Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Ilayarajaஇந்த முறை எனக்கு தீபாவளி விருந்து என்றால் அது ஒரே நேரத்தில் ஜெயா மேக்ஸ் மற்றும் இசையருவி தொலைகாட்சிகளில் ஒளிபரப்பான இசைஞானி இளையராஜாவின் கச்சேரிகளே. இரண்டுமே மறு ஒளிபரப்புகள் என்றபோதும் அந்த இசைமழையில் நனைய கணக்கு வேண்டுமா என்ன? ஆரம்பத்தில் இரண்டு நிகழ்ச்சிகளுமே பிரதி எடுத்தது போல ஒரே வரிசையான பாடல்களையும், ஒரே வேண்டுகோளையும் கொண்டு இருந்தாலும், டேக் ஆஃப் ஆனபிறகு இரண்டுமே களை கட்டியது. திகட்ட திகட்ட இன்பம் என்பதை திகட்ட திகட்ட இசை என்று மாற்றிக்கொள்ளலாம் போல தோன்றியது. அற்புதமான பாடல்கள், அழகான இசைகோர்வை என எஸ்.பி.பி, மது பாலகிருஷ்ணன், ஷ்ரேயா கோசல், சாதனா சர்கம், மஞ்சரி, சித்ரா என அனைவரின் குரல்களும் நம்மை வேறொரு உலகத்துக்கு கொண்டு போயின. இருப்பினும் ஒரு சிறிய நெருடல்... அது என்ன?

 

அடுத்த நாள் ‘ஜெயா டிவி’யில் ஒரு நிகழ்ச்சியில் பாடகி மகதி தான் இசைஞானி இளையராஜாவின் மூலம் அறிமுகமான சுவையான சம்பவத்தை சொன்னார். தான் கேரளாவில பிறந்து வளர்ந்த பிராமணப் பெண் என்றும், இசைஞானியை பார்த்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு போகலாம் என்று வந்தவரை இளையராஜா அவர்கள் பாடிக்காட்ட சொல்லி, உடனே சினிமாவில் பாட வாய்ப்பு கொடுத்ததையும் சொன்னார். தன்னை பற்றி விசாரித்த போது தான் கேரளாவில் பிறந்து வளர்ந்ததால் தமிழ் படிக்க, எழுத வருமா என்று ஒரு தினசரியை கொடுத்து படிக்க சொன்னதாக சொன்னார். உண்மையில் மகதிக்கு ஒரு சிலிர்ப்பான அனுபவமாக இருந்திருக்கும். ஆனால் அப்போது தான் எனக்கு தோன்றியது - இளையராஜா எப்போது மலையாளத்து மங்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்.

Mahathiஅவர் அறிமுகம் செய்து பெரிய ஆளான பாடகர் / பாடகிகள் என்று பார்த்தால் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் / ஷைலஜா ஆந்திராக்காரர்கள், கே.ஜே. யேசுதாஸ், உண்ணி கிருஷ்ணன், உண்ணி மேனன், மது பாலகிருஷ்ணன், கே.எஸ். சித்ரா, சுஜாதா, சுவர்ணலதா, மஞ்சரி, ஜென்ஸி என எல்லோருமே கேரளத்துக்காரர்கள். பின்பு கைகொடுத்த பாடகிகள் என்று பார்த்தால் வடக்கத்தியர்களான “ஷ்ரேயா கோசல், சாதனா சர்கம், ஆஷா போன்ஸ்லே”. இளையராஜா தன் காலத்தில் இருந்த திறமை வாய்ந்த தமிழ் பாடகிகளான வாணி ஜெயராம், உமா ரமணன், டி.கே கலா ஆகியோரை ஒதுக்கியே வைத்திருந்தார். மலையாளத்து பாடகிகள் அனைவருமே சொல்லிவைத்தது போல ”(யேசு)தாஸண்ணா என்னை இளையராஜாவிடம் பாடிக்காட்ட சொன்னார், ராஜா சாரும் உடனே எங்களை பாட வைத்துவிட்டார்” என்று பேட்டி கொடுத்தார்கள். யேசுதாஸ் மலையாளி, எனவே அவர் மலையாளிகளை மட்டுமே கைதூக்கி விட்டிருக்கிறார். ஆனால் இளையராஜாவோ..?

சென்னையில் நடந்த அந்த கச்சேரியில் கமல்ஹாஸன் “தமிழ்நாட்டில் தமிழனுக்கு எப்போதுமே அங்கீகாரம் கிடைக்காது. ஆனால் நல்லவேளையாக இளையராஜாவுக்கு பிரபலயம் கிடைத்தது. அவர் மேல்நாட்டில் பிறந்து இருந்தால் இன்னும் அதிகம் புகழை அடைந்து இருப்பார்” என்று கூறினார். யாருமே இளையராஜாவை கேட்கவில்லையா “நீங்கள் மட்டும் ஏன் திறமையான தமிழ் பாடகர்களை அதிகம் பயன்படுத்திக்கொள்ளவில்லை?”. வாணி ஜெயராமுக்கும், உமா ரமணனிடமும் சரக்கு இல்லையா என்ன? சித்ரா, எஸ்.பி.பி, ஷ்ரேயா கோசல் எல்லோருக்கும் திறமை இருக்கிறது என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

ஆனால் அவர்களின் உயரத்துக்கு தமிழ் கலைஞர்களின் திறமை படியாக்கப்பட்டு இருக்கிறது. கேட்கும் (தமிழ்) ரசிகனுக்கு பாடுவோரின் பூர்விகம் பற்றி கவலை இல்லை. ஆனால் மேடையில் வந்தவுடன் மட்டுமே தன் தமிழினத்தை நினைவுகூறியதை தவிர்த்து இருக்கலாம். இப்படியெல்லாம் எழுதினாலும் இளையராஜாவை கான கந்தர்வர்களின் அவதாரமோ என்று வழிபடும் ரசிக கூட்டத்தை சேர்ந்தவன் நான். எனினும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...

{oshits} வாசகர்கள் இந்த பதிவை படித்து இருக்கிறார்கள்....