில் ஹென்றி சொல்வதுபோல “ஒரு அனுபவம் மற்றொரு அனுபவத்தை கெடுக்கும்” என்று உணர்ந்து, வாழ்க்கையை அதன் போக்கில் வருவதை போலவே ஏற்றுக்கொண்டு, முந்தைய அனுபவங்களோடு முடிச்சுபோட்டு குழம்பாமல் அனுபவித்து வாழ்வதே சிறப்பு என்று ஒரு அருமையான கோட்பாடும், மற்றொரு இடத்தில் “சாமிக்கும் மதத்துக்கும் என்னங்க சம்பந்தம்?” என்ற உண்மையை மற்றொரு இடத்திலும் ஹென்றி கதாபாத்திரம் மூலம் விளக்கியிருக்கிறார்.

பாதிக்கு மேல் இந்த கதையின் நாயகன் தேவராஜனா, இல்லை துரைக்கண்ணுவா அல்லது ஹென்றியா, இல்லை நாவலில் வரும் எல்லோருமே நாயகர்களா என்ற ஒரு சிலிர்ப்பும், கேள்வியும் நமக்கு தோன்றுகிறது. மொத்தத்தில் இயல்பான மனிதர்கள், குறிப்பாக அக்கம்மாவும், கிளியாம்பாளும் நம் வீட்டு கிராமத்து பெண்கள் போலவே இயல்பாக பேசிக்கொள்கிறார்கள், உணர்ச்சிவசப்படுகிறார்கள். படிக்க படிக்க நமக்கு உவகை பெருக்கெடுத்தோடுகிறது. நீங்கள் உங்கள் வாழ்வின் மிக சில நாட்களையேனும் கிராமப்பகுதிகளில் செலவிட்டு இருந்தீர்கள் என்றாலே போதும், உங்களால் இந்த நாவலை ரசித்து அனுபவித்து படிக்கமுடியும்.

இந்த நாவலை படிக்கும்போது எனக்கு என்னுடைய பால்யபருவத்து நினைவுகள் ஒவ்வொரு கட்டத்திலும் அலைமோதின. கிராமத்து தெருக்களின் விவரிப்பிலும், ஊர் பெரிய மனிதர்களின் சந்திப்பிலும் எனக்கு கோவிந்தம்பாளையம் என்ற கிராமத்தில் வசித்த என் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு போன நாட்களும், ஹென்றி கூழை விரும்பி அக்கம்மாவிடம் கேட்டு வாங்கி ரசித்து குடித்த சம்பவங்களில் பாலூர் கிராமத்தில் என் மாமா வேலை செய்தபோது, நான் அவர்களிடத்தில் வேலை செய்துவந்த களத்துவேலை பெண்களின் தூக்குகளில் மதிய உணவுக்கு கொண்டு வந்த கேழ்வரகு கூழை வாங்கி ரசித்து உண்டதும் நினைவுக்கு வந்தது.

என்னை பொறுத்தவரை ஜெயகாந்தன் இந்த நாவலில், ”சாமிக்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம்?” என்ற கேள்வியின் மூலமும், “உலகமெங்கும் மின்சார விளக்குகளாலும், இயந்திரங்களாலும் அல்லோல கல்லோலபடட்டும், ஆனால் என் வீட்டுக்கு இந்த அகல் விளக்கின் வெளிச்சமும், அமைதியும் போதும்” என்று ஒரு எளிமையான, கிட்டத்தட்ட மதமில்லாத துறவு வாழ்க்கையை சொல்ல வருகிறார் என்று நினைக்கிறேன்.

இந்த முறை முழு புத்தகத்தையும் படித்த பின்பு தான் முன்னுரையை படித்தேன். இது அவர் விகடனில் எழுதிய தொடர்கதையென்றும், அவர் மனதில் இருந்ததும், தொடராக வெளிவந்ததும் வேறு வேறாக இருந்த காரணத்தால், பாதியிலேயே நிறுத்திவிட்டார் என்பதையும் அறிந்தேன். எனினும் தன் சிறந்த எழுத்துக்களில் இதுவும் ஒன்று என்று அவர் சிலாகித்துக் கொள்ளும்படியாக வந்திருப்பதில் மகிழ்ச்சி. என்னால் முடிந்த அளவுக்கு கதையை வெளியிடாமல், முடிவை சொல்லாமல் எனக்கு ஏன் இந்த நாவல் மிகவும் பிடித்து இருந்தது என்று எழுத முயன்றிருக்கிறேன். முதலில் சொன்னதுபோல இதுவரை நாவல்கள் படித்த அனுபவங்களுக்கும், இந்த நாவலை படித்ததற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒருவேளை பொழுது போக்க, page turner-ஐ எதிர்பார்த்து படித்தீர்களானால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஒரு வித்தியாச அனுபவத்திற்கு தயாராக படித்தீர்களானால், நீங்கள் இதை நிச்சயம் ரசிப்பீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்” நாவலில் ஜெயகாந்தன் கொஞ்சம் மிதவாத போக்கை கடைபிடித்திருக்கிறாரோ என்று தோன்றியது, எனினும் அமைதியாக ஆனால் அழுத்தமாக பழைய வாழ்க்கையை புனருத்தாரணம் செய்யும் தன் கருத்தை வலியுறுத்தியிருக்கிறார். இந்த நாவலை படித்தவுடன் எனக்கு ஜெயகாந்தனின் மற்ற அனைத்து படைப்புக்களையும் சேகரிக்கவேண்டும் என்று ஒரு வேகம் தோன்றியது. நிதானமாக சேர்க்கலாம், படிக்கலாம்.... After all I realised that he is my kind of writer and rediscovered the world and words I long for, so how can I lose his writings hereafter?

பதிப்பாளர்கள்:- மீனாட்சி புத்தக நிலையம்; மயூரா வளாகம்; 48, தானப்ப முதலி தெரு; மதுரை - 625001. தொலைபேசி: 2345971/2560517. மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
பக்கம்: 428
விலை: ரூ. 150/-
இந்த பதிவை இதுவரை படித்தவர்கள்: {oshits}, உங்களையும் சேர்த்து தான்!!!

Related Articles/Posts

Kana Kadein - A worthy dream... When K.V Anand, who used to mesmerise me with his magical camera works...

வாசிப்பும் அனுபவமும்...... இம்முறை வைத்தி வீட்டுக்கு போய் வரும்போது 'எஸ். ராமகிருஷ்ணனின் சிறுகத...

Kadhaparyumbol... {mosimage} Thanks Anis... I happened to see this amazinggggggggggggg m...

Lajja (Shame)... This dark, broody tale is set in Bangladesh amidst the riots of 1992 f...

பசங்க.. ... {mosimage} ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் வந்துள்ள உண்மையான பசங்க படம்....

About myself
Maheshwaran
Author: MaheshwaranWebsite: https://www.maheshwaran.com
I am a SAP Consultant in my late 30s, residing in the happeing IT City - Bangalore. My interests vary from reading to travelling to handicrafts to photography. My latest interest is on Body building. May be this vivid interest keeps me going in my life without getting bored.