Miscellaneous
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சித்திரப்பாவைஅகிலனின் சித்திரப்பாவை - தமிழுக்கு முதன்முதலில் சாகித்திய அகாடெமி விருதை கூட்டிவந்த பெருமை இந்த நாவலுக்கு உண்டு. இதை நான் முதலில் டி.டி-1ல் தொலைக்காட்சி தொடராக பார்த்திருக்கிறேன். அப்போது நான் ஏழாவது படித்துக்கொண்டிருந்தேன். சற்று complex-ஆன கதையெங்கிலும், அந்த இளம் வயதிலேயே எனக்கு மனதை கவர்ந்த படைப்பாக விளங்கியது. இருப்பினும் அதை புத்தகமாக படிக்க ஏன் எனக்கு இத்தனை ஆண்டுகள் பிடித்தன என்பது சற்று விந்தையே. கடந்த முறை மதுரைக்கு போனபோது, நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே இருந்த ”சர்வோதயா நூல் நிலையத்”தில் இந்த புத்தகத்தை வாங்கினேன். ஆனால் அடுத்தடுத்த வார இறுதிகளில் சேலம், மற்றும் ஆலப்புழைக்கு போனபோதே இதை படித்து முடிக்க முடிந்தது. இதை படிக்கும்போதே ஏன் இதற்கு விருது கொடுக்கப்பட்டது என்று தெளிவாக புரிந்தது. 1960-களின் இறுதியில், சென்னைப்பட்டணம் “மதராஸ்” ஆக மாறி வரும் காலக்கட்டத்தில், அதே நேரத்தில் பழைய தலைமுறையும், கலாச்சாரமும் மாறிவரும் சூழ்நிலையில், மனிதத்தையும், கலாச்சாரத்தையும் மதித்து புதிய பொருளாசை நிறைந்த கலாச்சாரத்துக்கு மாறமுடியாத மனிதர்களின் பின்புலத்தில், கலையும், காதலும் வழிந்தோடிய அற்புதமான கதை இது. இதை படித்து முடிக்கும்போது இதில் வரும் ஆனந்தியும், அண்ணாமலையும், மாணிக்கமும், சுந்தரியும் ரத்தமும் சதையுடனும் நம்மிடையே உலாவிய பாத்திரங்களைபோல ஒரு பாதிப்பை ஏற்படுத்துகின்றார்கள்.


முக்கிய அம்சங்கள்

ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை அடைந்தாலும், மேற்கிலிருந்து வந்த கலாச்சாரத்துக்கு நம் தமிழர்கள் அடிமைப்பட ஆரம்பித்திருக்கும் நேரம் அது. மக்களைவிட பணமும், பொருளும் முக்கியமாக மாறிப்போன சென்னை, நம் கலாச்சாரத்தை மறைத்து சினிமாவில் உடலை காட்டி மக்களின் மூளையை மழுங்கடித்து காசு பார்க்க சில தனிமனிதர்களின் பேராசை, கிராமங்களில் இருந்து நகரத்துக்கு புலம்பெயர்ந்து ஒண்டுக் குடித்தனத்திலும், சிமெண்ட் காடுகளிலுமே வாழ்வதை கவர்ச்சியாக கருதிய தமிழர்கள்... என ’60களின் தடுமாற்றத்தை அப்பட்டமாக காட்டியிருக்கும் அகிலனின் சமூக பிரக்ஞையை பாராட்டாமல் இருக்க முடியாது. பல இடங்களில் அதை அவர் வெளிப்படுத்த தவறவில்லை. உதாரணமாக அண்ணாமலையை தன் கிராமத்துக்கு படமெழுத அனுப்பும் சரவணன் “அன்று நான் பார்த்த கிராமம் இதுவல்ல.. இன்னும் 5-10 வருடத்தில்  இந்த கிராமம் முற்றிலுமாக தன்னை இழந்திருக்கும், என்வே உங்களால் முடிந்தவரை கிராமத்தை படமாக பதிவு செய்து வாருங்கள்” என்று சொல்லி அனுப்புகிறார்.

மற்றொரு இடத்தில் கதிரேசன் தன்னை போல மனமொத்த நண்பர்களுடன் சேர்ந்து, தன் கைக்காசை போட்டு ஒரு கலைவிழாவுக்கு ஏற்பாடு செய்கிறார். அதில் அண்ணாமலை மூலம் எழுதப்பெற்ற அற்புதமான ஓவியங்களை மலிவு விலை பிரதிகளாகவும், அட்டை படங்களாகவும் மக்களிடத்தில் சேர்க்கிறார். இதை கவனித்த ஒரு ஃப்ரெஞ்சுக்காரர் “இப்படி அற்புதமான ஓவியங்களை மலிவு விலை பிரதிகளாக விநியோகிப்பதன் மூலம் அவற்றின் மதிப்பை குறைக்கிறீர்களே” என்று ஆதங்கப்படுகிறார். அதற்கு கதிரேசன் “இப்படிப்பட்ட அற்புதமான கலைகள் பணம் உள்ளவர்களுக்கு மட்டும் என்று இருப்பதனால் தான் ஆபாசமான சினிமாவே கலை என்று எங்கள் தமிழ் மக்கள் நம்ப ஆரம்பித்து இருக்கிறார்கள். செல்லுலாயிட்டில் இந்த போலிகளை ஆதரிக்கும் இந்த இளைஞர்கள் நாளைக்கு இந்த நடிகர்களுக்கு கோவில் கட்டி ஆராதிக்கும் நிலை வந்தாலும் ஆச்சரியம் இல்லை. எனவே தான் நாங்கள் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று இந்த கலையை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சென்று உண்மையான கலை என்றால் என்ன என்று காண்பிக்க முற்படுகிறோம்” என்று சொல்கிறார். 1968-ல் இதை எழுதிய அகிலன் அடுத்த 25-30 வருடங்களில் நம் தமிழ் மக்கள் கவர்ச்சி நடிகைகளுக்கு (குஷ்பு, நக்மா, நமீதா) உண்மையிலேயே கோவில் கட்டுவார்கள் என்றும், திரையில் காமக்களியாட்டம் புரிந்த நடிகர்கள் எல்லாம் வெள்ளைவேட்டி கட்டிக்கொண்டு நாற்காலி கனவில் மிதப்பார்கள் என்றோ அதை முட்டாள் ரசிகர்கள் வரவேற்ப்பார்கள் என்றோ எதிர்பார்த்து இருக்கமாட்டார்.

மற்றும் சுந்தரியின் சாவின் போது கதிரேசன் இவ்வாறு சொல்கிறார் “மாறி வரும் சமூகத்தின் உளுத்துப்போன சின்னம் இந்த சுந்தரி. காசே பிரதானம் என்ற சமூகத்தால் சூழப்பட்டிருக்கும் இவளுடைய முடிவுக்கு காரணம். வாழ்க்கையின் உண்மை பொருளை பெரியவர்களே தேடாதபோது இவள் போன்ற பிள்ளைகளுக்கு எங்கே கிடைக்கும். ஐம்புலன்களையும் அழுக்கு படியாமல் பார்த்துக்கொண்டாலே போதும், வாழ்க்கை அழகாகிவிடும். ஒழுக்கத்துக்கு முழுக்கு போட்டுவிட்டு காசு பணத்தில் முன்னேறுவதில் நாம் குறியாகிவிடுகின்றோம்”. இவ்வாறு அகிலன் மாறிவிட்ட தலைமுறையையும், அமைதியையும் ஒழுக்கத்தையும் தொலைத்துவிட்டு காட்டாறாய் போய்க்கொண்டிருக்கும் சமூகத்தை பற்றி கவலைபட்டிருக்கிறார்.