Jayakanthan
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ராமாயணத்திலே எல்லா காண்டங்களிலும் ராமரே வியாபித்து இருப்பார் ஆனால் சீதையின் பெருமையையும், அனுமனின் உயர்வையும் சொல்வது சுந்தரகாண்டம். சீதையின் துக்கங்கள் இந்த காண்டத்தில் முடிவுக்கு வருவதால் இதை சுந்தரகாண்டம் என்றும், அனுமனின் மற்றொரு பெயரான "சுந்தரன்"-ஐ ஒட்டி சுந்தரகாண்டம் என அழைக்கப்பட்டது என்றும் கூறுவர். ஆனால் எழுத்தாளர் ஜெயகாந்தனின் "சுந்தரகாண்டம்" தற்காலத்திய ராவணன்களும், அவர்களிடம் சிக்கும் சீதைகளையும் படைத்து உலாவவிட்டு, பெண்களை சுதந்திரமாக, பொருந்தா உறவுகளில் சிக்காமல் இருக்க அறிவுறுத்துகிறார். பலவந்தமாக நவீன ராவணனிடம் திருமண பந்ததில் சிக்கும் சீதை எப்படி தன்னை காப்பாற்றிக்கொள்கிறாள் என சுவாரசியமாக கொண்டுபோயிருக்கிறார். அட்டையை பார்க்காமல் படித்தால் லட்சுமி / ரமணிசந்திரன் எழுதியிருப்பார்கள் என்று தோன்றுகிறது.

"சுந்தரி" பத்திரிகை ஆசிரியர் சுந்தரசர்மாவின் கடைக்குட்டி சீதா தன் தோழி சுசீலா, தமிழ் ஆராய்ச்சி படிப்பு, தமிழ் ஆராய்ச்சி செய்யவந்த ரஷியப் பெண் சீதா (எ) காத்ரீனா, மரியம் (எ) மாரியம்மாள், நவீன பெண்மை எண்ணங்கள் என சந்தோஷமாக வாழ்ந்துவரும் வேளையில் 37 வயதான பணக்காரன், மனைவியை இழந்த மைனர் மாப்பிள்ளை சுகுமாரனின் பார்வை சீதாவின் மேல் படுகிறது. அதை ஏற்பாடு செய்தது சுந்தரசர்மாவே. பெற்றோர்களின் தற்கொலை மிரட்டலுக்கு பணிந்து சுகுமாரனை மணக்க சம்மதிக்கிறாள் சீதா. அவள் எதிர்ப்பை அறிந்து சீதாவிடம் அவள் சம்மதம் இல்லாமல் அவளை தொடமாட்டேன் என்று வாக்கு கொடுக்கிறான் சுகுமாரன். கல்யாணத்துக்கு பிறகு சுந்தரி பத்திரிகையில் வந்த "ஹே! சீதே..." கட்டுரையை எழுதிய ராமதாஸ், டாக்டர் கிரிதரன் என இரு நண்பர்கள் கிடைக்க சீதாவின் வாழ்க்கையில் மீண்டும் மலர்ச்சி பொங்குகிறது.

தன் மனைவிக்கு தான் பொருத்தமில்லை என்ற தாழ்வு மனப்பான்மை தோன்ற சீதாவை டாக்டர் கிரிதரனுடன் சேர்த்து வைக்க அவர்களை நெருக்கமாக பழக விடுகிறான் சுகுமார். சீதாவின் தந்தை மகளின் பிடிவாத நிலையை கண்டறிந்து, தன் தவறை உணர்ந்து சுகுமாரனிடம் இருந்து விவாகரத்து வாங்கிதருவதாக கூறுகையில், சுகுமாரனிடம் தனக்கு பந்தம் ஏற்பட்டுவிட்டதால் இனி விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக கூறுகிறாள் சீதா. தன்னை கடத்திய ராவணனிடம் தன் மனதை பறிகொடுக்கிறாள் இந்த நவீன சீதை. கடைசியில் சுகுமாரனும், சீதாவும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லை கிரிதரன் சீதாவின் கரத்தை பற்றினானா என்பது மீதி கதை.

உண்மையை சொல்லப்போனால் இதை எழுதியது ஜெயகாந்தன் தானா என்று கடைசி வரை சந்தேகமாக இருந்தது. ஜெயகாந்தனின் வழக்கமான அழுத்தமான வசனங்கள் இதில் காணவில்லை. மேலும் கதை படு குழப்பமாக போகிறது. சீதாவுக்கும் சுகுமாரனுக்கும் அன்னியோன்யம் தோன்றும் சமயங்களில் இது என்ன அபத்தம் என்று தோன்றுகிறது. ஆனால் முடிவும், அதற்கு கூறப்படும் சால்ஜாப்புகளும் ஏதோ அவசரத்துக்கு கதையை முடிக்க வேண்டுமே என்று யோசித்தது போல தோன்றியது.

சீதாவின் கதாபாத்திர படைப்பு ஓரளவுக்கு சீராக இருக்கிறது. வழக்கமான "பாரதீய" பெண்ணாக ஸ்டீரியோடைப்புகளுக்கு உட்பட்ட பாத்திரமோ என்ற சலிப்பு தோன்றும்போது கொஞ்சம் வித்தியாசமாக துணிச்சலாக முடிவெடுப்பது ஆறுதல். சுகுமாரனின் பாத்திரம் "நீங்க நல்லவரா? கெட்டவரா" என்று கேட்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் மதுவும், மாதுவும் அத்தனை கெட்ட விஷயங்கள் இல்லை என்று தோன்றவைக்கிறார் ஜெயகாந்தன்.

இதை நான் என் நண்பர்களுக்கு பரிந்துரை செய்வேனா என்று கேட்டால், பாதி புத்தகத்தை கிழித்து தருவேன்... சீதாவின் கல்யாணம் வரை. அதற்கு பின்பு நாவல் சோடை போய்விடுகிறது. Read at your own risk...

புத்தக விவரங்கள்:-
பதிப்பாளர்கள்: மீனாக்ஷி புத்தக நிலையம், 48, தனப்பா முதலி தெரு, மதுரை - 625 001
பக்கங்கள்: 360
விலை: ரூ. 85/-